ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

என்னாது? பெரியார் தீவிரவாதியா?

 'திராவிட பயங்கரவாதம்' என்னும் தலைப்பில் பெரியாரையும், திராவிடத்தையும் ஒரு பதிவர் சாடியிருந்தார். அவருடைய அந்த பதிவில் எனது பின்னூட்டம் இருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் இந்த தனிப்பதிவு. (அந்தப் பதிவர் மன்னிக்கவும்.)


அதுவும் ஒரு இஸ்லாமிய நண்பரிடமிருந்து அப்பதிவை எதிர்பார்க்கவில்லை. அனைவரும் சுயமாக சிந்திக்க வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார். அதனால் அந்த நண்பரின் சுய சிந்தனையை வரவேற்கிறேன். ஆனால் சிந்தனை என்னும் பெயரில் தவறான கருத்துக்களை பரப்புவது சரியன்று. பெரியார் சொல்லாத ஒரு கருத்தை பெரியார் சொன்னதாக கூறுகிறது அந்த கருத்து. இம்மாதிரியான திரிப்பு வரவேற்கதக்கதல்ல.

பல மூட நம்பிக்கைகளை உட்கொண்ட, மக்களை சாதிரீதியாக பிளவுப்படுத்திய இந்து மதத்தை கடுமையாக எதிர்த்த பெரியார் மற்ற மதங்களை கடுமையாக  எதிர்க்கவில்லை. ஒரு கட்டத்தில் இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றே வழி என்று சொன்னார். அதற்கு தாங்கள் அளிக்கும் மரியாதை பிரம்மாதம்.

சுயமரியாதை,  பகுத்தறிவு,  சாதி மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு,  சமத்துவம், சமூக முன்னேற்றம், பெண்ணுரிமை மற்றும் பல முற்போக்கு கருத்துக்களை தமிழ்ச்சமூகத்தில் விதைத்த தந்தை பெரியாரை எப்படி விமர்சிக்க முடிகிறது? அப்படி விமர்சித்து இந்த சமூகத்திற்கு தாங்கள் சொல்ல வரும் மாற்றுக் கருத்து என்ன? இல்லை வெறுமென பொழுதுபோக்குக்காக விமர்சிக்கிறார்களா?

திராவிடம் என்பது தமிழ்த் தேசியத்திற்கு என்று மற்றொரு கருத்து நிலவுகிறது. அதுவும்  தவறு. தமிழ்த் தேசியத்தின் முன்னோடியே  தந்தை பெரியார்தான் .
பெரியாரையும் அம்பேத்கரையும் ஓரம்கட்டி விட்டு சமூகத்தில் ஒரு புரட்சியையும் செய்ய முடியாது. புரட்சி செய்யாமல் தமிழ்த் தேசியம் அமைக்க முடியாது.

சாதி, மதங்களை தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பது போல இருக்கிறது அந்த நண்பரின் பதிவு.
சாதிப்பெருமை, மதப்பெருமை பேசி இதுவரை கிழித்தது என்ன? இன்னும்  பேசி பேசி என்ன கிழிக்கப் போகிறீர்கள்?
 
"உன் சாத்திரத்தைவிட உன் முன்னோர்களைவிட உன் வெங்காயம் வெளக்கமாத்தவிட உன் அறிவு பெரிது, அதைச்சிந்தி" -தந்தை பெரியார்

குறிப்பு: நானும் சாதிப்பெருமை, மதப்பெருமை பேசியவன்தான். திருந்திவிட்டேன். மற்றவர்களும் திருந்த வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.
 
நன்றி 

வியாழன், 21 பிப்ரவரி, 2013

ஹைதராபாத் - ஒரு பார்வை

நேற்று சன் டிவி செய்திகள் பார்த்துக்கொண்டிருந்த போது, விளம்பரவேளையில் தற்செயலாக CNN பக்கம் திருப்பினேன். 'Bomb Blasts in Hyderabad ' என்று ப்ளாஷ் நியுஸ் போய்க்கொண்டிருந்தது.

உடனே எனது பெற்றோரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் வரிசையாக தொலைப்பேசி அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. 'குண்டு வெடித்தது எந்த ஏரியா? உங்க ஏரியாவா? பத்திரமா இரு. வெளியே எங்கும் போகாதே. யாரிடமும் ரொம்ப பழகாதே!' என்று ஏகப்பட்ட அன்புக்கட்டளைகள்.

சம்பவம் நடந்த தில்ஷுக் நகர் ( Dilsukhnagar), ஹைதராபாத் பற்றி எனக்குத் தெரிந்த விசயங்களை பகிர்கிறேன்.

தில்ஷுக் நகர் கிட்டத்தட்ட சென்னை கோயம்பேடு மாதிரியான பகுதி. ஆந்திராவின் கோட்டி(Koti) என்னும் பகுதியில் வெளிமாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் புறப்படும். அங்கிருந்து புறப்படும் பேருந்துகள் அடுத்து மலாக்பெட்(Malakpet) வழியாக தில்ஷுக் நகரை வந்தடையும். ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பயணம் செய்த பலருக்கும் இது தெரிந்திருக்கும்.


 ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் வட மாநில நண்பர்கள் அதிகம். பானிபூரி, குட்கா,  பாஸ்ட்புட் உணவுக்கடைகள், டீ கடைகள்  மற்றும் பல சிறுகடைகள் சாலைகளை ஆக்கிரமித்து எங்கும் நிறைந்திருக்கும். பெரும் வணிக வளாகங்களில் பல  துணிக்கடைகள், செருப்புக்கடைகள் அமைந்திருக்கும். இதனால் சாலைகளில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.

பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்களில் சொல்லவே தேவையில்லை. மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

 அமீர்பேட், பேகம்பேட், தில்ஷுக் நகர்  ஆகிய பகுதிகளில் மென்பொருள் படிப்பு, ப்ராஜெக்ட்  சொல்லித்தரும் சிறுசிறு நிறுவனங்கள் பல உள்ளன. மாணவர்கள் கூட்டம் இந்தப் பகுதிகளில் அதிகமாக இருக்கும்.

இதுபோக சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், ஏகப்பட்ட சுற்றுலாத்தலங்கள் நகர் முழுவதும் நிறைந்திருக்கின்றன. 


 நகரின் இன்னொரு புறத்தில் (மாதாபூர், ஹைடெக் சிட்டி) நம்ம ஆட்கள் (அதாங்க சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ்) ஆக்கிரமிப்பு அதிகம்.

இதுபோக மெட்ரோ ரயில் கட்டமைப்பு வேலைகள் நகர் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
 

இவ்வாறாக ஹைதராபாத், செகந்திராபாத் நகர் முழுவதும் மக்கள் அடர்த்தி அதிகம். சென்னையை விட அதிகம் என்றுதான் தெரிகிறது.

 இப்படிப்பட்ட மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள  ஹைதராபாத்தின் தில்ஷுக் நகர் பகுதியை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர்.
ஹைதராபாத்தில் ஏற்கனவே பல தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.

சம்பவ இடத்தை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, காவல்துறை, உளவுப்பிரிவு, மீட்பு பணியில் ஈடுபடுவோர், மீடியாக்கள் என கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.

இவ்வாறு பதட்டமான இடத்திற்கு ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் ஏன் வருகின்றனர்? முதல்வர், அந்தப்பகுதி எம்.எல்.ஏ, எம்.பி ஆகியோர்  வருகையில் தவறில்லை. ஆனால்  மற்ற  ஓட்டுப்பொறுக்கிகள் ஏன் வருகிறார்கள்? அங்கும்  ஓட்டுப்பொறுக்கவா?

மக்கள் அதற்கும் ஒருபடி மேல். வேடிக்கை பார்க்க கூட்டம் கூட்டமாக  வந்துகொண்டு இருந்தனர். போலிஸ் தடியடி நடத்தும் அளவிற்கு கூட்டம் அதிகமானது 

குண்டுவெடிப்பு நடந்த இடத்திலும் வேடிக்கையா??



செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

அரைவேக்காடு சு.சாமியும் மற்றும் சில இந்தியர்களும்


நேற்று NDTV-யில் தேசியத்தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டது தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருந்தது. இந்திய கம்யுனிஸ்ட் தோழர் டி.ராஜா, சானல்4 கல்லெம் மக்ரே,  ராஜபக்சேவின் நண்பன் சு.சாமி  மற்றும் சில இந்தியர்கள் பங்கேற்றிருந்தனர்.

சு.சாமி பற்றி சொல்லவே தேவையில்லை. ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என ஊளையிட்டவர். நேற்றும் அப்படித்தான் பேசினார். "போருக்கு பின்னர் இலங்கையில் மாபெரும் அமைதி நிலவுகிறது" என்றார்.

எது அமைதி?
முள்வேலிக்குள் ராணுவ பாதுகாப்புக்குள் சித்ரவதை அனுபவிப்பதுதான் அமைதியா?
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டனரே? அது அமைதியா?
கச்சத்தீவு பக்கம் போனாலே நம்ம மீனவர்களுக்கு அடி விழுதே! அது அமைதியா?
ராணுவத்தில் தமிழ் யுவதிகளை கட்டாயப்படுத்தி சேர்த்து சித்தரவதை செய்கிறார்களே? அது அமைதியா?
 தமிழர்களுக்கு எந்த சுய உரிமையும் கிடையாது என ராஜபக்சே கொக்கரிக்கிறானே? அது அமைதியா?

விவாதத்தில் இடம்பெற்ற பல இந்தியர்களும்  "புலிகள் தீவிரவாதிகள்" என்றார்கள். புலிகள் ஆயுதம் எடுப்பதற்கு முன்னரே இனப்படுகொலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. சூலைக்கலவரம் மாபெரும் சாட்சி. இது பல தமிழர்களுக்கு தெரியாதநிலையில், இந்தியன் எப்படி புரிந்து கொள்வான்?
.குட்டக்குட்ட குனிந்து கொண்டே தமிழர்கள்  இருக்க வேண்டும் என்கிறார்கள் இந்தியர்கள்.
"புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உண்மையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome) "- மாவீரன் முத்துக்குமாரின் மரண சாசனம்.

"செயவர்த்தனே உண்மையான பௌத்தவாதியாக இருந்திருந்தால் நாங்கள் ஆயுதம் எடுக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. ஆயுதப்போராட்டமாக இருந்தாலும் எங்களது லட்சியம் அரசியல்ரீதியான விடுதலையே!!" -தேசியத்தலைவர் பிரபாகரன்.

இலங்கை மக்களை புலிகள் தாக்கினார்கள் என்கிறார்கள் சில அரைவேக்காடுகள்.
ஈழம் விசயத்தில் சில போராளி குழுக்களை இந்திய உளவுப்பிரிவு தங்கள் வசப்படுத்திக்கொண்டு  குழப்பம் விளைவித்தது, இலங்கையின் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது, தமிழ் தலைவர்களை கொன்றது மற்றும் பல மக்கள் விரோதச் செயல்களின் பின்னணியில் இந்தியா உள்ளது. ஆனால் பழி மட்டும் புலிகள் சுமக்க வேண்டும்! என்ன கொடுமை!

"முதலில் நாம் இந்தியர்கள், அப்புறம்தான் தமிழர்கள். இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்" என்கிறார் சு.சாமி. இந்தியாவை இந்து நாடாக்க துடிக்கும் மதவெறியன் சு.சாமி. இந்தியா என்ன செய்தாலும் தலையாட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் தமிழர்களுக்கு இல்லை. இனப்படுகொலையை நடத்தியதே இந்தியாதான் என்பது பல தமிழர்களுக்கு தெரியும்.




  விவாதத்தில் இடம்பெற்ற பலரும் திரும்ப திரும்ப 'இலங்கையில் நடைபெற்றது போர், மனித உரிமை மீறல்' என்று சாதாரணமாக முடித்துக் கொண்டார்கள். நம்மூரு டெசோ மாநாட்டிலும் இப்படித்தான் பேசினார்கள்.

இலங்கையில் நடைபெற்றது வெறுமென மனித உரிமை மீறல் மட்டும் அல்ல, மாபெரும்  இனப்படுகொலை. அப்படி சொல்ல யாரும் முன்வரவில்லை. அதுசரி காஷ்மீரிலும், மணிப்பூரிலும் இந்தியாவின் டவுசர் கிழியுமே!! அந்த பயமாக இருக்கலாம்.

வைகோ, திருமாவளவன், வேல்முருகன் மற்றும் பல தலைவர்களும் இலங்கையுடன் உள்ள உறவை இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். இலங்கையுடன்  இந்தியாவுக்கு உள்ளது நல்லுறவு என்றால் உடனே முறித்துவிடலாம். ஆனால் இருப்பதோ கள்ள உறவு. கள்ள உறவில் சுகம் காண்கிறது இந்தியா.

"இந்தியாவின் போர் நியாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?"- என்று மாவீரன் முத்துக்குமார் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.

இலங்கையும்  இந்தியாவும் இணைந்துதான் இனப்படுகொலையை நடத்தியது. அதை தடுத்து நிறுத்த ஐ.நா தவறியது. அதனால் இந்தியா ஒருபோதும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்காது.
"நாம் இலங்கையை எதிர்த்தால் சீனாக்காரன் அங்கு கால்பதித்து விடுவான். அதனால் இலங்கையோடு அனுசரித்து போக வேண்டும்"- இந்திய பிரதமர். சிங்களன் என்ன கொடுமை செய்தாலும் தமிழர்கள் கண்ணை மூடிக் கொள்ள வேண்டும் என்கிறது இந்தியம்.



இலங்கையின் கோரமுகத்தை திரும்ப திரும்ப கிழிப்பதில் பயன் இல்லை.
இந்தியாவின் கோரமுகத்தையும், ஐ.நாவின் கோரமுகத்தையும் கிழித்தெறிய வேண்டும்.

திங்கள், 18 பிப்ரவரி, 2013

பாலகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் படுகொலை

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் இளைய புதல்வர் செல்வன் பாலச்சந்திரன் சிறீலங்காவின் இனஅழிப்பு படைகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதரங்களை பிரித்தானியாவின் பிரபல நாளேடான த இன்டிபென்டென்ற் வெளியிட்டுள்ளது.

இறுதியாக கிடைத்த ஆதாரங்களின் படி பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகங்கள் எதுவுமின்றி நிரூபிக்கின்றது. கிடைக்கப்பட்ட நான்கு டிஜிட்டல் படங்களும் ஒரேநாள் ஒரே புகைப்படக் கருவி மூலம் எடுக்பட்டிருப்பதை புகைப்பட ஆதாரங்களை ஆராய்ந்தறியும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதில் இரண்டு படங்கள் பாலச்சந்திரன் உயிருடன் இருப்பதையும் இரண்டு படங்கள் அவர் கொல்லப்பட்டிருப்பதையும் பதிவு செய்துள்ளது.


கடந்த வருடம் கிடைக்கப் பெற்ற காணொளித் தடயங்களும் இந்தப் படங்களையும் ஆராய்ந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பவுண்டர் உடலத்தின் குண்டுபட்ட இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து பாலச்சந்திரன் மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதனை நிரூபித்துள்ளார்.

‘சுடப்பட்ட துப்பாக்கியின் குழல் வாய், பாலச்சந்திரன் நெஞ்சுக்கு மூன்று அடி அல்லது அதற்குக் குறைவான தூரத்திலேயே இருந்துள்ளது.
முதலாவது ரவை சுடப்பட்ட பின்னர், பின்புறமாக சாய்ந்து விழுந்த சிறுவன் மீது நான்கு தடவைகள் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அவர் கண்களோ, கைகளோ கட்டப்பட்டிருந்த நிலையில் சுடப்பட்டதற்கான தடயங்கள் இல்லை.

ஆனால், அவரது மெய்க்காவலர்கள் கண் முன்பாகவே இந்தப் படுகொலை நிறைவேற்றப்பட்டிருக்கலாம்’ என்று தடயவியல் ஆய்வு நிபுணர் பேராசிரியர் டெரிக் பவுண்டர் தெரிவித்துள்ளார்.

நன்றி: paristamil.com

திங்கள், 11 பிப்ரவரி, 2013

உமர் அப்துல்லாவின் கொலைவெறி!

ராஜீவ்காந்தி, பியாந்த் சிங் கொலையாளிகள் வரிசையாக தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் நிலையில், அப்சல் குருவை மட்டும் தேர்ந்தெடுத்து தூக்கிலிட்டது ஏன் என காஷ்மீர் முதல்வர் உமர்அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.


அப்சல் குருவை குறிவைத்து தூக்கில் போடவில்லை என்பதை காஷ்மீர் இளைஞர்களுக்கும், உலகத்தாருக்கும் நிருபிக்க வேண்டிய கடமை நீதித்துறைக்கும், அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது. ராஜீவ்காந்தி மற்றும் பியாந்த் சிங் கொலையாளிகளின் தூக்கு தண்டனை குறித்து பாஜ தலைவர்கள் மவுனமாக இருப்பது ஏன்? இவ்வாறு உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் சொல்வது எப்படி இருக்குது தெரியுமா: "என் வீட்டில் மட்டும் எழவு விழுந்து விட்டதே! ஊரில் மத்தவன் எல்லாம் நல்லா இருக்குறானே!!" என்று வன்மத்தோடு புலம்புவது போல உள்ளது.

அப்சல் குரு தூக்கு விசயத்தில் இந்தியாவின் பாசிசம் வெளிப்பட்டுள்ளது என்பது அறிந்ததே! சட்டம் தன் கடமையை சரிவர செய்யவில்லை என்பதும் அறிந்ததே! கண்டிப்பாக அது கண்டனத்துக்குரியதே!

அதற்காக பரிகாரமாக இன்னும் உயிர்களை எடுக்க வேண்டும் என சொல்வது எப்படி நியாயம் ஆகும்? அதுவும் மக்களை,ஊடகங்களை, பாஜக ஆகியவற்றை   உசுப்பேற்றி விடுவது என்ன காரியம்??

உமர் அப்துல்லா மட்டும் இந்த கொலைவெறி பிடித்து அலையவில்லை. Times Now, CNN IBN போன்ற ஊடகங்களும் இதே கொலைவெறியில் மக்களை உசுப்பேற்றும் பணியில் இறங்கியுள்ளன.

ராஜீவ் கொலை விசாரணையில் உள்ள பல ஓட்டைகளை ஏன் இந்திய ஏகாதிபத்தியம் மூடி மறைக்கிறது? அதை பற்றி  உமர் அப்துல்லாவும், ஊடகங்களும் ஏன் வாய் திறப்பதில்லை? பாராளுமன்ற தாக்குதல் வழக்கிலும் பல சர்ச்சைகள் உள்ளனவே! அதை பற்றியும் ஏன் வாய் திறப்பதில்லை?

"இந்திய ஏகாதிபத்தியம் முக்கிய குற்றவாளிகளை கொன்றோ, (தப்பிக்கவோ) விட்டுவிட்டு அப்பாவிகளை உள்ளே தள்ளி உண்மைகளை மறைத்துவிடும் என்பதே இந்த வழக்குகள் நமக்களிக்கும் சேதி போலும்." - இக்பால் செல்வன்

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

அப்சல் குரு தூக்கு - இந்தியாவின் பாசிசம்

விடுமுறை நாட்களில் லேட்டாக எழும்புவதுதான் வழக்கம். அப்படித்தான் சனிக்கிழமையன்றும் எழுந்து தொலைக்காட்சியை ஆன் செய்தால் CNN-IBN சானலில் 'Afsal Guru Hanged' என்று Flash news ஓடிக் கொண்டிருந்தது.

எந்த ஒரு அதிர்ச்சியும் இல்லை. அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட போதே எனக்கு தெரியும் "இனி எதிர்க்கட்சிகளை சமாளிக்கவும், மக்களை திருப்திபடுத்தவும்(??), மக்களை திசைதிருப்பவும்  இதுபோன்ற கொலைகள் நடந்து கொண்டே இருக்கும்" என்று.

ஒரு நாட்டின் சட்டம் நம்பகத்தன்மையாக இருக்க வேண்டும்.
ஏழை, பணக்காரன், அதிகாரம்  படைத்தவன் என எல்லோருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும்.
விசாரணைகள் எந்த ஒரு ஒழிவு மறைவுமின்றி நடைபெற வேண்டும்.
அப்படி இருக்கும்பட்சத்தில் மட்டுமே அந்த சட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் தண்டனைகளை சரி என்று கூற முடியும்.

ஆனால்  இங்கு சட்டம் எப்படி இருக்கிறது? தலைமை எப்படி இருக்கிறது?
அதை நீங்களே யோசித்து முடிவெடுத்து கொள்ளுங்கள். நீதிபதிகளையே விலைபேசி வாங்கும் நிலையில்தான் நாடு உள்ளது.

அமெரிக்காவிலிருந்து எஸ்.எம் கிருஷ்ணா அவர்கள் பிரதமருக்கு செய்தி அனுப்புகிறார். காவிரியின் ஷட்டர் உடனே மூடப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்துகொண்டு கார்த்திக் சிதம்பரம் வழக்கு போடுகிறார். பாண்டிச்சேரியில் Tweet செய்த நபர் கைது செய்யப்படுகிறார்.

இணையங்களில் அரசியல்வாதிகளின் முகமூடி கிழிக்கப்படுகிறது. அதை சமாளிக்க என்று IT Act என்று புதிய சட்டம். நம்ம முதல்வர் ஒருபடி மேலே சென்று இணைய குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை அறிவித்து விட்டார்.

இதுதான் இன்றைய சட்டத்தின் நிலை. இன்னும் பல பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்போ விசயத்துக்கு வருவோம்.
"அப்சல் குரு குற்றவாளி. அவனை தூக்கிலிட்டது சரியே!" என்று பலர் ஆனந்த கூத்தாடுகிறார்கள். சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். "இந்தியாவின் குடியரசு நிரூபிக்கப்பட்டுள்ளது! பாரத் மாதா கீ ஜெய்!" என்கிறார்கள்.

ஒரு உயிர்  பறிபோனதில்  அவ்வளவு மகிழ்ச்சியா?
உடனே எழுப்பப்படும் எதிர்கேள்வி "அப்சல் குரு பலரை கொள்ளவில்லையா? அவன் செய்தது நியாயமா?".
அப்சல் குரு கொலையாளி என்று இந்தியாவும் அதன் சட்டமும் கூறுகிறது. அதன்மீது எனக்கு நம்பிக்கை கிடையாது.

இருந்தாலும் உங்கள் வாதப்படி அவர் குற்றவாளி என்றே வைத்துக் கொள்வோம்.
கொலைக்கு கொலை ஈடாகுமா?
இதுதான் உங்கள் பாரதம் கற்றுக் கொடுத்ததா?
இதுதான் அஹிம்சையா?
இதுதான் தேசப்பற்றா?

சில நாட்களுக்கு முன்னர் "பத்து பாகிஸ்தானியர்கள் தலை வேண்டும்" என இந்திய எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா கொக்கரித்தார். தலைவர்கள்தான் இப்படி  ஓட்டு வங்கி அரசியலுக்காக கொக்கரிக்கிறார்கள் என்றால் நாமும் அதையே செய்யலாமா?


கொலைக்கு கொலை ஈடு என்றால் இன்று இந்தியாவில் பலரும் தூக்கிலிடப்பட்டு இருக்க வேண்டுமே!!

 ஈழ ஆதரவாளன் என்பதால் பலரும் என்னிடம் எழுப்பும் கேள்வி "ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி மரண தண்டனை வாங்கி தர வேண்டாமா?".
 ராஜபக்சேவுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டாலும் அதை நான் எதிர்ப்பேன். ராஜபக்சேவின் உயிரை எடுப்பதோ, செயவர்த்தனேவின் உயிரை எடுப்பதோ ஈழ மக்களுக்கு தீர்வு கிடையாது. அதுதான் தீர்வு என்று எண்ணியிருந்தால் அதை என் தலைவர் என்றோ செய்து முடித்திருப்பார். ஆனால் ஈழ மக்களின் எண்ணம் அது இல்லை. அவர்களின் நிலம் அவர்களுக்கு வேண்டும். அவர்களின் இன உரிமை அவர்களுக்கு வேண்டும்.

"ராஜீவ் கொலையில்  குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள மூவரை ஏன் இன்னும் தூக்கிலிடவில்லை?
பஞ்சாப் முன்னாள் முதல்வரை கொன்ற குற்றவாளிகளை  ஏன் இன்னும் தூக்கிலிடவில்லை?" என்று இந்திய ஊடகங்களும், அரைகுறை அரசியல்வாதிகளும் தங்கள் விஷத்தை கக்குகிறார்கள்.

ராஜீவ் கொலை விசாரணையில் உள்ள பல  ஓட்டைகளை இந்திய ஏகாதிபத்தியம் ஏன் மூடி மறைக்கிறது??
ஆயுள் தண்டனை அனுபவித்து முடித்த பின்னரும் சகோதரி நளினியை ஏன் விடுதலை செய்யவில்லை?
அதை பற்றி ஒரு பையலும் கேள்வி கேட்க மாட்டான்.

பாராளுமன்ற தாக்குதலில் குருநாதனுக்கும்(நான்தான் ) தொடர்பு உண்டு. அவரை தூக்கிலிடுங்கள் என்று இந்திய சட்டம் சொல்லும்.
இல்லை அவன் டெல்லி பக்கமே போனதில்லை என்று என் பெற்றோரும், நண்பர்களும் சாட்சி சொல்லுவார்கள். ஆனால் சாட்சிகள்  நிராகரிக்கப்படும். நான் டெல்லியில் இருந்ததாக ஆதாரங்கள் தயாரிக்கப்படும். நான் தூக்கிலிடப் படுவேன்.
"இவன் லூசு மாதிரி உளறுகிறான் ! அப்படியெல்லாம் நடக்காது!" என்று இதை படிக்கும் பலரும் எண்ணலாம். ஆனால் அப்படி நடந்தாலும் அதை யாரும் தடுக்க முடியாது.

அப்சல் குரு தூக்கிலிடப்படுவதற்கு  முன்னர் அவரது குடும்பத்தினரை கூட சந்திக்கவிடாமல் மனிதநேயமற்று, மாபெரும் குற்றத்தை செய்துள்ளது இந்திய ஏகாதிபத்தியம்.

இந்தியப் பாசிசத்தின் பசி இன்னும் அடங்கவில்லை.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

ராஜபக்சே வருகை - கொதித்தெழுந்த தமிழகம் [புகைப்படத் தொகுப்பு]

பல லட்சம் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அதிபர் கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது தமிழக மக்களின் கோரிக்கை. ஆனால் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து தொடர்ந்தும் ராஜபக்சேவை அனுமதித்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழக வாழ்வுரிமை கட்சி தோழர் வேல்முருகன் தலைமையில்ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம். கைது செய்ய திணறிய காவல்துறை !
 

கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம் 
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் ஆர்பாட்டம்

புதுவை ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர்  ரயில் மறியல்
வடசென்னை கிழக்கு  தண்டையார்பேட்டை தொடர்வண்டி நிலையத்தில்  நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை
  கோவையில் தமிழ்ப்புலிகள் அமைப்பினர் நடத்திய போராட்டம் 
மதுரையில்  ராஜபக்ச உருவ பொம்மை எரிப்பு
 
மதுரையில் ஆதி தமிழர் பேரவையினர் நடத்திய போராட்டத்தின்போது, ராஜபக்சேவின் கொடும்பாவி கொளுத்தப்பட்டது.
 ராஜபக்சே உருவ பொம்மையை தூக்கிலிட்டு எரித்தனர் இடிந்தகரை மக்கள்


 
தமிழர் எழுச்சி இயக்கம் சார்பாக ராஜபக்சே திருப்பது வருகையை எதிர்த்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டம்
  சென்னை விடுதியில் பறந்த சிங்கள கொடியை அகற்றிய தமிழர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள்

உலகத் தமிழ் அமைப்பின் இளையோர் அணி ஒருங்கிணைத்த போராட்டத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு அவர்கள் கல்லூரி வளாகத்தில் பதாதைகள் ஏந்தி ராஜபக்சேவிற்கு எதிராக முழக்கமிட்டு ஆர்பாட்டம்

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தை முற்றுகையிட சென்ற வைகோவின் தொண்டர் படை

டெசோ அமைப்பு சார்பாக திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கருப்பு உடையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் . இதில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், கி.வீரமணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 



ஓசூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் ரயில் மறியல் போராட்டம்
கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டம்

கோயம்புத்தூர் சந்திப்பில்  SDPI கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்
ஆந்திர எல்லை புத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் 30 பேர் மறியல் 

பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ரஜபட்சே உருவபொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மக்கள் விடுதலைக் கட்சியினர் 50 பேர் முற்றுகையிட்டு போராட்டம்

சென்னையில் சட்டசபை வாயிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய தமிழகம் எம்.எல்.ஏக்கள்  போராட்டம்

இவ்வாறு தமிழகத்தின் பல இடங்களிலும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

நியாயப்படி வாழ்த்து சொல்லக்கூடாது. ஏனெனில் இது ஒவ்வொரு தமிழனின் கடமை. ஆனாலும் இதற்காக நேரம் செலவிட்டு களத்திற்கு வந்த அனைவருக்கும் வாழ்த்துகள். இந்நேரத்தில் தமிழகத்தில் இல்லாமைக்கு வருத்தங்கள்.


"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

"ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே புத்த பூமியில் கால் வைக்கக் கூடாது. "என்று முழங்கி தமிழர்களுக்கு ஆதரவளித்த பீகார் ஒபரா  தொகுதியை சேர்ந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம பிரகாஷ் சிங் அவர்களுக்கு நன்றி 

அப்புறம் இந்த தேமுதிகவும், அதிமுகவும் எங்கே போனாங்க?
அவங்க மக்களுக்காக குரல் கொடுக்க சட்டசபைக்கு போனாங்க.
சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் அடிதடி.
அதைக்கண்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் ரசிப்பு!!

நன்றி: newsalai.com, tamil.oneindia.in

 

திங்கள், 4 பிப்ரவரி, 2013

போர்நெறி தவறாத தலைவன் பிரபாகரன் - உண்மைச் சம்பவங்கள்

விடுதலைப்புலிகள் மிகுந்த ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிகுந்தவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பல விடுதலைக் குழுக்கள் இருந்தபோதிலும் விடுதலைப்புலிகளை மட்டும் மக்கள் ஏற்றுக்கொண்டமைக்கு காரணம் அவர்களின் ஒழுக்கமும் லட்சியத்தில் விட்டுக்கொடுக்காத பண்பும்தான்.

தமிழகத்தில் புலிகள் பயிற்சி மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் கொளத்தூர் மணி அவர்களின் நண்பர் ஒருவர் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். அவர் ஒரு வேதியியல் பொறியாளர். 'ஏவுகணைகளில் வேதியியல் மயக்க மருந்தை தடவி ஏவினால் எதிரிகள் மயக்கம் கொள்வார்கள். நாம் எளிதில் வென்று விடலாம்' என்று பிரபாகரனிடம் அவர் கூறினார். இதனைக் கேட்டு சினம் கொண்ட தலைவர் கூறியது: "நீங்கள் கூறிய முறை உலகப் போர் நெறிகளுக்கு எதிரானது. உலகப் போர் நெறிகளை புலிகள் ஒருபோதும் தவறமாட்டார்கள்."


தமிழகத்திலிருந்து கடல் வழியாக ஆயுதங்களை எடுத்துச்செல்லும் பணியை தளபதி ரகு என்பவர் மேற்கொண்டிருந்தார். தமிழகத்தின் சாலைகளில் தமிழகக் காவல்துறை மிகுந்த சோதனை செய்து கொண்டிருந்தது. தங்களை மடக்கினால் ஆயுதங்களை பறிகொடுக்க நேரிடும் என்பதால் ஆம்புலன்ஸ் சின்னத்தை தன் வண்டியில் ஒட்டி காவல்துறை  சோதனையிலிருந்து தப்பித்தார் ரகு.

ஈழத்திற்கு சென்று தலைவரிடம் இதைப் பற்றித் தெரிவித்த போது கடும்கோபம் கொண்ட தலைவர் "ஆம்புலன்ஸ் சின்னம் ஒரு புனிதமான சின்னம். அதனை ஆயுதக் கடத்தலுக்கு பயன்படுத்திக் கொண்டது மிகத் தவறு. இது போன்ற சின்னங்களை எக்காலத்திலும் நாம் தவறாக பயன்படுத்தக்கூடாது. இதுவே முதலும் இறுதியுமாக இருக்கவேண்டும்' என்று கூறி தனது இயக்கத்தினரை எச்சரித்தார்.

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எம் தலைவன் ஒரு மாபெரும் உதாரணம்.

நன்றி: 'பிரபாகரன்- தமிழர் எழுச்சியின் வடிவம்  நூல்'