சனி, 12 டிசம்பர், 2015

குப்பை அள்ளும் தொழிலாளி எவ்விதத்தில் குறைந்து போனார்?

வேற நாட்டிற்கோ, வேறு மாநிலத்திற்கோ ஒரு கிரிக்கெட் அணி  வருகை புரியும்போது விமான நிலையத்திலும், ஓட்டலிலும் மாலை மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிப்பார்கள்..

அதே போல வேற நாட்டிற்கோ, வேறு மாநிலத்திற்கோ ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர் பணிக்காக சென்றால் உண்ணும் உணவு, பேருந்து வசதி, தங்குமிடம் என அனைத்தையும் மிகுந்து தரத்துடன் அளிப்பார்கள். சிறப்பு ஊதியமும் கொடுப்பார்கள்.


சென்னை  வெள்ளத்தின் விளைவாக குவிந்த குப்பைகளை அள்ள  வெளி மாவட்டங்களிலிருந்து  துப்புரவு தொழிலாளர்களை அழைத்து வந்திருக்கிறது அரசு. அரசு பேருந்தில் கட்டணமில்லாமல் அழைத்து வந்திருக்கிறார்கள் என எண்ணுகிறேன். எங்கள் பகுதியில் சில பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

 ஆனால் அவர்களுக்கான தங்குமிடம், உணவு, குப்பை அள்ளும் கருவிகள், பாதுகாப்பு உறைகள் எவையும் முறையாக வழங்கப்படவில்லை. அவர்களுக்கான சிறப்பு ஊதியம் எவ்வளவு வழங்கப்பட்டது என தெரியவில்லை. மிகவும் குறைவாகத்தான் வழங்கியிருப்பார்கள்.
அந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களா? என்பதும் தெரியவில்லை.

ஒரு கிரிக்கெட் வீரரை விடவும், ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரை விடவும் எந்த விதத்தில் குறைந்து போனார் துப்புரவு தொழிலாளி?

குப்பை குவிகிறது என அரசைக் குறை சொல்லும் நாம் இந்த தொழிலாளர்கள் பற்றி சிந்திப்பதுண்டா? மக்கள் அவரவர் தெருவை சுத்தம் செய்து கொள்வோம் என்கிற மனப்பக்குவமும் நமக்கு வருவதில்லை. சில தன்னார்வ குழுக்களும், அரசியல் கட்சிகளும் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தது பாராட்டத்தக்கது.

இந்த ஏற்றத்தாழ்வுக்கான காரணம் என்ன? இதனைப் போக்க என்ன வழி? என்பவை பற்றி அறியாமல் ஓட்டு அரசியலின் வழியாக தீர்வு கண்டுவிடலாம் என்கிற நினைப்பில்  இந்த சமுதாயம் ஓட்டு  அரசியல் நோக்கி நகர்கிறது.

1 கருத்து:

  1. அரசாங்க ஊழியர்கள் வரும்முன்பே அதிக அதிகம் குப்பைகளை அள்ளி துப்பரவு செய்தது தமிழ்நாடு தவ்கித் ஜமாஅத் மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகளும் தான் சகோதரரே. அவர்களுக்கும் நன்றி சொல்லுவோம் அனைவரும் .

    நன்றி
    M.செய்யது
    துபாய்

    பதிலளிநீக்கு