திங்கள், 24 டிசம்பர், 2012

திடீர் நாட்டாமைகள்!!

இந்தியத் தலைநகர் டெல்லியில் ஒரு மருத்துவ மாணவி சில மனிதத்தோல் போர்த்திய மிருகங்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள்.

உடனே சுஷ்மாக்கள் கொந்தளிக்கிறார்கள். ஜெயா பச்சன்கள் கண்ணீர் விடுகிறார்கள். மீடியாக்கள் ஒப்பாரி வைக்கின்றன. எதிர்க்கட்சிகள் அறிக்கையால் தாக்குகின்றன.

 இளைஞர் சமுதாயமும், மாணவர் அமைப்புகளும் திடீர் நாட்டாமைகளாக மாறி "Hang the Rapists [குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்]" என அதிரடித்(?) தீர்ப்பு கொடுக்கின்றனர்.

"இவ்வளவு நாள் இவர்கள் எங்கு சென்றார்கள்?" என்று நான் முட்டாள்தனமாக கேட்கமாட்டேன். இளைஞர்களின் இந்த போராட்டத்தை நான் வரவேற்கிறேன். கண்டிப்பாக இந்த போராட்டம் ஆட்சியாளர்களுக்கு மிகுந்த பயத்தை கொடுத்திருக்கும்.

இந்த போராட்டம் எப்படி ஓடுக்கப்படும் என நான் நினைத்தேனோ அதைப்போலவே இந்த போராட்டம் ஒடுக்கப்பட்டது. ஆம்! ராஷ்டிரபதி பவனுக்கு அருகில் உள்ள மெட்ரோ ஸ்டேஷன்கள் மூடப்பட்டன. கண்ணீர்ப்புகை, தண்ணீர் பீய்ச்சி அடித்தல்  என ஆட்சியாளர்கள் விடுத்த வேலையை காவல்துறை திறமையாக செய்தார்கள்.

வழக்கம்போல சில காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.  போராட்டக்காரர்கள் என்னும் வார்த்தை கலவரக்காரர்கள் என்று மாற்றப்பட்டு அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் தடியடிக்கு ஆளானார்கள். மீடியாக்காரர்கள் தாக்கப்பட்டு  அவர்கள் கருவிகளும் உடைக்கப்பட்டன.

தமிழ்நாட்டிலேயே இது மாதிரி பல போராட்டங்களையும், ஒடுக்குமுறைகளையும் பார்த்துவிட்டதால் இந்தியத் தலைநகரில் நடைபெற்ற இந்த போராட்டம் ரொம்ப பெரிதாக தெரியவில்லை.

சரி, விசயத்துக்கு வருவோம்.

போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் "Gang the Rapists" என்னும் வாசகங்களை கொண்ட அட்டைகளை ஏந்திக் கொண்டிருந்தனர். மீடியாவில் பேட்டி  கொடுத்த பலரும் இதே கருத்தை சொன்னார்கள். சித்ரவதை செய்து அணு அணுவாகக் கொல்ல வேண்டும் என பலர் சொன்னார்கள்.

"இதற்கு மரண தண்டனை வேண்டாம்" என கருத்து கூறிய நடிகர் கமலுக்கு எதிராக இணையதளங்களில் ஏராளமான வார்த்தைகள். "அவர் மகள்களுக்கு இப்படி நேர்ந்தால் இப்படி பேசுவாரா??" என பலர் விவாதம் செய்கிறார்கள்.


கட்ஜு [Markandey Katju] என்னும் ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு கேள்வி தொடுத்திருந்தார்: "கிராமப்புறங்களில் இதைவிட கொடுமையான பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. அவற்றை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை?". அதுதானே உண்மை.

அங்கு போராட்டம் நடந்த அதேவேளையில் இங்கு தூத்துக்குடியில் புனிதா என்னும் சிறுமி மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டதே!! அவற்றை ஏன் மீடியாக்கள் வெளி கொண்டுவரவில்லை??

ராணுவ அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும்  பல ஏழைப்பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் தூக்கிலிட வேண்டுமென சொல்லக்கூட நமக்கு தைரியம் இல்லையே!

டெல்லி சம்பவத்தின்போது குற்றவாளிகள் அனைவரும் போதையில் இருந்துள்ளனர் . மது ஊற்றிக்கொடுத்த அரசையும், போதையில் தெருவில் நடமாட அனுமதித்த அரசையும் நாம் கண்டிக்கவில்லையே!

மது, கஞ்சா, புகையிலை மற்றும் பல சமுதாயச் சீர்கேடுக் காரணிகள்  இருக்கும்வரை  சமுதாயத்தில் இதுபோன்ற சீர்கேடுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஒன்றிரெண்டு சம்பவங்கள் நம்மை மிகவும் பாதிக்கின்றன. அதன் விளைவுதான் டெல்லியில் நடந்த போராட்டம்.

இந்த மாதிரி போராட்டங்களை  எப்படி வாக்குகளாக மாற்றலாம் என கட்சிகள் கணக்கு போடும்.  ஆனால் "சமுதாயச் சீர்கேடுகளை ஒழிப்போம், தனிமனித ஒழுக்கத்தை வளர்ப்போம். சமுதாயத்தை திருத்துவோம்"  என்னும் கருத்துக்களோடு யாரும் முன்வருவதில்லை. அப்படியே ஒருசிலர் வந்தாலும் அவர்களை நாம் கண்டுகொள்வதில்லை.

இதுபோன்ற போராட்டங்கள் அரசை ஸ்தம்பிக்கச் செய்யும். ஆனால் சமுதாயத்தை சீர்திருத்தாது.

பலரும் சொல்லுகிறபடியே குற்றவாளிகளை தூக்கிலிடுவோம். எல்லோரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவோம். இனிப்பு வழங்குவோம். மகிழ்ச்சி அடைவோம். அதற்கு அப்புறம்?? குற்றங்கள் குறைந்து விடுமா? சமுதாயம் நல்வழியில் பயணிக்குமா?



திருத்தப்பட வேண்டியது ஒட்டுமொத்த சமுதாயமும்!

தூத்துக்குடியில் சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மற்றொரு திடீர் நாட்டாமை திமுக கருணாநிதி கூறியுள்ளார். தன்  வீட்டில் வேலை பார்த்த கேரள சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொன்றேவிட்டனர் திமுகவை சார்ந்த பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாரும் அவரது நண்பர்களும். அவரைக் கண்டிக்காதவர்கள் இப்போது போராட்டம் நடத்திக் கிழிக்கப் போகிறார்களாம்.
ஓட்டுப் பொறுக்கிகள்!

5 கருத்துகள்:

  1. Nanba , idhu pondru kashmirilum , oru kiramathayae rape senjathu , indian army...... adhu theriyuma ungaluku?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஷ்மீர், மணிப்பூர், தமிழீழம் மற்றும் பல இடங்களில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல்களை நன்கு அறிவேன்.

      நீக்கு
  2. பணக்காரர்களுக்காக சட்டமும் சமூகமும் எப்படி எல்லாம் வளையும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு தெளிவாக தெறிவிக்கின்றன. இதில் ஒரு குற்றவாளி 18 வயதிற்கு உட்பட்டிருப்பதால் அவனுக்கு தண்டனை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போது பாதிக்கப்பட்டவர் உணர்சிவசப்படுகிறார் அவனுக்கும் மரண தண்டனை பெற்று தந்தே ஆகவேண்டும் என்று இதற்கு உள்துறை அமைச்சகம் வளைகிறது.16 வயது பூர்த்தி அடைந்தாலே மேஜராக கருதலாம் என்கிறது.

    அப்படியானால் இதுவரை கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்ட அணைவருக்கும் மரண தண்டனை கொடுத்துவிட்டு இவனுக்கும் மரணதண்டனை கொடுக்கலாம். நியாயமாக பார்த்தால் என்ன செய்யவேண்டும் இவணுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்றால் இவனை வளர்த்தவர்கள் ஒழுங்காக வளர்க்காத குற்றத்திற்காக அவனின் பெற்றோர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும். தண்டனை என்பதை பணக்காரர்களின் பழிவாங்களுக்காக பயன்படுத்தக்கூடாது.

    பதிலளிநீக்கு