வியாழன், 31 ஜனவரி, 2013

இந்திய ஆதிக்கமே! ஒழிந்து போ!

"சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் நியாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?" - முத்துக்குமார்.

இப்போது  இந்தியா தனது  நரித்தனத்தை மீண்டும் அரங்கேற்ற உள்ளது.
கொலைபாதகன் ராஜபக்சேவை திரும்பத்திரும்ப இந்தியாவுக்கு வரவழைத்து, அவனுக்கு இந்தியாவில் எதிர்ப்பே கிடையாது என்று உலகுக்குச் சொல்ல, இந்திய அரசு வஞ்சகம் செய்கின்றது. ராஜபக்சேவை பீகாருக்கும், திருப்பதிக்கும் அழைத்து உபசரிக்க உள்ளது இந்திய ஆதிக்கம். இந்த செய்தியை ஊடகங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தெரியாவண்ணம் தன் நரித்தனத்தை மீண்டும் அரங்கேற்ற உள்ளது.
இப்படி நீதியின் வெளிச்சம் ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்துவிடாமல் தடுக்க, இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, நயவஞ்சகமான வேலையைத் தற்போது தீவிரப்படுத்தி இருக்கின்றது. தன்னையும் பாதுகாத்து தன் நண்பன் இலங்கையையும் பாதுகாக்க துடிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்.

தற்போது, இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களின் நிலைமை, கற்பனைக்கு அப்பாற்பட்ட அவலம் ஆகும். தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் வேகமாக நடக்கின்றது. தமிழர் தாயகமே, சிங்கள ராணுவ முகாம் ஆகிவிட்டது. மாவீரர் துயிலகங்களை இடித்து, ராணுவ முகாம் ஆக்கிவிட்டனர். தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்து, பௌத்த விகாரைகளைக் கட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த தமிழர்களின் மொழி, இன அடையாளமே இல்லாமல் அழிக்கின்ற கலாச்சாரப் படுகொலை நடக்கின்றது.

தற்போது, மனித உரிமை கவுன்சில் கூட்டம், மார்ச் மாதத் தொடக்கத்தில் ஜெனீவாவில் நடக்க இருப்பதால், இந்திய அரசு துரோகத்தின் அடுத்த கட்டமாக, பீகாரில் உள்ள புத்த கயாவுக்கு இராஜபக்சே வருவதற்கான ஏற்பாட்டைச் செய்து இருக்கின்றது. பிப்ரவரி 8 ஆம் தேதி, புத்த கயாவுக்கு ராஜபக்சே வரப்போவதாகவும், பீகார் முதல் அமைச்சர் நிதீஷ்குமாரைச் சந்திக்கப் போவதாகவும், இலங்கை அரசின் தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்து உள்ளார்.

‘இராஜபக்சே பீகாருக்கும் சென்றும், ஏன், தமிழ்நாட்டின் தலைவாயிலில் உள்ள திருப்பதி கோவிலுக்கும் சென்றும் வழிபட்டதை உலகத்துக்குச் சொல்லுவதற்காக, திட்டமிட்டு மத்திய காங்கிரஸ் அரசு, இந்தத் துரோகத்திலும் அராஜகத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று அய்யா வைகோ தெரிவித்துள்ளார். அதுதான் உண்மை.




திருப்பதிக்கு வரும் ராஜபக்சே வருகையை கண்டித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பிப்ரவரி 8 ம் தேதி, கருப்புக்கொடி அறப்போராட்டம் நடைபெறும் இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ராஜபக்சே வருகையை எதிர்த்தும், தமிழர் உணர்வுகளை மதிக்காமல் தொடர்ந்து நரித்தனம் செய்யும் இந்திய ஆதிக்கத்தின் தலையில் இடியை இறக்கிட தமிழர்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்.

புதன், 30 ஜனவரி, 2013

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழ்த்தேசியப்படை

 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி மாவீரர் நாள் கொண்டாடியதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பேர் மட்டும்  விடுதலை செய்யப்படவில்லை, விடுதலை செய்யப்பட்டவர்களும் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக் கோரி நேற்று காலை 11 மணியளவில் இலங்கை துணை தூதரக முற்றுகை போராட்டம் லோயலா கல்லூரிக்கு முன்பாக ஆரம்பமானது. இதனையொட்டி அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த போராட்டத்தினை தோழர் தியாகு அவர்கள் தொடக்கி வைத்தார். பின்னர் கோசங்கள் எழுப்ப அதனுடன் சேர்ந்து இளைஞர்களும் கோசமிட்டனர்.



இந்த போராட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் , அமைப்புகள் கலந்து கொண்டன . தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் , தந்தை பெரியார் திராவிடக் கழகம், உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் , மே 17 இயக்கம் , தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி, தமிழ்நாடு மக்கள் கட்சி மற்றும் பல மாணவர் இயக்கங்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர் . போராட்டத்தில் பங்குபெற்ற சுமார் 100 பேரை காவல் துறை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது .

நன்றி: newsalai.com

வாருங்கள். 

கட்சி, சாதி, எல்லைகள் கடந்து தமிழராய் ஒன்றாவோம். நாம் பெரும் திரளாய் ஒன்று கூடி நடத்தும் போராட்டம் சர்வதேச அரங்கில் நடக்கும் நாடகங்களை உடைத்து தமிழீழ விடுதலையை உறுதி செய்யட்டும். 2009இல் நாம் செய்யத் தவறிய பொறுப்புகளை தற்போது செய்து முடிக்க ஆயிரமாய் அல்ல, லட்சங்களாய் அவரவர் இயக்க, கட்சி அடையாளங்களோடு தமிழர்களாய் ஒன்று கூடுவோம்.
நாம் வெல்வோம்.

விஸ்வரூபமெடுத்த தமிழகமே!

உலக நாயகன் அவர்களே!
'I support Kamal' என கொடி பிடிக்கும் அவரது ரசிகக் கண்மணிகளே!
கருத்துரிமை பேசும் நடுநிலைவாதிகளே!
விஸ்வரூபத்துக்கு குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளே!
விஸ்வரூப எதிர்ப்பாளர்களே!
மற்றும் அனைவருக்கும் வணக்கம்.

எல்லாளன், ஆணிவேர், தேன்கூடு, உச்சிதனை முகர்ந்தால், பாலை. இதுபோன்ற பல படங்கள் பல தடைகளை சந்தித்துள்ளன. சில படங்கள் கடைசிவரை திரையிடப்படவே இல்லை. இதுபோன்ற பல படங்கள் இன்னமும் தடைகளை சந்திக்கும். இந்த படங்கள் வெறும் கதையல்ல. நடந்த வரலாறு. யாரையும் புண்படுத்தும் படங்களும் அல்ல. ஆனால் அந்த படத்தின் மீதான தடை பற்றி  நாம் கண்டுகொள்ள தாயாராக இல்லை. இனியாவது கண்டுகொள்வோம்.

பல கோடிகள் கொடுத்து 'உச்சிதனை முகர்ந்தால்' படத்தை பல தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய சொன்னார்கள். யாரும் முன்வரவில்லையே! அந்த திரையிடப்படத்தை தியேட்டர்களில் வெளியிடவும் தடுத்தார்களே!

"இது ஒருபுறம் இருக்கட்டும்.
எதற்காக சினிமா எடுக்கிறார்கள், சமூகத்தை மாற்றவா? அல்லது புரட்சி செய்து புதிய மாற்றத்தை உருவாக்கவா சினிமா எடுக்கிறார்கள்? அதுவெல்லாம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் காலம்."- வன்னிஅரசு.

கமல் மாபெரும் நடிகன், எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் தமிழ் சினிமாவை உயர்த்தினார் என்று எப்படி சொல்ல முடியம்?

உதாரணத்துக்கு விஸ்வரூபம் வெளியான அதே நாளில் 'வழக்கு எண் 18/9' படமும் வெளியானால் நம் மக்கள் எதை பார்க்க கூடுகிறார்கள்?

100 கோடியை 20 புது இயக்குனர்களுக்கு பிரித்து கொடுத்திருந்தால் கண்டிப்பாக 10 நல்ல படங்கள்  கிடைத்திருக்கும். 10 திறமையான இயக்குனர்கள் கிடைத்திருப்பார்கள். அதெல்லாம் இங்கு சாத்தியமில்லையே! பின்னர் எப்படி தமிழ் சினிமா உயரும்?






கருத்துரிமை பேசும் நடுநிலைவாதிகளே!
சமுத்திரகனி அவர்களுக்கோ, தம்பி  ராமையா அவர்களுக்கோ இப்படி ஒரு நிலைமை வந்திருந்தால் கண்டிப்பாக வாயை திறந்திருக்கவே மாட்டோம். அதுதான் நிதர்சனம்.

விஸ்வரூபத்துக்கு குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளே!
இங்கேயும் ஒட்டு வேட்டையா? என்ஜாய்!
இனியாவது படப்பெட்டிய தூக்கிட்டு ஓடாதீங்க.

கமல்ஹாசன் அவர்களே!
உங்கள் காட்டில் நல்ல மழை! ஊடக செலவு இல்லாமல் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது. உங்களுக்கும் நல்ல Sympathy உருவாகியுள்ளது. போதாத குறைக்கு 'தமிழன்', மத சார்பு, வேறு மாநிலத்துக்கு போறேன்னு, வேறு நாட்டுக்கு போறேன்னு நல்லா கருத்தா பேசிட்டீங்க. (உங்க நண்பர் ரஜினி மாதிரி ஒரு அரசியல் அறிக்கையும் சூட்டோட கொடுங்க! ).

உங்கள் படத்தில் ஏன் ஆப்கன் தீவிரவாதத்தை காட்டினீர்கள் என்றும், முதல்வேலையாக அமெரிக்கர்களுக்கு படத்தை போட்டு காட்டினீர்கள் என்றும் புரியவில்லை. அது வருங்காலங்களில் புரியும்.

'I support Kamal' என கொடி பிடிக்கும் அவரது ரசிகக் கண்மணிகளே!
உங்கள் நிலை வழக்கம் போல பரிதாபம்தான். தியேட்டர் கட்டணத்தில் ஒரு ரூபாய் கூட குறைக்கமாட்டார்கள்.

கமல்ஹாசன் என்ற ஒரு கலைஞனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்காக ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
அய்யா பாரதிராஜா அவர்களே! வார்த்தையை அளந்து பேசுங்கள். எதிரிகளும், துரோகிகளும் எம்மை ஆண்டபோது நான் வெட்கித் தலைகுனிய வில்லை. ஈழத்தில் எம் இனம் அழிந்தபோதும் கண்ணீர்தான் விட்டேன். வெட்கித் தலைகுனிய வில்லை.இனியும் தமிழர்ப் பிரச்சினைகளைளுக்காக களத்தில் நின்று போராடுவேன், அல்லது கண்ணீர் வடிப்பேன். தமிழனாய் இருப்பதற்கு ஒருநாளும் வெட்கித் தலைகுனிய மாட்டேன்.
வெளியுலகில் தன்னை மாபெரும் இந்தியனாக காட்டிக்கொள்வதும், தனக்கு தமிழகத்தில் பிரச்சினை என்றதும் நானும் தமிழன்தான் என்று வீர வசனம் பேசுவதும்  உங்களைப் போன்ற கூத்தாடிகளுக்கு (உதாரணம்: சின்மயி, ஜெயராம்) புதிதல்ல.

எம் தமிழக இளைஞர்கள் இன்று கூத்தாடிகளுக்கு கொடி பிடிக்கலாம். ஆனால் என்றாவது ஒருநாள் எம் இளைஞர்கள் தமிழ்த்தேசிய களத்தில் வீரநடை போட்டு  மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்.
நன்றி: http://tamilmottu.blogspot.com/2013/01/blog-post.html

செவ்வாய், 29 ஜனவரி, 2013

துரோகத்தை தொடர்ந்து செய்யும் தி.மு.க

 இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 47 உறுப்பு நாடுகளின் தூதர்களை சந்திக்க திட்டமிட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘டெசோ’ அமைப்பினர், அதற்கு முன் ஏற்பாடாக புதுடில்லிக்கு பயணமான நிலையில் அங்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து ‘டெசோ’ தீர்மான அறிக்கையைக் கையளித்துள்ளனர்.

டெசோ அமைப்பினரால் கொடுக்கப்பட இருக்கிற கோரிக்கை மனுவில், இலங்கைத் தமிழர்கள் அமைதியாக வாழவும், இலங்கையில் "புனர்வாழ்வு" நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அரசியல் தீர்வு காணவும், ஜெனீவாவில் முன்மொழியப்பட்டு ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தை உடனே நடைமுறைப்படுத்தவும் இலங்கை அரசை நிர்பந்திக்குமாறு அந்த உறுப்பு நாடுகளை கேட்டுக்கொள்ள இருப்பதாக தி.மு.க மேலும் கூறியுள்ளது.

இதே கருத்தைத்தான் மூன்று வருடங்களாக இலங்கையும் கூறி வருகிறது.

அது என்ன  "புனர்வாழ்வு"? ஏன் தொடர்ந்து துரோகம்??
ஈழத் தமிழர்கள் என்ன பிச்சை கேட்கிறார்களா? தாங்கள் இழந்த மண்ணை கேட்கிறார்கள். தங்கள் இன உரிமையை கேட்கிறார்கள்.

ஈழத் தமிழர்கள் என்று சொல்லாமல் இலங்கைத் தமிழர்கள் என்று திரும்ப திரும்ப சொல்வதிலேயே தி.மு.க வின் போக்கு தெரிகிறது. சுதந்திர தமிழீழ கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்வதே டெசொவின் முழு நோக்கம்.
 இனப்படுகொலையையும், குற்றவாளிளையும் பற்றி வாயைத் திறப்பதே இல்லை.

நாற்பதாயிரம் பேர்தான் செத்தார்கள் என பொய்க்கணக்கு காட்டிய பிரணாப் முகர்ஜி ஒரு போர்க்குற்றவாளி. அவரிடம் அறிக்கை கொடுத்து என்ன பயன்? தமிழினத்துரோகி கருணாநிதி செய்த துரோகங்களை மறைக்க ஸ்டாலின் ரொம்ப கஷ்டப்படுறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்து துணை போவது வருத்தம்.

ஈழத்தமிழர்களுக்கு தேவை வீடு அல்ல, சுதந்திர நாடு.


ஈழப்  பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஈழத் தமிழ் மக்களிடமும், புலம்பெயர் தமிழர்களிடமும்   ஐக்கிய நாடுகள் சபை பொது வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும். அது ஒன்றே நிரந்தரத் தீர்வு

தமிழினத்துரோகி கருணாநிதியே! அதற்கு துணைபோகும் துரோகக் கும்பலே! ஓட்டுப்பொறுக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதைவிட்டு மீண்டும் மீண்டும் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்.

திங்கள், 28 ஜனவரி, 2013

மாவீரன் முத்துக்குமாரோடு பழகிய சில நாட்கள்

ஜனவரி 29, 2013 நான்காம் ஆண்டு வீரவணக்க நாள்  
மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் வீரவணக்கம்!

தூங்கிக்கொண்டு இருந்த எம்மீது தீயை தெளித்து எழுப்பியவனே! உன் கனவு நினைவேற பாடுபடுவோம்.

எழுக தமிழினமே எழுக… எழுக தமிழகமே எழுக…
எழும் எங்கள் ஈழம்,.. தமிழீழம்…
மாவீரன் முத்துக்குமார் புகழ் ஓங்குக!!!…


தூத்துக்குடி மாவட்டம் கொழுவைநல்லூர்  கிராமத்தில் பிறந்தவர் அண்ணன் முத்துக்குமார். எனது கிராமத்தின் மிக அருகில் உள்ள கிராமம்.
என்னை விட ஐந்து வயது மூத்தவர். அவர் படித்த பள்ளியில்தான் (TDTA High School, Maranthalai) நான்  படித்தேன்.

சிறுவயதிலேயே மிகுந்த தமிழுணர்வு கொண்டவர். எப்போதும் மிக அமைதியாகவே இருப்பார். எப்போதும் நூலகத்தில்தான் இருப்பார்.
தூய தமிழில்தான் பேசுவார். இது அப்பள்ளியில் படித்த பலருக்கும் தெரியும். இதனை வைத்து அவரை கேலி செய்தவர்களும் உண்டு.
ஆனாலும் தன்  மனந்தளராமல் தூய தமிழில் பேசுவதை தொடர்ந்தார். தமிழ் நாடகங்களில் மிகுந்த ஆர்வம் உடையவர்.
பள்ளி நாடகம் ஒன்றில் முனிவர் வேடமிட்டு அவர் வீரவசனம் பேசியது நன்றாக ஞாபகம் இருக்கிறது..


படிப்பிலும் மிக திறமைசாலி. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 460க்கு மேல் மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாம் மாணவனாக திகழ்ந்தார்.
இவரது வகுப்பில் எப்போதும் இவர்தான் வகுப்புதலைவராக இருப்பார். அந்த அளவிற்கு அனைத்து மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் நல்லபெயர் எடுத்தவர்.

அவரது கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்குபெற்று உரையாற்றுவார். தமிழ் நாடகங்களை சிறுவர்களுக்கு சொல்லிகொடுத்து நடிக்க சொல்லுவார்.
ஏழ்மையின் காரணமாக பள்ளிப்படிப்பை அவரால் தொடர முடியவில்லை. அதன்பின்னர்தான் அவர் சென்னை வந்தார்.

இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆர்வமும் அவருக்குள் இருந்ததாகவும்,  ‘பனைமரம்’ என்னும் சிறுதொடர் எழுதியுள்ளதாகவும் அவரது நண்பர் ஒருவர் என்னிடம் சமீபத்தில் கூறினார்..
பின்னர் சில ஆண்டுகள் அவரை நான் பார்க்கவே இல்லை. நானும் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் வந்து சேர்ந்தேன்.

நான் படித்த கல்லூரியில் அண்ணன் முத்துக்குமார் அவர்கள் காவலாளியாக வேலை பார்த்துகொண்டிருந்தார். பார்த்தவுடன் கண்கலங்கியது..
அவர் தானாகவே முன்வந்து என்னிடம் நலம் விசாரித்தார். சில நிமிடங்கள் பேசிக்கொடிருந்தோம்.
நான் தங்கியிருந்த கல்லூரி விடுதிக்கும் காவலாளியாக வருவார். அப்போதும் பேசிக்கொண்டோம்.

அப்போது ‘C Programming’ என்னும் கணிப்பொறி  மொழியை  யாருடைய உதவியும் இன்றி அவராகவே படித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் கூட அதை படிப்பதற்கு திணறுவார்கள்.  மிக எளிமையாக அதனை கற்றுக்கொண்டு, என்னிடமும் விளக்கினார்.
அவ்வாறு கற்கும் ஆர்வமும், கற்பிக்கும் ஆர்வமும் அண்ணன் முத்துக்குமாரிடம் அதிகம் இருந்தது.

அண்ணன் முத்துக்குமார் எந்த அளவிற்கு தூயத்தமிழ் பேசுவாரோ, அதே அளவிற்கு தூய்மையாக ஆங்கிலமும் பேசுவார். வேலையை விட்டு நின்றுவிட்டதாகவும், ‘வார இதழ்’ ஒன்றில் வேலை செய்வதாகவும் சக காவலாளி ஒருவர் கூறினார்.
பின்னர் இரண்டு ஆண்டுகள் அவரை பார்க்கவே இல்லை. பின்னர் அவரது படத்தை தினத்தந்தி   செய்தித்தாளில்தான் பார்த்தேன். மிக அதிர்ச்சி அடைந்தேன்.

ஆம்,  ‘இனப்படுகொலையை நிறுத்தக்கோரி தூத்துக்குடி வாலிபர் தீக்குளித்து மரணம்’. என்ன செய்வது என்றே தெரியவில்லை. மறுநாளே கல்லூரிகளையும் விடுதிகளையும்  மூடச்சொல்லி அப்போதைய திமுக அரசு உத்தரவிட்டது.
மிகுந்த துயரத்தோடு தூத்துக்குடிக்கு சென்றேன்.

அவரைப்போன்ற தமிழுணர்வாளர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.
அவரோடு பழகிய சிலநாட்களில்  ஒருமுறைகூட அவர் தமிழ் பற்றியோ, தமிழ் ஈழம் பற்றியோ, விடுதலைப்புலிகள் பற்றியோ என்னிடம் பேசியது கிடையாது.
அவர் இறந்தபின்னர் அவரது மரண சாசனத்தை படித்த பின்னர்தான் அவரது தமிழுணர்வை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது.

அவர் ஏற்றிவைத்த புரட்சித்தீயில் என் போன்ற இன உணர்வற்றவர்கள் விழித்துக்கொண்டோம். முத்துக்குமாரின் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையோடு தமிழ்த்தேசிய களத்தில் நிற்கிறேன், என்றும் நிற்பேன்.
இந்திய தேசிய கட்சிகளை மண்ணிலிருந்து அப்புறப்படுத்துவோம். இந்தியாவின் நரித்தனங்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.

அவரது தியாகத்தை கொச்சைபடுத்தும் பலர்  நம் மண்ணில்  இருப்பது மிக வருத்தம்..

மாவீரன் முத்துக்குமார் எழுதிய மரண சாசனத்தை முழுமையாக படிக்க: விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

‘அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப்பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப்பாருங்கள் உங்களூக்கு அந்த வயதில் ஒரு அக்காவோ தங்கையோ இல்லயா?’ என்று முத்துக்குமார் கேட்டதை நாம் ஒவ்வொருவரும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டும். மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவதற்குமுன் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேன்டிய கேள்விகள் இவை.
மேலும் படிக்க

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

கூடங்குளம் அணு உலையும் இந்திய மௌன (ஆ)சாமிகளும்


கூடங்குளம் அணு  உலை மிகவும் பாதுகாப்பானது என இனியன் குழு அறிக்கை கொடுத்தது.

இது போல நவீன விஞ்ஞானத்துடன் கூடிய எந்த ஒரு அணு உலையும் கிடையாது என சர்டிபிகேட் கொடுத்தார்  ராக்கெட் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள்.

விமானத்தை விட்டு மோதினாலும் ஆபத்து வராது என 15 நாள் சாமி அறிக்கை கொடுத்தார்.

இவர்கள் சொன்ன கருத்துக்களை இந்திய தேசிய கட்சிகளும், சில தமிழக  கட்சிகளும் ஆதரித்தன. தினமலம், துக்ளக் போன்ற ஏடுகளும் பக்கம் பக்கமாக எழுதி தள்ளின.
நடுநிலையாளர்களும் அப்படியே நம்பினார்கள். எவன் செத்தால் நமக்கு என்ன? எப்படியாவது மின்சாரம் கொடுங்கள் என்ற சுயநலம் மக்களை ஆட்டிப்படைத்தது.

பணம் வாங்கி போராடுகிறார்கள் என குற்றச்சாட்டை கூறினார்கள் (இது வரை  நிரூபிக்கப்படவில்லை). உதயகுமாரை தூக்கிலிடுங்கள் என இளங்கோவன் போன்ற தீவிரவாதிகளும், பாரதிய ஜனதா தீவிரவாதிகளும் குரல் எழுப்பினார்கள்.

இப்போ விசயத்துக்கு வருவோம்.

கூடங்குளம் அணு உலையில் கசிவு ஏற்பட்டதாகவும்,
சில  தொழிலாளிகள் பாதிக்கப்பட்டதாகவும், 
தொழிலாளிகள் வேலை செய்ய வருவதற்கு அஞ்சுவதாகவும், தொழிலாளிகளுக்கு அதிக சம்பளம் தர அரசு முன்வருவதாகவும், 
இது பற்றி அரசு வெள்ளை அறிக்கை விட வேண்டும் எனவும்  அண்ணன் உதயகுமார் அவர்கள் குற்றம் சாட்டினார்.

முதலில் இதை அரசு தரப்பு மறுத்தது.
 
"கூடங்குளம் அணு உலையில் கசிவு இருந்தது. ஆனால் அதை சரிசெய்தாகி விட்டது" என்று மத்திய அமைச்சர் 15 நாள் சாமி இப்போது ஒத்துக்கொண்டுள்ளார்.
 
ஏற்கனவே அணு உலையிலிருந்து அதிரும்  சத்தத்துடன், கரும்புகை  வெளியானதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

இதையெல்லாம் அரசும், ஊடகங்களும் ஏன் மறைக்கின்றன?

அணு  உலை மிகவும் பாதுகாப்பானது  என அறிக்கை கொடுத்தவர்கள், அணு உலை ஆதரவாளர்கள்  எல்லாம் இப்போது எங்கே சென்றார்கள்??
 

அணு உலை அமைக்க மதிப்பிட்ட தொகையை விட 4000 கோடி  ஏன் அதிகமாக செலவிடப்பட்டது??

அணு உலை அமைக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக  ஏன் ஆனது? 

ரஷ்ய  அணு உலைகள் பாதுகாப்பற்றவை என ரஷ்ய நிறுவனங்களே சொல்லும்போது இந்தியா மட்டும் ஏன் ரஷ்யாவுக்கு வக்காலத்து வாங்குகிறது?
 ( Zio-Podolsk என்னும் ரஷ்ய நிறுவனம்  அணு உலையின் பாகங்களை தயாரித்து அனுப்புகிறது. இந்த நிறுவனம் பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.)

மக்களுக்கு ஏன் பேரிடர் பயிற்சி அளிக்கப்படவில்லை? குறைந்தபட்சம் சாலைவசதிகள் கூட ஏன் செய்து தரப்படவில்லை?
 
உங்களது நோக்கம் மின்சாரம் மட்டுமே என்றால் "மக்கள் பாதுகாப்பு  பற்றி கவலை இல்லை" என்று  தைரியமாக சொல்லவேண்டியதுதானே??

அதைவிட்டு அணு உலை மிகவும் பாதுகாப்பானது என ஏன் திரும்ப திரும்ப பொய் சொல்லுகிறீர்கள்??

அய்யா கலாம் அளவுக்கு எனக்கு விஞ்ஞானம் தெரியாது. நான் படித்த அணு அறிவியல் வைத்து சொல்லுகிறேன். அணு உலை நம்மை விட நம் தலைமுறைகளை மிகவும் பாதிக்கும். எத்தனையோ மாற்று வழிகள் இருக்கையில் அணு உலைக்காக கோடி கோடியாக செலவழிப்பது சுத்த முட்டாள் தனம்.

சமர்பா குமரனின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன:
"கண்ணத் தொறந்துக்கிட்டு பாழுங் கிணத்துக்குள்ள
குதிக்கச் சொல்லுறியளே நாராயணா
நாராயணா தம்பி நாராயணா"

 

கல்பாக்கம் அணு உலையால் மக்கள்/தொழிலாளிகள் எவரும் பாதிக்கப்படவில்லை, சாகவில்லை  என்று நம்பினால் நீயும் இந்தியனே!!

கூடங்குளம் அணு உலை கட்டமைப்பின்போது தொழிலாளிகள் எவரும் பாதிக்கப்படவில்லை, சாகவில்லை  என்று நம்பினால் நீயும் இந்தியனே!!
 

வெள்ளி, 25 ஜனவரி, 2013

டிஎன்பிஎஸ்சி(TNPSC) தேர்வுகள் : எப்படி ஆயத்தமாவது??

2010-ஆம் வருடம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதினேன்.
எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல், ஆயத்தம் இல்லாமல் எழுதிய தேர்வு.
ஆனாலும் வினாத்தாளில் பொதுத்தமிழ் எளிதாக இருந்தது.
100-க்கு 95 தேறியது.
பொது அறிவு காலை வாரியது.
40 தேறியிருக்கும் என நம்புகிறேன்.

பின்னர் வினாத்தாள் குளறுபடி, தேர்வுத்துறை சீர்கேடுகள் என சில நிகழ்வுகளால் டிஎன்பிஎஸ்சி குரூப்  தேர்வுகள் வெறுத்துப் போனது.

மறுபடியும் இந்த வருடம் குரூப் 2, குரூப் 4, VAO என எந்த தேர்வாக இருந்தாலும் எழுதுவதென தீர்மானித்திருக்கிறேன்.

எப்படி ஆயத்தமாவது?? எப்படி திட்டமிடுவது?[குறிப்பாக பொது அறிவு பகுதி.]
பயிற்சி மையங்கள் தேவையில்லை என கருதுகிறேன்.

நண்பர்கள் தங்கள் அனுபவங்கள், ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டு வழி காட்டுங்கள்.

நன்றி

புதன், 23 ஜனவரி, 2013

முஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?

இன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: " இவர்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?"

போராட்டக்காரர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும் கேள்வி இதுதான்.

உண்மையில் போராட்டக்காரர்கள் ஆரம்பத்திலிருந்தே போராட்ட களத்தில் நின்றிருப்பார்கள். ஆனால் அந்த வரலாறெல்லாம் தெரியாமல் கணினியும் இணையதள  வசதியும் வைத்துக்கொண்டு கேள்விக்கணை தொடுப்பார்கள்.

சில உதாரணங்கள் 
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் இத்தனை நாள் எங்கே  சென்றிருந்தார்கள்?

மது ஒழிப்பு பிரச்சாரம் செய்யும் வைகோ அவர்கள்  இத்தனை நாள் எங்கே  சென்றிருந்தார்?

ராஜீவ் கொலை வழக்கில் மூன்று நிருபராதிகளின்  விடுதலைக்காக ஏன் இத்தனை நாள் போராடவில்லை?

இதுபோன்று பல கேள்விகளை வரலாறு தெரியாமல் கேட்டுக்கொண்டு குழப்பத்தை விளைவித்துக்கொண்டே இருப்பதுதான் இவர்கள் வேலை. தானும் போராட களத்திற்கு வரமாட்டார்கள். போராடுபவர்களையும் ஆதரிக்கமாட்டார்கள். ஒரு மூலையில்  கணினியில் அமர்ந்து கொண்டு சேகுவேரா ரேஞ்ச்சுக்கு புரட்சி செய்வார்கள் (சேகுவேரா மன்னிக்கவும்)

இப்போது விசயத்துக்கு வருவோம். விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகள்  இத்தனை  நாள் எங்கே சென்றிருந்தார்கள்? இதுதான் இப்போது பல அதிமேதாவிகளின் கேள்வி.

அந்த அதிமேதாவிகளுக்கு பதில் நான் சொல்கிறேன்.
பாமக, மதிமுக கட்சிகள் மது ஒழிப்பை தீவிரமாக ஆரமிக்கும் முன்னரே தமுமுக, போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தமிழகமெங்கும் தீவிர மது ஒழிப்பு பிரச்சாரங்கள், மாநாடுகள் நடத்தினார்கள். வழக்கம் போல அது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.


கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரியும், கடந்த செப்டம்பர் 10ம் தேதி தமிழக காவல்துறை நடத்திய அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும், அணுஉலை எதிர்ப்பாளர்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப்பெறக் கோரியும், 144 தடை உத்தரவை நீக்கக்கோரியும் - ஆபத்தான ஆறு அரசியல் கட்சிகளைத் தவிர்த்து, ஆதரவான 40 இயக்கங்கள் அக்டோபர் 29ல் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை அறிவித்து இருந்தன.
சட்டமன்ற முற்றுகைப் போராட்ட அறிவிப்பு வெளியான உடன் வழக்கம்போல மமகவினர் களத்தில் மக்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினர். வீதியெங்கும் மமகவினர் மக்கள் உரிமையில் வெளியான அணுஉலை குறித்த செய்தியினை மறுபிரசுரம் செய்து பொதுமக் களைப் போராட்டத்திற்கு ஆயத்தப்படுத்தினர்.  மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டக் களத்தில் குவிந்தனர்.



காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கினை தரமறுக்கும் கர்நாடக அரசையும், வன்முறையைத் தூண்டும் கன்னட வெறியர்களையும் கண்டித்தும், காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான நீரை வழங்காத கர்நாடகத்திற்கு நெய்வேலி-யில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வ-லியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் தலைமையில் நெய்வேலி அனல்மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் 22.10.2012 அன்று நடைபெற்றது. 



 காவிரி பாசனப் பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 32 கிராமங்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க  கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நவம்பர் 23, 24, 25 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் துண்டுப் பிரசுர விழிப்புணர்வு பரப்புரை நடத்தப்பட்டது.
வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இதுகுறித்து முழு விபரங்கள் அடங்கிய 1 கோடி துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. இவைதவிர, சுவரொட்டிகள், வீதி முழக்கங்கள், தெருமுனைக் கூட்டங்கள், வாகன பரப்புரை செய்யப்பட்டன.



நவம்பர் 7 அன்று ஆதிக்க சக்திகளால் தர்மபுரி அருகே நத்தம் உள்ளிட்ட 3 கிராமங்களில் வாழும் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டனர்


தமிழக  மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, ராஜபக்சே வருகையை கண்டித்து,  இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகளால் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டன

விலைவாசி உயர்வு, ரயில்வே கட்டண உயர்வை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் போராடுகிறார்கள்.


இரத்த தான முகாம்கள், கண் தான முகாம்கள், கல்வி உதவிகள் என பல சமூக நலத்திட்டங்களை பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் செய்து வருகிறார்கள்.

இவ்வாறு தமிழக களத்தில் மக்களுக்காக  மும்முரமாக போராடிவரும் இஸ்லாமிய அமைப்புகளை பார்த்து 'இத்தனை  நாள் எங்கே சென்றிருந்தார்கள்?' என்று கேட்டால் நியாயமா?

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். எதிர்ப்பாளர்கள்  எதிர்ப்பது கமலையோ, விஸ்வரூப படத்தையோ அல்ல. படத்தில் இடம்பெறும் இஸ்லாமிய மதம் மீதான, குரான் மீதான  தவறான கருத்துக்களைத்தான்.

வெறும் சினிமாதானே என்று பிற்போக்கு கேள்வி தொடுக்காதீர்கள். சினிமாவும் ஒரு ஊடகம்தான். 

தனது படங்களில் திரும்ப  திரும்ப இஸ்லாமியத்தை கமல் அவர்கள் சாடுவதன் பின்னணி புரியவில்லை.

நன்றி: http://www.tmmk.in/

திங்கள், 21 ஜனவரி, 2013

தீவிரவாதிகள் இந்துக்கள் அல்ல!

அனைத்து மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவோரை  மத அடிப்படையில் அடையாளக் கூடாது என்னும் கருத்தை வலியுறுத்தி தீவிரவாதிகள் முஸ்லீம்கள் அல்ல! என்னும் கட்டுரை பதிவு செய்திருந்தேன்.

அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு.

கடந்த ஞாயிறு அன்று ஜெய்ப்பூரில் பேசிய இந்தியாவின் உள்துறை  அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே "பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் இந்துத் தீவிரவாதத்தை வளர்க்கின்றன" என்று கூறியிருந்தார். 

இக்கருத்தை  பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் கடுமையாக எதிர்ககும் அதேவேளையில் லஸ்கர்-இ-தொய்பா என்னும் தீவிரவாத அமைப்பு சுஷில்குமார் கருத்தை வரவேற்றுள்ளது

"தீவிரவாதிகளின் செல்லப்பிள்ளை (Darling of Terrorists) சுஷில்குமார் ஷிண்டே" என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கூறியுள்ளது.


அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு,  மெக்கா மசூதி குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு மற்றும் பல தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்பு உள்ளதாகவும், பழியை சிறுபான்மையினர் மீது போடுவதாகவும்  காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஷிண்டே கருத்தை பல காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்கிறார்கள்.
நானும் வரவேற்கிறேன்.

ஆனால் அவர் சொன்ன விதத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மேற்கூறிய தீவிரவாத செயல்களில்  ஈடுபட்டோரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏற்றுக்கொல்லும்பட்சத்தில் அவர்களை "ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்" என்று சொல்லலாம். தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவோரை எக்காலத்திலும்  மத அடிப்படையில் அடையாளக் கூடாது. 

நேற்று CNN-IBN தொலைக்காட்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் "இந்துத் தீவிரவாதம் என்ற வார்த்தை தவறு. சங் தீவிரவாதம்(Sangh Terrorism) என்று சொல்லலாம்" என்று கூறியிருந்தார். திக்விஜய் சிங் சொல்வது ஏற்புடையது.
 
இந்துத் தீவிரவாதம், இஸ்லாமிய  தீவிரவாதம், கிருஸ்தவ தீவிரவாதம் போன்ற வார்த்தைகள் மக்களிடையே மேலும் மேலும் விரிசலை ஏற்படுத்துமே தவிர ஒருகாலமும் தீவிரவாதத்தை குறைக்காது. 
  
மேற்கூறிய தீவிரவாத செயல்களில் முறையான விசாரணை இதுவரை செய்யப்படவில்லை. விசாரணையை ஏன் காங்கிரஸ் முடுக்கி விடவில்லை? 

தேர்தல் நேரத்தின்போதும், மக்கள் பிரச்சினைகளை திசைமாற்றவும், எதிக்கட்சிகளின் கவனத்தை திசைதிருப்பவும் காங்கிரஸ் எடுக்கும் கேவலமான ஆயுதம்தான்  இந்துத் தீவிரவாதம், காவித்தீவிரவாதம் போன்ற வார்த்தைகள். 

குஜராத் தேர்தலின்போதும் இந்த ஆயுதத்தை எடுத்தார்கள்.
2G ஊழல், காமன்வெல்த் ஊழல் பிரச்சினைகள் உச்சத்தில் இருந்தபோதும் இந்த ஆயுதத்தை எடுத்தார்கள்.
இப்போது கூட ரயில் கட்டண உயர்வை திசைதிருப்ப  இந்த ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள் என தோன்றுகிறது.
2014 தேர்தலின்போதும் இந்த ஆயுதத்தை எடுப்பார்கள். ஆனால் தீவிரவாதத்தை குறைக்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.

இது பல கட்சிகளுக்கும் பொருந்தும்.
எத்தனை முறை சொன்னாலும் இந்த ஓட்டுப்பொறுக்கிகளுக்கு உரைக்காது. மக்கள் பிரச்சினைகள் எத்தனையோ உள்ளன. அவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வார்த்தை விளையாட்டு விளையாடிக்கொண்டே இருப்பார்கள்.

காங்கிரஸ், பாரதிய ஜனதா  தலைவர்களின் கருத்துக்கள், இந்திய நிகழ்வுகள்  பற்றி நான் மிகுந்த அக்கறை செலுத்துவது கிடையாது. ஆனாலும் அவர்களது கருத்து, செயல்பாடுகளால் ஏற்கனவே பிரிந்து கிடக்கும் தமிழ்த்தேசத்தில் மேலும் பிரிவு வந்து விடக்கூடாது என்பதை சொல்லவே இந்த பதிவு.

மனித நேயம் குறைந்துவரும் இந்த காலக்கட்டத்தில் மனித நேயம் வளர்ப்போம்!

நன்றி.

2014-இல் பிரதமராகும் ராகுல்காந்தி

தலைப்பை பார்த்ததும் சிலர் அதிர்ச்சி அடையலாம். இதெல்லாம் நடக்குற காரியமா?  என எண்ணலாம். ஆனால் இது நடந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

ஊழல், விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல்  விலை உயர்வு  மற்றும் பல  குற்றச்சாட்டுகளால்  மத்திய காங்கிரஸ் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

'அவ்வளவுதான், இனி காங்கிரஸ் வரவே வராது' என பலரும் நிம்மதி பெருமூச்சு விடலாம். மோடி வரட்டும் என இணையங்களில் பலர் விவரம் தெரியாமல் வீரவசனம் பேசலாம் [வீரவசனம் பேசியவர்களில் நானும் ஒருவன் :)].

ஆனால் அனைத்தையும் தாண்டி  2014-இல் காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். சோனியாவின் தவப்புதல்வர்  ராகுல்காந்தி பிரதமராக ஆட்சிக் கட்டிலில் அமருவார்.

 எப்படி சாத்தியமாகும்? 
  • மக்களின் மறதி. இறுதி நேரத்தில் கொடுக்கப்படும் போலி வாக்குறுதிகள் பழைய நிகழ்வுகளை மக்கள் மறந்து விட செய்துவிடும்.
  • சரியான எதிர்க்கட்சி இல்லாமை. பிரதான எதிர்க்கட்சியான பி.ஜே.பி யின் தலைவரை ஒரு மதவாத அமைப்பு தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. (இவர்கள் ஆட்சிக்கு வந்து என்னத்த கிழிக்க??). மூன்றாவது அணி இந்தியாவில்  எக்காலத்திலும் சாத்தியம் கிடையாது
  • காங்கிரசுக்காக பணம் வாரியிறைக்க தயாராக உள்ள  தொழிலதிபர்கள்
  • தம் மாநிலங்களில் செத்துப்போன காங்கிரஸ் பிணத்தை சுமக்க தயாராக உள்ள மாநிலக்கட்சிகள். தங்கள் சுயநலத்திற்காக, பதவிகளுக்காக இந்த மாநிலக்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
  • சோனியா மற்றும் சில காங்கிரஸ் தலைவர்களின்  ராஜதந்திரம். நம்ம ஊரு கருணாநிதியை அரசியல் சாணக்கியர் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சாணக்கியரையே அலறவிட்டவர்கள் இவர்கள்.  தேர்தல் வியூகம்(??) வகுப்பதில் காங்கிரஸ்காரர்கள் கில்லாடிகள்.

ஆக கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து பார்த்தால்  2014-இல் பிரதமராவார் ராகுல்காந்தி. இது எனது சிறு கணிப்பு. உங்கள் கணிப்புகளையும் பதிவு செய்யலாம்.

[பின் குறிப்பு: இந்தியாவை யார்  ஆண்டாலும் தமிழர்களுக்கு ஒரு நன்மையையும் கிடையாது. அதனால் இந்தியாவை  ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கு கவலை இல்லை.]

வெள்ளி, 18 ஜனவரி, 2013

இதுதான்டா தமிழ்த் தேசியம்!!

 இணையதளத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது தமிழ்த் தேசியம் தொடர்பாக தோழர் க.அருணபாரதியின் அருமையான கருத்துக்கள் கண்ணில் தென்பட்டன .
 அவை இதோ:
 தமிழ்நாட்டு முதல்வர் பதவியில், “மானத்தமிழன்” அமர்ந்தாலும், மார்வாடி அமர்ந்தாலும் அதன் விளைவாக தமிழ் இனத்திற்கு ஏதும் கிடைக்கப் போவதில்லை. 
 தமிழீழச் சொந்தங்களை அழித்தொழிக்கும் இலங்கைப் போரை நிறுத்த வேண்டுமென கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரும் தீர்மானம், இலங்கை மீது பொருளியல் தடை கோரும் தீர்மானம் என ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு இந்திய அரசின் குப்பைத் தொட்டிக்குள் விழுந்த தீர்மானங்களைப் போல, அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து வெறும் தீர்மானங்கள் மட்டுமே போடுவதைத்தான் தமிழக சட்டமன்றம் செய்ய முடியுமே தவிர, ஒருக்காலும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அரசியல் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.
சிங்கள ஆதிக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொள்ள வேண்டுமென தமிழீழ மக்களைத் திரட்ட, தமிழீழத் தமிழர்களால் வழங்கப்படுகின்ற கருத்தியலே, அவர்களால் ‘தமிழ்த் தேசியம்’ என முன்வைக்கப்படுகிறது. அதே போல், இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக உள்ள தமிழ்நாடு தம்மை விடுவித்துக் கொண்டு தனித் தமிழ்த் தேசமாக மலர வேண்டும் என்பதே தமிழகத்தில் ‘தமிழ்த் தேசியம்’ ஆக இருக்க முடியும்.
ஆனால், இந்திய அரசியலமைப்பையும், இறையாண்மையையும் ஏற்றுக் கொண்டு நடைபெறும் தேர்தல்களில் பங்கேற்பதும், தமிழ் இனத்தை இந்திய அரசுக்குக் காட்டிக் கொடுக்கும் மசோதா மன்றமாகத் திகழும் தமிழக சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவதும் தான் ‘தமிழ்த் தேசியம்’ என நாம் தமிழர் கட்சி, தமிழர் களம், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சியினர் பேசுகின்றனர்.
தேர்தல் அரசியல் மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியம் என்ன இடஒதுக்கீடு போன்ற சீர்திருத்தக் கொள்கையா என்று கூட இவர்கள் சிந்திப்பதில்லை.
 ‘அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ எனப் பேசி தேர்தல்களில் பங்கேற்று மக்களை ஏய்த்த தி.மு.க.வின் வழித்தோன்றல்களாகவே இவர்கள் மக்களிடம் தென்படுவார்கள். ம.தி.மு.க., பா.ம.க., கொ.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சி, தமிழர் களம் என எத்துணை அமைப்புகள் வந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல.
தேர்தல்களில் வெற்றி பெற்று பதவிகள் பெறலாம், தமிழ்ச் சமூகத்திற்கு சில கூடுதல் உரிமைகளைக் கூடப் பெற்றுத் தரலாம் என்றாலும், ஒருபோதும் தமிழ்த் தேசிய விடுதலையைப் பெற்றுத் தர முடியாது. 
ஏனெனில், தமிழ்த் தேசியம் என்பது நாம் கேட்டுப் பெற வேண்டிய சலுகையல்ல; அது ஒர் தேசிய இனத்தின் விடுதலை இலக்கு. அதனை மக்கள் எழுச்சிப் போராட்டங்களே பெற்றுத் தரும், அதில் தேர்தல் கட்சிகளுக்கு இடமில்லை.
 
(கட்டுரையாளர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

வியாழன், 17 ஜனவரி, 2013

மூன்றாகப் பிரியும் ஆந்திரா மாநிலம்

ஆந்திரா மாநிலம் என்பது மூன்று பகுதிகளை உள்ளடக்கியது.
தெலங்கானா 
ராயலசீமா 
ஆந்திரா (கடற்கரை பகுதி)

இவற்றில் ராயலசீமா, ஆந்திரா (கடற்கரை பகுதி) ஆகியவை சென்னை மாகாணத்தில் உள்ளடங்கி இருந்த பகுதிகள். மொழிவாரிப் பிரிவினைக்குப் பிறகு  சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டவை.



தெலங்கானா என்பது நிஜாம்களால் ஆளப்பட்ட 'ஹைதராபாத் மாநிலம்'.(http://en.wikipedia.org/wiki/Hyderabad_state)
( ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் ஹைதராபாத் உள்ளடங்க மறுத்தது வரலாறு)

1956-இல் ஹைதராபாத்தின் சில பகுதிகள் மும்பை மற்றும் மைசூர் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டது. ஹைதராபாத்தில் வசித்த தெலுங்கர் அல்லாதவர்கள் மும்பை மற்றும் மைசூர் மாநிலங்களுக்கு குடியேறினர்.

மீதமுள்ள பகுதிதான் தெலங்கானா. அப்பகுதி மக்களின் விருப்பமில்லாமல் தெலங்கானா ஆந்திரா மாநிலத்துடன்[ராயலசீமா, ஆந்திரா (கடற்கரை பகுதி)]
இணைக்கப்பட்டது. இதை செய்தவர் ஜவகர்லால் நேரு. மக்கள் தொடர்ந்து தெலங்கானாவை மட்டும் விரும்பினால் ஐந்து வருடங்களுக்கு பின்னர் பிரிக்கப்படும் என போலி வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தெலங்கானா தனி மாநில போராட்டம் 1969-இல் இருந்து தொடர்கிறது

ஒன்றுபட்ட ஆந்திராவில் தெலங்கானா பகுதிதான் நிலப்பரப்பில் பெரியது.
கிட்டத்தட்ட 45 சதவிகிதம்.பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள், இயற்கை வளங்களை தெலங்கானா பகுதி கொண்டுள்ளது.

 தெலங்கானா பகுதி வளங்களை மட்டும்  இதர பகுதியினர் தங்கள் நலனுக்குப் பயன்படுத்திவிட்டு தெலங்கானா மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக இங்குள்ள நண்பர்கள் சொல்லுகிறார்கள். அதிலும் குறிப்பாக ராயலசீமா அரசியல்வாதிகளின் ஆதிக்கம்  மிக அதிகமாக உள்ளதாம்.

இவ்வாறாக ஆந்திர மாநிலத்தைப் பிரித்து ஹைதராபாத்தை தலைநகராகக் கொண்டு தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பது அரை நூற்றாண்டுகால கோரிக்கை. 


இதற்கான போராட்டங்கள் நாட்டையே உலுக்கியவை. தெலுங்கானா தனி மாநிலம் கோரி உயிரை மாய்த்தவர்கள் ஏராளம்! இதைத் தொடர்ந்து தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது குறித்து ஆராய கிருஷ்ணா கமிஷன் அமைக்கப்பட்டது. (http://en.wikipedia.org/wiki/Telangana_movement)
தெலுங்கா ராஷ்டிரிய சமிதி(TRS) கட்சிதான் தொடர்ந்து தெலுங்கானாவுக்கு குரல் கொடுத்து வருகிறது.

தெலுங்கா ராஷ்டிரிய சமிதி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யுனிஸ்ட், தெலுங்கு தேசம் ஆகிய  கட்சிகள் தனி தெலுங்கானாவை ஆதரிக்கின்றன.

ஆளும் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும்  பிரதான கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை நடுநிலை வகித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன.

மஜ்லிஸ் ஏ இதேஹாதுல் முஸல்மீன்(MIM), மார்ச்சிஸ்ட் கம்யுனிஸ்ட் ஆகிய கட்சிகள் தனி தெலுங்கானா அமைவதை  எதிர்க்கின்றன.
 
தெலுங்கானா விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர். தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளுக்கு வாக்களித்தால் ஹைதராபாத்துக்கு போக பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்று சொன்னவர். அதேபோல் தெலுங்கானாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கோஷம் போட்டு பதாகை ஏந்தியவர் ஜெகன்மோகன்.





கடந்த டிசம்பர் மாதத்தில் தெலுங்கானா அமைவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
தெலுங்கானா பற்றிய இறுதி முடிவை வருகின்ற 28-ஆம் தேதி அறிவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

'ஜெய் தெலுங்கானா'  கோஷம் வெற்றி பெறப் போகிறது. தெலுங்கானா தனி மாநிலம் அமைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இதற்கிடையில் ராயலசீமா பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி 'ஜெய் ராயலசீமா' என்கிற புது கோஷம் எழுந்துள்ளது.
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/rps-will-fight-for-rayalaseema/article4318203.ece

ஏற்கனவே ஆந்திராப்பகுதியை மட்டும் தனியாக பிரிக்கக் கோரி 1972 ஆம் ஆண்டில் 'ஜெய் ஆந்திரா' கோஷம் எழுப்பப்பட்டு பின்னர் வலுவிழந்தது.

ஆக மொத்தம் தெலுங்கானா,  ராயலசீமா, ஆந்திரா என மூன்று மாநிலங்கள் உருவாகும் நிலை உள்ளது.

என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பிரிவினை தேவையற்றது என்றே கருதுகிறேன்.  ஒரு மொழி பேசும் ஓர் இன மக்கள் பிரிந்து இருப்பது நல்லது அல்ல.
ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்  என்பது போல  இந்தப் பிரிவினையால் அரசியல்வாதிகள் பயன் பெறுவார்கள். எப்படியானாலும் மூன்று மாநிலங்களும் தன்னை எதிர்க்க மாட்டார்கள் என்பதால்  போலி இந்திய தேசியமும் பயன்பெறும்.

இந்தியா என்பது பல இனத்து மக்களால் ஒன்றுபட்டு கட்டமைக்கப்பட்ட இயற்கை தேசம் அல்ல.
ஆட்சியாளர்களின் வசதிக்கேற்ப பல இனத்து மக்களை அடிமைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட செயற்கை தேசம்.


அதற்கு ஆந்திர மாநில  பிரிவினை ஓர் உதாரணம்

வியாழன், 10 ஜனவரி, 2013

ராகி சங்கடியும், நாட்டுக்கொடி புலுசும்

ஹைதராபாத்தில் என்னை மிகவும் கவர்ந்த உணவு 

ராகி சங்கடி  -> தமிழில் கேழ்வரகு உருண்டை 

நாட்டுக்கொடி புலுசு -> தமிழில் நாட்டுக்கோழி குழம்பு






படத்தில் உள்ளபடி கேழ்வரகு உருண்டையும்,  நாட்டுக்கோழி குழம்பும் செய்துகொள்ளவேண்டும். நல்ல சூடான நிலையில்  கேழ்வரகு உருண்டை மீது நெய் ஊற்ற வேண்டும். பின்னர் கோழிக்குழம்பை  தொட்டு சாப்பிட வேண்டும்.

மிக ஆரோக்கியமான உணவு.
மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர்  அவர்கள் இந்த உணவுக்கு அடிமை.

 ஹைதராபாத்தில் 'ராயலசீமா ருச்சுலு' என்னும் உணவகத்தில் கிடைக்கும்.
http://www.rayalaseemaruchulu.com/

ராகி சங்கடி (2 உருண்டை) - 99rs
நாட்டுக்கொடி புலுசு - 285rs

இரண்டு நாட்கள் சாப்பிட்டேன், இன்னும் மறக்க முடியல. சென்னை வந்தபிறகு வீட்டில் சமைத்து சாப்பிடனும்.

நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.

புதன், 9 ஜனவரி, 2013

கூடங்குளத்திலிருந்து ஒரு கடிதம்

நன்றி: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22599:2013-01-09-23-51-18&catid=1:articles&Itemid=264

சனவரி 9, 2013
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை 627 104
திருநெல்வேலி மாவட்டம்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தி.மு.க. தலைவர் திருமிகு. கலைஞர் கருணாநிதி அவர்கள்,
சென்னை

மாண்புமிகு முதல்வர் அவர்களே, திருமிகு. கலைஞர் அவர்களே:

வணக்கம். தாங்கள் இருவரும் எதிரும் புதிருமான அரசியல் நடத்தி வந்தாலும், ஒட்டு மொத்த தமிழக மக்கள் நலனுக்காகக்கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவோ, நேரில் பார்த்துக்கொள்ளவோ மாட்டீர்கள் என்றாலும், தங்கள் இருவருக்குமாகச் சேர்த்து இந்தக் கடிதம் எழுதப்படவேண்டியிருக்கிறது. தற்போது மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்து வருகிற தங்கள் கட்சிகள்தான் தமிழகத்தின் அரசியலை, சமூகப் பொருளாதார விடயங்களை கடந்த அரை நூற்றாண்டாக மாறி மாறி மேலாண்மை செய்து வருகிறீர்கள்.

தமிழகத்தின் மிக முக்கியமான தங்கள் இருவரின் ஆளுமைகளைப் பற்றிய ஒப்பீடு செய்வதோ, தாங்கள் இருவரும் வழிநடத்தும் தமிழகத்தின் இரு முக்கிய திராவிட இயக்கங்களின் நிறை குறைகளைப் பற்றி அலசுவதோ, தங்கள் கட்சிகளின் ஆட்சிகளைப் பற்றிய விமரிசனத்தில் ஈடுபடுவதோ இந்தக் கடிதத்தின் நோக்கமல்ல. மாறாக, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வருகிற நாங்கள் அந்தப் பிரச்சினையில் தமிழக மக்களை எப்படி இருவருமாக சேர்ந்து கரிசனமின்றி கைவிட்டுவிட்டீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

துவக்கத்தில் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்த தி.மு.க., தனது நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசியபோது அதை அமோதிக்கவே செய்தது. கட்சியின் முக்கியத் தலைவர் திரு. முரசொலி மாறன் கூட கூடங்குளம் திட்டத்தை எதிர்த்தார். பின்னர் கூடங்குளத்தை ஆதரித்த தி.மு.க. அரசு 1989மே மாதம் 1-ம் நாள் கன்னியாகுமரியில் நடந்த எதிர்ப்பு மாநாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியது; ஒரிருவரைக் கொன்று, பலரைக் காயப்படுத்தியது. மன்மோகன் சிங் அமைச்சரவைக் கொண்டு வந்த இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்த தி.மு.க. மேலவை உறுப்பினர் திருமிகு. கனிமொழி 2007-ம் ஆண்டு நிகழ்த்திய தனது பாராளுமன்ற கன்னிப்பேச்சில் அணு ஆற்றல் துறையில் இந்தியா தன்னிறைவடைய வேண்டியதன் தேவையைப் பற்றி விவரித்து, கூடங்குளம் திட்டம் தொய்வடைந்து கிடக்கிறதே எனும் கவலையைத் தெரிவித்தார்.

ஆனால் தமிழக முதல்வர் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தீர்கள். அமெரிக்காவின் அணுசக்திக் கப்பல் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் 2007 யூன் மாதம் சென்னைக்கு வந்தபோது கதிர்வீச்சு ஆபத்து எழுமென்பதால் கப்பல் வரக்கூடாது என்று ஆணித்தரமாக ஆட்சேபித்தீர்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான உச்சக்கட்டப் போராட்டம் துவங்கியபோது, முதலில் உலையை ஆதரித்த முதல்வர், மக்கள் போராட்டத்தை மதித்து நிலைப்பாட்டை மாற்றி, மக்களுக்கு ஆதரவாக அமைச்சரவை தீர்மானம் இயற்றினீர்கள். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மாற்றுவழி மின்சாரத் திட்டங்கள் பற்றிப் பேசினீர்கள், திட்டமிட்டீர்கள். ஒரு முறை கூட கூடங்குளம் திட்டத்தை ஆதரித்துப் பேசவில்லை. “உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்று போராடும் மக்களுக்கு உத்தரவாதம் அளித்தீர்கள்.

கூடங்குளம் திட்டம் காலதாமதமானதற்கு முதல்வர்தான் காரணம் என்று கலைஞர் அவர்கள் குற்றம் சாட்டினீர்கள். தமிழகத்தின் மின்சாரப் பிரச்சினைக்கு கூடங்குளமே தீர்வு என்று சொல்லி, கையிலே வெண்ணெய்யை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் நெய்க்கு அலைவதாக முதல்வரை பகடிப் பேசினீர்கள்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்த கையோடு, முதல்வர் அவர்கள் எந்தக் காரணமும் சொல்லாமல், இனியன் குழு அறிக்கையை மக்களோடு பகிர்ந்து கொள்ளாமல், தங்கள் நிலைப்பாட்டை அவசரம் அவசரமாக மாற்றிக் கொண்டீர்கள். அனுசரணையோடு எங்களிடம் அளவளாவிய தாங்கள், அப்படியே மாறி எங்களைக் கைது செய்தீர்கள், தங்களையும், தங்கள் கட்சியையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்து வந்த உண்மையான உழைத்து வாழும் மீனவ மக்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசி, தடியடி நடத்தி, சுட்டுக் கொன்றது தங்கள் காவல்துறை.

இந்தியாவிலேயே மிகப்பெரிய, இறக்குமதி செய்யப்பட்ட, தரம் நிரூபிக்கப்படாத ரஷ்யாவின் அணுமின் நிலையம் கூடங்குளத்தில் கட்டப்படுகிறது. ஒரு மிகப்பெரிய அணு உலைப் பாலைவனம் “பூங்கா” என்ற பெயரில் உள்ளூர் மக்களுக்கு எந்த தகவலும் தரப்படாது, அவர்கள் அனுமதியின்றி, முன்தயாரிப்பு உதவிகளின்றி கட்டப்படுகிறது. தாங்கள் இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு அதனை ஆதரிக்கிறீர்கள்.

கூடங்குளத்திலிருந்து ஐநூறு மெகாவாட் மின்சாரம் எங்களுக்கு வேண்டும் என்று உரிமை கொண்டாடும் கேரள முதல்வர் தனது மாநிலத்தில் ஓர் அணு உலையைக்கூடத் திறக்க முன்வரவில்லையே, அதனை தாங்கள் இருவரும் கவனித்தீர்களா? கூடங்குளம் கழிவுகளை கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகத்தில் எங்குமே புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில முதல்வரும், கர்நாடகாவின் மத்திய காங்கிரஸ் அமைச்சர்களும் கடுமையாக எதிர்ப்பதை கவனித்தீர்களா? எங்களை தேச துரோகிகள் என்றும், இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும் என்றும் சொன்ன பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவில் கோலார் பிரச்சினையில் அணுசக்திக்கு எதிரான ஒரே நிலைப்பாடு எடுப்பதையும் தாங்கள் அவதானித்திருப்பீர்கள். தாங்கள் இருவரும் ஏன் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன் வரவில்லை? தாங்கள் இருவரும் இவ்வளவு சக்திமிக்க தலைவர்களாக, ஆட்சிப் பீடத்தில் இருக்கும்போதே தமிழர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு, இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் இந்திய அரசால்.

கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு தாருங்கள் என்று முதல்வர் கேட்கிறீர்கள்; அதற்கும் மத்திய அரசு செவிமடுக்கவில்லை. ஏதோ கடமைக்குக் கேட்டது போல, தாங்களும் அதனைக் கண்டு கொள்ளவில்லை. அதிக மின்சாரம் கிடைத்து, தமிழக மின்தட்டுப்பாடு தீர்ந்துவிட்டால் எங்கே அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு அதிகரித்துவிடுமோ, நமக்கு செல்வாக்கு குறைந்து விடுமோ என்று மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. உதவி செய்ய மறுக்கிறது. தமிழ் மக்களுக்காக உழைப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தங்கள் இரு கட்சிகளும், அரசுகளும் உண்மையில் தங்கள் நலனுக்காகத்தான் இயங்குகிறீர்களோ என்று நாங்கள், சாதாரண மக்கள், ஐயுறுகிறோம்.

இந்த நிலையில் இரண்டு அண்மை நிகழ்வுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி பகுதியில் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகத்தால் கடலோர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், மீஞ்சூரில் அமைந்துள்ள “கடல் நீரைக் குடிநீராக்கும்” திட்டத்தினால் பழவேற்காடு பகுதியைச் சுற்றியுள்ள பதினைந்து கிராமங்களில் மீனவ மக்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டு அம்மக்களுக்கு நிவாரணமும், வேலை வாய்ப்புக்களும் உதவிகளும் அறிவிக்கிற முதல்வர் கூடங்குளம் அணுமின் நிலையத்தால், அதனுள் இருக்கிற நான்கு “கடல் நீரைக் குடிநீராக்கும்” திட்டங்களால் எங்கள் பகுதி மக்களுக்கு எந்தத் தீங்கும் வராது, எதிர்ப்போர் “மாயவலை” விரிக்கிறார்கள் எனப் பேசுவது ஏன் என்று எங்களுக்குப் புரியவில்லை. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்கள்தான் தங்கள் மீன்பிடித் தொழிலால் மிக அதிகான வருமானத்தையும், அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தருகிறார்கள் என்பது தங்கள் இருவருக்கும் தெரியாததல்ல. துறைமுகத்தையும், அணு உலையையும் எப்படி ஒன்றாக பாவிக்க முடியும்? எங்கள் பகுதியில் ஐநூறு கோடி ரூபாய் செலவில் மக்கள் ஓடுவதற்கு சாலைகளும், சாவதற்கு மருத்துவமனைகளும் கட்டித்தருகிறோம் என்று அறிவித்திருக்கின்றன தங்களின் அரசுகள்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையை பாதுகாக்க சனவரி 19அன்று தங்கள் தலைமையில் ஒரு மிகப் பெரிய போராட்டமே அறிவித்திருக்கிறீர்கள். அந்த ஊருக்கு அருகாமையில் இடிந்தகரையில் கடந்த ஐநூறு நாட்களுக்கு மேலாக நாங்கள் தமிழினத்தின் மண்ணுக்காக, கடலுக்காக, நீருக்காக, காற்றுக்காக, உணவுக்காக, எதிர்கால சந்ததிகளுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம். தாங்களோ, தங்கள் கட்சியை சார்ந்த அதிகாரபூர்வமான ஒரு பிரதிநிதியோ இதுவரை எங்களை வந்து பார்க்கவில்லை. ஒரு சிலைக்குக் கொடுக்கும் மரியாதையை தமிழ் மக்களுக்குத் தர மறுப்பதேன்? தமிழர் வாழ்ந்தால்தானே திருவள்ளுவர் வாழ்வார்?

தமிழ் மக்களாகிய நாங்கள் தாங்கள் இருவரிடமும் மீண்டும் ஒருமுறை எங்கள் விண்ணப்பத்தை முன்வைக்க விரும்புகிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயங்க அனுமதிக்காதீர்கள். தமிழ் மண்ணில் இந்த அணு அரக்கனை கால் பதிக்க, கோலோச்ச, நம் வருங்கால தமிழனத் தலைமுறைகளைத் துன்புறுத்த அனுமதிக்காதீர்கள். தாங்கள் இருவரும் தங்களின் நீண்ட பொதுவாழ்வு மூலமாக தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் இதைச் செய்வீர்கள், செய்ய வேண்டும் என்று அன்போடும், பணிவோடும் கேட்டுக் கொள்கிறோம்.

சுயநலக் காரண காரியங்களை மட்டுமே கருத்திற்கொண்டு, தமிழ் மக்களைக் கைவிட்டால் ஒரு மிகப் பெரிய வரலாற்றுப் பிழையை செய்வதோடு எதிர்கால தமிழ் சமுதாயம் தாங்கள் இருவரையும், தங்கள் கட்சிகளையும் பழிக்க ஏதுவாகும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். “அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூம்” என்பது தமிழரின் உறுதியான நம்பிக்கை ஆயிற்றே? வணக்கம்.

தங்களன்புள்ள,

சுப. உதயகுமார், ம. புஷ்பராயன், மை.பா. சேசுராசு,

இரா.சா. முகிலன், பீட்டர் மில்டன்

அக்பருதீன் ஒவைசியும் பிரவீன் தொகடியாவும் விஷச்செடிகள்

இந்த வருட தொடக்கத்தில் பலருக்கும் நாக்கில் சனி குடியேறிவிட்டது என நினைக்கிறேன். பாலியல் பலாத்காரம் பற்றி பல அரசியல், ஆன்மீக தலைவர்கள்  வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். 

இந்நிலையில் மதவெறி பிடித்து  பேசிய இருவரைப் பற்றி காண்போம். இவர்கள் டிசம்பர் மாதமே பேசி விட்டார்கள். ஆனால் இப்போதுதான் விவகாரம் சூடு பிடிக்கிறது.

ஆந்திரா மாநிலம் மஜ்லிஸ் ஏ இதேஹாதுல் முஸல்மீன்(MIM) கட்சியின் எம்.எல்.ஏ அக்பருதீன் ஒவைசி கடந்த டிச.24ம் திகதி பொது மக்கள் முன்னிலையில் நிகழ்த்திய உரை:
"15 நிமிடங்களுக்கு காவல்துறை அகற்றப்பட்டால், 100 கோடி இந்துக்களை தாம் அழித்துவிட முடியும்". மேலும் அயோத்தியில் உள்ள ராமர் கோவில், அஜந்தாவில் உள்ள எல்லோரா குகை சிற்பங்களையும் கேலி செய்யும் வகையில் பேசியுள்ளதாக சர்ச்சை எழுந்தது.

ஓவைஸியின் அடியாட்களே பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நச்ரூதீனுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களுக்கும் காரணமானவர்கள் என 5 வருடங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.



அடுத்து விஷுவ ஹிந்து பரிஷத்(VHP) தலைவர் பிரவீன் தொகடியா.
ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள பாக்கியலட்சுமி கோவில் விவகாரம் தொடர்பாக டிசம்பர் 7 நடந்த பொதுக்கூட்டத்தில் இவர் பேசியது:
"பாக்கியலட்சுமி கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்காவிட்டால், ஹைதராபாத்தை அய்யோத்தியாக மாற்ற வேண்டிய நிலை வரும். இங்குள்ள முஸ்லிம்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவோம் "

 

இருவரது  பேச்சும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுமாதிரி அறிக்கை விடுபவர்கள் எல்லாம் பாதுகாப்பாக இருந்து கொள்வார்கள். தான் செய்த தவறை ஒத்துக்கொள்ளும் தைரியம் கூட இவர்களுக்கு இல்லை. 

இவர்கள் போன்ற அரைகுறைகளின் பேச்சைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு, மோதலில் ஈடுபட்டு பாதிப்புக்குள்ளாவது அப்பாவி மக்களே!

எனவே அக்பருதீன் ஒவைசி, பிரவீன் தொகடியா போன்ற விஷச்செடிகளை சமுதாயத்திலிருந்து ஒதுக்கி, அகற்றுவோம்.


பாக்கியலட்சுமி கோவில் விவகாரம் பற்றி சற்று பார்ப்போம்.
1960 வரை சார்மினார் அருகில் அப்படி ஒரு கோவில் கிடையாது என்று பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
நம்ம ஊரில் தெருவோர கோவில்கள் எப்படி தோன்றும் என்பது நாம் அறிந்ததே!



சார்மினாரின்  அழகிய தோற்றத்தை, பண்பாட்டை இக்கோவில் கெடுக்கிறது. இப்போது இந்த கோவிலை விரிவாக்கம் செய்கிறோம் என்னும் பெயரில் கலவரத்துக்கு வித்திடுகின்றன சில மதவாத சக்திகள். ஊருக்குள் எத்தனையோ பெரிய கோவில்கள் பாழடைந்து கிடக்கும்போது இந்த ரோட்டோர கோவிலுக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுக்க என்ன காரணம்? (இன்னும் சில தினங்களில் நேரில் சென்று பார்த்த பின்னர் இது பற்றி இன்னொரு கட்டுரை இடுகிறேன்)

அக்பருதீன் ஒவைசி நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
MIM கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது என ஆந்திர காங்கிரஸ் அறிவித்துள்ளது.
MIM கட்சியை தடை செய்வது பற்றி பேச்சு எழுகிறது.

அனைத்தும் சரி.
பிரவீன் தொகடியா மீது என்ன நடவடிக்கை?
பொறுத்திருந்து பார்ப்போம்.

சனி, 5 ஜனவரி, 2013

தீவிரவாதிகள் முஸ்லீம்கள் அல்ல!

அமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை.
துப்பாக்கி படத்தை கண்டித்து  இஸ்லாமியர்கள் போராட்டம்.
தற்போது விஸ்வரூபம் பட விவகாரம்.
இப்படி பல செய்திகள் வரும்போது இணையதளங்களில் பலரும் இஸ்லாமியர்களைக் கடுமையாக சாடுகிறார்கள்.
 (நீங்களும் இந்த பக்கங்களில் பாருங்கள்
http://tamil.oneindia.in/movies/news/2013/01/islamic-federation-demand-see-viswaroopam-167428.html

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=619386 )


பலரது பின்னூட்டங்களை பார்க்கும்போது  மனம் மிக வேதனைப் படுகிறது.
இஸ்லாமியர்கள் போராடவே கூடாது என்பது போல  இருக்கிறது பலரது கருத்து.

சில இஸ்லாமிய நண்பர்களிடம் இதுபற்றி விவாதித்தேன்.
சில நாட்கள் குரான் இணையதளத்தில்(quran.com, islamkalvi.com) படித்தேன். என்னை மிகவும் கவர்ந்த வரிகள்

"எவனொருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" 5:32

இன்னும் இதுபோன்ற பல நல்ல கருத்துக்களை இஸ்லாம் கூறுகிறது.

இஸ்லாமியத்தை முறையாக அறிந்தவன் பிறரை துன்புறுத்த மாட்டான், தாக்க  மாட்டான்.
தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவோரை ஏன் மத அடிப்படையில் அடையாளப் படுத்த வேண்டும்?

ஆப்கனில் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தவர்கள் கிறிஸ்துவத் தீவிரவாதிகளா?
குஜராத்தில் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தவர்கள் இந்துத் தீவிரவாதிகளா?
பர்மாவில் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தவர்கள் பௌத்தத் தீவிரவாதிகளா?
தமிழீழத்தில் தமிழர்களைக்  கொன்று குவித்தவர்கள் பௌத்தத் தீவிரவாதிகளா?

இல்லையே! அப்படி இருக்கும்போது பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதியை மட்டும் ஏன் 'முஸ்லிம் தீவிரவாதிகள்" என அடையாளப் படுத்த வேண்டும்?

தீவிரவாதச் செயல்களில் ஒருவன் ஈடுபட்டால் அவன் தீவிரவாதி. அவ்வளவுதான்.

சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே!

கலெக்டர் அலுவலத்திற்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த சென்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தீவிரவாதிகள்.


உதயக்குமார் அவர்களையும் அணு உலை எதிர்ப்பவர்களையும் சுட்டுக் கொல்ல  வேண்டும் எனக் கூறும் காங்கிரஸ்காரர்கள் தீவிரவாதிகள்.

மாவோயிஸ்ட் வேட்டை என்னும் பெயரில் அப்பாவி மக்களைக் கொள்பவர்கள் தீவிரவாதிகள்.


ராஜீவ் கொலை வழக்கை முறையாக விசாரிக்காமல் மூன்று தமிழர்களை தூக்கில் இட துடிப்பவர்கள் தீவிரவாதிகள்.


குஜராத்தில் சிறுவர்களைக் கூட விட்டு வைக்காமல் தீக்கிரையாக்கியவர்கள் தீவிரவாதிகள்.

கரசேவை என்னும் பெயரில் பிற மதத்தினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் தீவிரவாதிகள்.


இப்படி அனைத்து தீவிரவாதிகளையும் இங்கே வளர்த்து விட்டு, எங்கோ பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதிகளுக்கு 'முஸ்லிம் தீவிரவாதிகள்' என பட்டம் கொடுத்து ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக பார்த்தால்  நீங்களும் தீவிரவாதியே!

பிற மனதை நோகடிக்காமல் இருப்போம்! மனித நேயம் வளர்ப்போம்!


--தொடரும்