வெள்ளி, 29 மார்ச், 2013

தமிழக மாணவர்கள் பார்வைக்கு.

ஈழத்துக்காக இனி நாம் செய்ய வேண்டியது என்ன?
அன்பார்ந்த மாணவத் தோழர்களே! வணக்கம்.
தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றீர்கள். போராட்டத்தின் முதற்கட்டம் முடிந்து அடுத்த கட்டம் குறித்து சிந்தித்துக் கலந்தாய்வு செய்து வரும் உங்கள் பார்வைக்குச் சில முன்மொழிவுகளை அன்புரிமையோடு படைக்கிறோம்.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சென்ற 2012 மார்ச்சில் அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டுவந்த போதே, இது தமிழர்களுக்கு எதிரான தீர்மானம், இனக்கொலைக் குற்றவாளிகளான சிங்கள இராசபட்சே கும்பல் தப்ப்பித்துக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கும் தீர்மானம் என்று எமது இயக்கத்தின் சார்பில் எச்சரித்தோம். எங்கள் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், தமிழகத்தின் அரசியல் கட்சிகளும், சிலபல ஈழ ஆதரவு அமைப்புகளும் கூட அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று சேர்ந்திசை பாடின.
இந்த முறை மாணவர்களாகிய நீங்கள் சில அரசியல் தலைவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல், உள்ளது உள்ளபடி அமெரிக்கத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தையும் உண்மை நோக்கத்தையும் சரியாக எடுத்துக் காட்டிப் போராடியதால் தமிழினம் விழித்துக் கொண்டது.
இனக்கொலையை இனக்கொலை என்றுதான் சொல்ல வேண்டும். அதை மறைக்க மனித உரிமை மீறல் போன்ற சொற்களை யார் பயன்படுத்தினாலும் ஏற்க மாட்டோம், ஏமாற மாட்டோம். டப்ளின் தீர்ப்பாயம், ஐநா மூவல்லுநர் குழு அறிக்கை, இலண்டன் சேனல் - 4 வெளியிட்ட ஆவணப் படங்கள்... இவற்றை எல்லாம் மூடிமறைத்து விட்டு இராசபட்சேவின் செல்லப்பிள்ளையான படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் (LLRC) அறிக்கையை வலியுறுத்துவதும், ஆதரவு எதிர்ப்பு என்று சிணுங்குவதும் உலகின் கண்ணில் மண்ணைத் தூவும் வேலை என்பதை உரக்கச் சொல்வோம்.
உலகத் தமிழர்களின் கோரிக்கைகளும் நம் கோரிக்கைகளும் ஒன்றே:
  1. இராசபட்சேவின் சிங்கள அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு இழைத்த இனக் கொலை குறித்து தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு (Independent International Investigation) தேவை.
  2. ஈழ மக்கள் மீது தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் இனக்கொலையைத் தடுத்து நிறுத்தப் பன்னாட்டுப் பாதுகாப்புப் பொறியமைவு (International Protective Mechanism) தேவை.
  3. தமிழீழத்தின் இறைமையை (sovereignty) மீட்டெடுக்கும் வகையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வரும் ஈழத் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு தேவை.
இந்தக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தை ஐநா மனித உரிமை மன்றத்தை மையப்படுத்தி நடத்தினோம். இனி என்ன செய்வது? மனித உரிமை மன்றம் அடுத்த முறை கூடட்டும் என்று நாம் காத்திருக்க முடியாது. இராசபட்சே கும்பலை மென்மேலும் தனிமைப்படுத்துவதன் மூலம் தமிழீழ மக்கள் போராடுவதற்கான வெளியை உருவாக்கி விரிவாக்குவதுதான் நம் போராட்டத்தின் நோக்கமும் விளைவும் என்பதை மறந்து விடக் கூடாது. உலக அரங்கில் என்றாலும் உள்நாட்டில் என்றாலும் இந்த விளைவை நோக்கியே நம் போராட்டங்கள் அமைய வேண்டும்.
இனக்கொலைக் குற்றம் புரிந்த சிங்கள அரசை அனைத்து நாடுகளும் அனைத்து மக்களும் புறக்கணிக்கும் படி செய்வோம். பொருளியல், அரசியல், பண்பாடு, கலைத்துறை, விளையாட்டு, சுற்றுலா... என்று எந்தத் துறையையும் விட்டு வைக்காமல் சிங்களத்தைப் புறக்கணிக்கும் இயக்கத்தை வீரியத்துடன் முன்னெடுத்துச் செல்வோம்.
  • காமன்வெல்த் மாநாடு கொழும்பில் நடத்தக் கூடாது. நடந்தால் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது.
  • இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சிங்களர் எவரும் விளையாடக் கூடாது.
  • தமிழகத் திரைத் துறையினர் படப்பிடிப்பு நடத்தக் கூடாது.
  • கலைஞர்கள், எழுத்தாளர்கள் இலங்கையில் நடைபெறும் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளக் கூடாது.
  • இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவை இயற்றிய தீர்மானத்திற்கு தமிழக அரசும் இந்திய அரசும் செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.
  • தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடலடிக் கம்பி வழியாக மின்சாரம் அனுப்பும் இந்திய-இலங்கை மின் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நீக்கம் செய்ய வேண்டும்.
  • இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்று தமிழக சட்டப் பேரவையில் போலவே இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்ற வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக அனைத்து மாணவர்களையும், அனைத்துப் பொதுமக்களையும், அனைத்து இயக்கங்களையும், அனைத்து ஆதரவாளர்களையும் திரட்டுவதற்குப் பொருத்தமான போராட்ட வடிவங்களை நீங்களே முடிவு செய்யுங்கள்.
அதேபோது நம் கோரிக்கைகள் அனைத்திற்கும் மையமாக இருக்க வேண்டிய முழக்கம்:
இலங்கையைப் புறக்கணிப்போம்!
BOYCOTT SRILANKA!
உலகெங்கும் ஒலிக்கும் இந்த முழக்கம் தமிழகத்திலும் ஓங்கி ஒலிக்கட்டும். இது இனக் கொலைகாரர்களின் இந்தியக் கூட்டாளிகளை அம்பலப்படுத்தும். இன்னமும் குழம்பிக் கிடக்கும் தமிழர்களின் தடுமாற்றத்தைப் போக்கவும் துணை செய்யும்.
இலங்கையைப் புறக்கணிப்போம்!
BOYCOTT SRILANKA!
வெல்க மாணவர் போராட்டம்!
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
பொதுச் செயலாளர்: தோழர் தியாகு
தொடர்புக்கு: o44-23610603, 98651 07107, 9715417170




சனி, 23 மார்ச், 2013

இதைக் கூட இந்தியாவால் செய்யமுடியாதா??


தமிழீழ விடுதலைக்காக தமிழகத்தில் மாணவர்கள் தன்னெழுச்சி போராட்டம் ஆரம்பித்து பொதுமக்கள், பணியாளர்கள் போராட்டம் என நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது.

ஆனால் இந்தியா அதே கள்ள மௌனம் சாதிக்கிறது. நடந்தது இனப்படுகொலை என்பதைக் கூட இந்தியாவால் தைரியமாக சொல்ல முடியவில்லை (இந்தியாவும் உடந்தைதானே!!). இந்தியா மீது தமிழர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். காங்கிரஸ், பிஜேபி மற்றும் பல இந்தியக் கட்சிகளும் தமிழர்கள் பற்றிக் கண்டுகொள்வதில்லை. தமிழகக் கட்சிகளும் கூட்டணி கணக்கில் இறங்கிவிட்டார்கள்.

 இந்நிலையில் இந்தியாவுக்கு கீழ்க்காணும் கோரிக்கைகளை வைக்கிறேன்.
இது ஏற்கனவே பலரும் வைத்ததுதான்.

1. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது. (புறக்கணிக்கப்போவதாக கனடா ஏற்கனவே அறிவித்துவிட்டது)

2. IPL கிரிக்கெட் விளையாட்டில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ளக் கூடாது.

3. தமிழ்மண்ணிலிருந்து இலங்கைத் தூதரகம் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

4.  இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்  (ஏற்கனவே தமிழக அரசு விதித்துவிட்டது)

5. தமிழக மீனவர் மீதான தாக்குதல்களுக்காக இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும். இனி தாக்குதல்கள் நடைபெறாது என்பதை உறுதி செய்யவேண்டும்..

Demands to Indian Government

1.India should not attend common wealth meeting to be held in genocidal srilanka.  (Canada already announced that they wont attend that meeting)


2. Srilankan players should not be allowed to play in IPL matches.

3. Genocidal Srilankan embassy should be removed from Tamilnadu

4. Indian Government should impose economical ban on Srilanka (Tamilnadu Govt already imposed economical ban on srilanka)

5. India should condemn Srilanka for its attacks on Tamilnadu fishermen.


நான்காவது கோரிக்கை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் மிக எளிதாக நிறைவேற்றப்படக்கூடிய  கோரிக்கைகளே!!

கிரிக்கெட்டை ஏன் புறக்கணிக்க வேண்டும் எனப் பலர் கேள்வி கேட்கக் கூடும்.
அவர்கள் இந்தப் பதிவை படித்துத் தெளிவாகுங்கள்.

இதைக் கூட இந்தியாவால் செய்யமுடியாதா??

வெள்ளி, 15 மார்ச், 2013

அவசரம் - ஹைதராபாத் நண்பர்கள் கவனத்திற்கு

ஹைதராபாத் நண்பர்கள் கவனத்திற்கு,

தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.

வரும் ஞாயிற்றுக்கிழமை(17/03/2013) தெலங்கானா மாநிலம்  ஹைதராபாத்  நகரில் (ஹைடெக் சிட்டி பகுதியில்) கண்டனப்போராட்டமும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

ஹைதராபாத்  நகரில் வசிக்கும் தமிழ் நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நமது கோரிக்கைகளை பிற மாநில நண்பர்களுக்குஎடுத்துச் செல்வோம். பிற மாநில நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

தொடர்புக்கு:  
வடிவேல் - 9052624014

தயவுசெய்து இந்த பதிவை பகிருங்கள். தங்கள் இணையதளங்களில் பதிவு செய்யுங்கள். மிக அவசரம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

வியாழன், 14 மார்ச், 2013

விளம்பர நாயகி ஜெயலலிதா அம்மையார்

 கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அனைவரும் தன்னை பாராட்டும்படி, கூத்தாடிகளையும்  அழைத்து, பிரம்மாண்ட பாராட்டு விழாக்களை நடத்தி, அதை தன் தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி ஆனந்த கூத்தாடினார் அப்போதைய முதல்வர்  பாராட்டுவிழா நாயகன் கருணாநிதி.

கருணாநிதிக்கு சற்றும் சளைத்தவரில்லை இப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இது பலரும் அறிந்ததே!
ஆட்சி முடிந்த ஒரு வருடத்தில் பல நாளிதழ்களிலும் 'நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை' என்று கோடிக்கணக்கில் விளம்பரம் செய்தார்  விளம்பர நாயகி ஜெயலலிதா


இப்போதைய விளம்பரம்:
சென்னை வண்டலூரில் ஏழு புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டப்போகிறார்கள். அப்படியே வனத்துறையின் சில கட்டிடங்களையும் திறந்துவைக்கப் போகிறார்களாம். இதற்கு எதுக்கு அனைத்து நாளிதழ்களிலும் முழுப்பக்க அளவில் விளம்பரம்? 

எல்லாம் சரி. அதென்ன பிற மாநில பதிப்புகளிலும் விளம்பரம்? பிரதமர் பதவிக்கு அஸ்திவாரமோ?

நல்லவேளை ஆங்கில நாளிதழ்களிலும் தமிழில் இந்த விளம்பரம் வந்திருக்கிறது. அதனால் பிற மாநிலத்தவர் அதைக் கண்டுகொள்வதில்லை. ஒருவேளை ஆங்கிலத்தில் விளம்பரம் வந்திருந்தால் 'இதற்கெல்லாம் விளம்பரமா?' என்று காரித் துப்பியிருப்பார்கள்.

வேண்டுகோள்: தங்கள் பணத்தை செலவு செய்து தங்களின் விளம்பர ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். மக்கள் பணத்தை வீணடிக்க வேண்டாம்.

புதன், 13 மார்ச், 2013

உருப்படாத முட்டாள் கூட்டம்

தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.

தனி ஈழம், சர்வதேச விசாரணை, பொது வாக்கெடுப்பு என உயர்ந்த குறிக்கோள்களுடன் மாணவ சமுதாயம் களத்தில் இறங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி.


இதில் விசேஷம் என்னவென்றால் இதுவரை எந்தவொரு இந்திய ஊடகங்களும் மாணவர்களின் இப்போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. இதுவும் மகிழ்ச்சியே! இந்திய ஊடகங்கள் ஏன் தமிழ்நாட்டு விசயத்தில் அக்கறை செலுத்த வேண்டும்?

தமிழ்நாட்டு ஊடகங்களும் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கவில்லை. செய்திகளை இருட்டடிப்பு செய்கிறார்கள். திரித்து வெளியிடுகிறார்கள்.

தமிழக அரசு பற்றி சொல்லவே தேவையில்லை. போராட்டத்தை அடக்க பாசிச செயல்களில் ஈடுபடுகிறது. (ஆத்தா! கருணாவை மேடையெல்லாம் காரித் துப்புகிறீர்களே! கடிதத்தை தவிர நீங்கள் கிழித்தது  என்ன? )

ஆனாலும் மாணவர்களின் போராட்டம் விரிவடைகிறது. இதற்கு இணையங்கள் பெரும் பக்கபலம்.

விசயத்துக்கு வருவோம்.
பல இணையங்களில் சில அதிமேதாவிகள் நஞ்சைக் கக்குகின்றன. இந்த அதிமேதாவிகள் தமிழர்கள்தானா? அல்லது சிங்களர்களா என்னும் சந்தேகமும் எழுந்துள்ளது. 
எழுத்து வழக்கைப் பார்க்கும்போது நம்ம தமிழ்நாட்டில் உள்ள அதிமேதாவிகள்தான் என்று கருதுகிறேன்.

================================================================
அவர்கள் கக்கிய நஞ்சுகள் கீழே:

"இவர்கள் எல்லாம் நேற்று பிறந்து இன்று மாணவர்கள் ஆனவர்களா? இலங்கையில் இறுதிகட்ட போர் நடந்தபொலுதும் இவர்கள் மாணவர்களாக இருந்தவர்கள்தானே அப்போது போராட வேண்டியதுதானே. இன்று எங்கிருந்து இந்த திடீர் ஞானோதயம்."

அட கண்ணுங்களா.... பரிட்சை நெருங்குகிறது.... உங்க அப்பன் , ஆத்தா , கஷ்டப்பட்டு சம்பாதித்து, கல்லூரிக்கு அனுப்பினா, கேட்பார் பேச்ச கேட்டுட்டு இப்படி ஹாயா உண்ணாவிரதம் இருந்தா எப்படி? உங்களுக்கு உண்மையிலேயே இனஉணர்வு அல்லது, பச்சாதாபம் இருந்தா 4 வருடத்துக்கு முன்னால் அல்லவா போராடியிருக்க வேண்டும்...  

 இது போன்ற போராட்டங்களால் ஒரு விளைவும் ஏற்படாது..இவர்களுக்கு தெளிவான கோட்பாடுகள் இல்லாமல் உண்ணாவிரதம் இருப்பது யார் துண்டுதல் பெயரில்..  
 
முதல படிக்குற வழிய பாருங்க.. இந்த அரசியல்வதீங்க கூட சேராதீங்க  
நிறைவேற முடியாத ஒரு கோரிக்கை . இதற்கு ஒரு போராட்டம் தேவையா ? என்று சிந்திக்க வேண்டும். முடிவு எடுக்க வேண்டயது இலங்கை இந்தயாவில் போராடி என்ன பயன். படிப்பு வீனா போக நல்ல வழி.


தூண்டிவிட்ட சீமான் வைகோ நெடுமாறன் உதயகுமார் போன்றவர்களை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச்சொல்லுங்கள். அதுவே மாணவர்களாகிய நீங்கள் தமிழ் நாட்டுக்கு செய்யக்கூடிய அளப்பெரிய சேவையாகும்.

தமிழீழம் அமைவது இருக்கட்டும்.... முதலில உங்கள் தமிழ் நாட்டில இருக்கிற பிரச்சனைகளை தீர்க்க போராட்டம் நடத்துங்க...
 ===============================================================
இதுபோன்று பல நச்சுக்கருத்துகளை பரப்பி போராட்டத்தை மழுங்கடிக்கவே கிளம்பியிருக்கிறது ஒரு கூட்டம். இந்தப் போராட்டம் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த போராட்டம் நடந்தாலும் அதை விமர்சிப்பதற்காக இப்படி  உருப்படாத முட்டாள் கூட்டம் கிளம்புகிறது.
ஒருசிலர் வெளிநாட்டில் இருந்துகொண்டு இங்கே தமிழன் நடுத்துற போராட்டத்தை அவமதிக்கிறார்கள்.

ஒருநாலாச்சும் போராட்டக் களத்திற்கு வருவார்களா? வரவேமாட்டார்கள். வராமல் இருந்தாலும் சரி, ஏன் தேவையற்றக் கருத்துக்களைப் பரப்ப வேண்டும்?? ஒரு கம்யுட்டரும் இணைய இணைப்பும்  வைத்துக் கொண்டு தங்கள் இஷ்டத்துக்கு நச்சுக்கருத்துகளை பரப்புவதில் இந்தக் கூட்டத்திற்கு அப்படி என்ன ஆனந்தம்??

இந்தக் கூட்டத்திற்கு சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்.
இது இனத்திற்காக இனம் நடத்தும் போராட்டம்.
களத்திற்கு வா.
இல்லையேல் களத்திற்கு வந்தவர்களை ஆதரி.
பிடிக்கவில்லையென்றால் வந்து எதிர்ப்போராட்டம் நடத்து.
அதைவிட்டு தேவையில்லாமல்  நச்சுக்கருத்துகளை பரப்பாதே!
போராட்டத்தை மழுங்கடிக்கப் பார்க்காதே!!

"போராடாதவன் ஜடம்"- தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் 
           

செவ்வாய், 12 மார்ச், 2013

இந்தியா நடத்தும் இன அழிப்பு

எப்படியெல்லாம் ஒரு இனத்தை அழிக்கலாம்?
  • இனத்தின் மக்களை அழித்தல்
  • இனத்தின் மொழியை அழித்தல்
  • இனக் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு இவற்றை திரித்தல்/அழித்தல்
இதில் கடைசி இரண்டு முறைகளை அவ்வப்போது தமிழினம் மீது ஏவுகிறது இந்திய ஆதிக்கம்.

ஏற்கனவே இந்திய ஆதிக்கத்தால் தமிழினம் மீது நடத்தப்பட்டத்  தாக்குதல்கள்
  • தமிழர் வரலாறுகளை மத்தியப்  பாடத்திட்டங்களில் திரித்து எழுதுதல்
  • தமிழர் வரலாற்றைக்  கேலி செய்தல்
  • தமிழர் வீரவிளையாட்டைத் தடை செய்தல்
இப்போது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதத்   தடை

கடந்த சில வருடங்களாக தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது குறிப்பிடத்தக்கது. இனி தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை கண்டிப்பாக குறையும். பலரும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

இதுவும் ஒருவகையில் மறைமுக இந்தி திணிப்பே! 
பிற மொழிகளில் எழுதத் தடை விதித்தவர்கள் ஏன் இந்திக்கும் தடை விதிக்கவில்லை? ஆங்கிலத்தில் மட்டும் தேர்வுகள் நடத்தலாமே? அனைத்து மாநிலங்களிலும் ஆங்கிலம் உள்ளதே!
 
ஏற்கனவே தமிழகத்தில் பலரும் 'ஐயோ! நமக்கு இந்தி தெரியலையே!' என்று வருந்துவதுண்டு (ஒரு காலத்தில் நானும் வருந்தினேன்). இப்போது அந்த குரல் பலம் பெறும். இந்தி மிக அவசியம் என்னும் உணர்வு தமிழாகளிடம் ஏற்படும்.

ஏற்கனவே தமிழகத்தின் நகரங்களில் பல பள்ளிகளில் (வித்யாலயா) இந்தியைக் கட்டாயம் ஆக்கியுள்ளார்கள். இது யார் செயல் என்பதும் பலர் அறிந்ததே!

பிற இனங்களின் மொழிகளைப் புறக்கணித்து, ஒடுக்க நினைக்கும் இந்திய ஆதிக்கத்தின் நரித்தனத்தை முறியடிப்போம்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்.
இவ்விசயத்தில் தமிழகத்தின் பல கட்சிகளும் ஒன்றுபட்டு மத்திய அரசை எதிர்த்து நம் உரிமையை மீட்க வேண்டும்.


இந்திய ஒன்றியம்  என்பது பல இனங்களைக் கொண்டு கட்டியமைக்கப்பட்ட கட்டமைப்பே.

என் இனத்தின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு அனைத்தையும் மறைத்துவிட்டு எனக்கு 'இந்தியன்'னு பட்டம் கொடுப்பீங்க. அதை வாங்கிட்டு இளிச்சுட்டு போக நான் முட்டாள் இல்லை.

பின் குறிப்பு:
நான் எந்த மொழிக்கும் எதிரானவனில்லை.
எந்த மொழியையும் கற்பதில் தவறில்லை.
ஆனால் கட்டாய மொழித்திணிப்பு  மாபெரும் குற்றம்.

இதுபற்றி நான் ஏற்கனவே எழுதிய கட்டுரை
தமிழினத்தைக் காத்திட இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம்

திங்கள், 11 மார்ச், 2013

வியக்க வைக்கும் மாணவர்கள்

வெகுநாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் மாணவ சக்தி ஒன்றுபட்டு எழுந்துள்ளது. தலைநகரில் லயோலா கல்லூரி மாணவர்கள் ஆரம்பித்து வைத்த போராட்டம் தமிழகத்தின் பல இடங்களிலும் எழுச்சி பெற்று நடைபெறுகிறது.

இம்முறை மாணவர்கள் வெறும் உணர்வுடன் மட்டும் எழுச்சி கொள்ளவில்லை. தமிழீழம் தொடர்பான மாபெரும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கொள்கைகளுடன் களத்தில் உள்ளனர்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள 9 கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைக்கிறார்கள்.
மிகவும் முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ள கோரிக்கைகள்


இது மட்டுமில்லாமல் பல இடங்களில் தமிழர் விரோத சகுனி சு.சாமியின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டுள்ளதிலிருந்து மாணவர்களின் தெளிவானப் பார்வை புரிகிறது.

ஜனநாயகப்  போராட்டத்தை பாசிச முறையில் அடக்க நினைத்து போராட்டத்தை தமிழகத்தின் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்ற தமிழக பாசிச அரசுக்கு நன்றிகள் பல.

அனைத்து மாணவர்களுக்கும் எனது சிறிய வேண்டுகோள்:

போராட்டத்தில் அரசியல், வன்முறை கலந்திடாதவாறு  கவனமாக செயல்படுங்கள்.

தமிழீழம் தொடர்பான கோரிக்கைகளை பொதுமக்களிடம் முறையாக் கொண்டு சேருங்கள்.

களத்தில் சந்திப்போம்.

ஞாயிறு, 10 மார்ச், 2013

தமிழக அரசின் பாசிசம்

ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி லயோலா கல்லூரி மாணவர்கள் நான்கு நாட்களாக உண்ணா நிலைப் போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டத்திற்கு தமிழகமெங்கும் பெரும் ஆதரவு அலை வீசியது .

தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் வெடிக்கும் என்ற செய்தி உளவு துறை அறிந்து அதை எப்படியாவது நசுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது . அதனால் காவல்துறை அதிகாலை 1.30 மணி அளவில் போராட்ட அரங்கின் கதவுகளை உடைத்து உள் நுழைந்தது . வெளியே நூறு அடி சாலையை போக்குவரத்து எதுவும் செல்ல முடியாமல் முடக்கியது . காவல் துறை வாகனங்களை கொண்டு வந்து குவித்தது . அரங்கத்தில் உள்ளே இருந்த உணர்வாளர்களை களைத்து மாணவர்களை நெருங்க முயன்றது  

அப்போது அமைப்புகளை சேர்ந்த நபர்கள் காவல்துறையை கேள்வி கேட்டனர் . ஏன் எதற்காக உள்ளே வந்தீர்கள் . இது தனியார் திடல் தானே , நீங்கள் இங்கு எப்படி அத்து மீறி உள்ளே நுழைய முடியும் என்று கேள்வி எழுப்பினர் . அதற்கு காவல்துறை நாங்கள் கைது செய்யத்தான் வந்திருக்கிறோம் என்றனர் . 
 
உடனே தமிழ் அமைப்பினர் , கைது செய்வதற்கு ஆணை  (வாரன்ட்) இருக்கிறதா என்று கேள்வி  எழுப்பினர் . இருப்பினும் காவல்துறை அதை கண்டுகொள்ளவில்லை . மாணவர்களை நோக்கி முன்னேறியது . மாணவர்களை சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு சங்கிலி அமைத்திருந்தனர் பிற மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்பினர் . காவல்துறை ஒவ்வொரு  அடுக்காக தடியடி  நடத்தி  மனித சங்கிலியை உடைத்து மாணவர்களை நெருங்கினர் .மாணவர் அனைவரையும் குண்டுக் கட்டாக தூக்கிக் கொண்டு போய் வாகனத்தில் ஏற்றினர் . பின்பு போராட்டக் காரர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர் . 

சுமார் 200 ஆதரவாளர்களை கைது செய்து அருகில் உள்ள சமூக கூடத்தில் அடைத்தது காவல்துறை . மாணவர்களை இராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது . இவ்வாறு அராஜகமான முறையில் காவல்துறை ஒரு நியாயமான  போராட்டத்தை நசுக்கியது . 
 
செய்தி:  newsalai.com


போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் தான் கருணாநிதிக்கு சற்றும் இளைத்தவரல்ல என்பதை ஏற்கனவே கூடங்குளத்தில் நிரூபித்த பாசிச ஜெயா தற்போது லயோலா கல்லூரி மாணவர்கள் மீது காட்டியுள்ளார்.

எந்தப் பலத்தையும் தட்டிப்பார்க்கும் வல்லமை மாணவர் சக்திக்கு உள்ளது. சென்னை லயோலாக் கல்லூரி மாணவர்கள் தொடங்கியிருக்கின்ற உண்ணாநிலைப் போராட்டத்தின் அனல்,  வீச்சுப்பெற்று தமிழகம் எங்கும் பரவி இந்திய மத்திய அரசினை உலுப்பிப்பார்க்கவேண்டும். 

 இடையறாது தொடரும் தாய்த் தமிழகத்தின் மன உணர்வுகளை இனியும் அசண்டை செய்ய முடியாது என்கின்ற நிலையினை இந்திய மத்திய அரசு புரிந்து கொள்ளவேண்டும்.
போராட்டங்களை நசுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கடந்து இலக்கை எட்டும்வரை வன்முறையற்ற வழியில் முழுமையான பலத்தினையும் ஒன்றுதிரட்டி மாணவர் சக்தி போராடவேண்டும்.

வியாழன், 7 மார்ச், 2013

தோழர் திருமா எடுத்த மாபெரும் ஆயுதம்

மக்களவையில் நேற்று  ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிய விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசியதன ஒரு பகுதி:

"இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டும். ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் இந்தியா பழி சுமக்க நேரிடும். தமிழர்கள் இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடும் நிலை உருவாகும். "


'தனி நாடு '  என்பதுதான் தோழர் திருமா எடுத்த மாபெரும் ஆயுதம்.

மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின்போது திமுக எம்.பி திருச்சி சிவா அவர்களும் இதே கருத்தை மறைமுகமாக வைத்தார். 'இலங்கை வேண்டுமா? தமிழகம் வேண்டுமா? என்பதை இந்தியா தீர்மானிக்கட்டும்' என்றார்.

ஒட்டுமொத்த தமிழர்களும் இலங்கையைக் கண்டிக்கிறார்கள்.
இனப்படுகொலைக்குத் தீர்வு வேண்டும் என்கிறார்கள்.
இந்தியா இலங்கையை எதிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
சிலர் தீக்குளித்து இன்னுயிரை மாய்க்கிறார்கள்.

ஆனாலும் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
'இலங்கை நம் நட்பு நாடு. நாம் அவர்களை எதிர்க்க கூடாது'.
அதாவது இலங்கையை தனது மாநிலமாக பாவித்து பேசுகிறது இந்திய ஏகாதிபத்தியம்.

இடையில் பல இந்திய ஊடகங்கள், சு.சாமி போன்ற  அரசியல் தரகர்கள் தமிழர்களுக்கு எதிராக நிற்கிறார்கள். (கேடுகெட்ட தினமலர் இன்று  எப்படி கார்ட்டூன் போட்டுருக்கான்னு பாருங்க!!)

 இந்தியாவின் இரு அவைகளிலும் தமிழர் பிரச்சினை என்றாலே வட மாநில உறுப்பினர்கள் வெளியே காற்று வாங்க சென்று விடுகிறார்கள்.

அப்படியானால் தமிழன் என்ன செய்வது?
எப்படி இந்தியாவை ஆட்டம் காணச் செய்வது?

அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.
ஆம்! 'தனித் தமிழ்நாடு' கோஷம். இது வெற்றுக் கோஷம் அல்ல. நம் உரிமை.
அதை நாம் கையில் எடுக்கும் போது இந்திய வல்லாதிக்கம் நடுங்கும்.

கடிதம் எழுதி காலத்தைப் போக்குவது ஒட்டு வங்கி அரசியலுக்கு உதவுமே தவிர, தீர்வாகாது.

திருமாவின் இந்த கோஷம் தமிழக மக்களை சென்றடையாது. ஒருவேளை செல்லும்பட்சத்தில் தமிழக மக்கள் விழிப்புணர்வு ஏறுவார்கள். விழிப்புணர்வு பெற்றுவிட்டால் ஏமாற்று அரசியல் பண்ண முடியாதே!!!

திருமாவின் பேச்சை ஊடகங்கள் மறைக்கும். 'காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்' என திருமா தமிழில் ஆவேசமாகப் பேசியதை ஒளிபரப்பிய சன் டி.வி 'தனி நாடு' முழக்கத்தை கட் செய்து விட்டது. இதுதான் போலித் திராவிடம்!!

தோழர் திருமா மட்டும் இந்த ஆயுதத்தை எடுத்தால் போதாது. ஒட்டுமொத்த தமிழர்களும் ஓரணியில் திரண்டு  'தனித் தமிழ்நாடு' கோஷத்தை வலுவாக உயர்த்த வேண்டும்.

“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.”- தமிழீழத் தேசியத் தலைவர்  பிரபாகரன் 

புதன், 6 மார்ச், 2013

மாண்புமிகு அய்யா கருணாநிதியே!

அய்யா கருணாநிதியே! 

மெரினாவில் படுத்துக்கொண்டு 'போர் முடிந்து விட்டது' என்றீர்கள்.

பின்னர் 'மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்றீர்கள்.

தீக்குளிப்பவர்கள் கடன் தொல்லை, குடும்பப் பிரச்சினைகளுக்காக தீக்குளிக்கிறார்கள் என்றீர்கள்.

ஆங்காங்கே கிளர்ச்சி செய்தவர்களை சிறையில் அடைத்தீர்கள்.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக தலைமைச்செயலாளர் மூலம் அறிக்கை அனுப்பி பல தலைவர்களை மிரட்டினீர்கள்.

தமிழக மீனவர்கள் பேராசை கொண்டவர்கள் என்றீர்கள்.

இனி ஈழம் சாத்தியமில்லை. அது பற்றி யாரும் பேசக்கூடாது என்றீர்கள்.

பின்னர் 'ஈழம் என் நிறைவேறாக் கனவு' என்று சொல்லி டெசோவைக்  கையில் எடுத்தீர்கள்.

டெசோ மாநாட்டில் ஈழம் பற்றி பேச மாட்டோம் என காங்கிரசுக்கு அடிபணிந்தீர்கள்

ஸ்டாலின் டெசோ தீர்மானத்தை ஐ.நா-வில் கொடுத்துவிட்டார்.
ஈழம் கிடைத்தாச்சு என்றீர்கள்.

நீங்கள் எல்லாம் கையில் துப்பாக்கி ஏந்தி போராடிக் கொண்டிருந்தீர்களா? என்று எம்மைக் கேள்விகேட்டு உம்  குற்றத்தை மறைக்கப் பார்க்கிறீர். (போராடியவர்கள் , முள்ளிவாய்க்கால்  கிளம்பியவர்கள் எல்லோரையும் ஏனய்யா  சிறையில் அடைத்தீர்கள்?)

அவர் மட்டும் யோக்கியமா என்று ஜெயா அம்மையாரைக் கைகாட்டுகிறீர் (நீங்கள் இரண்டு பேரும் ஒரே வகையினர்தான்).

கடைசியாக இப்போது சானல்4 கல்லம் மெக்ரெ வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் என்று அண்டப்புழுகு புழுகுகிறீர்கள்.

ஆக மொத்தத்தில் உங்கள் மீது விழுந்த கறையை நீக்கத்தான் பல போராட்டங்களே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. இளம்தலைமுறை உம்  பெயரைக் கேட்டாலே காரித் துப்புகிறது.


 குடும்ப நலனுக்காக ஒரு இன அழிப்பிற்குத் துணை போன உமக்கு வரலாற்றில்  'தமிழினத் துரோகி' என்னும் பெயர் மிக அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன அழுது புரண்டாலும் அப்பெயர் உம்மை விட்டு அகலாது.

சுதந்திரமான பன்னாட்டு விசாரணை மற்றும்  பொது வாக்கெடுப்பு  பற்றி வாயைத் திறக்காமல் திரும்பத்  திரும்ப 'போர்க்குற்ற விசாரணை', மறுவாழ்வு அளித்தல் என பேசுவதெல்லாம் இந்தியா, அமெரிக்காவின் பித்தலாட்டம். நீங்களும் அதற்குத் துணை போக வேண்டாம்.

ஈழத் தமிழர்களுக்கு உருப்படியாக ஏதாச்சும் செய்ய முயற்சி செய்யுங்கள். இல்லையேல் ஒதுங்கிக்கொண்டு தேர்தல் நிதி சேகரித்தல், கூட்டணி வியூகம் அமைத்தல், வேட்பாளர் தேர்வு செய்தல் என வரப்போகும்  தேர்தலுக்கு  தங்கள் பணிகளைத் தாயார் செய்யுங்கள்.

நன்றி 

செவ்வாய், 5 மார்ச், 2013

புலிக்கொடி ஏந்திய தி.மு.க தொண்டர்கள்

திமுக தலையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது 05.03.2013 அன்று நடைபெற்றது. பல திமுகவினர் புலிக்கொடிகளையும், தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் படங்களையும்  தாங்கியவண்ணம் திரண்டுவந்து இப் போராட்டத்தில் கலந்துகொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 

அத்தோடு பாலச்சந்திரன் படங்கள் அடங்கிய பதாதைகளையும் அவர்கள் தாங்கி நின்றார்கள். பல்லாயிரக்கணக்காண மக்கள் திரண்ட இப் போராட்ட பேரணி, இலங்கை தூதரகம் நோக்கி நகர முயன்றது. இதனை தடுத்து நிறுத்த போலீசார்  படாத பாடு படவேண்டி இருந்தது.

இந்த முற்றுகைப் போராட்டத்தில், திராவிடக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், என திமுகாவின் கூட்டணிக் கட்சிகள் கலந்துகொண்டது. புலிக்கொடியை ஏந்திவந்த பலர் கூடவே கொடூரமாகச் சித்தரிக்கப்பட்ட ராஜபக்ஷவின் படங்களையும் ஊர்வலமாகத் தாங்கிவந்தார்கள். 

 இறுதியில் புலிக்கொடியை உயர்த்திப் பிடித்தவாறு, மகிந்தரின் படத்துக்கு நெருப்பு மூட்டினார்கள். எரிந்தான் ராஜபக்ஷ என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தது. 

தமிழ் நாட்டில் ஏற்கனவே பல கட்சிகள், ஈழத் தமிழர் சார்பான போக்கை கடைப்பிடித்து வருகிறது. காங்கிரசுடன் கூட்டு வைத்திருப்பதால் திமுக இவ்விடையத்தில் , சற்று விலகியே நின்றதை கடந்த கால கசப்பான அனுபவங்கள் பல எமக்கு உணர்த்தி இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி, பாலச்சந்திரன் கொலை தொடர்பாக தமிழ் நாட்டில் தோன்றியுள்ள உணர்வலை, ஈழத் தமிழர்கள் படும் இன்னல்களை தமிழக மககள் நன்கு உணர்ந்துள்ளதை தற்போது எடுத்துக்காட்டியுள்ளது.




 நன்றி: அதிர்வு இணையம்
========================================================================
ஈழ  விவகாரத்தில் தி.மு.க மீது கடும்கோபம் உண்டு. அந்த கோபம் எல்லாம் ஒரு குடும்பத்தின் மீதுதானே தவிர, ஒட்டுமொத்த  தி.மு.க தொண்டர்கள் மீது கிடையாது. தி.மு.கவில் இருந்துகொண்டே ஈழ ஆதரவை மறைமுகமாக  கொடுத்த, ஈழ ஆதரவாளர்களுக்கு துணை புரிந்த பல  தி.மு.க தொண்டர்கள் உண்டு.

இந்த போராட்டம் அரசியல் ஆதாயமா?
காங்கிரசை விட்டு பிரிய நடத்தப்படும் நாடகமா?
அப்படியா? இப்படியா? என கேள்விக்கேட்டு பின்னோக்கி செல்ல நான் தயாரில்லை.

இலங்கையை எதிர்த்து மாபெரும் போராட்டத்தை பதிவு செய்தமைக்கு தி.மு.க தொண்டர்களுக்கு வாழ்த்துகள்.

இது போதாது. திரும்பத்  திரும்ப 'போர்க்குற்ற விசாரணை', மறுவாழ்வு அளித்தல் என பேசுவதெல்லாம் தீர்வே கிடையாது.

சுதந்திரமான பன்னாட்டு விசாரணையும், பொது வாக்கெடுப்பும் மட்டுமே தீர்வு. அதை உரக்கச் சொல்ல வேண்டும்.

ஞாயிறு, 3 மார்ச், 2013

சசிபெருமாள் என்னும் மாமனிதர்




மதுவின் பிடியில் சிக்கிக்கொண்டு தமிழகத்தில் பல குடும்பங்கள் சீரழிகிறது. இது அனைவரும் அறிந்ததே!





மது விலக்கின் அவசியம் குறித்து பல கட்சிகள், இயக்கங்கள் தொடர் பரப்புரைகள், போராட்டங்கள் நடத்துகின்றன. இதுவும் நாம் அறிந்ததே!





ஆனால் அதற்கான தீர்வு பற்றி பலரும் அறிய முன்வரவில்லை.
அறிந்தாலும் செயல்படுத்த முன்வரவில்லை.

மதுவிலக்கின் அவசியம் பற்றி பரப்புரை மேற்கொள்ளும்போது வரும் பதில்கள்:
  • இதெல்லாம் சாத்தியமா? வேற வேலைய பாருங்க பாஸ்
  • எல்லாம் அரசியல். நம்பாதீங்க சார்.
  • டாஸ்மாக் வருமானம் இல்லாமல் அரசை நடத்த முடியாது.
இப்படி பதில்கள்தான் கிடைக்கிறது.

சில இடங்களில் நான் வைத்த கேள்வி
'தங்கள் மகன்/மகள் மது அருந்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பீர்களா?"
இந்த கேள்விக்கு பெரும்பாலும் பதில் வருவதில்லை.

அதாவது தன்  குடும்பம் நல்லா வரணும். மத்தவன் பத்தி கவலை  இல்லை என்னும் குறுகிய மனப்பான்மை பலரை ஆட்கொண்டுள்ளது.

இதனால்தான் அய்யா சசிபெருமாளின் போராட்டத்திற்கு  ஆதரவு இல்லை.



தமிழகத்துக்கு வெளியே இருப்பதால் 25நாள் அப்புறம்தான் எனக்கு தெரிந்தது. வாழ்க ஊடகங்கள்!

அவன்  ஏன் போராடல? 
அந்த டைம்ல ஏன் போராடல? 
இது ஓட்டு பெற நடத்தப்படும் சூழ்ச்சியோ? 
இந்தமாதிரி கேள்வி கேட்டு கேட்டு தானும் கெட்டு மத்தவனையும் கெடுக்காதீர்கள்.

அய்யாவின் போராட்டத்தை ஆதரித்து, நாமும் பங்கேற்போம்.
தமிழகத்தைக் காப்பாற்ற மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.

வெள்ளி, 1 மார்ச், 2013

அழுகை மட்டுமே மிச்சம்.....


அது ஈழப்பிரச்சினை. நாம் தலையிடக்கூடாது என்கிறது மனிதாபிமானமற்ற ஒரு கூட்டம்.

எல்லாம் முடிந்துவிட்டது அவ்வளவுதான் என்று 
அடுத்த செய்திக்கு நகர்கிறார்கள் நடுநிலைப் போலிகள் .

இலங்கை நட்பு நாடு என்கிறான் டெல்லியில் ஒருவன்.

அதை கேட்டவுடன் எம்.பி பதவிகளை
தூக்கியெறிய   சொல்லாமல்
டெல்லியில் மாநாடு நடத்த செல்கிறார் மூத்த தலைவர்.

தமிழர் பிரச்சினை என்றாலே
கண்ணையும், காதையும் மூடிக்கொள்கிறார்களே!
பின்னர் அங்கு ஏன் மாநாடு??

தீர்மானமும், இலங்கை வீரர்களுக்கு தடையும் போட்டு விட்டு நல்லபிள்ளையாக நகர்கிறார் முதல்வர். இதுதான் தீர்வா??

எல்லாத்துக்கும் கருணாநிதிதான் காரணம்
என்று ஒருவரியில் கூறிவிட்டு
தங்கள் உணர்வை காண்பிக்கிறது இன்னொரு கூட்டம்.

வரும் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவோம்
என்று ஓட்டு அரசியல் பேசும் கூட்டம்.

ராஜீவ்காந்தியை  கொன்றதுதான் எல்லாத்துக்கும் காரணம்
என்று வரலாறு தெரியாமல் பேசும் மற்றொரு கூட்டம்.

இந்தியாவும் குற்றவாளி என்று சொன்னால்
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது
என்கிறார்கள் பாரத மாதாவின் செல்லப்பிள்ளைகள்(வேறு மாநிலத்தவர்)

அமெரிக்கத் தீர்மானத்துக்கு
இந்தியா ஆதரவு அளிக்குமா என்று
ஏங்கிக் கிடக்கும் நாதியற்ற தமிழர் கூட்டம்!

எத்தனை போராட்டம் நடத்தினாலும்
நம்மைக் கண்டுகொள்ள யாருமில்லையே!

இப்படி பல கூட்டத்திற்கு மத்தியில்
இந்த அடிமைக்கு அழுகை மட்டுமே மிச்சம்!!

மன்னித்துவிடு பாலச்சந்திரா!!