திங்கள், 26 அக்டோபர், 2015

செயல்படாத பிரதமரும், செய்யப்படும் விளம்பரமும்


வெளிநாடுகளில் நிலநடுக்கம் வந்தால், வெள்ளப் பெருக்கு வந்தால், தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றால் அடுத்த சில நிமிடங்களில் இந்தியப் பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு போடுகிறார். கிரிக்கெட் போட்டி, பக்கத்துக்கு நாட்டு தேர்தல் என அனைத்துக்கும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் போடுகிறார். 
 
அதன் மூலம் தன்னை ஒரு செயல்படும் பிரதமராகக்(Active PM) காட்டிக் கொள்கிறார். மேல்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் இதனைக் கைதட்டி வரவேற்கிறார்கள். ஆஹோ ஓஹோ என்று புகழ்கிறார்கள். நாட்டைக் காக்க ரட்சகர் வந்துவிட்டார் என நம்புகிறார்கள்.

ஆனால் ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்பட்டால், உபியில் மாட்டுக்கறி சாப்பிட்டவர் அடித்துக் கொல்லப்பட்டால்,
அரியானாவில் தலித் குழந்தைகள் உயிரோடு கொளுத்தப்பட்டால், நாடு முழுக்க மதவாத பாசிஸ்டுகள் மதவெறிப் பேச்சுக்களை பேசும்போதிலும் பிரதமர் மோடி டிவிட்டரில் கூட வாயைத் திறப்பதில்லை.
மேல்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் "இதுக்கெல்லாம் பிரதமர் பேச வேண்டுமா?' என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

இதன்மூலம் ஒரு போலியான தேசபக்தி வளர்த்தெடுக்கப்படுகிறது. அதில் கூட வருத்தம் இல்லை.
ஆனால் மனிதம் சாகடிக்கப்படுகிறது.
"எவன் எங்கு செத்தால் நமக்கு என்ன? நாம 'டிஜிட்டல் இந்தியா' படத்தை ப்ரோபைல் படமா வச்சிட்டு அடுத்த வேலையைப் பார்த்துட்டு போவோம்" என்கிற மோசமான மனநிலை உருவாக்கப்படுகிறது. அதில்தான் வருத்தம்.

புதன், 14 அக்டோபர், 2015

ரவீந்திரநாத் தாகூரும் நம்மூரு எழுத்தாளர்களும்

1915-இல் ரவீந்திரநாத் தாகூருக்கு பிரிட்டன் அரசால் "நைட்வுட்"(Knightwood) என்னும் பட்டம்/விருது வழக்கப்படுகிறது.

அதே பிரிட்டன் ஏகாதிபத்தியம் 1919-இல் ஜாலியன்வாலாபாக்கில் இந்தியர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது.
உடனே தனக்கு அளிக்கப்பட்ட விருதை பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் மூஞ்சியில் வீசி எறிந்தார் ரவீந்திரநாத் தாகூர்.

"விருதை திரும்ப வழங்குவது என்பது அரசுக்கு எதிரான ஒரு போராட்ட வடிவம்" என்பது இலக்கியத்துறையில் நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூருக்கு தெரிந்திருந்தது.

ஆனால் இங்கே உள்ள சில லோக்கல் எழுத்தாளர்களுக்குப் புரியாமல் போனது எந்த வியப்புமில்லை. நியாயத்தின் பக்கம் நின்றுப் பேசாமல் பொதுப்புத்தியைப் குளிர வைக்கப் பேசும் இவர்களிடம் வேறு என்னத்த எதிர்ப்பார்க்க முடியும்??

இந்தப் போராட்ட வடிவத்தைக் கேலி செய்யும் ஜெயமோகன்களும், அபிலாஷ்களும் வேறு போராட்ட வடிவங்களை சொல்லித் தந்து இந்த சமூகத்திற்கு வழிகாட்டுவார்களாக!!!