சனி, 27 பிப்ரவரி, 2016

"நமக்கு எதுக்கு வம்பு" - நூல் விமர்சனம்


கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் தனது கார்டூன்களைப் பற்றியும், அவற்றின் மீது வந்த விமர்சனங்களையும் தனது நூலில் விவரித்து எழுதியுள்ளார் என்றுதான் நான் எண்ணினேன். ஆனால் பேஸ்புக்கில் பாலா அவர்கள் எழுதிய கட்டுரை( அவரது மொழியில் கிறுக்கல்)களின் தொகுப்புதான் இந்நூல்.
சிறந்த கிறுக்கல்களைத் தொகுத்து ஒரே இடத்தில் வைத்து படிப்பதும் தனி இன்பம்தான்.



பெரும்பாலான கட்டுரைகள் அவரது அனுபவங்கள் மற்றும் எளிய மக்களின் வாழ்வியல் தொடர்பானவை. அரசியல் கட்டுரைகள் பலவும் சாதி எதிர்ப்பு மற்றும் ஹிந்துத்வ அரசியல் எதிர்ப்பு தொடர்பானவை. திராவிட ஓட்டரசியல்வாதிகளையும் அம்பலப்படுத்துகிறார். காவல்துறை அதிகாரி அம்பேத்கர் பற்றி ஒரு சிறப்பான கட்டுரை உள்ளது.

பாலாவின் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இந்நூலில் புதிதாய் எதுவும் இல்லை. அதே நேரத்தில் மீண்டும் ஒரு மறுவாசிப்பு செய்ய உதவும். மிகவும் சிறிய நூல்தான்.
சோழிங்கநல்லூரில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்து பயணத்திற்குள் படித்து முடித்து விடலாம்..

பாலாவின் கட்டுரைகளைப் புதிதாய் படிப்பவர்களுக்கு இந்நூல் அதிகம் உதவும். பாலாவுக்கு புதிய ரசிகர்கள் இந்நூல் மூலம் கிடைப்பார்கள் என உறுதியாகச் சொல்ல முடியும்.

பாலாவினால் பேஸ்புக்கில் தடை செய்யப்பட்ட நண்பர்கள் அதிகம். அவர்களுக்கும் இந்நூல் பெரும்பாலும் உதவும்.   அவரின் ஏதோ ஒரு பதிவுக்காக அல்லது கார்டூனுக்காக அவரிடம் மல்லு கட்டியிருப்பீர்கள். அவரைத் தனது சாதி, மத, கட்சியின் எதிரியாக சித்தரித்து இருப்பீர்கள். இந்நூலில் அவரது சிறந்த பதிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில இருப்பதால் பாலாவின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று படித்து அறிந்துகொள்ள முடியும்.

கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் 'நடுநிலைவாதி' என்று நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். அவர் ஒருபக்க சார்பு உடையவர். ஆம், எளிய மக்களின் பக்கமும், ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கமும் நின்று பேசுபவர். அவரின் கார்டூன்களும், எழுத்துக்களும் எளிய மக்களுக்கானவை.

பின் குறிப்பு: கார்டூன்களை சிறிய அளவில் அச்சடித்துள்ளது நன்றாக இல்லை. அரை பக்க அளவிற்கு பெரிதாக அச்சடித்திருக்கலாம். மேலும் அதிக கார்டூன்களைப் பயன்படுத்தியிருக்கலாம். அதுதான் புத்தகத்தின் ஒரே குறை.
சர்ச்சை கார்டூன்கள் பற்றியும் அதனைக் கடந்து வந்த விதம் பற்றியும் எழுதினால் இன்னும் நல்லா இருந்திருக்கும். அடுத்த நூலில் எதிர்பார்க்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக