திங்கள், 31 டிசம்பர், 2012

விவசாயிகளின் உயிரை விட 'நாற்பது' பெரியதா?

நேற்று எதேச்சையாக ஜெயா தொலைக்காட்சி செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சென்னையில்  நடந்த அதிமுக செயற்குழு- பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதா: "லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட தொண்டர்கள் தயாராக வேண்டும். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியின்றி போட்டியிட தயாராவோம். இந்தத் தேர்தலில் ஈடு இணையற்ற வெற்றியைப் பெறுவோம். மத்தியில் அதிகாரத்தின் மூலம் நமது அனைத்து உரிமைகளையும் பெறுவோம்."
 
 
காவிரி விவகாரத்தில்  காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா தமிழகத்தை வஞ்சிக்கிறது என்றும், அதற்கு கருணாநிதி உடந்தை எனவும் பேசிக் கொண்டிருந்தார்.

முதல்வருக்கு சில கேள்விகள்:
1). நீங்கள் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி, மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடத்தலாமே!! ஏன் செய்யவில்லை? ஆளும்கட்சி போராடக்கூடாது என எந்த சட்டத்திலும் இல்லையே! எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் போராட்டம் மேல் போராட்டம் நடத்துவதில் உங்களையும், கருணாநிதியையும் வெல்ல ஆளே கிடையாது.

2). 2014-இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்பவே தயாராகிறீர்கள். தற்போது மடிந்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கும், பயிர்களுக்கும் என்ன பதில்? உங்களது நோக்கம் முழுவதும் தேர்தலில் வாக்கு பெறுவதில் மட்டுமே உள்ளதே தவிர விவசாயிகள் மீது அக்கறையில்லை.

3). வளமான தமிழகமும், வளமான பாரதமும் அமைப்போம் என்கிறீர்கள். மத்தியில் அதிகாரத்தை பிடிப்போம் என்கிறீர்கள்.
சிரிப்புதான் வருது. மத்தியில் அதிகாரம் கிடைத்து விட்டால் இங்கு அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடுமா? இப்படி தேர்தல் கூட்டம் நடத்தி நேரத்தை வீணாக்காமல் மக்களுக்காக ஆக்கப்பூர்வ பணிகள் செய்ய முயற்சி செய்யுங்கள்.
 
இந்த அனைத்து கேள்விகளும் திமுக கட்சிக்கும் பொருந்தும்.
 
தற்போதைக்கு உங்களது அக்கறை  எல்லாம் 'நாற்பது'  மீது உள்ளதே தவிர மக்கள் மீது இல்லை.


தமிழினத்தைக் காத்திட இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம்

நல்லவேளை  நம் முன்னோர்கள் ஹிந்தியை எதிர்த்தார்கள். இல்லையென்றால் இந்த கட்டுரையை நான் ஹிந்தியில் எழுதவேண்டிய நிலை வந்திருக்கும். ஆம்! நம் தாய்மொழி தமிழ் அழிந்திருக்கும்.

"ஏன் ஆங்கிலம் கற்றதால் தமிழ் அழிந்துவிட்டதா?" என்று உடனே நீங்கள் கேட்கக்கூடும் . ஆம்! ஆங்கிலத்தாலும் நம் தாய் மொழி மெதுவாக அழிந்து வருகிறது. பேசுவதிலும், எழுதுவதிலும் ஆங்கிலக்கலப்பு அதிகமாகி விட்டது. உலகம் முழுவதும் ஆங்கிலத்தின் பயன்பாடு அதிமாகி விட்டதால் வேறு வழியும் இல்லை. ஆனால் ஆங்கிலக்கலப்பை நாம் தவிர்க்க வேண்டும். எங்கு தேவையோ அங்கு மட்டும் ஆங்கிலத்தை பயன்படுத்த வேண்டும்.

எனது பள்ளிப்பருவத்தில் நான் நினைத்ததுண்டு "ஆங்கிலத்தை போல ஹிந்தியையும் கற்றிருந்தால் இந்தியா முழுவதும் சென்று வரலாம் என்று" . திமுக தலைவர் கருணாநிதியை இந்த விசயத்தில் பல முறை திட்டி தீர்த்ததுண்டு. ஆனால் நம்  முன்னோர்கள் ஏன் ஹிந்தியை எதிர்த்தார்கள் என்று இப்போது தெரிகிறது.  உலகம் முழுவதும் சென்று வர ஏதுவாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக  ஆங்கிலம் கற்கிறோம். பின்னர் ஏன் ஹிந்தி??

 நான் இப்போது  தெலங்கானா மாநிலத்தில் இருந்து எழுதுகிறேன். எனக்கு தெலுங்கும்  தெரியாது. ஹிந்தியும் தெரியாது. ஆனால் அதனால் எனக்கு இங்கு அந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு தேவைப்பட்டால் தெலுங்கு கற்பேன். ஆனால் ஹிந்தி ஏன் கற்க வேண்டும்?? பிற  இனத்தவர்களிடம் அவர்கள் மொழியில் உரையாடலாம். அந்நிய மொழியான இந்தியில் ஏன் உரையாடவேண்டும்?

ஹிந்தி கற்பதால் நாம் அனைவரும் இந்தியர்களாக ஒன்றுபடலாம் என பலர் கருதுவதுண்டு. மாபெரும் தவறு. தாய்மொழியையும் கலாச்சாரத்தையும், தொன்மையான வரலாறுகளையும், பெருமைகளையும் ஹிந்தி அழிக்கும். அப்படி எல்லாவற்றையும் இழந்து ஒரு மொழியை கற்பதினால் என்ன பயன்?? "எனக்கு ஹிந்தி தெரியுமே!!" என்று வெளியில் சொல்லிக்கொள்ளலாம். அவ்வளவுதான். தாய்மொழியை மறந்தவன் அந்நிய மொழியை தெரியும் என்று சொல்வது அவமானம்.

ஹிந்திக்கு பிற இனங்களின் தாய்மொழிகளை அழிக்கும் சக்தி மிக உண்டு. மராத்தி, பஞ்சாபி, பெங்காலி என பல மொழிகளை தடம் தெரியாமல் அழித்து விட்டது ஹிந்தி.

இதுபற்றி நண்பர்களிடம் பேசியபோது ஒரு மாராத்திய நண்பர் சொன்னது: " மராத்தி பேச நான் ரொம்ப தடுமாறுவேன். இந்தி பேசியே பழகி விட்டதால் மகராஷ்டிராவில் பலருக்கும் இதே நிலைதான்."

தெலங்கானா நண்பர் சொன்னது: "தெலங்கானாவில் பலருக்கும் தெலுங்கு தெரியும். ஆனால் பேச கூச்சப்படுகிறார்கள். இந்தி பேசுவதையே பெருமையாகக் கருதுகிறார்கள்."

இதுபோன்ற நிலை நம் தாய்மொழி தமிழுக்கும் வந்துவிடக்கூடாது. இந்தியை திணிக்க முயற்சிக்கும் இந்திய அரசின் செயல்களை தொடர்ந்து  முறியடிப்போம்.

தமிழ்ப் பெற்றோர்களே, தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது அப்பள்ளியில் இந்தி கட்டாயம் இருந்தால் அப்பள்ளிகளை புறக்கணியுங்கள்.

ஓர் இனத்தின் அடையாளமே அந்த இனத்தின் மொழிதான்.
தமிழ் அழிந்து போனால் நம்மை எப்படி அடையாளப் படுத்துவது???

பிற மொழி திணிப்பை எதிர்ப்போம். தாய்த்தமிழ் காப்போம்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

பான் கி மூன் என்னும் சீனப் பிரதிநிதி

பான் கி மூன்
யார் இவர்?
பலரும் சொல்வது: ஐக்கிய நாட்டு சபையின் பொதுச்செயலாளர்.
ஆனால்  இவரது செயல்பாடுகளை உற்றுநோக்கினால் இவர் சீனாவின் பிரதிநிதியா என்னும் சந்தேகம் கண்டிப்பாக எழும்.

இலங்கையில் இனப் படுகொலையை தடுக்க ஐ.நா. தவறிவிட்டது என்று ஐ.நாவின் முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையிலான விசாரணைக் குழு குற்றம் சாட்டியது.

இறுதிப் போரில் ஈழத் தமிழரைக் காப்பாற்ற தவறிவிட்டோம் என ஐ.நா. செயலர் பான் கி மூன் ஒத்துக்கொண்டார்.

அப்படியானால் எம் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன என்பதில் ஐ.நா சபை இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை. கொலையாளியான இலங்கையிடம் விசாரணைப் பொறுப்பைக் கொடுத்து தமிழர்களுக்கு அநீதி இழைக்கிறது.

இனப்படுகொலைக்கு முன்னும் பின்னும் இலங்கை-சீனாவின் நட்பு மிகப் பலமாக உள்ளது. உலகின் பல வல்லரசு நாடுகளும் ஐ.நா வுக்கு பணியும்போது இலங்கை ஏன் பணியவில்லை? அதன் பின்னணி என்ன? கண்டிப்பாக சீனா கொடுக்கும் பெரும் ஆதரவுதான்.

இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகமாகி விட்டது.
தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு இந்த நேரத்தில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் எந்த சக்தி அதை தடுத்து நிறுத்துகிறது? கண்டிப்பாக பான் கி மூன் என்னும் சீனப் பிரதிநிதி தான்.

விஜய் நம்பியார், ஜேம்ஸ் ஹோல்ம்ஸ், பான் கி மூன் ஆகிய ஐ.நா அதிகாரிகளும் இனப்படுகொலைக்கு துணை போனவர்கள். தங்களின் குற்றம் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக பொது வாக்கெடுப்பு பற்றி இவர்கள் வாய் திறப்பதே இல்லை.

மாவீரன் முத்துகுமார் தனது  பதினான்கு அம்சக் கோரிக்கைகளில் இரண்டாம் கோரிக்கையாக எழுதியது:

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

December 30, 2012:
டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் மரணத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீமூன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

டெல்லி மாணவிக்காக பான்கீமூன் வருந்துவது  ஊரை ஏமாற்றும் நாடகம். தமிழீழத்தில் சிங்களக் காடையர்களால் எம் தமிழ்ச்சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்களே! அதை வேடிக்கை பார்த்துவிட்டு, அதை மறைக்க முயற்சி செய்யும் பான்கீமூன் டெல்லி பெண்ணுக்காக வருந்துவது நகைச்சுவை!

பான்கீமூன்  பற்றி முத்துகுமார் அப்பவே சொல்லி விட்டார். நாம்தான் தாமதமாகப் புரிந்து கொண்டோம். ஐ.நா வாசலில் காத்துக் கிடந்தால் நீதி கிடைக்காது. ஐ.நா-வின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

தமிழர்கள் இந்தப் பணியை விரைந்து செய்ய வேண்டும்  

வியாழன், 27 டிசம்பர், 2012

உங்களுக்காவது 10 நிமிடம் கொடுத்தார்கள்! எங்களுக்கு??

டெல்லியில் 57-வது தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் இன்று காலை தொடங்கியது. பிரதமர் மன்மோகன்சிங் இந்தக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். பின்னர் மாநில முதல்வர்கள் பேசினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்த போது 10-வது நிமிடத்தில் மணி அடித்து அவரை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனால் கடுமையாக அதிருப்தி அடைந்த ஜெயலலிதா தமது எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டு வெளிநடப்பு செய்தார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/27/india-jayalalitha-walks-of-ndc-meet-166958.html
இந்திய அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்திய அரசே!
காங்கிரஸ் ஆளாத மாநிலங்களை, குறிப்பாக தமிழகத்தை பல வழிகளில் வஞ்சிக்கும் தான்தோன்றித்தனத்தை நிறுத்திக் கொள்!

அனைத்து மாநிலத் தலைமையும் தங்களுக்கு பணிவார்கள் என நினைக்காதே! தலைமை பணிந்தாலும் மக்கள் பணியமாட்டார்கள்.

தமிழர்களின் பிரதிநிதியை அவமதித்தது மூலம் ஒட்டுமொத்த தமிழினத்தையே அவமதித்துள்ளது இந்திய அரசு.

தமிழர்கள் அனுபவிக்கும் இன்னல்களை விவரிப்பதற்கு ஒரு நாள் போதாது. இந்த லட்சணத்தில் பத்து நிமிடம் எப்படி முடியும்??

இந்த பத்து நிமிடத்தில் எதைப் பற்றி பேசுவது?

காவிரியில் எங்கள் உரிமையைத் தராமல் உள்ளாயே! அதைப் பற்றி  பேசுவதா??
பயிர்கள் வாடுகிறதே! அதைப் பற்றி பேசுவதா??
அதனால்  எம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்களே! அதைப் பற்றி பேசுவதா??

இலங்கையால் துன்புறுத்தப்படும் மீனவர்கள்  பற்றி பேசுவதா?

தமிழகத்திற்கு மின்சாரம் தராமல் பிற மாநிலங்களுக்கு கொடுக்கிறாயே! அதைப் பற்றி  பேசுவதா??

அந்நிய முதலீடு அனுமதித்து வணிகர்களை நசுக்குகிறாயே! அதைப் பற்றி  பேசுவதா??
எம் இனத்தை அழித்த கொடுங்கோலன் ராஜபக்சேவை வரவேற்று விருந்து கொடுக்கிறாயே! அதைப் பற்றி  பேசுவதா??
இலங்கை ஓநாய்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து பயிற்சி அளிப்போம் என்கிறாயே! அதைப் பற்றி  பேசுவதா??
தமிழர்களுக்கான நீதியை/உரிமையை  இந்திய அரசிடம் எதிர்பார்க்க முடியாது. அது நமக்கானது அல்ல. ஐந்து வருசத்துக்கு ஒருமுறை வாக்குகளை பொறுக்க மட்டுமே நம்மைப் பற்றி யோசிப்பார்கள். அதனால் இந்திய அரசை ஓரங்கட்டுவோம்.

நம்ம விசயத்துக்கு வருவோம்.
முதல்வர் அவர்களே! 
அதே நேரத்தில் உங்களுக்கு இன்னொன்றையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களையாவது அழைத்து, உபசரித்து பத்து நிமிடம் கொடுத்தார்கள். நீங்கள் எங்களுக்கு அதை கூட தரவில்லையே!!

"கூடன்குளம் மக்களில் ஒருத்தியாக இருப்பேன்" என்று உள்ளாட்சி தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு அதே மக்களை அடித்து, வீடுகளை நொறுக்கி அவர்களை அகதிகளாக மாற்றினீர்களே! 
லூர்துசாமி என்னும் முதியவரை குண்டர் சட்டத்தில் அடைத்தீர்களே!
 உங்களின் காட்டாட்சிக்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே அவதிப்படுவது தமிழக மக்கள்.
என்றைக்காவது ஒருநாள் விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் பயணிப்போம்..............................................

திங்கள், 24 டிசம்பர், 2012

திடீர் நாட்டாமைகள்!!

இந்தியத் தலைநகர் டெல்லியில் ஒரு மருத்துவ மாணவி சில மனிதத்தோல் போர்த்திய மிருகங்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள்.

உடனே சுஷ்மாக்கள் கொந்தளிக்கிறார்கள். ஜெயா பச்சன்கள் கண்ணீர் விடுகிறார்கள். மீடியாக்கள் ஒப்பாரி வைக்கின்றன. எதிர்க்கட்சிகள் அறிக்கையால் தாக்குகின்றன.

 இளைஞர் சமுதாயமும், மாணவர் அமைப்புகளும் திடீர் நாட்டாமைகளாக மாறி "Hang the Rapists [குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்]" என அதிரடித்(?) தீர்ப்பு கொடுக்கின்றனர்.

"இவ்வளவு நாள் இவர்கள் எங்கு சென்றார்கள்?" என்று நான் முட்டாள்தனமாக கேட்கமாட்டேன். இளைஞர்களின் இந்த போராட்டத்தை நான் வரவேற்கிறேன். கண்டிப்பாக இந்த போராட்டம் ஆட்சியாளர்களுக்கு மிகுந்த பயத்தை கொடுத்திருக்கும்.

இந்த போராட்டம் எப்படி ஓடுக்கப்படும் என நான் நினைத்தேனோ அதைப்போலவே இந்த போராட்டம் ஒடுக்கப்பட்டது. ஆம்! ராஷ்டிரபதி பவனுக்கு அருகில் உள்ள மெட்ரோ ஸ்டேஷன்கள் மூடப்பட்டன. கண்ணீர்ப்புகை, தண்ணீர் பீய்ச்சி அடித்தல்  என ஆட்சியாளர்கள் விடுத்த வேலையை காவல்துறை திறமையாக செய்தார்கள்.

வழக்கம்போல சில காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.  போராட்டக்காரர்கள் என்னும் வார்த்தை கலவரக்காரர்கள் என்று மாற்றப்பட்டு அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் தடியடிக்கு ஆளானார்கள். மீடியாக்காரர்கள் தாக்கப்பட்டு  அவர்கள் கருவிகளும் உடைக்கப்பட்டன.

தமிழ்நாட்டிலேயே இது மாதிரி பல போராட்டங்களையும், ஒடுக்குமுறைகளையும் பார்த்துவிட்டதால் இந்தியத் தலைநகரில் நடைபெற்ற இந்த போராட்டம் ரொம்ப பெரிதாக தெரியவில்லை.

சரி, விசயத்துக்கு வருவோம்.

போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் "Gang the Rapists" என்னும் வாசகங்களை கொண்ட அட்டைகளை ஏந்திக் கொண்டிருந்தனர். மீடியாவில் பேட்டி  கொடுத்த பலரும் இதே கருத்தை சொன்னார்கள். சித்ரவதை செய்து அணு அணுவாகக் கொல்ல வேண்டும் என பலர் சொன்னார்கள்.

"இதற்கு மரண தண்டனை வேண்டாம்" என கருத்து கூறிய நடிகர் கமலுக்கு எதிராக இணையதளங்களில் ஏராளமான வார்த்தைகள். "அவர் மகள்களுக்கு இப்படி நேர்ந்தால் இப்படி பேசுவாரா??" என பலர் விவாதம் செய்கிறார்கள்.


கட்ஜு [Markandey Katju] என்னும் ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு கேள்வி தொடுத்திருந்தார்: "கிராமப்புறங்களில் இதைவிட கொடுமையான பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. அவற்றை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை?". அதுதானே உண்மை.

அங்கு போராட்டம் நடந்த அதேவேளையில் இங்கு தூத்துக்குடியில் புனிதா என்னும் சிறுமி மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டதே!! அவற்றை ஏன் மீடியாக்கள் வெளி கொண்டுவரவில்லை??

ராணுவ அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும்  பல ஏழைப்பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் தூக்கிலிட வேண்டுமென சொல்லக்கூட நமக்கு தைரியம் இல்லையே!

டெல்லி சம்பவத்தின்போது குற்றவாளிகள் அனைவரும் போதையில் இருந்துள்ளனர் . மது ஊற்றிக்கொடுத்த அரசையும், போதையில் தெருவில் நடமாட அனுமதித்த அரசையும் நாம் கண்டிக்கவில்லையே!

மது, கஞ்சா, புகையிலை மற்றும் பல சமுதாயச் சீர்கேடுக் காரணிகள்  இருக்கும்வரை  சமுதாயத்தில் இதுபோன்ற சீர்கேடுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஒன்றிரெண்டு சம்பவங்கள் நம்மை மிகவும் பாதிக்கின்றன. அதன் விளைவுதான் டெல்லியில் நடந்த போராட்டம்.

இந்த மாதிரி போராட்டங்களை  எப்படி வாக்குகளாக மாற்றலாம் என கட்சிகள் கணக்கு போடும்.  ஆனால் "சமுதாயச் சீர்கேடுகளை ஒழிப்போம், தனிமனித ஒழுக்கத்தை வளர்ப்போம். சமுதாயத்தை திருத்துவோம்"  என்னும் கருத்துக்களோடு யாரும் முன்வருவதில்லை. அப்படியே ஒருசிலர் வந்தாலும் அவர்களை நாம் கண்டுகொள்வதில்லை.

இதுபோன்ற போராட்டங்கள் அரசை ஸ்தம்பிக்கச் செய்யும். ஆனால் சமுதாயத்தை சீர்திருத்தாது.

பலரும் சொல்லுகிறபடியே குற்றவாளிகளை தூக்கிலிடுவோம். எல்லோரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவோம். இனிப்பு வழங்குவோம். மகிழ்ச்சி அடைவோம். அதற்கு அப்புறம்?? குற்றங்கள் குறைந்து விடுமா? சமுதாயம் நல்வழியில் பயணிக்குமா?திருத்தப்பட வேண்டியது ஒட்டுமொத்த சமுதாயமும்!

தூத்துக்குடியில் சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மற்றொரு திடீர் நாட்டாமை திமுக கருணாநிதி கூறியுள்ளார். தன்  வீட்டில் வேலை பார்த்த கேரள சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொன்றேவிட்டனர் திமுகவை சார்ந்த பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாரும் அவரது நண்பர்களும். அவரைக் கண்டிக்காதவர்கள் இப்போது போராட்டம் நடத்திக் கிழிக்கப் போகிறார்களாம்.
ஓட்டுப் பொறுக்கிகள்!

வெள்ளி, 21 டிசம்பர், 2012

நாதியற்றுப் போனதடா என் தமிழ் இனம்

(source: http://www.indiaresists.com/koodankulam-jailed-idinthakarai-woman-dies-for-want-of-timely-treatment/)கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் ரோஸ்லின் அவர்கள் மரணம் அடைந்த செய்தி மிக மன உளைச்சலைத் தருகிறது.

இந்த துன்பவியல் சம்பவத்திற்கு யார் காரணம்?

63 வயதில் நோய்வாய்ப்பட்ட ஒரு பெண்மணியை சிறையில் அடைத்து போதிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்காத தமிழக முதல்வரும் இந்திய அரசும் காரணம். இந்த உலகில் அனைவருக்கும் போராட உரிமை இருக்கும் பொது இடிந்தகரை பெண்ணுக்கு இல்லாமல் போனதா?

கூடங்குளம் வந்து மத்திய அரசின் அறிக்கையை வாசித்து சென்ற அய்யா அப்துல் கலாம் அவர்களே, நீங்கள் மெத்த படித்தவர்தானே! உங்களுக்கு கூட இது  தெரியாமல் போனதே!! உங்களை நம்பி வல்லரசு கனவு கண்டுகிட்டு இருக்கிறவன் நிலை ரொம்ப பரிதாபம்!!

பல மீடியாக்களில் இந்த செய்தி வரப்போவதில்லை. இங்கு இறந்தவர் ஒரு சாமானியப் பெண்தானே! அதுவும் தமிழச்சிதானே! பின்னர் எப்படி கண்டுகொள்வார்கள்?? மாறாக இந்த செய்தியை எப்படியெல்லாம் திரித்து எழுதப் போகிறார்களோ!!

டெல்லியில் ஒரு சகோதரி பாலியல் வன்முறைக்கு ஆளானபோது கண்டித்த தமிழர்களும் பல ஊடகங்களும் இப்போது கண்ணைக் கட்டிக்கொள்வார்கள்.

இந்தியா மீது போர் தொடுத்ததாக அந்த அம்மா மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. இந்த வயதில் அப்படி என்ன போர் செய்யமுடியும்? தெருவில் நின்று உங்கள் ஆதிக்கத்தை எதிர்த்து சில நிமிடங்கள் குரல் கொடுக்க முடியும். வேறு என்ன செய்ய முடியும்??


ஊரில் எங்கு எழவு விழுந்தாலும் எம் தமிழினம் வருந்தும்.
ஆனால் தமிழினத்தில் பல இழவுகள் விழுந்தும் அதைக் கண்டுகொள்வார் இல்லையே!!

"இந்த வயதில் ஏன் போராட்டக்களத்திற்கு சென்றார்" என்று தங்கள் நாக்குகளால் விஷத்தை உமிழ்வார்கள் பலர். அவர் சென்றது அவருக்காக இல்லை. உனக்காகவும், எனக்காகவும் நம் சந்ததிக்காகவும். அதற்கு கைமாறாக என்ன செய்யப்போகிறோம்??


"விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை"- என்று மாவீரன் முத்துக்குமார் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது.

வியாழன், 20 டிசம்பர், 2012

நான் வாங்கிய வேத நூல்

அலுவலகத்தில் Facebook தடை செய்யப்பட்டு விட்டது.
தமிழ் தொலைக்காட்சிகளும் பார்க்க முடியவில்லை.
தமிழ் இதழ்களும் இங்கு அவ்வளவு கிடைப்பதில்லை.

அதனால் ஏதாவது ஒரு தமிழ்ப் புத்தகம் வாங்க முடிவு செய்தேன்.

புத்தகம் வாங்க வேண்டும்.
திரும்பத் திரும்ப படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும்.
நம்மை சோர்வடைய செய்யக்கூடாது.

இப்படி ஒரு புத்தகம் எதுவாக இருக்கும்??

உடனே என் நினைவில் வந்தது "பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்" என்னும் நூல். அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய எழுச்சி நூல்.

இணையதளத்தில் பதிவு செய்து வாங்கி விட்டேன்.

தலைவர் புகழ் பாடுவது, பெருமை பேசுவது மட்டும்  என் பணி  அல்ல.

ஓர் இனத்தின்  சுதந்திர போராட்டத்தினை முற்றிலுமாக அறிந்து, அதை வெளியுலகிற்கு எடுத்துச்செல்ல செண்டும்.
எதிரிகளையும், துரோகிகளையும் அடையாளம் காட்ட வேண்டும்.

அதற்கு  இந்த நூல் நல்ல துணையாக இருக்கும்.


இந்த நூலினை பார்த்தவுடன் இரு தெலுங்கு நண்பர்கள் "Guru, Are you going to be a Tamil Tiger?? [என்ன குரு,  தமிழ்  புலியாக போறீங்களா?]" என்று ஏளனம் செய்தார்கள்.

ஏன் நம்ம ஊரில் உள்ள நண்பர்களே "இப்படி இருந்தால் பொண்ணு தரமாட்டார்கள்" என்று கூட சொல்லியிருக்கிறார்கள்.

பலரும் ஈழப்போராட்டத்தை 'ஓர் ஆயுதப்போராட்டம்' என ஒரு வரியில் சொல்லிவிட்டு முடித்து விடுகிறார்கள்.
ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் விடுதலைப்போராட்டம் என்பது பலருக்கு தெரியவில்லை.

அது சரி, சுக போக அடிமைகளாக வாழ்ந்து பழகி விட்டோம். பின்னர் எப்படி விடுதலை பற்றி யோசிக்க முடியும்..


பிரபாகரனிசம் என்பது ஆயுதம் தூக்குவதையோ, வன்முறையையோ ஊக்குவிக்காது.
மாறாக அது போராட்டக்குணத்தினை வளர்க்கும்.


"போராடாதவன் ஜடம்" - தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் 

இந்த நூலினை கையில் வாங்கியவுடன் ஏதோ ஒரு வேத நூல் என் கையில் இருப்பதை போல ஓர் உணர்வு. மேலோட்டமாக படித்து பார்த்தேன். மிக அருமையாக தொகுத்துள்ளார் அய்யா நெடுமாறன் அவர்கள். அய்யாவுக்கு மிக்க நன்றி.


செவ்வாய், 18 டிசம்பர், 2012

சுஷ்மாவின் நீலிக்கண்ணீர்

டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடியவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். அவர்களை தூக்கில் தொங்க விட வேண்டும் என்று லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசினார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/18/india-delhi-rape-jaya-bachchan-breaks-down-rs-166508.html

அவர் பேசியது சரிதான்.

ஆனால் ஈழத்தில் பல தமிழ் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த சிங்களர்களை தண்டிக்க வேண்டும் என நாங்கள் சொல்வது ஏன் சுஷ்மா காதுகளில் விழவில்லை??

'தமிழர்கள் ஈழம் கேட்கக்கூடாது' என்று மிரட்டல் கொடுத்த ஓட்டுப்பொறுக்கி சுஷ்மா.

கொடியவன் ராஜபக்சேவை மத்தியப்பிரதேசத்துக்கு அழைத்து  அவனுக்கு யோக்கியன் பட்டன் கொடுத்த சுஷ்மாவுக்கு மற்றவர்கள் செய்யும் கொடும்செயல்கள் பற்றி பேசத் தகுதி இல்லை.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

மது அரக்கனை ஒழிக்க புறப்பட்ட அய்யா வைகோவும் அதை விமர்சிக்கும் அரக்கர்களும்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து நடைபயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார்.

உவரியில் துவங்கிய நடைபயணம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் வழியாகச் சென்று வரும் 25ம் தேதி மதுரையில் நிறைவடைகிறது. இந்த பயணத்தின்போது வைகோ உள்ளிட்டோர் வழிநெடுகிலும் உள்ள கிராமங்கள், நகரங்களில் மதுவிலக்கு குறித்து பிரச்சாரம் செய்கின்றனர்.

ஒரு நாளைக்கு 25 கிமீ தூரம் நடக்கும் வைகோ 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்கிறார். மேலும் மக்களுக்கு பூரண மதுவிலக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் வழங்குகிறார்.

இந்நிலையில் வரும் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள மதிமுகவினர் அந்தந்த ஊர்களில் மதுவிலக்கு குறித்த பிரச்சார அட்டைகளை ஏந்தி நடைபயணம் செல்கின்றனர்.

மது பழக்கம் இல்லாத இளைஞர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வைகோவுடன் நடைபயணத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல இணையதளங்களில் இதுகுறித்து சிலர் மிக மோசமாக விமர்சிக்கின்றனர்.

விமர்சனங்களும் எனது பதில்களும்:

வைகோ அவர்கள் இவ்வளவு நாள் எங்கே சென்றிருந்தார்?
பதில்: வைகோ எங்கும் செல்லவில்லை. இங்கேயேதான் இருந்து தமிழர் நலனுக்கான பல போராட்டங்களை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறார். அவர் ஆரம்பத்திலிருந்தே மது ஒழிப்பை மேடைகளில் முழங்கி வருகிறார். தாங்கள் மது ஒழிப்புக்காக இதுவரை என்ன செய்தீர்கள்? அல்லது இந்த கேள்வியை கருணாநிதியை நோக்கியோ, ஜெயாவை நோக்கியோ கேட்க வேண்டியதுதானே?? நல்லது செய்யுங்கள். அல்லது நல்லது செய்பவர்களை ஆதரியுங்கள். வெட்டி விமர்சனம் செய்யாதீர்கள்

ஒட்டுக்களை பெறத்தான் இந்த மது ஒழிப்பு போராட்டம்
பதில்: முற்றிலும் பொய். ஒருவேளை ஓட்டுக்காக அவர் இந்த போராட்டத்தை செய்தாலும் அதில் என்ன தவறு? அவர் இலவசத்தை கொடுத்து ஒட்டு கேட்கவில்லையே!! சாதியை சொல்லி ஒட்டு கேட்கவில்லையே!

அவருக்கு வேறு வேலை இல்லை. அதான் இந்த நடைபயணம்
பதில்: இந்த விமர்சனத்தை வைப்பவர்கள் மாபெரும் சுகபோக அடிமைகள். தன் சமூகத்தை பற்றி கவலை இல்லாதவர்கள். திண்ணை அரசியல் பேசுபவர்கள். இவர்களுக்கு ஒரே கேள்வி: தங்கள் மகன்/மகள் மதுக்கடை வாசலில் நின்றால் அதை பொறுத்துக் கொள்வீர்களா?

"மது பழக்கம் உடையவர்கள் கட்சியிலிருந்து வெளியேறுங்கள்" என்று முழங்க இங்கு வேறு எந்த தலைவரும் உண்டா?

வைகோ அவர்களின் இந்த போராட்டத்தின் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள். இதை போராட்டம் என்று சொல்வதை விட "மது ஒழிப்பு புரட்சி" என்றுதான் சொல்ல வேண்டும்.

மது ஒழிப்போம். நல்லதொரு தமிழ்ச்சமூகம் அமைப்போம்

வேறு விமர்சனங்கள் இருந்தால் பதிவு செய்யுங்கள். நன்றி

யாரெல்லாம் அணு உலையை ஆதரிக்கிறார்கள்?

1.அணு உலை, அணுக்கழிவு இவற்றின் ஆபத்து பற்றி சரியாக தெரியாதவர்கள். சூரிய ஒளி, காற்றாலை, கடல் அலைகள், நீர் அணைகள் இவற்றிலிருந்து பெரும் அளவில் மின்சாரம் தயாரிக்கலாம் என்ற உண்மை இவர்களுக்கு தெரியாது.

2.தினமலர் போன்ற ஊடகங்கள் சொல்வதை அப்படியே நம்பி, தங்களுக்கு உலக அரசியல் தெரிந்தது போல காட்டிக்கொள்பவர்கள். கல்பாக்கம் அணு உலையால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி இவர்களுக்கு தெரியாது. தமிழ்நாட்டின் மின் தட்டுப்பாடு 4000MW விட அதிகம் . கூடங்குளத்திலிருந்து 300MW கூட கிடைக்காது என்ற உண்மை இவர்களுக்கு தெரியாது.

3.அப்துல்கலாம் சொல்வதே வேதவாக்கு என்று நம்பி மல்லாக்க படுத்து வல்லரசு கனவு காண்பவர்கள். போபாலில் என்ன நடந்தது என்று கூட இவர்களுக்கு தெரியாது.

4.தன் வீட்டுக்கு வெளிச்சம் வேண்டும். இதற்காக பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்தாலும் பரவாயில்லை என்று கருதுபவர்கள். இன்னொரு இனப்படுகொலை நடந்தாலும் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்கள்.

5.சில ஓட்டுப்பொறுக்கி கட்சி தலைவர்கள் சொல்வதை அப்படியே கேட்கும் முட்டாள் தொண்டர்கள்.
இதுபோக வேறு பிரிவினர் இருந்தால் தெரிவிக்கவும்.
நீங்கள் யாரேனும் இந்த பிரிவுகளில் இருந்தால் தங்களை மாற்றிக்கொள்ளவும்.
நன்றி