வியாழன், 24 டிசம்பர், 2015

பெரியாரோடு முற்றிலும் முரண்படும் இடம்

#டிசம்பர்25‬ 
 ‪#‎கீழவெண்மணிப்‬ படுகொலை

சாதிவெறி மற்றும் முதலாளித்துவ வெறி கொண்ட கோபாலகிருஷ்ண நாயுடு என்னும் அயோக்கியனால் தஞ்சை மண்ணில் 44 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்.

பெரியாரோடு நான் முற்றிலும் முரண்படும் இடமும் இதுதான். இறுதிவரையில் நாயுடுவை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் கம்யூனிஸ்டுகளை வசைபாடுவதில் குறியாய் இருந்திருக்கிறார் பெரியார்.

திராவிட அமைப்புகள் ஏன் இந்தப் படுகொலையை அனுசரிப்பதில்லை? என்கிற காரணத்தை யாரேனும் சொல்லுங்க.. தஞ்சை மண்ணில் உதித்த செங்கொடி புரட்சியை ஒடுக்கியதில் திமுக கண்ணீர்த்துளிகளுக்கு பெரும்பங்கு உண்டு..

பாட புத்தகத்தில் வரலாறாகப் பதியப்பட்டு சாதி மற்றும் முதலாளித்துவத்தின் ஆபத்து குறித்து விளக்கப்படவேண்டிய நிகழ்வு கீழ்வெண்மணிப் படுகொலை. அப்படியான ஒரு நிகழ்வை தமிழர்களுக்கு தெரியாத வண்ணம் செய்துவிட்டார்கள் திராவிடவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும்.

‎சாதிவெறி மற்றும் முதலாளித்துவ வெறி கொண்ட கோபாலகிருஷ்ண நாயுடுவின் கூட்டாளிகள் திமுகவும், மூப்பனாரும்...

உலகமே திரும்பிப் பார்த்த நிகழ்வு 'கீழவெண்மணிப் படுகொலை'. ஆனால் உள்ளூரு தமிழனுக்கு  தெரியாமல் மறக்கடிக்கப்பட்டது.. தமிழன் வரலாறு எவ்வளவு மோசமாக இருக்குது பாருங்க..

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பார்ப்பான் அதை செய்தான், இதை செய்தான் என பார்ப்பானுக்கு  எதிராக அட்டைக்கத்தி வீசுபவர்கள் நாயுடுவின் சாதிவெறி மற்றும் முதலாளித்துவ வெறி பற்றி எங்கேயும் பேசுவதில்லை..
தமிழா! நீ பேசு!! செவிட்டுக் காதுகள் கிழியும் வரை பேசு!

பின்குறிப்பு: நாயுடுவை போட்டுத் தள்ளியதில் தி.க தோழர்களும் உண்டு.

#உண்மை உறங்காது.

சனி, 12 டிசம்பர், 2015

குப்பை அள்ளும் தொழிலாளி எவ்விதத்தில் குறைந்து போனார்?

வேற நாட்டிற்கோ, வேறு மாநிலத்திற்கோ ஒரு கிரிக்கெட் அணி  வருகை புரியும்போது விமான நிலையத்திலும், ஓட்டலிலும் மாலை மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிப்பார்கள்..

அதே போல வேற நாட்டிற்கோ, வேறு மாநிலத்திற்கோ ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர் பணிக்காக சென்றால் உண்ணும் உணவு, பேருந்து வசதி, தங்குமிடம் என அனைத்தையும் மிகுந்து தரத்துடன் அளிப்பார்கள். சிறப்பு ஊதியமும் கொடுப்பார்கள்.


சென்னை  வெள்ளத்தின் விளைவாக குவிந்த குப்பைகளை அள்ள  வெளி மாவட்டங்களிலிருந்து  துப்புரவு தொழிலாளர்களை அழைத்து வந்திருக்கிறது அரசு. அரசு பேருந்தில் கட்டணமில்லாமல் அழைத்து வந்திருக்கிறார்கள் என எண்ணுகிறேன். எங்கள் பகுதியில் சில பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

 ஆனால் அவர்களுக்கான தங்குமிடம், உணவு, குப்பை அள்ளும் கருவிகள், பாதுகாப்பு உறைகள் எவையும் முறையாக வழங்கப்படவில்லை. அவர்களுக்கான சிறப்பு ஊதியம் எவ்வளவு வழங்கப்பட்டது என தெரியவில்லை. மிகவும் குறைவாகத்தான் வழங்கியிருப்பார்கள்.
அந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களா? என்பதும் தெரியவில்லை.

ஒரு கிரிக்கெட் வீரரை விடவும், ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரை விடவும் எந்த விதத்தில் குறைந்து போனார் துப்புரவு தொழிலாளி?

குப்பை குவிகிறது என அரசைக் குறை சொல்லும் நாம் இந்த தொழிலாளர்கள் பற்றி சிந்திப்பதுண்டா? மக்கள் அவரவர் தெருவை சுத்தம் செய்து கொள்வோம் என்கிற மனப்பக்குவமும் நமக்கு வருவதில்லை. சில தன்னார்வ குழுக்களும், அரசியல் கட்சிகளும் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தது பாராட்டத்தக்கது.

இந்த ஏற்றத்தாழ்வுக்கான காரணம் என்ன? இதனைப் போக்க என்ன வழி? என்பவை பற்றி அறியாமல் ஓட்டு அரசியலின் வழியாக தீர்வு கண்டுவிடலாம் என்கிற நினைப்பில்  இந்த சமுதாயம் ஓட்டு  அரசியல் நோக்கி நகர்கிறது.

சனி, 5 டிசம்பர், 2015

பாபர் மசூதியைக் கட்டியெழுப்ப இந்துக்களே முன்வாருங்கள்...

#டிசம்பர்6 #பாபர்மசூதி இடிப்பு நாள் தொடர்பாக பேஸ்புக்கில் பதிந்த பதிவு:

மசூதியை இடித்து மனிதத்தை நொறுக்கியவர்கள் ராமனைத் தூக்கிக்கொண்டு அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ஆயத்தமாகிறார்கள்..
மசூதியை பறிகொடுத்தவர்கள், அதனைப் பற்றி சிந்திக்க கூட நேரமில்லாமல் வெள்ள நிவாரணப் பணியில் இரவும் பகலுமாக களத்தில் உள்ளார்கள்.





மீண்டும் கட்டியெழுப்பப்படும் பாபர் மசூதியில் முதல் செங்கல்லும், இறுதி செங்கல்லும் இந்துக்களின் பங்களிப்பாக, அதுவும் தமிழ் மண்ணிலிருந்து இருக்க வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு உண்டு..

 *****************

"பாபர் மசூதிக்கு முன் அங்க என்ன இருந்தது? ராமர் கோவில்லா? ஆம் எனில் அதை இடித்து யார்? நீ அவர்களை பற்றி பேசாசது ஏன்?" என்று ஒரு நண்பர் கேள்வி எழுப்பிருந்தார்.. 
அவருக்கு எழுதிய சிறு பதில் பின்வருமாறு:

It's a big story.

அங்கே மொகலாய மன்னர் பாபரால் கட்டப்பட்ட மசூதி மட்டுமே இருந்தது... இந்தியா முழுக்க அவர்கள் கட்டிய மசூதிகளும் கோட்டைகளும் இன்றும் பல உள்ளன.. அயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற புராணக் கதையோடு இவர்கள் தொடர்புபடுத்திக்கொண்டு அங்கே ராமர் கோவில் இருந்ததாக சொல்லி ஒரு சிலையைக் கொண்டு உள்ளே வைத்து விட்டார்கள்... இந்தியா முழுக்க பிரச்சாரம் செய்து ஆட்களைத் திரட்டி டிசம்பர் ஆறாம் நாள் இடித்துவிட்டார்கள்.. இந்து-முஸ்லிம் ஒற்றுமையே இருக்க கூடாது என்கிற ஒரே நோக்கத்துடன் இடிக்கப்பட்டது.. இதில் பங்கேற்ற சிலர் மனம் திருந்தி ஒப்புதல் வாக்குமூலம் கூட அளித்துள்ளார்கள்..

பாபர் வெளிநாட்டுக்காரர், பாபர் மசூதி நாட்டின் அவமானம் என்கிற பிரச்சாரமும் செய்கிறார்கள்.. செங்கோட்டை, தாஜ்மஹால், செயின்ட் ஜார்ஜ் கோட்டை என பலவும் மொகலாய, ஆங்கிலேய மன்னர்களால் கட்டப்பட்டவையே! அதில் ஏதேனும் ஒன்றில் கை வைத்திருக்கலாமே!! அவ்வாறு செய்ய வில்லை. மசூதியை இடித்தால் மட்டுமே ஒரு பதட்டத்தை தொடர்ந்து நீடிக்கச் செய்ய முடியும் என்பதை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் நன்கு அறிந்திருந்தார்கள்..

அந்த இடத்தில மசூதி கட்டப்படுவதன் மூலம் நீதி வழங்கப்படும். இதனால் இந்து-முஸ்லிம் ஒற்றுமை கூடுமே தவிர எந்த வகையிலும் இந்துக்களுக்கு எந்த தீங்கும், நட்டமும் இல்லை. சவூதி அரேபியாவில் இந்துக் கோவில் கட்ட அந்நாட்டு அரசு நிலம் ஒதுக்குகிறது.. மதவெறி இல்லாத இந்துக்கள் எந்த வகையிலும் பாபர் மசூதிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் தொடர்ச்சியான பொய் பிரச்சாரத்தால் பாபர் மசூதி பற்றி இந்துக்கள் அவ்வளவு பேசுவதில்லை...

அங்கே ராமர் கோவிலுக்குப் பக்கத்தில் பெரிய மாரியம்மன் கோவில் எழுப்ப வேண்டும் என நாம, அதாவது இந்து மதத்தை தழுவிய தமிழர்கள் கோரிக்கை வைத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்... அதுதான் இந்துத்வ அரசியல். அவர்களைப் பொறுத்த வரையில் ராமனை ஒரு தேசிய ஹீரோவாக்கி 'இந்து ராஷ்டிரம்' என்னும் அரசியலை முன்னெடுப்பதே குறிக்கோள்.. இதில் ஆன்மீகம், பக்தி எதுவும் இல்லை.

இந்து பக்கமோ, முஸ்லிம் பக்கமோ இன்று யோசித்தால் இந்தப் பிரச்சினைக்கு எந்த தீர்வும் கிடைக்காது. குழப்பம்தான் வரும். நீதியின் பக்கம் நிற்க வேண்டும்.


சனி, 21 நவம்பர், 2015

பேஸ்புக்கின் பிரச்சாரம் தீவிரவாதத்திற்கு எதிராகவா? அரசப் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவா?

சில நண்பர்கள் மூவண்ணத்தில் வாட்டர்மார்க் அடித்த புகைப்படத்தை ப்ரோபைல் படமாக வைத்திருக்கிறார்கள். சில நாட்கள் கழித்து பேஸ்புக் வந்ததால் என்ன காரணம் என்று தெரியவில்லை. டிஜிட்டல் இந்தியா மாதிரி வேறு ஏதேனும் திட்டம் வந்து விட்டதோ என்று எண்ணினேன்.
அப்புறம்தான் தெரிந்தது அது பிரான்ஸ் நாட்டின் கொடியின் வண்ணம் என்று.





இது தொடர்பாக சில கேள்விகள் எழுகின்றன.

* இனி எங்கெல்லாம் குண்டு வெடிக்குதோ, அந்தந்த நாடுகளின் கொடியை ப்ரோபைல் படமாக வைக்க வேண்டுமா? அதன் மூலம் தீவிரவாதத்தை ஒழித்துவிட முடியுமா?

* தீவிரவாதத்திற்கு மதம், இனம், நாடு என எந்த பாகுபாடும் கிடையாது. ஆனால் தீவிரவாத எதிர்ப்பு என்கிற பெயரில் ஒரு நாட்டின் தேசிய அடையாளத்தை ஏன் தூக்கி சுமக்க வேண்டும்?

* தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்யாமல் போலி தேசபக்தியையும், அரச பயங்கரவாதத்தையும் ஆதரிக்கும் செயலுக்கு பேஸ்புக் உடந்தை போகிறதா?.

* பிரான்ஸ் அரசின் பயங்கரவாதத்தால் சிரியாவில் கொல்லப்படும் அப்பாவிகளுக்காக நான் சிரியாவின் கொடியை எனது ப்ரோபைல் படமாக வைக்க வேண்டுமா?

* சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் பள்ளிக்குழந்தைகளை தீவிரவாதிகள் கொண்டபோது பாகிஸ்தான் கொடியை முகப்பு படமாக வைக்க சொல்லி பேஸ்புக் பிரச்சாரம் செய்ததா?
 

ரொம்ப குழப்பமா இருக்கு.. உருப்படியான பதில் இருந்தா சொல்லுங்க மக்களே!!

நிதிஷ்குமாருக்கு வக்காலத்து வாங்கும் சுப.வீ

தொலைக்காட்சி விவாதங்களில் பீகார் பற்றிய பேச்சு வரும்போது நிதிஷ்குமாரை இந்துத்வ எதிர்ப்பாளராக காட்ட அதிகம் முயற்சி செய்கிறார் அய்யா சுப.வீரபாண்டியன்.

குஜராத் கலவரத்தை ஆதரித்தது, பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது, மோடியை வளர்ச்சி நாயகனாக பீகாரில் காட்டியது, பீகாரில் பாஜக காலூன்ற வழிவகை செய்தது என அவரின் இந்துத்வ சார்பு பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த பின்னர்தான் பாஜக கூடாரத்திலிருந்து வெளிவந்தார் நிதிஷ். ஆக அவர் மோடி எதிர்ப்பாளர்தான் தவிர பாஜக எதிர்ப்பாளரோ, இந்துத்வ எதிர்ப்பாளரோ அல்ல.

நிதிஷ்குமார் போலத்தான் நம்மூரு திராவிடக் கட்சிகளும் இந்துத்வ எதிர்ப்பு என்கிற பெயரில் அட்டைக்கத்தி வீசுவார்கள். ஆனால் திரைக்குப் பின்னால் பாஜகவுடன் பேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.

திராவிடக் கட்சிகளின் இந்த போலித்தனத்தை மூடி மறைக்கத்தான் நிதிஷுக்கு வக்காலத்து வாங்குகிறார் சுப.வீ.
எக்காலத்திலும் பாஜகவை எதிர்த்து வரும் லாலுபிரசாத் தான் பாராட்டப்படவேண்டியவர், நிதிஷ் அல்ல.

திங்கள், 26 அக்டோபர், 2015

செயல்படாத பிரதமரும், செய்யப்படும் விளம்பரமும்


வெளிநாடுகளில் நிலநடுக்கம் வந்தால், வெள்ளப் பெருக்கு வந்தால், தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றால் அடுத்த சில நிமிடங்களில் இந்தியப் பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு போடுகிறார். கிரிக்கெட் போட்டி, பக்கத்துக்கு நாட்டு தேர்தல் என அனைத்துக்கும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் போடுகிறார். 
 
அதன் மூலம் தன்னை ஒரு செயல்படும் பிரதமராகக்(Active PM) காட்டிக் கொள்கிறார். மேல்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் இதனைக் கைதட்டி வரவேற்கிறார்கள். ஆஹோ ஓஹோ என்று புகழ்கிறார்கள். நாட்டைக் காக்க ரட்சகர் வந்துவிட்டார் என நம்புகிறார்கள்.

ஆனால் ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்பட்டால், உபியில் மாட்டுக்கறி சாப்பிட்டவர் அடித்துக் கொல்லப்பட்டால்,
அரியானாவில் தலித் குழந்தைகள் உயிரோடு கொளுத்தப்பட்டால், நாடு முழுக்க மதவாத பாசிஸ்டுகள் மதவெறிப் பேச்சுக்களை பேசும்போதிலும் பிரதமர் மோடி டிவிட்டரில் கூட வாயைத் திறப்பதில்லை.
மேல்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் "இதுக்கெல்லாம் பிரதமர் பேச வேண்டுமா?' என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

இதன்மூலம் ஒரு போலியான தேசபக்தி வளர்த்தெடுக்கப்படுகிறது. அதில் கூட வருத்தம் இல்லை.
ஆனால் மனிதம் சாகடிக்கப்படுகிறது.
"எவன் எங்கு செத்தால் நமக்கு என்ன? நாம 'டிஜிட்டல் இந்தியா' படத்தை ப்ரோபைல் படமா வச்சிட்டு அடுத்த வேலையைப் பார்த்துட்டு போவோம்" என்கிற மோசமான மனநிலை உருவாக்கப்படுகிறது. அதில்தான் வருத்தம்.

புதன், 14 அக்டோபர், 2015

ரவீந்திரநாத் தாகூரும் நம்மூரு எழுத்தாளர்களும்

1915-இல் ரவீந்திரநாத் தாகூருக்கு பிரிட்டன் அரசால் "நைட்வுட்"(Knightwood) என்னும் பட்டம்/விருது வழக்கப்படுகிறது.

அதே பிரிட்டன் ஏகாதிபத்தியம் 1919-இல் ஜாலியன்வாலாபாக்கில் இந்தியர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது.
உடனே தனக்கு அளிக்கப்பட்ட விருதை பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் மூஞ்சியில் வீசி எறிந்தார் ரவீந்திரநாத் தாகூர்.

"விருதை திரும்ப வழங்குவது என்பது அரசுக்கு எதிரான ஒரு போராட்ட வடிவம்" என்பது இலக்கியத்துறையில் நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூருக்கு தெரிந்திருந்தது.

ஆனால் இங்கே உள்ள சில லோக்கல் எழுத்தாளர்களுக்குப் புரியாமல் போனது எந்த வியப்புமில்லை. நியாயத்தின் பக்கம் நின்றுப் பேசாமல் பொதுப்புத்தியைப் குளிர வைக்கப் பேசும் இவர்களிடம் வேறு என்னத்த எதிர்ப்பார்க்க முடியும்??

இந்தப் போராட்ட வடிவத்தைக் கேலி செய்யும் ஜெயமோகன்களும், அபிலாஷ்களும் வேறு போராட்ட வடிவங்களை சொல்லித் தந்து இந்த சமூகத்திற்கு வழிகாட்டுவார்களாக!!!

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

சாதி எதிர்ப்பு என்பதை ஒரு கட்சி எதிர்ப்பாக மட்டும் மாற்றி பேசும் மலிவான அரசியல் வேண்டாம்

சாதி, மத விவாகரங்களில் கட்டுரை எழுதுகையில் அதிகக் கவனம் தேவை.
கீற்றில் வெளியான இந்தக் கட்டுரையின் ஒரு கருத்து சற்று உறுத்தலாக இருந்தது.
http://keetru.com/…/2014-03-08-12…/29007-2015-08-19-14-17-34


அன்புமணி கூட்டம் முடிந்ததும், கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.கவினர் தலித்துகளுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டு, தலித் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றி வந்ததாக கட்டுரை ஆசிரியர் கூறியிருக்கிறார்.
ஆனால் தாக்குதலை முன்னின்று நடத்தியதாக திராவிடக் கட்சியினர் பெயர்களை அடுக்கியுள்ளார். எது உண்மை???
இவர் குறிப்பட்ட திராவிடக் கட்சிக்காரார்கள் எல்லாம் பாமகவில் ஐக்கியமாகிவிட்டார்களா?
இல்லையேல் வன்னியர் என்றாலே பாமகவை சார்ந்தவர்தான் என்று முன்முடிவுக்கு வந்துவிட்டாரா??

சாதி அரசியல் செய்யும் ராமதாஸ் வன்னிய மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்..
ஆனால் இம்மாதிரியான பதிவுகள் வன்னியர்களை ராமதாஸ் பாக்கம் கொண்டுபோய் நிறுத்தும். ராமதாசின் வியூகமும்/விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும்.

சாதி எதிர்ப்பு என்பதை ஒரு கட்சி எதிர்ப்பாக மட்டும் மாற்றி பேசும் மலிவான அரசியல் வேண்டாம்.
சாதிவெறி என்பது இங்கே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நிற்கிறது

வெள்ளி, 1 மே, 2015

திராவிடப் போலிகளை அம்பலப்படுத்துவோம்

திராவிடம் பேசும் சில பிழைப்புவாதிகளின் (அனைவரும் அல்ல) மடைமாற்றும் அரசியல், பிழைப்புவாத அரசியல் பற்றி  நிறையபேசுவோம்..வாருங்கள்..

* இருபது தமிழர்கள் படுகொலைக்கு திக, திமுக  சார்பில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை.. கிருஷ்ணகிரியில் தலித் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்ட விசயத்தை பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. இந்த இரு விசய பின்னணியை ஆராய்ந்தால் திக யாருக்கான அமைப்பு என்று தெரிந்து விடும்.
இந்த இரு விசயங்களில் பார்ப்பான் ஈடுபட்டிருந்தால் திக போராட வந்திருக்கும்.. அதிமுக ஈடுபட்டிருந்தால் திமுக போராட வந்திருக்கும்.. இதுதான் திராவிட அரசியல்..

* விஜயகாந்துக்கு அறிவுரை கொடுப்பது போல திமுக-விஜயகாந்த் கூட்டணிக்கு அடித்தளம் போட்டுக் கொண்டிருக்கிறார் வீரமணி. மோடியை பெரியாருடன் ஒப்பிட்டபோது விஜயகாந்துக்கு எதிராக திராவிட அமைப்புகள் எந்தப் போராட்டத்தையும் செய்யவில்லை.. அதுவே ஒரு வடநாட்டான் பேசியிருந்தால் இங்கே கூச்சல் போட்டிருப்பார்கள் . ஆனால் பொறுக்கித் தின்ன இப்போது விஜயகாந்தும் தேவைப் படுகிறாரே!! அவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க..

* வே.மதிமாறன் என்னும் நபருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.. மேடையில் பேரா.அன்பழகனை வைத்துக் கொண்டு 'அடுத்து திமுக ஆட்சிதான்' என்று பேசுகிறார்.. இப்படி பொறுக்கித் தின்பதற்கு எதுக்கு விருது??
பாரதி, வள்ளுவன் என அனைவரிடம் இருக்கும் பிழைகளை சுட்டிக் காட்டினால் முற்போக்கு.. அதுவே பெரியாரின் பிழைகளை சுட்டிக் காட்டினால் உடனே பார்ப்பனிய அடிமை, சாதிவெறியன் என பட்டம் கொடுத்துவிடுவார்கள் பெரியார் திடல் பக்தர்கள்.

* தருமபுரி சேரி சூறையாடலில் ஈடுபட்டவர்களில் அதிகம் பேர் திமுகவினர். மதிமுக, தேமுதிக கட்சியினரும் உண்டு. ஆனால் அந்தக் கட்சியினர் எந்த நடவடிக்கையாவது எடுத்தார்களா?? இல்லவே இல்லை.. மிக நுட்பமாக வன்னியர்-பறையர் பிரச்சினையாக மாற்றினர். (ராமதாசின் செயல்களும் அப்படிதான் இருந்தது. அவரும் அதைதான் விரும்பியிருப்பார்..).

* ராமதாசும் அவர் மகனும் தனித் தமிழ்நாடு கோரிக்கையை ஆதரிப்பவர்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு தமிழ்த்தேசிய அடையாளம் கொடுத்து தமிழ்த்தேசியம் என்றாலே சாதிதான் என்று கேலி செய்கிறார்கள்.

* சாதி நிகழ்வுகளில் பங்கேற்கும் திராவிடக் கட்சிகள் பற்றி திராவிடம் பேசுகிறவர்கள் ஏன் வாய் திறப்பதில்லை?? உடனே ஒரு வேதவாக்கு சொல்லுவார்கள் "ஓட்டு அரசியல் என்றாலே சந்தர்ப்பவாதம்" என்று. அது சரிப்பா, அந்த சந்தர்ப்பவாதிகளை பற்றிப் பேசாமல் எப்படி அய்யா சாதியை ஒழிக்கப் போகிறீர்கள்??  "அனைத்துக் கட்சிப் பெயரிலும் திராவிடம் இருக்கிறது.அதனால்திராவிடத்தைவீழ்த்தமுடியாது"என்கிறார் கி.வீரமணி.அப்ப மட்டும் திராவிடக் கட்சிகளை கூட்டு சேர்த்துக் கொள்கிறீர்கள்.. அவர்களின் சாதி சார்பை ஏனய்யா மூடி மறைக்கிறீர்கள்??

* திராவிடக் கட்சிக்காரர்கள்தான் தமிழகத்தில் பாதி இருக்கிறார்கள். இவர்கள் சாதி ஒழிப்பை மேற்கொண்டிருந்தால் சாதி இந்நேரம் ஒழிந்திருக்குமே!! ஒருபோதும் செய்யமாட்டார்கள். ஆனால் சாதி ஒழிப்பு போராளிகள் போல வேஷம் போடுவார்கள். (இந்த வேஷம் போடுற வித்தை தமிழ்தேசியவாதிகளுக்கு தெரியவில்லை.. )

* திராவிடக் கட்சிகளை சார்ந்தவர்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் அம்பேத்கர் ஏன் இன்னும் கூண்டுக்குள் இருக்கிறார்?? இதையெல்லாம் பற்றி பேசாமல் சாதி ஒழிப்பு நாடகம் போடுகிறார்கள்.

* அண்மையில் திக-திவிக-தபெதிக உள்ளிட்ட அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலையை கருணாநிதி ஆலோசனையின் பேரில் சுபவீ மேற்கொண்டிருக்கிறார்.. ஆனால் கோவை ராமகிருஷ்ணன் (தபெதிக) நழுவிக் கொண்டார்.. அவருக்கு வாழ்த்துகள்..

* முருகனை முப்பாட்டன் என்றுகூறி  சீமான் வேல் ஏந்தினால் சுபவீ பக்கம் பக்கமாக கட்டுரை  எழுதுகிறார். கேலி செய்கிறார்.ஆனால் பார்ப்பான் ராமானுஜர் பற்றி  தொடர் எழுதப் போகிறாராம் கலைஞர்.. திராவிடம் பேசுகிறவர்கள் அனைவரும் நவத்துவாரங்களையும் மூடிக் கொண்டு இருப்பதை கவனித்தீர்களா!! இவ்வளவுதான்யா பார்ப்பனிய எதிர்ப்பு..

* "இந்திய தேசிய கீதத்தில் திராவிடம் என்னும் சொல் இருக்கிறது. அதனால் திராவிடத்தை வீழ்த்த முடியாது" என்கிறார் கலைஞர்.

" தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் ஏன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள்?" என்கிறார் சுபவீ.. 
பார்ப்பனிய இந்திய தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போட திராணி இல்லாத திக கும்பல் தமிழ்தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடுகிறது.. அப்புறம் எதுக்குப்பா தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறீர்கள்? வடநாட்டு பக்கம் போயிட வேண்டியதுதானே!! ஆக திராவிடத்தை வளர்க்கிறோம் என்னும் பெயரில் இந்தியத்தைதான் வளர்க்கிறார்கள்..


* "ஓட்டு அரசியலில் அடித்துக் கொள்ளுங்கள். ஆனால் திராவிடத்தைக் காத்திட ஒன்று சேருங்கள்" என அதிமுக, திமுகவுக்கு அழைப்பு விடுக்கிறார் அய்யா வைகோ.
திமுக எதிர்ப்பு என்பது அதிமுகவின் கொள்கை.
அதிமுக எதிர்ப்பு என்பது திமுகவின் கொள்கை. நடுவுல எங்கிருந்து வந்தது திராவிடம்? அய்யா வைகோதான் இதுக்கு பதில் சொல்லணும்.

இதையெல்லாம் அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியவாதிகள் சாதிய அபிமானிகளாக இருப்பதால் திராவிடப்  பிழைப்புவாதிகளை  தீவிரமாக எதிர்க்க முடியவில்லை.. சம்பந்தமே இல்லாமல் பெரியாரையும் திராவிடத்தையும் எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்..

பின் குறிப்பு: கட்டுரை படித்துவிட்டு எனக்கும் பார்ப்பனிய அடிமை, சாதி வெறியன் பட்டம் கொடுத்தால் மகிழ்ச்சியே!!

பெரியார் ஆதரித்தது தமிழ்த்தேசியம், வீரமணி ஆதரிப்பது இந்திய தேசியம்.

பெரியார் தன் இயக்க நாளிதழுக்கு "விடுதலை" என்று பெயர் வைத்தார். அது தமிழ்த்தேசிய விடுதலையைக் கருத்தில் கொண்டுதான்.. அத்தோடு "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற வாசகத்தையும் இணைத்திருந்தார்..

அதே போல குடியரசு என்கிற பெயரும் "தமிழ்தேசியக் குடியரசைக்" கருத்தில் கொண்டுதான்..

ஆனால் "தமிழ்நாடு தமிழருக்கே" என்னும் முழக்கத்தை நாளிதழிலிருந்து நீக்கிவிட்டு , பொது ஊடகத்தில் "தமிழ்த்தேசிய வியாதிகள்" என்று சொல்லும் அளவுக்கு கி.வீரமணிக்கு துணிச்சல் எவ்வாறு வந்தது?

இந்திய தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடாமல், தமிழ்த்தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடும் வீரமணி கும்பலுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?? என்ன (&^^&$&^க்கு 'தமிழர் தலைவர்' என்கிற அடைமொழி'???

இந்தியாவுக்கு‬ முட்டு கொடுத்து திராவிடம் பேசுகிறவர் எவராக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டே எதிர்க்கலாம்.. ஏனெனில் அது கண்டிப்பாக பிழைப்புவாதமாகத்தான் இருக்கும்..

பார்ப்பான் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?? #டவுட்டு

"பார்ப்பான் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான்" என ஒரு பதிவைப் பார்த்தேன்..

அது என்னய்யா!!
"பார்ப்பான் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான்" என்று எழுத வேண்டியதுதானே!!

மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க.. இழிவு நிலையை பேசும்போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க??

அடுத்து, தமிழன் என்றாலே பார்ப்பானும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க.. தமிழ் என்றாலே சாதி என்றுதான் சொல்லுறீங்க..
அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?
சாதிய தலைவர் அல்லது பார்ப்பனிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியதுதானே!!

‪#‎டவுட்டு‬

வியாழன், 5 மார்ச், 2015

திராவிடத்தின் பதட்டம்

திராவிட இயக்கத்தை வீழ்த்திவிட முடியாது என சில மாதங்களாக வைகோவும் கருணாநிதியும் மாறிமாறி அறிக்கை விடுவது காமெடியாக இருக்கிறது. அவர்களின் பீதியும் தெரிகிறது.

சாதி ஒழிப்புதான் திராவிடம் என்றீர்.
கருணாநிதியும் வைகோவும் என்று சாதி ஒழிப்பு பேசினார்கள்?

மதவாத எதிர்ப்புதான் திராவிடம் என்றீர்.
கருணாநிதியும் வைகோவும் என்று மதவாத எதிர்ப்பு பேசினார்கள்?
இப்படி கேட்டுக்கொண்டே போகலாம்.

இவர்கள் சொல்வதைப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்குத் தடை விதித்த ஓ.பன்னீர்செல்வம்தான் தமிழகத்தின் ஆகப்பெரும் திராவிடத் தலைவர்.


கருணாதியின் திராவிடத்தை 'முதலமைச்சு திராவிடம்' என்று எவரும் சொல்லவில்லை.
விஜயகாந்தின் திராவிடத்தை 'போலித் திராவிடம்' என்று எவரும் சொல்லவில்லை.
கருணாநிதியையும் விஜயகாந்தையும் திராவிட இயக்க தலைவர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்கிறார்கள்.


(பெரியார் திடலில் விஜயகாந்திற்கு பெரியார் விருதும் வழங்கப்பட்டுள்ளதாக வரலாறு சொல்கிறதே! உண்மையா?)

ஆனால் போலித் தமிழ்த்தேசியம், முதலமைச்சு தமிழ்த்தேசியம் போன்ற வார்த்தைகள் இயல்பாக உதிக்கிறார்கள் திராவிடக் கருத்தியல் கொண்டவர்கள்.
தெருவுக்கு நாலு பெரு இருக்கிறபோதே இந்த பதட்டம் என்றால், நாளை தெரு முழுக்க தமிழ்த்தேசியவாதிகள் நிறைந்துவிட்டால்????

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

ஈழமும், இந்தியக் கட்சிகளின் பித்தலாட்டங்களும்

* ராஜபக்சே ஒரு கொலைகாரன், கொடூரன் என சமீபகாலமாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட இந்தியக் கட்சிகள் நமக்கு அதிகமாக வகுப்பெடுக்கிறார்கள். இதையே கடந்த ஐந்து வருடங்களாக நாம் சொன்னபோது மறுத்தவர்களும் இவர்களே! உலகக்கோப்பை கிரிக்கெட், காமன்வெல்த் விளையாட்டு, பிரதமர்  பதவியேற்பு விழா என பல நிகழ்வுகளிலும் ராஜபக்சேவை அழைத்து விருந்து வைத்தபோது அவன் ஒரு கொலைகாரன் என்று இவர்களுக்கு தெரியவில்லை போல!!

* சரி, ராஜபக்சே ஒரு கொலைகாரன், குற்றவாளி என்பதே உண்மை.
அவன் செய்த குற்றமென்ன? அவர் யாரைக் கொலை செய்தான்? என்பது குறித்து பேச மறுக்கிறார்கள் அல்லது மறைக்கிறார்கள் இந்த இந்தியக் கட்சிகள்.
அவன் செய்தது இனப்படுகொலை என்ற உண்மையை திட்டமிட்டு மறைக்கிறார்கள். போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என வார்த்தை விளையாட்டு ஆடுகிறார்கள்.

* இலங்கைத்தீவில் அனைத்து தரப்பு மனிதர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் அது மனித உரிமை மீறல்.
இருதரப்பு மக்களும் யுத்தத்தில் அழிக்கப்பட்டிருந்தால் அது போர்க்குற்றம்.
ஆனால் நடந்தது என்ன? தமிழர்கள் மட்டும் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள்.
அதை மூடி மறைப்பதில் இலங்கைக்கு சகல வசதிகளையும் இன்றுவரை செய்து தருகிறது இந்திய அரசு.

* இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து சிந்திக்கிறார்களாம் பாஜக ஆட்சியாளர்கள். இதைத்தானே கடந்த ஐந்து வருடங்களாக காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருந்தது. அப்படியானால் இந்நாள் வரை எந்த சீரமைப்பும் செய்யவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறதா இந்திய அரசு?..
  காங்கிரஸ் சொன்னது பொய்யா? பாஜக சொல்வது பொய்யா? தமிழர்கள் ஏமாந்து கொண்டே இருப்பார்கள் என எண்ணுகிறார்கள் போல.

* இலங்கையின் மொத்த ராணுவத் தொகை இரண்டு லட்சம். அதில் ஒன்றரை லட்சம் பேர் தமிழர் தாயகமான ஈழத்தை ஆக்கிரமித்துள்ளார்கள். ராணுவத்தை வெளியேற்றுவது குறித்து பேச கூட மறுக்கும் இந்திய அரசு தமிழர்களுக்கு நல்லது செய்யும் என்பதை நம்ப தமிழர்கள் என்ன முட்டாள்களா?

* தமிழர்களுக்கு வெளிப்படியாக நல்லது செய்தால் சிங்களர்களுக்கு கோபம் வந்துவிடும், அவர்கள் மீண்டும் ராஜபக்சேவை அரியணை  ஏற்றிவிடுவார்கள் என புதுவகையான பூச்சாண்டி காட்டுகிறார்கள்.
தமிழர்களுக்கு நல்லது செய்வது சிங்களர்களுக்குப் பிடிக்காது என்றால் தமிழனும் சிங்களனும் எப்படி இணைந்து வாழ முடியும்?

* சிங்கள உழைக்கும் மக்களும் தமிழ் உழைக்கும் மக்களும் இணைந்து போராட வேண்டும் என இன்னொரு தரப்பு வகுப்பெடுக்கிறது. நியாயம்தான்.. ஆனால் யதார்த்தம் என்ன? தமிழன் அழிக்கப்படும்போது அதனைத் தடுக்கக் கோரி எந்த சிங்கள உழைக்கும் மக்களோ, அமைப்போ குரல் கொடுக்கவில்லையே! அனைவரும் ஒன்றாகக் கூடி பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்களே!!(அதற்காக அனைந்து சிங்களர்களும் இனப்படுகொலையை ஆதரிக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது).. நடந்தது இனப்படுகொலை என்கிற உண்மையைப் பேசும் ஒரு சிங்கள அமைப்பாவது இருக்கிறதா? அப்புறம் எங்கே ஒன்றா சேர்ந்து போராடுவது??

பொதுவாக்கெடுப்பைத் தவிர வேறு எதுவும் தீர்வாகாது.


ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

பிறமாநிலத்தவரின் தாய்மொழிப்பற்றும் தமிழனின் அடிமைப்புத்தியும்

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் சென்னை - கர்நாடக அணிகள் மோதிய அரையிறுதியில் டாஸ் போட்ட பின்னர் கன்னட நடிகர் சுதீப் அவர்கள் பேசினார். தன் தாய்மொழியான கன்னடத்தில் பேசிக் கொண்டே இருந்தார்.
குறுக்கிட்ட கேள்வியாளர் 'சார், ஆங்கிலத்தில் பேசலாமே! என்றார்.
"என் ஊரு, என் மக்கள், கன்னடத்தில் பேசினால்தான் நல்லா இருக்கும்" என்றார்.
பின்னர் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் பேசி முடித்துக் கொண்டார்.

ஜெயா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பத்திரிகை நிருபர்களிடம் வாசிக்க வந்த வழக்கறிஞர் 'முதலில் கன்னடம், பின்னர் ஆங்கிலம்' என்று கூறி கன்னட பத்திரிகைகளுக்கு முதலில் பேட்டிக் கொடுத்தார்.

சென்னையில் உள்ள ஆந்திரா உணவகங்களில் போர்டு, பில், புகைப்படங்கள், வாசகங்கள் என அனைத்தும் அவர்களின் தாய்மொழியான தெலுங்கில் இருக்கிறது.

மலையாளிகள் பற்றி சொல்லவே தேவையில்லை.
ஹைதராபாத்தில் உள்ள மலையாள உணவகங்களுக்கு சென்றால் ஏதோ கேரள வரலாற்றுக் கண்காட்சிக்கு சென்றது போல இருக்கும். மெனு கார்டு, புகைப்படங்கள் என அனைத்திலும் மலையாளப் பண்பாடு தூக்கலாக இருக்கும்.

மேலே உள்ளவர்களின் தாய்மொழிப் பற்றைப் பாராட்டுகிறோம்.

தமிழனின் நிலை என்ன?
காதல் தொடர்பான நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியில் பரிசு வென்ற சகோதரி என்ன மொழியில் பேசினார்? என்ன பேசினார்? என்றே தெரியவில்லை.
தமிழர்களின் பெரும்பாலும் பார்க்கும் நிகழ்ச்சியில் தமிழில் பேசினால்தானே நம் கருத்துக்கள் பல மக்களையும் சென்றடையும் என்கிற பொது அறிவு கூட அந்த சகோதரிக்கு தெரியாமல் போனது.
தமிழில் பேசும்போது ஆங்கில வார்த்தைகள் தற்செயலாக குறுக்கே வருவது வேறு.
ஆனால் வேணுமென்றே ஆங்கிலத்தை இழுத்து திணிப்பது வேறு.

"கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்,
தமிழ் கத்துக்க ட்ரை பண்ணுறேன்" என வெளிமாநில சகோதர, சகோதரிகள் தமிழ் நோக்கி நகருகிறார்கள்.
ஆனால் தமிழனோ ஆங்கிலம் நோக்கி நகருகிறான்.

தமிழ் சோறு போடுமா? தமிழ் தமிழ்னு என் சாகுறீங்க? என்று சோற்றைப் பற்றி மட்டுமே யோசிக்கும் பாரத மாதாவின் பக்தர்கள் கேட்கிறார்கள். ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை வரவேற்கும் மூடர்கள் இவர்கள். அடுத்தவன் மொழிக்கு பல்லக்கு தூக்கும் அடிமைகள் இவர்கள்.

தமிழில் சாதி இருக்குது (உப்பு இருக்கு, காரம் இல்லை என்றும் சொல்லுவாங்க), தமிழை மட்டும் வைத்து என்ன செய்ய? என தமிழகத்திலும் சில வெங்காயங்கள் கிளம்பியிருக்குது.

இந்த மூடர்களின் பேச்சுக்களை புறந்தள்ளுவீர்.
மொழி அழிந்தால் இனம் அழியும்.
தமிழை வாழ வைப்போம்!
தமிழனிடத்தில் தமிழில் பேசுவோம்.

Provisional store என்பதை 'ப்ரொவிஷனல் ஸ்டோர்' என எழுதி போர்டு வைத்தால் தமிழ் வாழாது.
மளிகைக் கடை என்று எழுதினால்தான் தமிழ் வாழும்.

திங்கள், 26 ஜனவரி, 2015

சாதியும் நானும் - நூல் விமர்சனம்

எப்பவோ படித்திருக்க வேண்டிய நூல். இப்போதுதான் வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சாதி இழிவுக்கு ஆளானவர்களும், ஆளாக்கியவர்களும் தங்கள் சுய அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதியதன் தொகுப்பே இந்நூல்.

காற்றைப் போல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது சாதி என்பதை நூல் கூறுகிறது.

'இப்பெல்லாம் யாரு சாதி பார்க்கிறார்கள்?' என்பவர்கள் கட்டாயம் வாங்கிப் படிக்கவேண்டிய நூல்.

பார்ப்பனியத்தை மட்டுமே விமர்சித்துக் கொண்டிருந்தால் சாதி ஒழிந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்.
பார்ப்பனர் அல்லாத இடைநிலைச் சாதிகள்தான் அதிக சாதிக்கொடுமைகளை விளைவிக்கிறார்கள் என்பதை நூல் விளக்குகிறது.

"சாதியைக் கண்டுகொள்ளாமல் விட்டால் சாதி வேறு வடிவில்தான் வெளியாகும்.
சாதியை வெறுத்து ஒதுக்கினால்தான் சாதி ஒழியும்" என்பதே நூலின் மூலம் நான் கற்ற படிப்பினை.

காலச்சுவடு ஸ்டாலில் பில் போடுவதற்காக இந்நூலைக் கையில் வைத்திருந்தபோது ஒருவர் வந்து 'நூலின் ஆசிரியர் பெருமாள் முருகன் ஸ்டாலில் இருக்கிறார். வந்து கையெழுத்து வாங்கிச் செல்லுங்கள்' என்றார். 'அவர் என்ன அவ்வளோ பெரிய அப்பாட்டக்கரா?' என்று எண்ணிக் கொண்டேன். 'சரி, நான் வந்து கையெழுத்து வாங்குகிறேன்' என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்து விட்டேன். இறுதிவரை பெருமாள் முருகனை சந்திக்கவில்லை. மாதொருபாகன் பிரச்சினை அப்போதுதான் தொடங்கியிருந்தது
.

உண்மையில் பெருமாள்முருகன் பெரிய அப்பாட்டக்கர்தான்.
'சாதியும் நானும்' நூலே துணிச்சலான முயற்சிதான்.

செவ்வாய், 13 ஜனவரி, 2015

முடிவில்லாமல் தொடர்கிறது ஜெயமோகனின் புளுகல்

எழுத்தாளர் பெருமாள் முருகன் பிரச்சினை பற்றி எழுதும்போது சம்பந்தமே இல்லாமல் பெரியார் மீது அவதூறு வைத்துள்ளார் ஜெயமோகன்.
( பெரியார் இன்னும் அச்சுறுத்துகிறாரோ!! ).

இடைநிலைச் சாதிகளின் மேலாண்மைக்காக பெரியார் பாடுபட்டாராம்!
அவர்களின் சாதிப்பற்றைக் கைவிடும்படி கூறவில்லையாம்!!

இவ்வாறு புளுகுவது அவருக்கு புதிதில்லை. ஆனாலும் பெரியாருக்கு சற்றும் தொடர்பில்லாத பிரச்சினையில் அவரை ஏன்யா இழுக்குறீங்க!!
ஒருவகையில் இதுவும் நல்லதுதான். பெரியாரிசத்தை வாழ வைக்கும்.

மறுப்பு தெரிவித்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.
அதில் கூறியவற்றை அப்படியே இங்கு பதிக்கிறேன்.

"என்ன அழகா புளுகுறீங்க!!
பார்ப்பனியம் என்றாலே பொய் புரட்டுதானே!

கடைசிவரைக்கும் சாதிவெறியர்களை நீங்கள் கண்டிக்கவில்லையே மிஸ்டர் ஜெயமோகன்!!

ஆனால் வன்னியர் மாநாட்டில் மேடையேறி சாதிக்கு எதிராக பேசினாரே பெரியார்!
சத்திரியன் என்றால் பார்ப்பானுக்கு அடிமை. அதுல என்ன பெருமை வேண்டி கிடக்கு என்றாரே!
அவர்தாம் பெரியார்! உங்களால் சொல்ல முடியுமா?

பெயரில்கூட சாதி இருக்க கூடாது என்று மக்களிடம் சொன்னாரே பெரியார்!
நீங்க சொன்னீகளா?? இல்லை வேறு பார்ப்பனர்கள் சொன்னார்களா??

சாதியை கட்டிக்காக்கும் புராணங்களையும், வருணாசிரமத்தையும் சமரசமில்லாமல் எதிர்த்தாரே பெரிரார்! உங்களால் முடியுமா??

வழிபாட்டு சமத்துவம் வேண்டி ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த பெரியாரிஸ்டுகள் வந்தார்கள், வருவார்கள். நீங்கள் வருவீர்களா?

பார்ப்பான் எச்சி இலையில் சூத்திரனை உருளச் சொல்லுதய்யா உன் இந்து மதம்!
ஜெயேந்திரனுக்கு கால் கழுவி விட சொல்லுத்தய்யா உன் இந்து மதம்!
பெரியார் எதிர்த்தார். நீங்கள் என்ன செய்தீர்கள்?

சாதியால் பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்டால் நான் பார்ப்பனர் பக்கம் நிற்பேன் என்றாரே! அவர்தாம் பெரியார்!

இன்று சிலர் கொழுப்பெடுத்து சாதித் திமிர்ப் பிடித்து திரிந்தால் பெரியார் என்ன செய்வார்?
அவரை சாடுவதை விடுத்து சாதிக்கு எதிராக ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யுங்க.
இந்த மாதிரி குட்டையைக் கிளப்புற வேலை வேண்டாம்.

பார்ப்பனியத்தை வீழ்த்தினால் சாதிக் கட்டமைப்பு வீழும் என பெரியார் எண்ணியிருக்கலாம்!
ஆனால் பாழாய்ப் போன இடைநிலை சாதிகள் இன்று பார்ப்பனியத்தைக் கையில் எடுத்து திரிகின்றன."
 picture: Cartoonist bala
==
இந்து மதத்திற்கும் அதிலுள்ள சாதிக் கட்டமைப்புக்கும் எதிராக கலகம் செய்த அய்யா வைகுண்டர், நாராயண குரு, வள்ளலார், புத்தர் எனப் பலரையும் லாவகமாக தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டீர்கள்!
ஆனால் பெரியார் மட்டும் இன்னும் கலகம் செய்து அச்சுறுத்துகிறார்!
அதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெரியார் மீது சேறு வாரி இறைக்க காத்திருக்கிறது பார்ப்பனியம்.

கொய்யால! திமிருடன் சொல்லுவோம் இது 'பெரியார் மண்'.

சனி, 10 ஜனவரி, 2015

சென்னை புத்தகக் கண்காட்சி 2014: எனது அனுபவம்



சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு புத்தகக் கண்காட்சி நடக்கும் திடலுக்கு நுழைந்தேன். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் ரொம்ப அதிகமாக இருந்தது. வெளியே உள்ள மேடையில் தோழர் நல்லக்கண்ணு உரையாற்றிக் கொண்டிருந்தார். மேடையில் அய்யா நெடுமாறன் அமர்ந்திருந்தார். ஏதோ புத்தக வெளியீடு போல..


புத்தகக் கண்காட்சி அரங்கிற்குள் நுழைந்து புத்தகங்களை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தேன். சிலவற்றை வாங்கிக் கொண்டேன்.

உள்ளே செல்ல செல்ல எங்கு பார்த்தாலும் ஆன்மீகம் தொடர்பான கடைகள். புத்தகக் கண்காட்சியா அல்லது ஆன்மீகக் கண்காட்சியா என்று டவுட்டு வந்துவிட்டது.. எங்கு திரும்பினாலும் சாமியார்கள் பற்றிய நூல்களே கண்ணில் படுகின்றன. மலிவு விலை குரான், மலிவு விலை பகவத் கீதை என விற்பனை செய்கிறார்கள். 

வாழும் அவதார புருஷர் பரமஹம்ச நித்தியானந்தாவின்  குழுவினர் இரு கடைகளை ஆக்கிரமித்துள்ளார்கள். உள்ளே அவதார புருஷரின் போட்டோ போட்டு மாலையும் போட்டுள்ளார்கள்.. இப்படித்தான் கடவுளர்கள் தோன்றினார்களோ!!

விடியல், விஜயா, உயிர்மை, கிழக்கு, டிஸ்கவரி, நியூ செஞ்சுரி, பெரியார் சுயமரியாதைப் பதிப்பகம், கீழைக்காற்று, நக்கீரன், விகடன் என பிரபலக் கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. நானும் இக்கடைகளில்தான் அதிக நேரம் செலவழித்தேன்.
குறிப்பாக காலச்சுவடு பதிப்பகத்தில் அதிக கூட்டம். பெருமாள் முருகனின் நூல்கள் அதிகம் விற்பனை ஆகியிருக்கும். அவரும் உள்ளே அமர்ந்திருந்தார்.

சங்கர் பதிப்பகம் என்று ஒரு கடை இருந்தது.
நம்ம சவுக்கு சங்கர்தான் கடையை விரிச்சிட்டாரோ! என்று ஷாக் ஆயிட்டேன்..

காலச்சுவடு பதிப்பகத்தில் அக்கா தமிழ்நதி அவர்களைக் காண முடிந்தது. பேஸ்புக்கில் அருமையாக எழுதுபவர். வெளிநாட்டில் வசிக்கிறார். புத்தகக் கண்காட்சியையொட்டி இங்கு வந்திருக்கிறார். என்னை அறிமுகப்படுத்திவிட்டு வந்துவிட்டேன். அவங்களுக்கு என்னை தெரியல. :(

தமிழ்மண் பதிப்பகத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்:
பெரியவர் ஒருவர் தலைவர் பிரபாகரன் தொடர்பான ஒரு நூலை எடுத்து ஒரு சிறுமியிடம் காட்டி (பேத்தியாக இருக்கும்) ‘யாருன்னு தெரியுதா?.. தலைவர்.. தலைவர்ன்னு சொல்லு’ என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். சிறுமியும் தலையை ஆட்டிக்கொண்டே தலைவர் என்றாள். மிகவும் மகிழ்வாக இருந்தது. #பிரபாகரனிசம் 

நான் வாங்கிய நூல்களின் பட்டியல்:
பச்சை தமிழ்த்தேசியம் – சு.ப.உதயகுமாரன்
உணவு யுத்தம் – எஸ்.ராமகிருஷ்ணன்
நலம் 360 – மருத்துவர்  கு.சிவராமன்
அர்த்தமுள்ள அந்தரங்கம் – மருத்துவர் ஷாலினி
சிறு விசயங்களின் கடவுள் – அருந்ததிராய்
தோழர்களுடன் ஒரு பயணம் – அருந்ததிராய்
மறுபக்கம் – பொன்னீலன்
ஊரும் சேரியும் – சித்தலிங்கையா
சாதியும் நானும் – பெருமாள் முருகன்
பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன் – புலிகளின் வெளியீடு

‘மறுபக்கம்’ தவிர்த்து அனைத்தும் சிறு சிறு நூல்களே! அதனால் விரைவில் படித்து முடித்து விடலாம் என எண்ணுகிறேன்.
தோழர் தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சம் போன்ற நூல்களையும், நக்சலைட் அஜிதாவின் வாழ்க்கைக் குறிப்பு நூலையும் சில நாட்களுக்கு முன்னர்தான் வாங்கினேன். ஒரு நூல் தவிர மற்றவை அப்படியே உள்ளன. பொறுமையா படிப்போம். 

வெள்ளி, 2 ஜனவரி, 2015

பிகே(PK) - மதங்களுக்கு எதிரான பெரும் விவாதம்

ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவான பிகே படத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது.

ஏற்கனவே வந்துள்ள பல விமர்சனங்களின் அடிப்படையிலும், மதவாதிகளின் எதிர்ப்பையும் வைத்தே படம் மிகத் தரமானது என்று புரிந்து கொண்டேன்.


எனக்குப் பிடித்த சிலவற்றைப் பட்டியலிடுகிறேன்.

1. கதாநாயகியும் அவரது காதலனும் நெருங்கிப் பழகும் வேலையில், காதலன் பாகிஸ்தான் முஸ்லிம் என்று தெரிந்தவுடன் விலக முயற்சிக்கும் கதாநாயகி.
பாகிஸ்தானை எதிரியாகக் காட்டி போலி இந்திய தேசியம் வளர்க்கும் செயலைக் கேள்விக்குள்ளாக்கியது அந்தக் காட்சி.

2. எதற்கெடுத்தாலும் சாமியாரின் உததரவுக்காக காத்துக் கிடக்கும் கதாநாயகியின் தந்தை இறுதியில் சாமியாருக்கு எதிரான  நிலையில் வந்து நிற்பது அருமை.

3. பயம்தான் ஒரு மனிதனைக் கடவுளை நோக்கி போகச் செய்கிறது என்பதை நிரூபிக்க தேர்வுகாலத்தில் கல்லூரி வாயிலில் ஒரு கல்லை வைத்து அதனை வணங்கவைத்து, வணிகமாக்கும் யுக்தி.

4. கோவில் உண்டியல் பணம், கோவிலில் உருளுவது, பொய்களை சொல்லி மதம் மாற்றுவது, கத்தியால் உடம்பில் கீறல் போடுவது, மதத்தின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்துவது என பல பிற்போக்குத் தனங்களை நேரடியாக சாடியிருக்கிறார் இயக்குனர்.

5. கடவுளைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில்தான் ஏகப்பட்ட சண்டைகள், குண்டுவெடிப்புகள்.
யாரும் கடவுளைக் காப்பாற்ற வேண்டியதில்லை. அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வார் என்கிற வசனம்.

6. மதம் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப மறுக்கும் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குனர். அமீர்கானின் செயல்களை, பேச்சைப் பார்த்து அமீர்கானின் நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொள்வது.
மதவாதிகளின் அடாவடி, கருத்து சுதந்திரம் பற்றி இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

7. தன்னிடம் அமீர்கான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததால் 'அவன் முஸ்லிம், அவன் பேச்சை நம்பாதீர். அவன் இந்து மதத்தை அழிக்க முயற்சிக்கிறான்' என்று திசைதிருப்பும் (ஆ)சாமியார். மக்களைப் பிரித்தாளும் மதவாதிகளின் செயலை இதைவிடத் தெளிவாக காட்ட முடியாது.

8. குழந்தைகளைத் தூக்கிப் பார்த்து லேபிள் ஏதும் இருக்குதா என பார்க்கும் காட்சி. எந்தக் குழந்தையும் பிறக்கும்போது லேபிளோடு பிறப்பதில்லை என்கிற வசனம்.

9. கடவுள் நம் தந்தை என்கிறீர்கள்.
எந்தக் கடவுளாவது தான் குழுந்தைகளை தரையில் உருளச் செய்து வேண்டச் சொல்வானா? என்கிற வசனம்.

படம் முழுக்க மேலும் பல நல்ல காட்சிகள், வசனங்கள் உள்ளன. படத்தில் வரும் பல பகுத்தறிவுக் கேள்விகளை பெரியாரும், திராவிட கழகத்தினரும் பல வருடங்களுக்கு முன்னரே பிரச்சாரமாக எடுத்து செய்துவிட்டார்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.


அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். திருட்டு டிவிடி வாங்கியாவது பார்த்து விடுங்கள்.

சைவம், முண்டாசுப்பாட்டி மற்றும் சில தமிழ்ப்படங்களில் கிராமத்து சாமியார்கள், குறி பார்ப்பவர்களை அம்பலப்படுத்தியிருப்பார்கள். ஆனால் கார்ப்பரேட் சாமியார்களை நம்மாட்கள் நெருங்கியதில்லை. ஒரு கார்ப்பரேட் சாமியாரை பகிரங்க சவாலுக்கு அழைத்து அம்பலப்படுகிறான் பிகே.

ஆன்மீக நாட்டம் உள்ளவர்களையும் வெகுவாக ஈர்த்ததே பிகேவின் வெற்றி.
படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் மதம் மற்றும் கடவுளுக்கு எதிராக திரும்புவார்கள் என்று சொல்ல முடியாது.
ஆனால் நித்தி, ஜெயேந்திரன், ராம்பால், ராம்தேவ் போன்ற மத வியாபாரிகளுக்கு எதிராக திரும்புவார்கள்.
பிகே புண்படுத்துவது இவர்களின் மனதைதான், இந்துமதம் சார்த்தவர்களின் மனதை அல்ல.

படத்தில் இந்து மதத்தை மட்டும் அதிகம் விமர்சிக்கிறார்கள் என்று சிலர் சொல்வது உண்மைதான்.
அப்படியானால் என்ன பொருள்?
இந்து மதத்தில் அதிக பிற்போக்குத் தனங்களும் மூடநம்பிக்கைகளும் இருக்கின்றன என்றுதான் பொருள்.
அதனைத் திருத்திக்கொள்வதுதானே நல்ல செயல்!  விமர்சிக்கவே கூடாது என்பது வன்முறையே!!

தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட தமிழ் திரையுலகை சார்ந்தவர்கள் முன்வர வேண்டும்.
நாத்திகர்கள் கிராமம் கிராமமாக இந்தப் படத்தை போட்டுக் காட்டி தங்கள் பிரச்சாரத்தைத் தொடரலாம்.

"தமிழில் எப்போது ரீமேக் செய்வார்கள்?" என்பதே படம் முடிந்து வெளிவந்த பலரின் கேள்வியாக இருந்தது.
பொறுத்திருந்து பார்ப்போம்.