சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு புத்தகக்
கண்காட்சி நடக்கும் திடலுக்கு நுழைந்தேன். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் ரொம்ப
அதிகமாக இருந்தது. வெளியே உள்ள மேடையில் தோழர் நல்லக்கண்ணு உரையாற்றிக்
கொண்டிருந்தார். மேடையில் அய்யா நெடுமாறன் அமர்ந்திருந்தார். ஏதோ புத்தக வெளியீடு
போல..
புத்தகக் கண்காட்சி அரங்கிற்குள் நுழைந்து
புத்தகங்களை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தேன். சிலவற்றை வாங்கிக் கொண்டேன்.
உள்ளே செல்ல செல்ல எங்கு பார்த்தாலும் ஆன்மீகம்
தொடர்பான கடைகள். புத்தகக் கண்காட்சியா அல்லது ஆன்மீகக் கண்காட்சியா என்று டவுட்டு
வந்துவிட்டது.. எங்கு திரும்பினாலும் சாமியார்கள் பற்றிய நூல்களே கண்ணில்
படுகின்றன. மலிவு விலை குரான், மலிவு விலை பகவத் கீதை என விற்பனை செய்கிறார்கள்.
வாழும் அவதார புருஷர் பரமஹம்ச நித்தியானந்தாவின் குழுவினர் இரு கடைகளை ஆக்கிரமித்துள்ளார்கள். உள்ளே
அவதார புருஷரின் போட்டோ போட்டு மாலையும் போட்டுள்ளார்கள்.. இப்படித்தான்
கடவுளர்கள் தோன்றினார்களோ!!
விடியல், விஜயா, உயிர்மை, கிழக்கு, டிஸ்கவரி,
நியூ செஞ்சுரி, பெரியார் சுயமரியாதைப் பதிப்பகம், கீழைக்காற்று, நக்கீரன், விகடன்
என பிரபலக் கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. நானும் இக்கடைகளில்தான் அதிக நேரம்
செலவழித்தேன்.
குறிப்பாக காலச்சுவடு பதிப்பகத்தில் அதிக
கூட்டம். பெருமாள் முருகனின் நூல்கள் அதிகம் விற்பனை ஆகியிருக்கும். அவரும் உள்ளே
அமர்ந்திருந்தார்.
சங்கர் பதிப்பகம் என்று ஒரு கடை
இருந்தது.
நம்ம சவுக்கு சங்கர்தான் கடையை விரிச்சிட்டாரோ! என்று ஷாக் ஆயிட்டேன்..
நம்ம சவுக்கு சங்கர்தான் கடையை விரிச்சிட்டாரோ! என்று ஷாக் ஆயிட்டேன்..
காலச்சுவடு
பதிப்பகத்தில் அக்கா தமிழ்நதி அவர்களைக் காண முடிந்தது. பேஸ்புக்கில் அருமையாக
எழுதுபவர். வெளிநாட்டில் வசிக்கிறார். புத்தகக் கண்காட்சியையொட்டி இங்கு
வந்திருக்கிறார். என்னை அறிமுகப்படுத்திவிட்டு வந்துவிட்டேன். அவங்களுக்கு என்னை
தெரியல. :(
தமிழ்மண்
பதிப்பகத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்:
பெரியவர் ஒருவர் தலைவர்
பிரபாகரன் தொடர்பான ஒரு நூலை எடுத்து ஒரு சிறுமியிடம் காட்டி (பேத்தியாக
இருக்கும்) ‘யாருன்னு தெரியுதா?.. தலைவர்.. தலைவர்ன்னு சொல்லு’ என்று பாடம்
எடுத்துக் கொண்டிருந்தார். சிறுமியும் தலையை ஆட்டிக்கொண்டே தலைவர் என்றாள். மிகவும்
மகிழ்வாக இருந்தது. #பிரபாகரனிசம்
நான் வாங்கிய நூல்களின் பட்டியல்:
பச்சை தமிழ்த்தேசியம் – சு.ப.உதயகுமாரன்
உணவு யுத்தம் – எஸ்.ராமகிருஷ்ணன்
நலம் 360 – மருத்துவர் கு.சிவராமன்
அர்த்தமுள்ள அந்தரங்கம் – மருத்துவர் ஷாலினி
சிறு விசயங்களின் கடவுள் – அருந்ததிராய்
தோழர்களுடன் ஒரு பயணம் – அருந்ததிராய்
மறுபக்கம் – பொன்னீலன்
ஊரும் சேரியும் – சித்தலிங்கையா
சாதியும் நானும் – பெருமாள் முருகன்
பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன் –
புலிகளின் வெளியீடு
‘மறுபக்கம்’ தவிர்த்து அனைத்தும் சிறு சிறு
நூல்களே! அதனால் விரைவில் படித்து முடித்து விடலாம் என எண்ணுகிறேன்.
தோழர் தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்கள்,
கம்பிக்குள் வெளிச்சம் போன்ற நூல்களையும், நக்சலைட் அஜிதாவின் வாழ்க்கைக் குறிப்பு
நூலையும் சில நாட்களுக்கு முன்னர்தான் வாங்கினேன். ஒரு நூல் தவிர மற்றவை அப்படியே
உள்ளன. பொறுமையா படிப்போம்.
தொடக்கத்திலேயே சென்று விட்டர்கள். நான் இனிமேல்தான் செல்ல வேண்டும்
பதிலளிநீக்கு