நூல் விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

நூல் விமர்சனம்: 'ஈரோட்டுப் பாதை சரியா?' - ப.ஜீவானந்தம் (புதுமை பதிப்பகம்)

வழக்கமா பெரியார் குறித்து விமர்சனங்களில் ஒருவித வெறுப்பு அரசியல் இருக்கும், அவதூறுகள் இருக்கும், தவறான தகவல்கள் இருக்கும்.
ஆனால் இந்த நூல் பெரியாரின் முரண்பாடான நிலைப்பாடுகளை நேர்மையாக அலசுகிறது.

காங்கிரஸ் மீதான  கண்மூடித்தனமான எதிர்ப்பால் உப்புசத்தியாகிரகம் மற்றும் சட்டமறுப்பு இயக்கங்களை புறக்கணித்தது,
"சமூக சீர்திருத்த இயக்கமா? அரசியல் இயக்கமா?" என்பதில்  முரண் நிலைப்பாடுகள்,
ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பில் அக்கறை காட்டாமை என பல தகவல்கள் நிரம்பியுள்ளன.

ஜஸ்டிஸ் கட்சி(நீதிக்கட்சி) என்பது  பெரிய முற்போக்கு கட்சி அளவிற்கு தமிழ்நாட்டில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரியாரின் நாத்திக & பொதுவுடைமை பிரச்சாரங்களுக்கு தடை போட்டது, பெரியாரைக் கைது செய்தது என பல அட்டூழியங்களை செய்துள்ளது நீதிக்கட்சி. ஆனாலும் அந்த மானங்கெட்ட கட்சியை ஆதரித்திருக்கிறார் பெரியார்.

"நான் ஏன் நாத்திகன் ஆனேன்?" என்கிற பகத்சிங்கின் நூலை மொழிபெயர்த்த காரணத்திற்காக தோழர்.ஜீவானந்தம் மற்றும் வெளியிட்ட ஈ.வெ.கிருஷ்ணசாமி  (பெரிய நாயக்கர் என்று அழைக்கப்பட்டாராம்) ஆகியோரை சிறையில் அடைத்தது நீதிக்கட்சி அரசு. இந்த விவகாரத்தில்  மன்னிப்பு கேட்குமாறு ஜீவானந்தம் அவர்களை வற்புறுத்தியிருக்கிறார் பெரியார்.
இவ்வாறு பல புதிய தகவல்கள் நிரம்பியுள்ளன.



சனி, 27 பிப்ரவரி, 2016

"நமக்கு எதுக்கு வம்பு" - நூல் விமர்சனம்


கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் தனது கார்டூன்களைப் பற்றியும், அவற்றின் மீது வந்த விமர்சனங்களையும் தனது நூலில் விவரித்து எழுதியுள்ளார் என்றுதான் நான் எண்ணினேன். ஆனால் பேஸ்புக்கில் பாலா அவர்கள் எழுதிய கட்டுரை( அவரது மொழியில் கிறுக்கல்)களின் தொகுப்புதான் இந்நூல்.
சிறந்த கிறுக்கல்களைத் தொகுத்து ஒரே இடத்தில் வைத்து படிப்பதும் தனி இன்பம்தான்.



பெரும்பாலான கட்டுரைகள் அவரது அனுபவங்கள் மற்றும் எளிய மக்களின் வாழ்வியல் தொடர்பானவை. அரசியல் கட்டுரைகள் பலவும் சாதி எதிர்ப்பு மற்றும் ஹிந்துத்வ அரசியல் எதிர்ப்பு தொடர்பானவை. திராவிட ஓட்டரசியல்வாதிகளையும் அம்பலப்படுத்துகிறார். காவல்துறை அதிகாரி அம்பேத்கர் பற்றி ஒரு சிறப்பான கட்டுரை உள்ளது.

பாலாவின் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இந்நூலில் புதிதாய் எதுவும் இல்லை. அதே நேரத்தில் மீண்டும் ஒரு மறுவாசிப்பு செய்ய உதவும். மிகவும் சிறிய நூல்தான்.
சோழிங்கநல்லூரில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்து பயணத்திற்குள் படித்து முடித்து விடலாம்..

பாலாவின் கட்டுரைகளைப் புதிதாய் படிப்பவர்களுக்கு இந்நூல் அதிகம் உதவும். பாலாவுக்கு புதிய ரசிகர்கள் இந்நூல் மூலம் கிடைப்பார்கள் என உறுதியாகச் சொல்ல முடியும்.

பாலாவினால் பேஸ்புக்கில் தடை செய்யப்பட்ட நண்பர்கள் அதிகம். அவர்களுக்கும் இந்நூல் பெரும்பாலும் உதவும்.   அவரின் ஏதோ ஒரு பதிவுக்காக அல்லது கார்டூனுக்காக அவரிடம் மல்லு கட்டியிருப்பீர்கள். அவரைத் தனது சாதி, மத, கட்சியின் எதிரியாக சித்தரித்து இருப்பீர்கள். இந்நூலில் அவரது சிறந்த பதிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில இருப்பதால் பாலாவின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று படித்து அறிந்துகொள்ள முடியும்.

கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் 'நடுநிலைவாதி' என்று நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். அவர் ஒருபக்க சார்பு உடையவர். ஆம், எளிய மக்களின் பக்கமும், ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கமும் நின்று பேசுபவர். அவரின் கார்டூன்களும், எழுத்துக்களும் எளிய மக்களுக்கானவை.

பின் குறிப்பு: கார்டூன்களை சிறிய அளவில் அச்சடித்துள்ளது நன்றாக இல்லை. அரை பக்க அளவிற்கு பெரிதாக அச்சடித்திருக்கலாம். மேலும் அதிக கார்டூன்களைப் பயன்படுத்தியிருக்கலாம். அதுதான் புத்தகத்தின் ஒரே குறை.
சர்ச்சை கார்டூன்கள் பற்றியும் அதனைக் கடந்து வந்த விதம் பற்றியும் எழுதினால் இன்னும் நல்லா இருந்திருக்கும். அடுத்த நூலில் எதிர்பார்க்கிறோம்.

திங்கள், 26 ஜனவரி, 2015

சாதியும் நானும் - நூல் விமர்சனம்

எப்பவோ படித்திருக்க வேண்டிய நூல். இப்போதுதான் வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சாதி இழிவுக்கு ஆளானவர்களும், ஆளாக்கியவர்களும் தங்கள் சுய அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதியதன் தொகுப்பே இந்நூல்.

காற்றைப் போல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது சாதி என்பதை நூல் கூறுகிறது.

'இப்பெல்லாம் யாரு சாதி பார்க்கிறார்கள்?' என்பவர்கள் கட்டாயம் வாங்கிப் படிக்கவேண்டிய நூல்.

பார்ப்பனியத்தை மட்டுமே விமர்சித்துக் கொண்டிருந்தால் சாதி ஒழிந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்.
பார்ப்பனர் அல்லாத இடைநிலைச் சாதிகள்தான் அதிக சாதிக்கொடுமைகளை விளைவிக்கிறார்கள் என்பதை நூல் விளக்குகிறது.

"சாதியைக் கண்டுகொள்ளாமல் விட்டால் சாதி வேறு வடிவில்தான் வெளியாகும்.
சாதியை வெறுத்து ஒதுக்கினால்தான் சாதி ஒழியும்" என்பதே நூலின் மூலம் நான் கற்ற படிப்பினை.

காலச்சுவடு ஸ்டாலில் பில் போடுவதற்காக இந்நூலைக் கையில் வைத்திருந்தபோது ஒருவர் வந்து 'நூலின் ஆசிரியர் பெருமாள் முருகன் ஸ்டாலில் இருக்கிறார். வந்து கையெழுத்து வாங்கிச் செல்லுங்கள்' என்றார். 'அவர் என்ன அவ்வளோ பெரிய அப்பாட்டக்கரா?' என்று எண்ணிக் கொண்டேன். 'சரி, நான் வந்து கையெழுத்து வாங்குகிறேன்' என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்து விட்டேன். இறுதிவரை பெருமாள் முருகனை சந்திக்கவில்லை. மாதொருபாகன் பிரச்சினை அப்போதுதான் தொடங்கியிருந்தது
.

உண்மையில் பெருமாள்முருகன் பெரிய அப்பாட்டக்கர்தான்.
'சாதியும் நானும்' நூலே துணிச்சலான முயற்சிதான்.

வியாழன், 9 அக்டோபர், 2014

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1

கவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம்.
ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கினேன் ( https://www.nhm.in/shop/100-00-0000-238-3.html ) . விலை கொஞ்சம் அதிகம்தான்.

என் அந்தப் புத்தகம் வாங்கினேன்?
இந்துமதத்தில் உள்ள மூடநம்பிக்கைகள், அறிவுக்குப் பொருந்தாத கட்டுக்கதைகள், சாதியக் கட்டமைப்பு இவற்றை பற்றி விவாதிக்கும்போது 'கீதை படித்திருக்காயா?, ராமாயணம் படித்திருக்காயா? குறைந்தது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படித்திருக்காயா? என எதிர்கேள்விகள் வரும்.

அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள விருப்பம்.
அதுபோக கண்ணதாசனின் தத்துவப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.



புத்தகம் வாங்கி 40 பக்கங்கள் படித்திருப்பேன்.
'எதுக்குடா இந்தப் புத்தகத்தை வாங்கினோம்' என்பது போல ஆகிவிட்டது.

* 40 பக்கத்தில் 5 திருக்குறள் வந்துவிட்டன.
"அதாவது, திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால்...." என்பது போல ஆரம்பிக்கிறார். தமிழுக்கு இந்துச் சாயம் அடிக்கும் வேலையை கண்ணதாசன் செய்கிறார்.

* முற்பகல் செய்யின் பிற்பகல் விலையுமென்பது இந்துக்களின் பழமொழியாம்.
என்ன அழகாக மக்களை ஏமாற்றுகிறார்கள்!!

*  விதி-மதி, இன்பம்-துன்பம் என சிறுபிள்ளைத்தனமான, அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் பல புத்தகத்தில் அதிகம் உள்ளன.

* பெண்கள் நிமிர்ந்து சென்றால் ஆண்களைக் கவர்ந்துவிடுவார்களாம். அதனால் குனிந்து போகச் சொல்கிறதாம் இந்துமதம்.
( பெண்கள் ஜீன்ஸ் அணிவது தொடர்பாக சமீபத்தில் பாடகர் ஜேசுதாஸ் சொன்னது கருத்து இந்தக் கருத்துடன் ஒத்துப் போகிறது )

* அனுபவங்கள் மூலம் நாம் சில பாடங்களைக் கற்க முடியும்.
உதாரணம்: "பிறர்க்கு துன்பம் செய்தால் நாளை அந்த துன்பம் நமக்கும் வரக்கூடும்".
இதனை அனுபவம், வாழ்வியல் சிந்தனை, தத்துவம் என பல பெயர்களில் சொல்லலாம்.
ஆனால் அதற்கு மதச்சாயம் பூசி 'இந்து தர்மம்', 'விதி', 'முன்ஜென்ம பாவம்' என்கிற பெயர்களில் சொல்கிறார் கண்ணதாசன்.

* வள்ளுவர் ஓர் இந்து என்னும் மாபெரும் வரலாற்றுத் திரிப்பை பகுதி 8-இல் சொல்ல வருகிறார். அதனை நான் இன்னும் படிக்க வில்லை.
உலகின் மூத்த பொதுவுடைமையாளன் வள்ளுவனுக்கு இந்து அடையாளம் கொடுத்துதான் தன் இந்து (பிராமண) மதத்தை தூக்கி நிறுத்த வேண்டிய பரிதாப  நிலை கன்ணதாசனுக்கு!!

ஒரு புத்தகத்தை எடுத்தப்பின்னர் அதனை முழுவதும் படித்துவிட வேண்டும் என்பது என் நோக்கம்.

அதனால் வாசிப்பு தொடரும்,
அபத்தங்கள் தொடரும்.