திங்கள், 31 டிசம்பர், 2012

தமிழினத்தைக் காத்திட இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம்

நல்லவேளை  நம் முன்னோர்கள் ஹிந்தியை எதிர்த்தார்கள். இல்லையென்றால் இந்த கட்டுரையை நான் ஹிந்தியில் எழுதவேண்டிய நிலை வந்திருக்கும். ஆம்! நம் தாய்மொழி தமிழ் அழிந்திருக்கும்.

"ஏன் ஆங்கிலம் கற்றதால் தமிழ் அழிந்துவிட்டதா?" என்று உடனே நீங்கள் கேட்கக்கூடும் . ஆம்! ஆங்கிலத்தாலும் நம் தாய் மொழி மெதுவாக அழிந்து வருகிறது. பேசுவதிலும், எழுதுவதிலும் ஆங்கிலக்கலப்பு அதிகமாகி விட்டது. உலகம் முழுவதும் ஆங்கிலத்தின் பயன்பாடு அதிமாகி விட்டதால் வேறு வழியும் இல்லை. ஆனால் ஆங்கிலக்கலப்பை நாம் தவிர்க்க வேண்டும். எங்கு தேவையோ அங்கு மட்டும் ஆங்கிலத்தை பயன்படுத்த வேண்டும்.

எனது பள்ளிப்பருவத்தில் நான் நினைத்ததுண்டு "ஆங்கிலத்தை போல ஹிந்தியையும் கற்றிருந்தால் இந்தியா முழுவதும் சென்று வரலாம் என்று" . திமுக தலைவர் கருணாநிதியை இந்த விசயத்தில் பல முறை திட்டி தீர்த்ததுண்டு. ஆனால் நம்  முன்னோர்கள் ஏன் ஹிந்தியை எதிர்த்தார்கள் என்று இப்போது தெரிகிறது.  உலகம் முழுவதும் சென்று வர ஏதுவாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக  ஆங்கிலம் கற்கிறோம். பின்னர் ஏன் ஹிந்தி??

 நான் இப்போது  தெலங்கானா மாநிலத்தில் இருந்து எழுதுகிறேன். எனக்கு தெலுங்கும்  தெரியாது. ஹிந்தியும் தெரியாது. ஆனால் அதனால் எனக்கு இங்கு அந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு தேவைப்பட்டால் தெலுங்கு கற்பேன். ஆனால் ஹிந்தி ஏன் கற்க வேண்டும்?? பிற  இனத்தவர்களிடம் அவர்கள் மொழியில் உரையாடலாம். அந்நிய மொழியான இந்தியில் ஏன் உரையாடவேண்டும்?

ஹிந்தி கற்பதால் நாம் அனைவரும் இந்தியர்களாக ஒன்றுபடலாம் என பலர் கருதுவதுண்டு. மாபெரும் தவறு. தாய்மொழியையும் கலாச்சாரத்தையும், தொன்மையான வரலாறுகளையும், பெருமைகளையும் ஹிந்தி அழிக்கும். அப்படி எல்லாவற்றையும் இழந்து ஒரு மொழியை கற்பதினால் என்ன பயன்?? "எனக்கு ஹிந்தி தெரியுமே!!" என்று வெளியில் சொல்லிக்கொள்ளலாம். அவ்வளவுதான். தாய்மொழியை மறந்தவன் அந்நிய மொழியை தெரியும் என்று சொல்வது அவமானம்.

ஹிந்திக்கு பிற இனங்களின் தாய்மொழிகளை அழிக்கும் சக்தி மிக உண்டு. மராத்தி, பஞ்சாபி, பெங்காலி என பல மொழிகளை தடம் தெரியாமல் அழித்து விட்டது ஹிந்தி.

இதுபற்றி நண்பர்களிடம் பேசியபோது ஒரு மாராத்திய நண்பர் சொன்னது: " மராத்தி பேச நான் ரொம்ப தடுமாறுவேன். இந்தி பேசியே பழகி விட்டதால் மகராஷ்டிராவில் பலருக்கும் இதே நிலைதான்."

தெலங்கானா நண்பர் சொன்னது: "தெலங்கானாவில் பலருக்கும் தெலுங்கு தெரியும். ஆனால் பேச கூச்சப்படுகிறார்கள். இந்தி பேசுவதையே பெருமையாகக் கருதுகிறார்கள்."

இதுபோன்ற நிலை நம் தாய்மொழி தமிழுக்கும் வந்துவிடக்கூடாது. இந்தியை திணிக்க முயற்சிக்கும் இந்திய அரசின் செயல்களை தொடர்ந்து  முறியடிப்போம்.

தமிழ்ப் பெற்றோர்களே, தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது அப்பள்ளியில் இந்தி கட்டாயம் இருந்தால் அப்பள்ளிகளை புறக்கணியுங்கள்.

ஓர் இனத்தின் அடையாளமே அந்த இனத்தின் மொழிதான்.
தமிழ் அழிந்து போனால் நம்மை எப்படி அடையாளப் படுத்துவது???

பிற மொழி திணிப்பை எதிர்ப்போம். தாய்த்தமிழ் காப்போம்.

2 கருத்துகள்:

  1. அருமையான கருத்து. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. இப்பவாவது இந்த இளைய தலை முறை அந்த புளுகாண்டிகளின் பொய்களைப் புரிந்து கொள்ளகிறதே! மகிழ்ச்சி!

    எப்பா சாமி இந்த word verification தூக்குப்பா! யாரும் இவிட அப்புறம் வரமாட்டார்கள்...!

    பதிலளிநீக்கு