திங்கள், 22 ஜூலை, 2013

தலைதூக்கும் மதவாதம், சமூகத்தை பிளவுபடுத்தி மனித வேட்டையாட துடிக்கும் மிருகங்கள்

கடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக  வலைதளங்களில்   எங்கு பார்க்கினும் மதக் கலவரமாக காட்சியளிக்கிறது.
பல பதிவுகள், பின்னூட்டங்களைப் படிக்கும்போது 'இவர்கள் சுய சிந்தனையுடன்தான் பதிவுகள் போடுகிறார்களா?' என்று வினா எழுகிறது.

பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த உலகில் எவர் இறப்பினும் அது துன்பச் சம்பவம். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

ஆனால் அந்தக் கொலையை துருப்புசீட்டாக  பயன்படுத்தி சாதிய, மதவாத அரசியல் செய்வது இழிவான செயல்.

ஒரு கொலை நடந்தால் அதற்கு சொந்தப்பகை, தொழில் பகை, அரசியல் விரோதம் என பல காரணங்கள் இருக்கலாம்.
அதைவிடுத்து அந்த சாதிக்காரன் கொன்னுட்டான், அந்த மதக்காரன் கொன்னுட்டான்னு பேசி குழப்பம் உண்டாக்க கூடாது.
கொலை நடந்தால் காவல்துறை விசாரணை செய்யட்டும். குற்றவாளிகளை  தண்டிக்கட்டும்.

தமிழகத்தில் ஒரு வருடத்தில் ஒன்பது இந்து தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஒப்பாரி சத்தம் கேட்கிறது. அமைதி போதிக்க வேண்டிய தலைவர்கள் 'ஆயுதம் எடுங்கள்' என்கிறார்கள். (இந்த பதிவு எழுதுற நேரத்துல ஒரு கும்பல் கோவையில் மசூதி மீது குண்டு வீசியது)

எங்கள் குடும்பம் இந்துக் குடும்பம், பக்கத்தில் பலரும் இந்துக்களே! அனைத்து மதத்தினரும் பக்கத்தில் இருக்கிறார்கள்.
நீங்கள் வசிக்கும் இடத்திலும் அப்படிதான் இருக்கும்!
அங்கெல்லாம் என்ன பாதுகாப்பே இல்லையா?
உண்மை என்னவேன்றால் எல்லோரும் தான் உண்டு, தன் வேலையுண்டு இருக்கிறார்கள்.

மதவாதம் விதைக்கும் விஷமிகள், ஒட்டு பொறுக்கும் கும்பல்கள் ஆங்காங்கே இருந்துகொண்டு தங்கள் பணியை சிறப்பாக செய்கிறார்கள்.
வைக்கோல்போரில் நெருப்பு பொறியை போட்டுவிட்டு கமுக்கமாக சென்றுவிடுவார்கள்.
தீ பரவாமல் அணைக்க வேண்டுமே தவிர, ஊதி பெரிதாக்கி  ஊரை எரிக்க கூடாது.

மதவாதம் எந்த ரூபத்தில்  தலைதூக்கினாலும் எதிர்த்து அடக்க வேண்டும்.

#மனிதனாய் இருங்கல

வெள்ளி, 12 ஜூலை, 2013

ஹிந்து தேசியவாதி மோடி - இப்பவாவது நம்புங்க



நான் ஒரு ஹிந்து தேசியவாதி... அப்படி என்னைப் பற்றிக் கூறுவதிலும் எந்தத் தவறும் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக் சொல்லியுள்ளார் மீடியா புகழ் மோடி..


மோடி மதச்சார்பற்றவர் என அவரது தொண்டர் அடிப்பொடிகள் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ‘டேய் , அப்படியெல்லாம் கிடையாது. மோடி ஹிந்து மதத்தை தூக்கி பிடிப்பவர்’ என்று பலமுறை விவாதம் செய்திருக்கிறேன். ஒருபயலும் ஒத்துக்கொள்ள வில்லை.

இப்போது மோடியே சொல்லிவிட்டார். இப்போது என்ன செய்யப் போகிறார்கள் அவரது அடிப்பொடிகள்? வேறு என்ன!! இன்னொரு கதை எழுதி அடுத்த சினிமாவை அரங்கேற்றுவார்கள்.

மோடி இவ்வாறு சொன்னது சரியா? தவறா? என்ற கேள்விக்கே இடம் கிடையாது. ஒருவன் தன்னை ஹிந்து என்று சொல்லிக் கொள்வதற்கும், ஹிந்து தேசியவாதி என்று சொல்லிக் கொள்வதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. ஒரு தேசத்தையே மதத்தின் பெயரால் அடையாளப்படுத்துகிறது ‘ஹிந்து தேசியவாதி’ என்னும் வார்த்தை.

இதை மோடி சொல்லியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதுதானே அவர் சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை. இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கும் கொள்கை.
விஷுவ இந்து பரிஷத், சிவ சேனா, சூ சாமி, இந்து முன்னணி என பல அமைப்புகளும் இதே கொள்கை உடையவை. அனைவரும் ஒரே கூட்டணியில் நிற்கிறார்கள்.

தான் சொல்வது தவறு என்று மோடிக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் மதவெறியூட்டி விட வேண்டுமல்லவா!! மதவாதத்தை விதைத்து ஓட்டு அறுவடை செய்ய வேண்டுமல்லவா!!

தான் இஸ்லாமிய தேசியவாதி என்றோ, கிருஸ்தவ தேசியவாதி என்றோ யாராச்சும் சொல்லியிருந்தால் [எந்த காலத்திலும் அப்படி யாரும் சொல்லக் கூடாது] இந்த நேரத்திற்கு எதிர்ப்புகள் பலமாக கிளம்பியிருக்கும். சொன்னது மோடியாச்சே!! அவர் சொன்ன கருத்தை தான் வெளியிடுகின்றன தவிர அவரைக் கண்டித்து ஒரு செய்தியையும் காணோம்.

பிஜேபி ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை. மோடி  பிரதமர் ஆகப் போவதும் இல்லை. ஒருவேளை வந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்க அச்சமாக இருக்கிறது.
பரிவார் அமைப்புகளும், சேனா அமைப்புகளும் தமிழகத்தில் ஒருபோதும் தலையெடுக்க கூடாது.
காங்கிரசை எதிர்க்கிறோம் என்னும் பெயரில் பலரும் பிஜேபியின்  பிற்போக்கு கொள்கைகளுக்கு ஆதரவு அளித்துக்கொண்டிருப்பது வருத்தம்!!

சாதி வெறி, மத வெறி வேண்டாம்!
எவர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டாம்!
மனிதநேயம் வளர்த்து மனிதர்களாய் இருப்போம்!