சனி, 12 நவம்பர், 2016

தேசபக்தி என்னும் பெயரால் திடீரென சாமி வந்து ஆடுபவர்களுக்காக....

"கறுப்பு பணம் ஒழிந்துவிட்டது. புதிய இந்தியா பிறந்து விட்டது. மோடி சாதித்துவிட்டார்" என  நம்பிக் கொண்டிருக்கும் நண்பர்களே!

முதலில் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் மதிப்பு சுமார் 16 லட்சம் கோடி. அதில் 500 மற்றும் 1000 ரூபாயில் இருக்கும் பணம் சுமார் 13 லட்சம் கோடி.
அதில் கறுப்பு பணம் 10 சதவீதம் என்று வைத்துக் கொள்வோம். அதாவது சுமார் 1.3 லட்சம் கோடி.

அதிலும் சிலர் முன்கூட்டியே கறுப்பை வெள்ளையாக மாற்றியிருப்பார்கள். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக RBI தகவல் உள்ளது. RBI இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

ஆகவே மீதம் உள்ள கறுப்பு பணம் சில ஆயிரம் கோடிகள் மட்டுமே. அரசின் இந்த அறிவிப்புக்குப் பின்னர் இதில் சில கோடிகள் வெள்ளையாக மாறியிருக்கும். எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் அழிக்கப்பட்ட கறுப்பு பணம் சில கோடிகள் மட்டுமே.

ஆனால் வெளிநாடுகளில் இந்திய கறுப்பு பண முதலைகள் பதுக்கியுள்ள பணம் 100லட்சம் கோடிக்கும் அதிகம் இருக்கும். நம்மூரு நத்தம் விஸ்வநாதனே 1000 கோடியை எளிதில் குவிக்க முடிகிறது. இந்த மாதிரி நத்தம் விஸ்வநாதன்கள் நாடு முழுக்க உண்டு. அரசியல், சினிமா, தொழில் என பல வழிகளில் சேர்த்து பதுக்கிய பணம் வெளிநாட்டு வங்கிகளில் பத்திரமாக உள்ளது.

கறுப்பு பணம் ஒழிப்பில் அரசுக்கு அக்கறை இருந்தால் இந்த 100 லட்சம் கோடியைப் பறிமுதல் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து சில கோடி பணத்தை மட்டும் அழித்துவிட்டு தன்னை கறுப்பு பண அழிப்பாளராகக் காட்டிக் கொள்வது மக்களை ஏமாற்றும் செயல்.

"இல்லை, வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க மோடி ஏதேனும் திட்டம் வைத்திருப்பார்" என நம்பினால் நீங்கள் அப்பாவியே!  வெளிநாட்டு வங்கி ஒன்று தங்களிடம் வங்கிக்கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை அரசிடம் ஒப்படைத்தது. அந்தப் பெயர்களை இன்றுவரை வெளியிடவில்லை மோடி அரசு. பெயரையே வெளியிடாதவர்கள் எப்படி அவர்களிடமிருந்து பணத்தை மீட்பார்கள்?

அது மட்டுமல்ல, இந்திய வங்கிகளில் 500 கோடிக்கும் அதிகமாக வாராக்கடன் வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியலை அரசிடம் கேட்டது உச்ச நீதிமன்றம். அந்தப் பட்டியலைக் கொடுக்க மறுத்ததும் மோடி அரசுதான்.

"மோடி என்ன செய்தாலும் குத்தம் சொல்வதுதான் உங்கள் வேலையா?" என நீங்கள் எதிர்கேள்வி கேட்கக் கூடும். நிச்சயம் அப்படி இல்லை. தேர்தலில் வாக்களித்தப்படி விலைவாசி குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, 15லட்சம் டெபாசிட் ஆகியவற்றை செய்துகாட்டும் பட்சத்தில் நிச்சயம் மோடி மீது விமர்சனங்கள் வராது.

ஆனால் இதையெல்லாம் ஒருகாலமும்  மோடி அரசால் செய்ய முடியாது. ஏனெனில் இங்கு உண்மையில் ஆட்சி செலுத்துவது கார்பரேட் முதலாளிகள்தான்.

"அது எப்படி? நாம மோடிக்குதானே ஓட்டு போட்டோம்? அவர்தானே பிரதமர்" என கேட்கும் அப்பாவியா நீங்கள்? உங்களுக்கு இரு உதாரணங்கள் சொல்கிறேன்.

1. மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் கம்பெனியிடம் கொடுத்தது மோடி அரசு. அதற்கு ஊதியமாக வசூலிக்கும் பணத்தில் கிட்டத்தட்ட 40% பணம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக மாணவர்களின் கல்விக்கடனில் 40 சதவீதத்தை தள்ளுபடி செய்திருக்கலாமே?. செய்யமாட்டார்கள். ஏனெனில் மாணவர்களை விட ரிலையன்ஸ் நலன்தான் அரசுக்கு முக்கியம்.

2.  நம்ம விவசாயிகள் ஆயிரக்கணக்கில் கடன் கேட்டால் வீட்டுப்பத்திரம், நிலப் பத்திரம் என அனைத்தையும் எடுத்து வரச் சொல்கிறது வங்கி. ஆனால் ஆஸ்திரேலியாவில் திவால் ஆன நிலக்கரி சுரங்கத்தை வாங்க அதானி நிறுவனத்திற்கு 600 கோடி பணத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கிறது SBI வங்கி. ஏனெனில் விவசாயிகளின் நலனை விட அதானியின் நலன் முக்கியம்.

"எல்லாம் சரி, இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு?"
என்று கேள்வி எழுப்புகிறீர்களா?
அதற்கான பதில்:
நீங்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம்தான். மத்தவன் சொல்வதை கேட்காதீர். இந்த சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை சமூகத்தின் அடித்தட்டிலிருந்து பார்க்கப் பழகுங்கள். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டால் பயனடையப் போவது யார் என ஆராயுங்கள்.
அதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் இல்லை என்றால் அமைதியாக வேடிக்கை பார்த்து கடந்து செல்லுங்கள். தேசபக்தி, நாட்டுநலன் என்னும் பெயரால் திடீரென சாமி வந்து ஆடாதீர்கள். உங்கள் ஆட்டத்தால் பாதிக்கப்படுவது இந்த சமூகத்தின் அடித்தட்டு மக்கள்தான்.

- குருநாதன்

புதன், 5 அக்டோபர், 2016

நிசப்தம் மணிகண்டன் அவர்களுக்கு மறுப்பு/விவாத கட்டுரை

அன்புள்ள மணிகண்டன்  அவர்களுக்கு வணக்கம்.
சில நாட்களாக  சமூக வலைத்தளங்களில் இயங்குவதை  நிறுத்திக் கொண்டாலும் உங்களின் நிசப்தம் தளத்தை தொடர்ந்து  படித்து வருகிறேன். உங்களின் யதார்த்த எழுத்து நடைதான் காரணம்.

தனித் தமிழ்நாடு கோரிக்கையை  விமர்சித்து  நீங்கள் கட்டுரை எழுதும் அளவுக்கு தமிழ்தேசியத் தாகமும் குரலும்  அதிகரித்து விட்டது. ஒரு தமிழ்த்தேசியவாதியாக மகிழ்ச்சி அடைகிறேன்.
கட்டுரையைப் படிக்க: http://www.nisaptham.com/2016/10/blog-post_76.htmlஉங்களின் கட்டுரைக்கு மறுப்பு எழுத ஆர்வம் உள்ளது. மறுப்பு என்பதை விட விவாதம் என்றே எடுத்துக் கொள்ளலாம். 
விவாதம் என்பதற்காக  தாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.  தமிழ்த்தேசியவாதிகளின் குரலை சற்று கேட்டுப் பாருங்கள் என்றே சொல்ல விழைகிறேன்.

//எந்தவொரு பிரச்சினையிலும் தேசத்தின் மீதான வன்மத்தைக் கக்குவதைப் பார்க்கும் போது எரிச்சலாக இருக்கிறது//
தேசத்தின் பெயரால் அயோக்கியத்தனம் நடைபெறும்போது தேசத்தின் மீது விமர்சனம் எழுப்பப்படுவது இயல்புதான். தேசம் என்பதை புனிதமாகக் காட்டி வழிபாடு செய்ய வேண்டாம். ஏனெனில் இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று எதுவுமில்லை.

//‘இதுதான் தீர்வு’ என்று முதலிலேயே சொல்லிவிட்டு விவாதத்தைத் தொடங்கக் கூடாது. //
அப்படி யாரும் எடுத்த எடுப்பிலேயே தனிநாடு கோரிக்கையோடு கிளம்பவில்லை. 
உதாரணத்திற்கு  தோழர் மணியரசன், தோழர் தியாகு, தோழர் பழ.நெடுமாறன்  போன்ற தமிழ்தேசியவாதிகளின் அரசியல் பயணத்தை திருப்பி பாருங்கள். இந்திய நீரோட்டத்தின் பாதையிலிருந்து விலகி தமிழ்த்தேசியம் நோக்கி வந்திருக்கிறார்கள்.
அண்ணன் சுப.உதயகுமாரால் ஆம் ஆத்மி கட்சியில் நீடிக்க முடியவில்லையே. ஏன் என்று அவரைக் கேட்டுப் பாருங்கள்.
"நோய் நாடி நோய் முதல்நாடி" என்கிற குறள் இங்கு நினைவுக்கு வருகிறது. 
இந்திய தேசியம் நம்மைப் பிடித்த நோயாகவும், தமிழக விடுதலையை அதற்கு நன்மருந்து எனவும் சொல்கிறோம்.

//தமிழகத்தை தனியாக்கி தமிழனை பிரதமராக நியமித்துவிட்டால் பாலாறும் தேனாறும் ஓடுமா என்ன? அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வாய்ப்பே இல்லை.//
உலகம் முழுக்க பல நாடுகள் ஏன் உருவாகின என்பதை ஆராய கேட்டுக் கொள்கிறேன். பாலாறும் தேனாறும் ஓடும் என சொல்லவில்லை. ஆனால் தற்போது இருக்கும் நிலையை விட மிகவும் நல்ல முறையில் தமிழ்நாடு அமையும்.
தமிழ்நாட்டுக்கு என்று தனியாக பொருளாதாரக் கொள்கை, மருத்துவக் கொள்கை, கல்விக் கொள்கை என பலவற்றை உருவாக்க முடியும். அதிகாரத்தைப் பரவலாக்க முடியும். 
மக்களின் நிர்ப்பந்தமே வெற்றி பேரும். சுருங்கச் சொன்னால் மக்களே ஆள்வார்கள். எட்டு கோடி தமிழர்களால் இந்தியப் பேரினவாதத்தை எதிர்த்து நிற்க முடியாது. ஆனால் தமிழ்தேசியத் தலைமையை எதிர்த்து நிற்க முடியும். நிர்ப்பந்திக்க முடியும்.

//தமிழனுக்கும் மலையாளத்தானுக்குமான பிரச்சினைக்கு பதில் வன்னியனுக்கும் பறையனுக்குமான பிரச்சினையாக இருக்கும்.//
தனித் தமிழ்நாடு கோரிக்கையை உயர்த்திப் பிடிக்கும்போது பலரும் சாதியச் சிக்கலை முன்னிறுத்துவது இயல்புதான். 
ஆனால் நான் பழகியவரையில் பல தமிழ்த்தேசிய நண்பர்களும் சாதி மறுப்பு கொள்கை கொண்டவர்கள். ஆகவே தமிழ்த்தேசிய உணர்வோடு சாதிமறுப்பு உணர்வும் சேர்ந்தே வருகிறது.
"நாம் தமிழர்" என்கிற உணர்வு மிகவும் வலுப்பெறும்போது சாதி பின்னுக்குத் தள்ளப்பட்டு. ஒழிக்கப்படும்.
சாதி ஒழிப்பை முன்னிறுத்தி தமிழ்தேசியம் பேசினால் மணிகண்டன் ஏற்றுக் கொள்வாரா?
இந்திய அரசியல் சட்டம் சாதியை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறதே! அதனை ஏற்றுக் கொண்டு சாதிஒழிப்பு பற்றி பேசுவது முரண்.

//நம்மிடமே சிக்கல்கள் நிறைந்து கிடக்கின்றன. சாதி, இனம், குலம், கூட்டம் என்று கிணற்றுக்குள் சிக்கிய தவளைகளைப் போல தலையை மேலே எடுக்கிறவனையெல்லாம் இழுத்து இழுத்துக் கீழே எறிந்துவிட்டு இந்த நாடுதான் தமிழனை மேலே வர அனுமதிப்பதில்லை என்று பேசுவதைப் போன்ற அபத்த நகைச்சுவை வேறு இருக்க முடியாது. //
இந்திய தேசியத்தைக் காக்கும் தீவிரம் தவிர வேறு எதுவும் இந்த வார்த்தைகளில் தெரியவில்லை. மக்களைக் குறை சொல்லி தப்பிக்கும் தந்திரமாக உள்ளது.
எட்டு கோடி மக்களின் குரலான தமிழக சட்டசபை தீர்மானங்கள் டெல்லி குப்பைத்தொட்டிக்கு போகிறதே! அதனை நிறுத்துவது எப்படி என்பதை மணிகண்டன் விளக்கினால் நலம்.

//இந்திய தேசியம் பேசுகிறவனையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஸ்லீப்பர் செல் என்றும், இந்துத்துவவாதி என்றும் ஓரங்கட்டுகிறார்கள். //
இது தவறான அணுகுமுறைதான். சிலர் ஆர்வக்கோளாறில் செய்வதை நான் கவனித்திருக்கிறேன். இது உணர்ச்சிவேகத்தின் வெளிப்பாடுதான்.
தவிர்க்கப்பட வேண்டியது.

//முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். நமக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது குரல் எழுப்பலாம். போராடி பெற்றுக் கொள்ளலாம். //
எப்படி போராடுவது என்பதை விளக்கினால் இன்னும் நலம். 
தமிழர்களாக ஒன்றுபட்டுத்தான் போராடனும். அப்படி ஒன்றுபடுவதையே  இனவாதம், பிரிவினைவாதம் என்கிறீர்களே!
ஒன்றுபட்டுதான் நிற்கிறோம். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் நிருபராதிகளை விடுவிக்க முடியவில்லையே!
காவிரி உரிமையை மீட்க முடியவில்லையே! பாலாற்றில் அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த முடியவில்லையே! மக்கள்விரோத பாராளுமன்ற தீர்மானங்களை தடுத்து நிறுத்த முடியவில்லையே!
என்ன செய்தால் தமிழர்களின் உரிமைகளை மீட்க முடியும் என்பதையும் தாங்கள் சொல்லியாக வேண்டும். அப்படி இல்லாமல் தனித் தமிழ்நாடு கோரிக்கையை அரைவேக்காட்டுத்தனம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
காஷ்மீரிகள் மீதான இனப்படுகொலைக்கு என்ன நீதி? ஆக்கிரமிப்பு ராணுவத்தை எப்படி அகற்றுவது? விடுதலை ஒன்றுதான் தீர்வு.

//இந்த நாட்டில் ஆயிரம் குறைகள் உண்டு. அத்தனை குறைகளோடும் அத்தனை சிக்கல்களோடும் இந்த தேசத்தை மனதார நேசிக்கிறேன்.//
சிறுவயதில் இருந்து இந்திய தேசிய உணர்வு ஊட்டப்படுவதால்தான் இப்படி சொல்ல முடிகிறது. நானும் அதனை கடந்து வந்தவன்தான்.
நான் தமிழ்த்தேசியவாதியாக மாறக் காரணம் இந்தியப் பேரினவாதம் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகள்தான். 
"பிரச்சினைகள் ஓர் ஓரமாக இருக்கட்டும், நாம் தேசிய கீதத்தை ரசிப்போம், தேசியக் கோடிக்கு வணக்கம் செலுத்துவோம்" என்பதே ஒருவகையில் மக்கள் விரோத நிலைப்பாடுதான்.
"தமிழனைக் கொல்லும் சிங்கள ராணுவம் மீது எப்போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்யப் போவீர்கள்?" என இந்தியப் பேரரசை நோக்கி கேள்வி கேட்பதில் தவறு ஏதும் இல்லையே!

"சரி, தனித் தமிழ்நாடு தவிர வேறு தீர்வு இல்லையா?" என்று நீங்கள் கேட்கக் கூடும்.
கண்டிப்பாக உண்டு. அதனையும் விவாதிக்கலாம்.
அதிகாரப் பரவலாக்கல் என்கிற தீர்வு உண்டு. மத்தியப் பட்டியலில் சில துறைகளை ஒதுக்கிவிட்டு, முழு அதிகாரத்தையும் மாநில அரசுகளுக்கு ஒதுக்குவதுதான்.
பொருளாதாரக் கொள்கை, மருத்துவக் கொள்கை, கல்விக் கொள்கை, வேளாண் கொள்கை  என அனைத்தையும் மாநில அரசுகள் தீர்மானிக்க வேண்டும்.
அப்படி செய்தால் இந்திய ஒன்றியம் தாக்குப் பிடிக்க வாய்ப்புகள் உண்டு.
மணிகண்டன் போன்றவர்கள் அதனை வழிமொழிவார்களா?

அதெல்லாம் ஒரு போதும் சாத்தியம் ஆகாது, ஆகவே விடுதலை ஒன்றே தீர்வு என்கிற தமிழ்த்தேசிய அரசியல் என்கிற ஒன்றை என்னைப் போன்ற சிலர் முன்வைக்கிறோம்.
அதனை விவாதிக்க வேண்டுமேயொழிய, அரைவேக்காட்டுத்தனம், முரட்டுத்தனம் என ஒதுக்கக் கூடாது.
தொடர்ந்து விவாதிப்போம். நன்றி 

பின்குறிப்பு: பாகிஸ்தானிலிருந்து பலோசிஸ்தான் விடுதலை அடைய விரும்புகிறது. இந்திய அரசும் மறைமுக ஆதரவு கொடுக்க ஆரம்பித்துள்ளது என்பது தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

வியாழன், 3 மார்ச், 2016

வெறுப்பரசியலின் களம் தமிழ்நாடு


இந்து மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் அண்ணன் சீமானை சந்தித்துள்ளார்கள்.. உடனே நம்ம ஆட்கள் அந்தப் போட்டோவை தூக்கிட்டு வந்துவிட்டார்கள். இந்துத்வ கைக்கூலி, ஆர்.எஸ்.எஸ் அடியாள் என பல கதைகளை எழுதுகிறார்கள்.

முன்பு மோடியை திருமா சந்தித்த போதும், துக்ளக் விழாவில் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு பேசியபோதும் இப்படித்தான் சேறு வாரி இறைத்தார்கள்.

மாற்றுக்கருத்து உடையவர்களை மனிதர்களாக கூட மதிக்கக் கூடாது என்கிற அளவுக்கு வளர்ந்துள்ள பாசிசத்தின் வெளிப்பாடுதான் இது. காவி பாசிசத்திற்கு சற்றும் குறைவில்லாதது இந்தப் பாசிசம்.

ஆனால் இது போன்ற ஆட்கள் சில நேரம் அதிக நாகரீகத்துடன் பதிவும் போடுவார்கள். அத்வானியும் சோனியாவும் அருகருகே இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு 'இந்த மாதிரி நாகரீக அரசியல் தமிழகத்தில் வராதா!!' என் உச்சுக்கொட்டுவார்கள்.

ரொம்ப முரணான இப்படியான ஆட்களை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை..

காவி அரசியலில் மூழ்கியுள்ள அர்ஜுன் சம்பத் வகையறாக்களை மீட்பது முற்போக்கா??
அல்லது மேலும் மேலும் காவி சகதிக்குள் அவர்களை அழுத்துவது முற்போக்கா?? என்பதை உங்கள் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்.

புதன், 2 மார்ச், 2016

பெரியார் பின்னால் ஒளிந்துகொள்ளும் மார்க்சிஸ்டுகளுக்கு..


இந்திய விடுதலை நாளைக் கருப்புதினமாக அறிவித்த பெரியாரின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இந்திய வரைபட எரிப்பு, இந்திய அரசியலமைப்பு எரிப்பு உள்ளிட்ட செயல்களை ஏற்றுக் கொள்கிறீர்களா?

'தமிழ்நாடு தமிழருக்கே' என்கிற முழக்கத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?
மேலே சொன்ன அனைத்தும் சாதி ஒழிப்பு மற்றும் பிராமண எதிர்ப்பின் நீட்சியாக பெரியார் செய்த செயல்கள்.
பிராமண எதிர்ப்பில் தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

கட்சியின் இந்தியத் தலைமை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெரியாரையும் திராவிடத்தையும் எதிர்க்கிறதே! அதில் தங்கள் நிலைப்பாடு என்ன?

தாங்களும், பெரியாரும் எந்தப் புள்ளியில் ஒன்றுபடுகிறீர்கள்?

தயவு செய்து விளக்குங்கள். சும்மா தற்காப்புக்காக பெரியார் பின்னாடி ஒளியாதீர்.
உங்களைப் பற்றி ஏற்கனவே பெரியார் நிறையவே சொல்லிவிட்டு போயிருக்கிறார்.

சனி, 27 பிப்ரவரி, 2016

"நமக்கு எதுக்கு வம்பு" - நூல் விமர்சனம்


கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் தனது கார்டூன்களைப் பற்றியும், அவற்றின் மீது வந்த விமர்சனங்களையும் தனது நூலில் விவரித்து எழுதியுள்ளார் என்றுதான் நான் எண்ணினேன். ஆனால் பேஸ்புக்கில் பாலா அவர்கள் எழுதிய கட்டுரை( அவரது மொழியில் கிறுக்கல்)களின் தொகுப்புதான் இந்நூல்.
சிறந்த கிறுக்கல்களைத் தொகுத்து ஒரே இடத்தில் வைத்து படிப்பதும் தனி இன்பம்தான்.பெரும்பாலான கட்டுரைகள் அவரது அனுபவங்கள் மற்றும் எளிய மக்களின் வாழ்வியல் தொடர்பானவை. அரசியல் கட்டுரைகள் பலவும் சாதி எதிர்ப்பு மற்றும் ஹிந்துத்வ அரசியல் எதிர்ப்பு தொடர்பானவை. திராவிட ஓட்டரசியல்வாதிகளையும் அம்பலப்படுத்துகிறார். காவல்துறை அதிகாரி அம்பேத்கர் பற்றி ஒரு சிறப்பான கட்டுரை உள்ளது.

பாலாவின் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இந்நூலில் புதிதாய் எதுவும் இல்லை. அதே நேரத்தில் மீண்டும் ஒரு மறுவாசிப்பு செய்ய உதவும். மிகவும் சிறிய நூல்தான்.
சோழிங்கநல்லூரில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்து பயணத்திற்குள் படித்து முடித்து விடலாம்..

பாலாவின் கட்டுரைகளைப் புதிதாய் படிப்பவர்களுக்கு இந்நூல் அதிகம் உதவும். பாலாவுக்கு புதிய ரசிகர்கள் இந்நூல் மூலம் கிடைப்பார்கள் என உறுதியாகச் சொல்ல முடியும்.

பாலாவினால் பேஸ்புக்கில் தடை செய்யப்பட்ட நண்பர்கள் அதிகம். அவர்களுக்கும் இந்நூல் பெரும்பாலும் உதவும்.   அவரின் ஏதோ ஒரு பதிவுக்காக அல்லது கார்டூனுக்காக அவரிடம் மல்லு கட்டியிருப்பீர்கள். அவரைத் தனது சாதி, மத, கட்சியின் எதிரியாக சித்தரித்து இருப்பீர்கள். இந்நூலில் அவரது சிறந்த பதிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில இருப்பதால் பாலாவின் அரசியல் நிலைப்பாடு என்னவென்று படித்து அறிந்துகொள்ள முடியும்.

கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் 'நடுநிலைவாதி' என்று நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். அவர் ஒருபக்க சார்பு உடையவர். ஆம், எளிய மக்களின் பக்கமும், ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கமும் நின்று பேசுபவர். அவரின் கார்டூன்களும், எழுத்துக்களும் எளிய மக்களுக்கானவை.

பின் குறிப்பு: கார்டூன்களை சிறிய அளவில் அச்சடித்துள்ளது நன்றாக இல்லை. அரை பக்க அளவிற்கு பெரிதாக அச்சடித்திருக்கலாம். மேலும் அதிக கார்டூன்களைப் பயன்படுத்தியிருக்கலாம். அதுதான் புத்தகத்தின் ஒரே குறை.
சர்ச்சை கார்டூன்கள் பற்றியும் அதனைக் கடந்து வந்த விதம் பற்றியும் எழுதினால் இன்னும் நல்லா இருந்திருக்கும். அடுத்த நூலில் எதிர்பார்க்கிறோம்.

பிராமணரா? பார்ப்பனரா? ஆரியரா?


'பார்ப்பனர் என்பது தங்களின் சாதியைக் குறிக்கும் பெயர். பிராமணர்களைத் திட்ட ஏன் அந்தப் பெயரைப் பயன்படுத்துகிறீர்கள்?' என அடிக்கடி ஒரு கேள்வியை முன்வைக்கிறார் நண்பர் கௌதம்.

பார்ப்பனர் என்பதன் பெயர்க்காரணம் என்ன? ஏன் அப்பெயர் வந்தது? யார் முதலில் பயன்படுத்தியது? என சிந்திக்க வேண்டியுள்ளது.

ஒருமுறை சுபவீ அவர்கள் தன் பேட்டியில் 'பார்ப்பனர் என்பது இழிவான பெயர் அல்ல.. ஜாதகம் பார்க்கிறான், ஜோதிடம் பார்க்கிறான். அதனால் பார்ப்பான் என பெயர் வந்தது' என்றார். நானும் அதனை நம்பிவிட்டேன்.
ஆனால் ஜாதகம் மற்றும் ஜோதிடம் பார்ப்பதை பிராமணர் அல்லாதவர்களும் செய்கிறார்களே! அவர்களையும் 'பார்ப்பான்' என்று அழைக்கவேண்டுமா?

'பிராமணர் என்றால் உயர்ந்தவன் என்று பொருள். அதனால் சுயமரியாதை கருதி அப்பெயரை உச்சரிக்கக் கூடாது' என்பதுதான் என் நிலைப்பாடு.

பிராமணர் என்னும் பெயரால் அவாள் ஆதிக்கம் செலுத்தும்போது 'பிராமண ஆதிக்கத்தை எதிர்ப்போம்' என்றுதானே நாம் எதிர்க்குரல் எழுப்ப வேண்டும்? அல்லது 'ஆரிய ஆதிக்கம்' என்று கூட சொல்லலாமே? ஆரியருக்கு எதிர்ச்சொல் திராவிடர் என்று சொல்பவர்கள் ஆரியர்(அ)பிராமணர் என்னும் வார்த்தையைப் பயன்படுத்தாமல் 'பார்ப்பனர்' என்னும் வாரத்தையை ஏன் பயன்படுத்த வேண்டும்?

"அவன் நம்மைத் திட்டல, வேறு யாரோ பார்ப்பானாம். அவனைத்தான் திட்டுகிறான்" என்பதுதானே பிராமணர்களின் மனநிலையாக இருக்கக் கூடும்.
இதனால் பிராமணர் என்னும் பெயர் புனிதப்படுத்தப் பட்டுள்ளதாக அறிகிறேன்.

ஒரே குழப்பமாக இருக்கு.
இதுகுறித்து நன்கு விவரம் அறிந்த திராவிட இயக்க நண்பர்கள் பதில் அறிந்தால் சொல்லவும்.

சனி, 13 பிப்ரவரி, 2016

இனப்படுகொலை கூட்டணிக்கு வக்காலத்து வாங்கும் இஸ்லாமிய நண்பர்களுக்காக

நாடாளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்க்க குஜராத் முஸ்லிம் படுகொலையையும், பாபர் மசூதி இடிப்பையும் அதிகம் பேசினோம்.
இந்த சம்பவங்கள் மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டு மக்களிடம் ஓரளவு பலனும் கிடைத்தது.

இந்த தேர்தலிலும், தேர்தலுக்கும் பின்னரும் "பாஜக எதிர்ப்பு" என்று வருகையில் அந்த சம்பங்களை பேசித்தான் ஆக வேண்டும்.

"குஜராத்தையும் பாபர் மசூதியையும் இங்கே தமிழ்நாட்டில் ஏன் பேசுறீங்க?" என ஹிந்துத்வ சிந்தனை உள்ளவர்களும், அரசியல் பார்வை இல்லாதவர்களும் கேட்பதுண்டு..

இப்போது அதே வரிசையில் திமுக-காங்கிரஸ் இனப்படுகொலை கூட்டணிக்கு வக்காலத்து வாங்கும் இஸ்லாமிய நண்பர்கள் வந்து நிற்கிறார்கள்.
"ஈழப் படுகொலையை இங்கே ஏன் பேசுறீங்க?" என கேள்வி கேட்கிறார்கள்..


இங்கே இருந்துதான் ஆயுதம் கொடுத்தார்கள். இங்கே அதிகாரத்தில் இருந்தவர்கள்தான் தமிழகத்தில் அடக்குமுறை ஏவினார்கள்.
இங்கே பேசாமல் வேற எங்கே போயி பேசுறது??

"தனது மகளே திருடினாலும் கையை வெட்டுவேன்" என குர்ஆனில் யாரோ சொன்னதாக அடிக்கடி பதிவுகள் போட்டால் மட்டும் போதாது மக்கா..
அதன்படி நடக்கவும் பழகனும்..

வெறும் ஓட்டு அரசியலுக்காக, இனப்படுகொலை செய்த அயோக்கியர்களுக்கு துணை போவோம் என்றுநீங்கள் சொல்வது சரியென்றால் ஹிந்துத்வ அரசியல் சிந்தனை கொண்டவர்களின் செயல்பாடுகளும் சரியென்று ஆகிவிடுமே!!

திங்கள், 1 பிப்ரவரி, 2016

சுபவீ-க்கு சில கேள்விகள்

அருந்ததியர்களில் இதுவரை சட்டமன்ற வேட்பாளர்களாக எத்தனை பேரை நிறுத்தியுள்ளீர்கள்? - என்று தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை நோக்கி சுபவீ  கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரிய கட்சியான திமுகவை நோக்கி கேட்க வேண்டிய கேள்வியை பத்து சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் சிறிய கட்சியான விசிக நோக்கி எழுப்பியிருக்கிறார் சுபவீ.

இப்ப நாமும் சுபவீயிடம் சில கேள்விகள்  கேட்போம்.

1. திமுக கூட்டணியில் இருந்த எத்தனை பொது தொகுதிகளை விசிகவுக்கு திமுக கொடுத்தது?

2. அருந்ததியர் தமிழகத்தில் எங்கு ஒடுக்கப்பட்டாலும் அதனை எதிர்த்து சிறுத்தைகள் களத்தில் நிற்கிறார்கள்.. திமுக என்ன செய்து கொண்டிருந்தது??

3. எத்தனை அருந்ததியர்கள் திமுகவில் மாவட்ட செயலாளர்களாக இருக்கிறார்கள் ?

4. எத்தனை அருந்ததியர்களுக்கு இதுவரை திமுகவில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது??

இந்த கேள்விகளுக்கு சுபவீ அவர்கள் பதில் வேண்டும்...

விசிக கட்சி - அருந்ததியர் இடையே பகை மூட்டும் விதத்தில் சுபவீ செயல்படுகிறார். பிரித்தாளும் போக்கை ஆரியர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறார் போல சுபவீ..

வெள்ளி, 29 ஜனவரி, 2016

இந்தியப் பெருச்சாளிகளும், தமிழக அடிமைகளும்

கல்வி' என்பது இந்திய  அரசியல் சட்டத்தின் பொதுப் பட்டியலில் உள்ளது. அதாவது கிட்டத்தட்ட மத்திய அரசு கையில் உள்ளது. கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது/மறுப்பது என எல்லாம் மத்திய அரசு கையில்தான் உள்ளது..

அப்படி இருக்கையில் விழுப்புரம் யோகா கல்லூரியில் மூன்று மாணவிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது என சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதிரானி. மாநில அரசைக் கைகாட்டி தப்ப முயற்சிக்கிறார்.

மாநில அரசுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்றால் இந்திய அரசு தயாரித்து வரும் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் திணிக்க மாட்டோம் என ஸ்மிருதிரானி சொல்வாரா? இங்குள்ள சி.பி.எஸ்.இ (கல்வி)வியாபார நிறுவனங்களை மாநில அரசு தடை செய்தால் ஏற்றுக் கொள்வாரா?
மாநில அரசின் எந்த நடவடிக்கையிலும் இனி மத்திய அரசு தலையிடாது என்று சொல்வாரா?


"இந்தியா முழுக்க மது உள்ளது, ஆகவே தமிழகத்தில் மட்டும் மதுவை தடை செய்ய முடியாது' என நம்மூர் அமைச்சர் அடிமைகள் சொல்வதுண்டு.
"இந்தியா முழுக்க 50% இட ஒதுக்கீடுதான் அனுமதி. தமிழகத்தில் மட்டும் 69% இட ஒதுக்கீடு எதற்கு?' என உச்சநீதிமன்றம் கேட்கிறது.

இப்படியாக தமிழக அடிமைகளைக் காட்டி இந்திய பெருச்சாளிகள் தப்புவதும், இந்தியப் பெருச்சாளிகளை கைகட்டி தமிழக அடிமைகள் தப்பிக்கும் போக்கும்தான் நடைபெறுகிறது..

இந்தியாவில் இருந்து தமிழகம் விடுதலை பெறுவதே தீர்வு.

சொர்க்கம், நரகம், நியாயத் தீர்ப்பு பற்றி சில கேள்விகள்.

மரணத்திற்குப் பின்னர் மறுபிறப்பு, நியாயத் தீர்ப்பு, சொர்க்கம், நரகம் பல நிலைகள் இருப்பதாக அனைத்து மதங்களும் சொல்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் மதங்கள் இயங்குகின்றன.

கடவுள் எல்லோரையும் கேள்வி கேட்பார் என்கிறார்கள். இப்ப நம்ம டவுட்டுகள்..

1. ஒரு நபரிடம் சராசரியாக எத்தனை கேள்விகள் கேட்பார்? நடப்பது எல்லாம் கடவுள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார். அப்புறம் எதுக்கு இந்த கேள்விகள்?

2. மனிதர்கள் மட்டும்தான் கேள்விக்கு உட்படுத்தப்படுவார்களா? இல்லை தாவரங்கள், விலங்குகளும் உண்டா?

3. எப்படி பார்த்தாலும் ஒரு நாளைக்கு நூறு நபர்களுக்கு அதிகமாக கேள்வி கேட்க முடியாதே!! பின்னர் எப்படி உலகில் இறக்கும் அனைத்து மனிதர்களையும் கேள்வி கேட்க முடியும்?

4. நாம் கடவுளிடம் எந்த மொழியில் பேச வேண்டும்? ஒருவேளை நமது மொழியில்தான் பேச வேண்டும் என்றால் நமது மொழி கடவுளுக்கு எப்படி புரியும்? ஏனென்றால் மொழியை படைத்தவர்கள் நாமாச்சே!

5. இப்படி கேள்வி கேட்டு தீர்ப்பு சொல்வதையே தொழிலாகக் கொண்டிருந்தால் வேறு நடப்புகளை கடவுள் கவனிக்க மாட்டாரா?

6. கடைசியா ஒரு டவுட்டு. கடவுள் தவறாக தீர்ப்பு சொன்னால் நாம் மேல்முறையீடு செய்ய முடியுமா?

ஆறு கேள்விகளுக்கும் முறையாக பதில் இருந்தால் கமென்ட் கொடுங்கள்.

புதன், 27 ஜனவரி, 2016

மக்கள் நலக் கூட்டணி அடுத்து என்ன செய்ய வேண்டும்?

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திமுக-அதிமுக அல்லாத மூன்றாம் அணி வலுவுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் ஆகிய கட்சியினர் கூட்டணி அமைத்துள்ளார்கள்..

எப்படியேனும் கூட்டணியை உடைத்து விடலாம் என்பதில் திமுகவுக்கு அதிக ஆர்வம் இருந்தது.
இந்தக் கூட்டணியால் வாக்குகள் சிதறி தங்களுக்கு சாதகமாக அமையும் என அதிமுக எண்ணுகிறது..
பாமக, பாஜக போன்ற கட்சிகளும் தங்களின் விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள்..

ஒரு வழியாக "மக்கள் நலக் கூட்டணி" என்கிற பெயர் பெரும்பாலான மக்களிடம் சென்று அடைந்து விட்டது.
இனி அடுத்து  என்ன செய்ய வேண்டும்??

1. விஜயகாந்த் தங்கள் அணிக்கு வர வேண்டும் என அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்..

2. தேர்தலுக்கு முன்னரே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது சட்டத்திற்கு முரணானது. ஆனாலும் அனைத்து கட்சிகளும் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்துகிறார்கள்.
அவ்வகையில் அனைத்து தரப்பு மக்களாலும், குறிப்பாக இளைய தலைமுறையினால் அதிகம் ஈர்க்கப்பட்ட தோழர் நல்லக்கண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.

3. விரைவில் தொகுதி பங்கீட்டை முடிவு செய்து தங்களின் சின்னங்களை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.
ஏனென்றால் இன்னும் இரட்டை இலை, உதயசூரியன் தவிர வேறு சின்னங்களை அறியாத மக்கள் பலர் உள்ளனர்.

4. ஊடக பலமோ, பெரு முதலாளிகளின் பலமோ மக்கள் நலக் கூட்டணிக்கு கிடையாது.
அதனால் எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும் திமுக மற்றும் அதிமுகவை மிஞ்ச முடியாது. மதுரை மாநாட்டு செய்திகளையே இருட்டடிப்பு செய்து விட்டார்கள்..
அதனால் தொண்டர்களை வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்ய வலியுறுத்த வேண்டும்.. இணையதளப் பிரச்சாரம் மட்டுமே உதவாது.

5. அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்..
இல்லையேல் அதிமுகவின் பி டீம், திமுகவின் பி டீம் என்கிற தேவையற்ற விமர்சனங்கள் வரக் கூடும்...

அதிமுக மற்றும் திமுகவை மோதிப் பாருங்கள். வாழ்த்துகள்..
என்னதான் நடக்குன்னு ஒருகை பார்த்திடுவோம்.. :)

வெற்றியோ, தோல்வியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. அதிமுக மற்றும் திமுகவை அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தி நல்லதோர் அரசியலை முன்னெடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை அடுத்த தலைமுறையினருக்கு ஊட்டுங்கள்.

வெள்ளி, 8 ஜனவரி, 2016

பஞ்சாப் பதன்கோட் தாக்குதலின் பின்னணி இதுவாக இருக்குமோ??

நிகழ்வு 1: "காலிஸ்தான் தனிநாட்டுக்காக பொதுவாக்கெடுப்பு 2020 "(Khalistan referendum 2020) என்று சீக்கியர்கள் பிரகடனம். உள்ளூர், வெளிநாடு என ஆதரவு திரட்டல். refer: http://www.hindustantimes.com/punjab/referendum-2020-khalistan-divides-unites-sikhs-abroad/story-QBIfntRdW0zF7kVpw9XgmN.html

நிகழ்வு 2: இங்கிலாந்து, அமெரிக்கா என மோடி செல்லுமிடமெல்லாம் மோடி அரசின் இந்துத்வப் போக்கை எதிர்த்து சீக்கியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்,
http://singhstation.net/2015/09/sikhs-and-patels-protest-against-modi-at-un-headquarters/
https://www.sikh24.com/2015/09/28/shiromani-akali-dal-amritsar-stages-protest-against-modi-outside-uno-in-new-york/

நிகழ்வு 3: ஜூலை மாதம் பஞ்சாப் குர்டாஸ்பூரில் போலிஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல், https://en.wikipedia.org/wiki/2015_Gurdaspur_attack

நிகழ்வு 4: சீக்கிய அமைப்புகளை தடை செய்யுமாறு இங்கிலாந்து சென்ற போது டேவிட் கேமரூனிடம் மோடி கோரிக்கை, இது நடந்தது நவம்பரில்.  refer: http://www.thehindu.com/news/national/narendra-modi-to-raise-issue-of-radical-sikh-elements-with-david-cameron/article7834581.ece

நிகழ்வு 5: அதே நவம்பரில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் பஞ்சாபில் 'சற்பாத் கல்சா' என்னும் பெயரில் நடத்திய மாபெரும் மாநாடு. மாநாடு முழுக்க சீக்கிய போராளி பிந்த்ரன்வாலேவின் படங்கள் இடம்பெறுகின்றன. 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம் எழுப்பப்பட்டன. refer: http://khalsaforce.in/5-am-update-pictures-of-sarbat-khalsa-2015


நிகழ்வு 6: இவ்வருடத் தொடக்கத்தில் பஞ்சாப் பதன்கோட் விமானப்படை முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல், https://en.wikipedia.org/wiki/2016_Pathankot_attack

இவை அனைத்தையும் கூட்டி கழித்து பாருங்கள்.
ஏதோ ஒன்று புரியும். புரியாதவர்கள் மண்டைய போட்டு பிச்சிக்க தேவையில்லை.

சீக்கியர்களின் தேசிய இன விடுதலை எழுச்சியை முறியடிக்க இந்திய அரசு செய்த திட்டமிட்ட தாக்குதலாக இருக்குமோ என்பது எனது சந்தேகம்.. வெறும் யூகம் மட்டுமே!! இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்..

எதுக்கு இந்திய அரசு செய்ய வேண்டும்?
ஒவ்வொரு உருப்படாத ஏகாதிபத்தியமும் தனது பொது எதிரி என்று யாரையாவது காட்டி தன் நாட்டு மக்களுக்கு போலித் தேசிய உணர்வை வளர்த்தெடுப்பார்கள். அவ்வகையில் பாகிஸ்தானை எதிரியாக காட்டி போலி இந்திய தேசியம் வளர்க்கிறார்கள்.
"பாகிஸ்தானால் சீக்கிய மக்களுக்கு தொல்லை இருக்கும்,  ஆகவே இந்தியாவோடு இணைந்தே இருங்கள்" என்பது போன்ற மனநிலையை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.. ஆகவே என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்..

பாரத் மாதா கீ ஜெய் :) :)

திங்கள், 4 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டு தொடர்பாக எனது பதிவுகள்


ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில மண்டைவீங்கிகளே!
ஹோலி என்னும் பண்டிகையால் நீர் மற்றும் நிலம் மாசுபடுகிறது. வருடா வருடம் பலர் உயிரிழக்கிறார்கள்.
ஹோலியைத் தடை செய்ய சொல்லுங்க.
அப்புறம் வந்து தமிழன்கிட்ட நொட்டுங்க..

வட இந்திய அரசியலுக்கு ஏற்ப ஆடுவதில் சில போலித் திராவிடவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும் வல்லவர்கள்.
நாளைக்கே பொங்கல் பண்டிகைக்கு இந்திய அரசு தடை போட்டாலும் அதனையும் வரவேற்பார்கள் இந்த அயோக்கியர்கள்.

 ****** 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எத்தனை முறை போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளீர்கள்? - ஒரு அறிவாளி நண்பரின் கேள்வி.
நம் பதில்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என நாம் கேட்கிறோம். அதற்காக நாம் அனைவரும் கட்டாயம் மணியைத் தூக்கிட்டு போயி அர்ச்சகராக வேண்டுமா??

என்னய்யா லாஜிக் பேசுறீங்க?? நல்லா யோசிச்சு வேற எதாவது காரணம் சொல்லுங்க..
வழக்கம் போல சாதி, முதலாளித்துவம் என வேற லெவல் காரணத்தை யோசியுங்க..


******* 

தமிழில் கெட்டவார்த்தைகள் இருப்பதால் தமிழ் காட்டுமிராண்டி மொழி.
அவன், அவர் என வேறுபாடுகள் இருப்பதால் தமிழ் வர்க்க வேறுபாடுகள் நிறைந்த மொழி.
இவ்வாறெல்லாம் புதுசு புதுசா கண்டுபிடித்து எழுதுவது சில அறிவாளிகளின் வழக்கம்.

அந்த அறிவாளிகள்தான் இப்போது ஜல்லிக்கட்டுக்கு சாதி அடையாளம் கொடுக்க துடிக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்னர் வரை ஜல்லிக்கட்டுக்கு சாதி அடையாளம் கொடுக்காமல் இப்போது சாதிய அடையாளம் கொடுக்க என்ன தேவை வந்தது? என சிந்தித்துப் பாருங்கள். இந்த அயோக்கியர்களின் தமிழர் விரோத அரசியல் புரியும்.

****** 
"ஜல்லிக்கட்டு மாடுகளின் உடலமைப்பை பாருங்கள். பெரும் முதலாளிகளால் மட்டும்தான் இவ்வாறான மாடுகளை வளர்க்க முடியும்.." என்று கீற்று தளத்தில் கார்கி என்னும் போலிக் கம்யூனிஸ்ட் எழுதியிருந்தார்.

தலையில் அடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.
என்ன அருமையா கம்யூனிசம் படித்து வைத்துள்ளார்கள் இந்தப் போலிகள்!!
தமிழின அடையாளங்களை அழிப்பதும், இந்தியாவுக்கு முட்டுக் கொடுப்பதும்தான் இவர்களின் போலிப் புரட்சி!!

மாடு வளர்க்கிறவன், ஆடு வளர்க்கிறவன் எல்லாம் பெரும் முதலாளியாம்.
இவனுங்க லாஜிக்படி நாங்க எல்லாம் மாபெரும் முதலாளிகள்!! அவ்வ்வ்வ்...

பார்ப்பன ஆதிக்க, முதலாளித்துவ, ஊழல்மிகு கிரிக்கெட்டை தடை செய்ய சொல்லி ஒரு கட்டுரை எழுத சொன்னால் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு நகர்வார்கள் இவர்கள்.

******