சனி, 17 மே, 2014

தமிழக எம்பிக்களால் தமிழகத்திற்கு பயன் இல்லையா?


தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்பிக்களால் எந்த பயனும் இல்லை என்று இணையத்தில் கருத்துக்கள் உலாவ ஆரம்பித்துள்ளன.
'டெண்டுல்கர் சதம் அடித்தும் டீம் தோல்வி' என்ற வகையில் அருமையான ஒப்பீடு வேற நடத்துகிறார்கள்.
அதாவது இந்திய அரசிடம் தமிழக அரசு  பொறுக்கித் தின்ன வேண்டும் என்பதை மறைமுகமாக கூறுகிறார்கள்.


அப்படியான நண்பர்கள் முதலில் இந்திய அரசியலமைப்பை படித்து விட்டு வரவும்.
* மாநிலங்களுக்கு பாராபாட்சம் இல்லாமல் நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும்.
* மாநில அரசின் உரிமைகளில் தலையிடக் கூடாது.
* பொதுப் பட்டியலில் சட்டம் இயற்றும்போது மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும் 
என ஆயிரத்தெட்டு விதிகள் இருக்குது..

ஆனால் நடுவண் அரசினை ஆட்சி செய்பவர்கள்  இந்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு தங்கள் ஆட்சி அல்லது கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள். சலுகைகளை அள்ளி வீசுகிறார்கள். அதன் மூலம் அந்த மாநிலங்களில் தங்கள் கட்சியை வலுவாக காலூன்ற செய்கிறார்கள்.

தங்களுக்கு வாக்குவங்கி இல்லாத மாநிலங்கள் அல்லது தங்கள் ஆட்சி இல்லாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகிறார்கள்.

தமிழக்திற்கு உரிய அளவில் மண்ணெண்ணை வழங்காமை, மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சாரத்தை வழங்காமை, குறைவான நிதி ஒதுக்கீடு ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் நடந்தேறியது.
அதன் பின்னணியில் திமுக இருப்பதாக தமிழக முதல்வர் குற்றம் சாட்டியது பலருக்கும்  நினைவு இருக்கலாம்.

இந்நிலையில் "பாஜக ஆளுகிற மாநிலங்கள் மற்றும்  பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் மட்டுமே பயனடையும்" என்கிற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்  சிலர்.
அதாவது இந்திய போலி ஜனநாயகத்தை ஒத்துக் கொள்கிறார்கள்.
மாநில சுயாட்சி என்கிற கொள்கையை  இந்திய ஒன்றிய நடுவண் அரசு விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது என்பதையும் ஒத்துக் கொள்கிறார்கள்.
"நம்ம மாநிலத்திலும் பாஜக ஜெயித்திருக்கலாமே!" என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறார்கள்.

அது தவறான பார்வை.
கூட்டணி இருக்குதோ இல்லையோ நாடாளுமன்ற தொகுதிகளுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
எம்பிக்கள் கோரிக்கை வைக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
அப்படி நிறைவேற்றாத பட்சத்தில் எம்பிக்கள் தாராளமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வர வேண்டும்.
அல்லது மாநில அரசின் வழியாக நடுவண் அரசுக்கு செல்லும் நிதிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.

இதெல்லாம் இந்த எம்பிக்களால் சாத்தியமில்லை. இனப்படுகொலை அரங்கேறியபோதும் பதவியைக் கெட்டியாக பிடித்துக் கொண்டவர்கள்தான் நம்ம எம்பிக்கள்.
( ஆந்திராவை பிரிக்கிறோம் என்று நடுவண் அரசு அறிவித்தவுடன் சீமாந்திரா பகுதியை சார்ந்த  எம்பிக்கள், அமைச்சர்கள்  அனைவரும் ராஜினாமா செய்தார்கள். அதில் ஒருவர் ஒருபடி மேலே போயி தனி நாட்டு கோரிக்கையை முன் வைத்தார். )

அதிமுக எம்பிக்கள் உத்தமர்கள் கிடையாது. அதற்காக தமிழகத்தில் தேசியக் கட்சிகளை காலூன்ற செய்தால் தமிழகம் நாசமாகப் போகும்.

குஜராத்தி மோடி உத்திரப்பிரதேசத்தில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்.
அதுபோல தேசியக் கட்சிகளில் பலரும் வெவ்வேறு மாநிலங்களில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்.
அவ்வாறு தமிழகத்திலும் கண்டவனும் வந்து போட்டியிட்டு ஜெயிக்கும் நிலை வரக் கூடும்.மாநில உரிமைகள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.மொத்தத்தில் அரசியல் நாசமாய் போகும்.
அதனால் தேசியக் கட்சிகளைப் புறக்கணிப்பது மாநில நலனுக்கு நல்லது.

ஒரு தேசிய கட்சியால் தமிழகம் அனுபவித்த கொடுமைகளை உணருங்கள்.

ஒரு தேசியக் கட்சியை அழிக்கவே இத்தனை காலங்கள் தேவைப்பட்டிருக்கிறது.
இந்த லட்சணத்தில் இன்னொரு தேசியக் கட்சியை காலூன்ற செய்யும் தவறை செய்யாதீர் மக்களே!!

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் இந்திய தேசியக் கட்சிகள் மற்றும் மதவாதக் கட்சிகளைப் புறக்கணித்து நாம் சாதனை படைத்திருக்கிறோம் என்று பெருமை கொள்ளுங்கள்.

மாநில சுயாட்சி கோரிக்கையை வலுப்படுத்தும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடுறது, நடுவண் அரசிடம் பொறுக்கித் தின்பது பற்றி எண்ணிக் கொண்டிருந்தால் கட்டியிருக்கும் கோவணமும் பறிபோகும்.