வெள்ளி, 2 ஜனவரி, 2015

பிகே(PK) - மதங்களுக்கு எதிரான பெரும் விவாதம்

ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவான பிகே படத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது.

ஏற்கனவே வந்துள்ள பல விமர்சனங்களின் அடிப்படையிலும், மதவாதிகளின் எதிர்ப்பையும் வைத்தே படம் மிகத் தரமானது என்று புரிந்து கொண்டேன்.


எனக்குப் பிடித்த சிலவற்றைப் பட்டியலிடுகிறேன்.

1. கதாநாயகியும் அவரது காதலனும் நெருங்கிப் பழகும் வேலையில், காதலன் பாகிஸ்தான் முஸ்லிம் என்று தெரிந்தவுடன் விலக முயற்சிக்கும் கதாநாயகி.
பாகிஸ்தானை எதிரியாகக் காட்டி போலி இந்திய தேசியம் வளர்க்கும் செயலைக் கேள்விக்குள்ளாக்கியது அந்தக் காட்சி.

2. எதற்கெடுத்தாலும் சாமியாரின் உததரவுக்காக காத்துக் கிடக்கும் கதாநாயகியின் தந்தை இறுதியில் சாமியாருக்கு எதிரான  நிலையில் வந்து நிற்பது அருமை.

3. பயம்தான் ஒரு மனிதனைக் கடவுளை நோக்கி போகச் செய்கிறது என்பதை நிரூபிக்க தேர்வுகாலத்தில் கல்லூரி வாயிலில் ஒரு கல்லை வைத்து அதனை வணங்கவைத்து, வணிகமாக்கும் யுக்தி.

4. கோவில் உண்டியல் பணம், கோவிலில் உருளுவது, பொய்களை சொல்லி மதம் மாற்றுவது, கத்தியால் உடம்பில் கீறல் போடுவது, மதத்தின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்துவது என பல பிற்போக்குத் தனங்களை நேரடியாக சாடியிருக்கிறார் இயக்குனர்.

5. கடவுளைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில்தான் ஏகப்பட்ட சண்டைகள், குண்டுவெடிப்புகள்.
யாரும் கடவுளைக் காப்பாற்ற வேண்டியதில்லை. அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வார் என்கிற வசனம்.

6. மதம் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப மறுக்கும் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குனர். அமீர்கானின் செயல்களை, பேச்சைப் பார்த்து அமீர்கானின் நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொள்வது.
மதவாதிகளின் அடாவடி, கருத்து சுதந்திரம் பற்றி இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

7. தன்னிடம் அமீர்கான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததால் 'அவன் முஸ்லிம், அவன் பேச்சை நம்பாதீர். அவன் இந்து மதத்தை அழிக்க முயற்சிக்கிறான்' என்று திசைதிருப்பும் (ஆ)சாமியார். மக்களைப் பிரித்தாளும் மதவாதிகளின் செயலை இதைவிடத் தெளிவாக காட்ட முடியாது.

8. குழந்தைகளைத் தூக்கிப் பார்த்து லேபிள் ஏதும் இருக்குதா என பார்க்கும் காட்சி. எந்தக் குழந்தையும் பிறக்கும்போது லேபிளோடு பிறப்பதில்லை என்கிற வசனம்.

9. கடவுள் நம் தந்தை என்கிறீர்கள்.
எந்தக் கடவுளாவது தான் குழுந்தைகளை தரையில் உருளச் செய்து வேண்டச் சொல்வானா? என்கிற வசனம்.

படம் முழுக்க மேலும் பல நல்ல காட்சிகள், வசனங்கள் உள்ளன. படத்தில் வரும் பல பகுத்தறிவுக் கேள்விகளை பெரியாரும், திராவிட கழகத்தினரும் பல வருடங்களுக்கு முன்னரே பிரச்சாரமாக எடுத்து செய்துவிட்டார்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.


அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். திருட்டு டிவிடி வாங்கியாவது பார்த்து விடுங்கள்.

சைவம், முண்டாசுப்பாட்டி மற்றும் சில தமிழ்ப்படங்களில் கிராமத்து சாமியார்கள், குறி பார்ப்பவர்களை அம்பலப்படுத்தியிருப்பார்கள். ஆனால் கார்ப்பரேட் சாமியார்களை நம்மாட்கள் நெருங்கியதில்லை. ஒரு கார்ப்பரேட் சாமியாரை பகிரங்க சவாலுக்கு அழைத்து அம்பலப்படுகிறான் பிகே.

ஆன்மீக நாட்டம் உள்ளவர்களையும் வெகுவாக ஈர்த்ததே பிகேவின் வெற்றி.
படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் மதம் மற்றும் கடவுளுக்கு எதிராக திரும்புவார்கள் என்று சொல்ல முடியாது.
ஆனால் நித்தி, ஜெயேந்திரன், ராம்பால், ராம்தேவ் போன்ற மத வியாபாரிகளுக்கு எதிராக திரும்புவார்கள்.
பிகே புண்படுத்துவது இவர்களின் மனதைதான், இந்துமதம் சார்த்தவர்களின் மனதை அல்ல.

படத்தில் இந்து மதத்தை மட்டும் அதிகம் விமர்சிக்கிறார்கள் என்று சிலர் சொல்வது உண்மைதான்.
அப்படியானால் என்ன பொருள்?
இந்து மதத்தில் அதிக பிற்போக்குத் தனங்களும் மூடநம்பிக்கைகளும் இருக்கின்றன என்றுதான் பொருள்.
அதனைத் திருத்திக்கொள்வதுதானே நல்ல செயல்!  விமர்சிக்கவே கூடாது என்பது வன்முறையே!!

தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட தமிழ் திரையுலகை சார்ந்தவர்கள் முன்வர வேண்டும்.
நாத்திகர்கள் கிராமம் கிராமமாக இந்தப் படத்தை போட்டுக் காட்டி தங்கள் பிரச்சாரத்தைத் தொடரலாம்.

"தமிழில் எப்போது ரீமேக் செய்வார்கள்?" என்பதே படம் முடிந்து வெளிவந்த பலரின் கேள்வியாக இருந்தது.
பொறுத்திருந்து பார்ப்போம்.

1 கருத்து:

  1. //விமர்சிக்கவே கூடாது என்பது வன்முறையே!!//

    Correct. This is the stand of most religions and stupidity starts here.

    பதிலளிநீக்கு