தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 பிப்ரவரி, 2016

இனப்படுகொலை கூட்டணிக்கு வக்காலத்து வாங்கும் இஸ்லாமிய நண்பர்களுக்காக

நாடாளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்க்க குஜராத் முஸ்லிம் படுகொலையையும், பாபர் மசூதி இடிப்பையும் அதிகம் பேசினோம்.
இந்த சம்பவங்கள் மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டு மக்களிடம் ஓரளவு பலனும் கிடைத்தது.

இந்த தேர்தலிலும், தேர்தலுக்கும் பின்னரும் "பாஜக எதிர்ப்பு" என்று வருகையில் அந்த சம்பங்களை பேசித்தான் ஆக வேண்டும்.

"குஜராத்தையும் பாபர் மசூதியையும் இங்கே தமிழ்நாட்டில் ஏன் பேசுறீங்க?" என ஹிந்துத்வ சிந்தனை உள்ளவர்களும், அரசியல் பார்வை இல்லாதவர்களும் கேட்பதுண்டு..

இப்போது அதே வரிசையில் திமுக-காங்கிரஸ் இனப்படுகொலை கூட்டணிக்கு வக்காலத்து வாங்கும் இஸ்லாமிய நண்பர்கள் வந்து நிற்கிறார்கள்.
"ஈழப் படுகொலையை இங்கே ஏன் பேசுறீங்க?" என கேள்வி கேட்கிறார்கள்..


இங்கே இருந்துதான் ஆயுதம் கொடுத்தார்கள். இங்கே அதிகாரத்தில் இருந்தவர்கள்தான் தமிழகத்தில் அடக்குமுறை ஏவினார்கள்.
இங்கே பேசாமல் வேற எங்கே போயி பேசுறது??

"தனது மகளே திருடினாலும் கையை வெட்டுவேன்" என குர்ஆனில் யாரோ சொன்னதாக அடிக்கடி பதிவுகள் போட்டால் மட்டும் போதாது மக்கா..
அதன்படி நடக்கவும் பழகனும்..

வெறும் ஓட்டு அரசியலுக்காக, இனப்படுகொலை செய்த அயோக்கியர்களுக்கு துணை போவோம் என்றுநீங்கள் சொல்வது சரியென்றால் ஹிந்துத்வ அரசியல் சிந்தனை கொண்டவர்களின் செயல்பாடுகளும் சரியென்று ஆகிவிடுமே!!

புதன், 27 ஜனவரி, 2016

மக்கள் நலக் கூட்டணி அடுத்து என்ன செய்ய வேண்டும்?

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திமுக-அதிமுக அல்லாத மூன்றாம் அணி வலுவுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் ஆகிய கட்சியினர் கூட்டணி அமைத்துள்ளார்கள்..





எப்படியேனும் கூட்டணியை உடைத்து விடலாம் என்பதில் திமுகவுக்கு அதிக ஆர்வம் இருந்தது.
இந்தக் கூட்டணியால் வாக்குகள் சிதறி தங்களுக்கு சாதகமாக அமையும் என அதிமுக எண்ணுகிறது..
பாமக, பாஜக போன்ற கட்சிகளும் தங்களின் விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள்..

ஒரு வழியாக "மக்கள் நலக் கூட்டணி" என்கிற பெயர் பெரும்பாலான மக்களிடம் சென்று அடைந்து விட்டது.
இனி அடுத்து  என்ன செய்ய வேண்டும்??

1. விஜயகாந்த் தங்கள் அணிக்கு வர வேண்டும் என அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்..

2. தேர்தலுக்கு முன்னரே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது சட்டத்திற்கு முரணானது. ஆனாலும் அனைத்து கட்சிகளும் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்துகிறார்கள்.
அவ்வகையில் அனைத்து தரப்பு மக்களாலும், குறிப்பாக இளைய தலைமுறையினால் அதிகம் ஈர்க்கப்பட்ட தோழர் நல்லக்கண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.

3. விரைவில் தொகுதி பங்கீட்டை முடிவு செய்து தங்களின் சின்னங்களை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.
ஏனென்றால் இன்னும் இரட்டை இலை, உதயசூரியன் தவிர வேறு சின்னங்களை அறியாத மக்கள் பலர் உள்ளனர்.

4. ஊடக பலமோ, பெரு முதலாளிகளின் பலமோ மக்கள் நலக் கூட்டணிக்கு கிடையாது.
அதனால் எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும் திமுக மற்றும் அதிமுகவை மிஞ்ச முடியாது. மதுரை மாநாட்டு செய்திகளையே இருட்டடிப்பு செய்து விட்டார்கள்..
அதனால் தொண்டர்களை வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்ய வலியுறுத்த வேண்டும்.. இணையதளப் பிரச்சாரம் மட்டுமே உதவாது.

5. அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்..
இல்லையேல் அதிமுகவின் பி டீம், திமுகவின் பி டீம் என்கிற தேவையற்ற விமர்சனங்கள் வரக் கூடும்...

அதிமுக மற்றும் திமுகவை மோதிப் பாருங்கள். வாழ்த்துகள்..
என்னதான் நடக்குன்னு ஒருகை பார்த்திடுவோம்.. :)

வெற்றியோ, தோல்வியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. அதிமுக மற்றும் திமுகவை அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தி நல்லதோர் அரசியலை முன்னெடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை அடுத்த தலைமுறையினருக்கு ஊட்டுங்கள்.

சனி, 17 மே, 2014

தமிழக எம்பிக்களால் தமிழகத்திற்கு பயன் இல்லையா?


தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்பிக்களால் எந்த பயனும் இல்லை என்று இணையத்தில் கருத்துக்கள் உலாவ ஆரம்பித்துள்ளன.
'டெண்டுல்கர் சதம் அடித்தும் டீம் தோல்வி' என்ற வகையில் அருமையான ஒப்பீடு வேற நடத்துகிறார்கள்.
அதாவது இந்திய அரசிடம் தமிழக அரசு  பொறுக்கித் தின்ன வேண்டும் என்பதை மறைமுகமாக கூறுகிறார்கள்.


அப்படியான நண்பர்கள் முதலில் இந்திய அரசியலமைப்பை படித்து விட்டு வரவும்.
* மாநிலங்களுக்கு பாராபாட்சம் இல்லாமல் நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும்.
* மாநில அரசின் உரிமைகளில் தலையிடக் கூடாது.
* பொதுப் பட்டியலில் சட்டம் இயற்றும்போது மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும் 
என ஆயிரத்தெட்டு விதிகள் இருக்குது..

ஆனால் நடுவண் அரசினை ஆட்சி செய்பவர்கள்  இந்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு தங்கள் ஆட்சி அல்லது கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள். சலுகைகளை அள்ளி வீசுகிறார்கள். அதன் மூலம் அந்த மாநிலங்களில் தங்கள் கட்சியை வலுவாக காலூன்ற செய்கிறார்கள்.

தங்களுக்கு வாக்குவங்கி இல்லாத மாநிலங்கள் அல்லது தங்கள் ஆட்சி இல்லாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகிறார்கள்.

தமிழக்திற்கு உரிய அளவில் மண்ணெண்ணை வழங்காமை, மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சாரத்தை வழங்காமை, குறைவான நிதி ஒதுக்கீடு ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் நடந்தேறியது.
அதன் பின்னணியில் திமுக இருப்பதாக தமிழக முதல்வர் குற்றம் சாட்டியது பலருக்கும்  நினைவு இருக்கலாம்.

இந்நிலையில் "பாஜக ஆளுகிற மாநிலங்கள் மற்றும்  பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் மட்டுமே பயனடையும்" என்கிற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்  சிலர்.
அதாவது இந்திய போலி ஜனநாயகத்தை ஒத்துக் கொள்கிறார்கள்.
மாநில சுயாட்சி என்கிற கொள்கையை  இந்திய ஒன்றிய நடுவண் அரசு விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது என்பதையும் ஒத்துக் கொள்கிறார்கள்.
"நம்ம மாநிலத்திலும் பாஜக ஜெயித்திருக்கலாமே!" என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறார்கள்.

அது தவறான பார்வை.
கூட்டணி இருக்குதோ இல்லையோ நாடாளுமன்ற தொகுதிகளுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
எம்பிக்கள் கோரிக்கை வைக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
அப்படி நிறைவேற்றாத பட்சத்தில் எம்பிக்கள் தாராளமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வர வேண்டும்.
அல்லது மாநில அரசின் வழியாக நடுவண் அரசுக்கு செல்லும் நிதிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.

இதெல்லாம் இந்த எம்பிக்களால் சாத்தியமில்லை. இனப்படுகொலை அரங்கேறியபோதும் பதவியைக் கெட்டியாக பிடித்துக் கொண்டவர்கள்தான் நம்ம எம்பிக்கள்.
( ஆந்திராவை பிரிக்கிறோம் என்று நடுவண் அரசு அறிவித்தவுடன் சீமாந்திரா பகுதியை சார்ந்த  எம்பிக்கள், அமைச்சர்கள்  அனைவரும் ராஜினாமா செய்தார்கள். அதில் ஒருவர் ஒருபடி மேலே போயி தனி நாட்டு கோரிக்கையை முன் வைத்தார். )

அதிமுக எம்பிக்கள் உத்தமர்கள் கிடையாது. அதற்காக தமிழகத்தில் தேசியக் கட்சிகளை காலூன்ற செய்தால் தமிழகம் நாசமாகப் போகும்.

குஜராத்தி மோடி உத்திரப்பிரதேசத்தில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்.
அதுபோல தேசியக் கட்சிகளில் பலரும் வெவ்வேறு மாநிலங்களில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்.
அவ்வாறு தமிழகத்திலும் கண்டவனும் வந்து போட்டியிட்டு ஜெயிக்கும் நிலை வரக் கூடும்.மாநில உரிமைகள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.மொத்தத்தில் அரசியல் நாசமாய் போகும்.
அதனால் தேசியக் கட்சிகளைப் புறக்கணிப்பது மாநில நலனுக்கு நல்லது.

ஒரு தேசிய கட்சியால் தமிழகம் அனுபவித்த கொடுமைகளை உணருங்கள்.

ஒரு தேசியக் கட்சியை அழிக்கவே இத்தனை காலங்கள் தேவைப்பட்டிருக்கிறது.
இந்த லட்சணத்தில் இன்னொரு தேசியக் கட்சியை காலூன்ற செய்யும் தவறை செய்யாதீர் மக்களே!!

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் இந்திய தேசியக் கட்சிகள் மற்றும் மதவாதக் கட்சிகளைப் புறக்கணித்து நாம் சாதனை படைத்திருக்கிறோம் என்று பெருமை கொள்ளுங்கள்.

மாநில சுயாட்சி கோரிக்கையை வலுப்படுத்தும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடுறது, நடுவண் அரசிடம் பொறுக்கித் தின்பது பற்றி எண்ணிக் கொண்டிருந்தால் கட்டியிருக்கும் கோவணமும் பறிபோகும்.

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

தூத்துக்குடி தேர்தல் கள நிலவரம்

ஆறுமுனைப் போட்டியால் தூத்துக்குடி தேர்தல் களம் அனல் பறக்கிறது.

மின்சாரத் தட்டுப்பாடு, ஸ்டெர்லைட், அணு உலை ஆகியவைதான் தூத்துக்குடி தொகுதியில்  முன்னணி பிரச்சினைகள்.

                                                      படத்தில்: ஜெயசிங்(அதிமுக),  ஜோயல் (மதிமுக), ஜெகன் (திமுக)

அதிமுக:

மின்சார தட்டுப்பாடு பிரச்சினையால்  ஆளும் கட்சியான அதிமுகவின் நிலைமை பரிதாபம்.

தொகுதிக்கு அறிமுகமில்லாதவரை வேட்பாளரை நிறுத்தியது அதிமுகவுக்கு பின்னடைவு.

கூடங்குளம் பகுதி மக்களை அதிமுக அரசு ஒடுக்கியதை மீனவ மக்கள் மறக்க மாட்டார்கள். அதனால் மீனவர்களின் ஓட்டுகள் இம்முறை அதிமுகவுக்கு கிடைப்பது கடினம்.

அதுபோக அதிமுக அமைச்சர் சண்முகநாதனுக்கு எதிராக கட்சியில் பலர் செயல்படுகிறார்கள்.

குளத்தை ஆக்கிரமித்த அமைச்சர் சண்முகநாதன், அடாவடி மேயர் சசிகலா புஷ்பா, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்து ஊழல் வழக்கில் சிக்கிய  சின்னதுரையை மீண்டும் அதிமுகவில் சேர்த்தது, தூத்துக்குடி மாநகராட்சிப் பணிகள் முடங்கி கிடப்பது ஆகியவை அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

ஜெயாவின் வான்வழி பிரச்சாரம் அதிமுகவுக்கு கூடுதல் பின்னடைவு.

திமுக:

தனது இரண்டாவது அரசியல் வாரிசு ஜெகனை வெற்றி பெற செய்ய திமுக முன்னாள் அமைச்சர், கலைஞரின் முரட்டு பக்தன் பெரியசாமி தீயா வேலை செய்யுறார். அதிமுகவினரை விலைகொடுத்து வாங்குகிறாராம். அதனால் அதிமுக பிரச்சாரம் மந்தமாக உள்ளது. வேட்பாளர் ஜெகன் சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்கிறார்.

காயல்பட்டிணம் இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுகவுக்கு பெரும்பலமாக இருக்கும்.

அந்நியமுதலீடு விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு வியாபாரிகளுக்கு எதிராக உள்ளதால் வியாபாரிகளின் வாக்குகளை திமுக பெறுவது கடினம்.

பெரியசாமி குடும்பத்தினர் மீது சொத்துக்குவிப்பு வழக்குகள் 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஜெகனுக்கு வாக்களிக்க மக்கள் தயங்குவார்கள்.

அனிதா ராதாகிருஷ்ணன் கோஷ்டி, கனிமொழி கோஷ்டி, ராதிகாசெல்வி கோஷ்டி, தற்போதைய எம்பி ஜெயத்துரை கோஷ்டி என பல கோஷ்டிகள் இருப்பது திமுகவுக்கு கூடுதல் பின்னடைவு.


மதிமுக:
தூத்துக்குடி தொகுதி   பாஜகவுக்கு கிடைக்கும் என பாஜகவினர் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே இத்தொகுதியில் மதிமுகவினர் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மீனவர் பிரச்சினை, அணு உலை எதிர்ப்பு, சுங்கசாவடி எதிர்ப்பு என மதிமுக வேட்பாளர் ஜோயலுக்கென்று தொகுதியில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

கடந்த 2011 உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மதிமுக மேயர் வேட்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு 30000 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பெற்றிருந்தார்.

கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக - 61000, பாஜக - 27000 வாக்குகளை வாங்கியிருந்தார்கள். இம்முறையும் இந்த வாக்குகள் நீடித்தால் ஜோயலின் வெற்றி உறுதி செய்யப்படும்.

காங்கிரஸ்:

வேட்பாளர் ஏபிசிவீ சண்முகம் அவர்களுக்கு தொகுதியில் நல்லபெயர் உள்ளது.

இவர்  தோல்வி அடைவது உறுதி. ஆனால் டெபாசிட் பெறும் அளவுக்கு கணிசமான வாக்குகளைப் பெறுவார்.


ஆம் ஆத்மி:

அண்ணன் புஷ்பராயன் அணு உலை எதிர்ப்பாளர்களின் வாக்குகளைப் பெறுவார்.

புன்னக்காயல், திருச்செந்தூர், ஆலந்தலை, மணப்பாடு, குலசை பகுதிகளில் அதிக வாக்குகள் பெறுவார். பிற பகுதிகளில் வாக்குகள் கிடைப்பது அரிது.


கம்யூனிஸ்ட்: கோவில்பட்டி பகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெறுவார்.

இந்த ஆறுமுனைப் போட்டியால் வாக்குகள் நன்றாகப் பிரியும்.
வெற்றி பெறுபவர்  20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது என் கணிப்பு.

ஜெகனா? ஜோயலா? என்பதுதான் தற்போதைய நிலவரம்...