ஞாயிறு, 30 டிசம்பர், 2018

நூல் விமர்சனம்: 'ஈரோட்டுப் பாதை சரியா?' - ப.ஜீவானந்தம் (புதுமை பதிப்பகம்)

வழக்கமா பெரியார் குறித்து விமர்சனங்களில் ஒருவித வெறுப்பு அரசியல் இருக்கும், அவதூறுகள் இருக்கும், தவறான தகவல்கள் இருக்கும்.
ஆனால் இந்த நூல் பெரியாரின் முரண்பாடான நிலைப்பாடுகளை நேர்மையாக அலசுகிறது.

காங்கிரஸ் மீதான  கண்மூடித்தனமான எதிர்ப்பால் உப்புசத்தியாகிரகம் மற்றும் சட்டமறுப்பு இயக்கங்களை புறக்கணித்தது,
"சமூக சீர்திருத்த இயக்கமா? அரசியல் இயக்கமா?" என்பதில்  முரண் நிலைப்பாடுகள்,
ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பில் அக்கறை காட்டாமை என பல தகவல்கள் நிரம்பியுள்ளன.

ஜஸ்டிஸ் கட்சி(நீதிக்கட்சி) என்பது  பெரிய முற்போக்கு கட்சி அளவிற்கு தமிழ்நாட்டில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரியாரின் நாத்திக & பொதுவுடைமை பிரச்சாரங்களுக்கு தடை போட்டது, பெரியாரைக் கைது செய்தது என பல அட்டூழியங்களை செய்துள்ளது நீதிக்கட்சி. ஆனாலும் அந்த மானங்கெட்ட கட்சியை ஆதரித்திருக்கிறார் பெரியார்.

"நான் ஏன் நாத்திகன் ஆனேன்?" என்கிற பகத்சிங்கின் நூலை மொழிபெயர்த்த காரணத்திற்காக தோழர்.ஜீவானந்தம் மற்றும் வெளியிட்ட ஈ.வெ.கிருஷ்ணசாமி  (பெரிய நாயக்கர் என்று அழைக்கப்பட்டாராம்) ஆகியோரை சிறையில் அடைத்தது நீதிக்கட்சி அரசு. இந்த விவகாரத்தில்  மன்னிப்பு கேட்குமாறு ஜீவானந்தம் அவர்களை வற்புறுத்தியிருக்கிறார் பெரியார்.
இவ்வாறு பல புதிய தகவல்கள் நிரம்பியுள்ளன.வெள்ளி, 11 மே, 2018

ஆபரேஷன் நமோ

கடந்த நாடாளுமன்றத்தேர்தல்(2014) நடக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னரே "மோடி அலை" என்னும் மாயத்தை திட்டமிட்டு உருவாக்கினார்கள். குஜராத்தில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல சித்தரித்தார். "குஜராத் ஒளிர்கிறது", "vibrant குஜராத்" என ஏதேதோ பேசினார்கள்.

சரி, இதெல்லாம் இந்தியா முழுக்க அனைத்து இடங்களிலும் எப்படி போய் சேர்ந்தது?
சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே. பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் மூலமாக பொய் செய்திகளைப் பரப்பினார்கள். போட்டோஷாப், மார்பிங் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டன.
நானும் ஆரம்பத்தில் இந்த கதைகளை நம்பினேன். நம்பவைக்கப்பட்டேன்.

கடந்த நாலு வருடத்தில் என்ன நடந்தது?
விலைவாசி குறைந்ததா? இல்லை.
பெட்ரோல், டீசல் விலை குறைந்ததா? இல்லை.
வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டனவா? இல்லை.
விவசாயிகளின் நலன் பாதிக்கப்பட்டதா? இல்லை.
இங்கே எதுவும் நடக்கவில்லை.

ஆனால் என்ன நடந்தது?
முதலாளிகளுக்கு அதிக கடன் தள்ளுபடிகள் செய்யப்பட்டன.
மக்கள் விரோத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
பல உதாரணங்களை சொல்ல முடியும்.
என்ன சாப்பிட வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ் என்னும் ஒரு மதவாதக் கும்பல் தீர்மானிக்கும் நிலை உள்ளது.
மாட்டுக்கறி உண்டதற்காக கொலை செய்யப்படும் நிலை ஏற்பட்டது.
இந்துத்துவமும், இந்தியும் திணிக்கப்படுகின்றன. பெரும் பாசிசத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. எதிர்த்து கேள்வி எழுப்பியோர் ஒடுக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். நீதிமன்றம், சிபிஐ, வருமானவரித்துறை அனைத்தையும் தன் நலனுக்காக பாஜக பயன்படுத்தியது.

எப்படி தடுத்து நிறுத்துவது?
அவர்கள் சென்ற அதே வழியில்தான் நாமும் அவர்களை வீழ்த்த முடியும்.
பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றை பாசிச எதிர்ப்புக்காக பயன்படுத்துவீர். சொந்தக்காரன் என்ன நினைப்பான்? கூட வேலை செய்றவன் என்ன நினைப்பான்? போன்ற தயக்கங்களை விட்டொழியுங்கள். ஏனெனில் பாஜக ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் இப்படியெல்லாம் நினைப்பதே இல்லை. மோடி ஆதரவு நிலைப்பாடு எடுப்பவர்களிடம் ஆரோக்கியமான  விவாதம் செய்யுங்கள். உண்மையான ஆதாரங்களோடு விளக்குங்கள். மோடி(பாசிச) எதிர்ப்பை வலுப்படுத்துங்கள்.

சரி, என்னதான் தீர்வு?
நிச்சயமாக காங்கிரஸ் தீர்வு  கிடையாது. மாநில சுயாட்சியே தீர்வு.
இந்தியா முழுவதும் உள்ள  மாநிலக் கட்சிகளை வலுப்படுத்தி அதிகாரத்தைப் பகிர்வதே தீர்வு. அப்போதுதான் மாநில உரிமைகளைக் காக்க முடியும். மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுக்க முடியும்.

”ஆபரேஷன் நமோ"வில் தங்களை இணைத்துக் கொள்வீர்.
மோடி ஆட்சியின் அவலங்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களிடம் எடுத்து செல்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இப்போது நாம் விட்டால் நம் தலையில் நாமே மண் அள்ளிப்போட்டது போல ஆகிவிடும்.
2019 தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது. ஒருவேளை மீண்டும் பாஜக பெரும்பான்மையோடு  வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அதற்கு அடுத்த வருடங்களில் தேர்தலே இல்லாத நிலை ஏற்படும். சர்வாதிகாரத்தின் கீழ் வாழ நேரிடும்.
சிந்தித்து செயல்படுவீர்

வியாழன், 4 ஜனவரி, 2018

வரலாறு தெரிய வேண்டும் என்பதெல்லாம் ஓர் அரசியல் தகுதியா?

"ரஜினிக்குத்  தமிழர் வரலாறு தெரியுமா? பூலித்தேவனைப் பற்றித் தெரியுமா? தீரன் சின்னமலை பற்றித் தெரியுமா?..." என தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

உடனே பத்ரி சேசாத்திரிக்கு கோபம் வந்துவிட்டது. அவரும் ரஜினியின் "ஆன்மீக" வழியில் செல்லும் நபராச்சே!
(பாபர் மசூதி இடிப்பின்போது பெரும்  மகிழ்ச்சியில்  இருந்த 'ஆன்மீக'வாதிதான் இந்த சேசாத்திரி.)

"வரலாறு தெரிந்து என்ன செய்யப் போகிறார்? இதெல்லாம் ஒரு தகுதியா? ஓபிஎஸ்க்கு வரலாறு  தெரியுமா?..." என எதிர் கேள்வி எழுப்பியிருந்தார் பத்ரி.

மேலோட்டமாக யோசித்தால் பத்ரி கூறுவது சரிதானே எனத் தோன்றும். ஆனால் முற்றிலும் தவறு.

மேலும் அவரது கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது.
வரலாறு தெரியாத காரணத்தினால்தான் ஓபிஎஸ் போன்றோரை இந்துத்துவக்/பிராமணக்  கும்பல் தங்களின் அடிமையாகப்  பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.

வரலாற்றை மறந்த காரணத்தினால்தான் விடுதலைப் போராளிகளை, பெருமைமிக்க அடையாளங்களை சாதியக் கும்பல்கள் தங்கள் வசப்படுத்திக் கொண்டன.
தற்போது இந்துத்துவக் கும்பலும் அந்தப் பணியைத்தான் செய்கின்றன. மருது ஜெயந்தி கொண்டாடுவது, தீரன் சின்னமலைக்கு விழா எடுப்பது என பல செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இதனை எதிர்கொண்டு முறியடிக்க அரசியல் செய்ய வேண்டும். அதற்கு வரலாற்றுப் பார்வை வேண்டும்.
ஆகவே இங்கு அரசியலில் இருப்போருக்கு வரலாற்றுப் பார்வை கட்டாயம் இருக்க  வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ரஜினி அரசியல் அறிவிப்பு குறித்த எதிர்வினைகள்

மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறத் துவங்கும்போது மக்களை அரசியல் நீக்கம் செய்ய சிலக் கோமாளிகள் களத்தில் இறக்கப்படுவது இயல்புதான்.***************

மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு மக்களே  போராடுவதுதான்   உண்மையான அரசியல். இந்த அரசியல் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுகிறது.

ஆனால் போராட்டமே வேண்டாம் என்கிறார் ரஜினி.
"நல்லா வாழு, நல்லதே நினை" என ஆன்மீக சொற்பொழிவு கொடுப்பதுதான் ரஜினியின் அரசியல்.

****************

சாமானியன்: ஐயா, எங்க ஊருல தண்ணீர், சாலை வசதி இல்லைங்க. ரொம்ப கஷ்டப்படுறோம்.

ரஜினி: நிம்மதியா தியானம் பண்ணுங்க. நல்லதையே நினைங்க. நல்லதே நடக்கும்.

சாமானியன்: ???

****************

யாரும் அரசியல் பேச வேண்டாம்.
விமர்சனங்கள் வைக்க வேண்டாம்.
அறிக்கைகள், போராட்டங்கள் வேண்டாம்.
ஆன்மீக அரசியலை முன்னெடுப்போம்.
தேர்தலில் சந்திப்போம்...

// இதைதான் சொல்லுறார் ரஜினி.
விஜயகாந்தை விட மோசமா இருக்கு...

*************

போராட்டத்தினால்தான் ஜல்லிக்கட்டு காப்பாற்றப்பட்டது.
போராட்டத்தினால்தான் காவிரி, முல்லைப்பெரியாறு உரிமைகள் தக்கவைக்கப்பட்டன.
போராட்டத்தினால்தான் ராஜீவ் மரண வழக்கில் நிருபராதிகள் தூக்கு நிறுத்தப்பட்டது.
போராட்டத்தினால்தான் மதுக்கடைகள் மூடல் நடந்தது.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
போராடாமல் இங்கே எதுவும் நடக்காது.

ஆனால் போராட்டம் செய்பவர்களை மிகவும் ஏளனமாகப் பேசுகிறார் மேட்டுக்குடி ரஜினி.

************

"இந்த ஜனநாயக நாட்டுல யார் வேண்டுமானாலும்...." என குரூப் வாதிடுகிறது...
:) :)

மராட்டியத்திலும் கர்நாடகாவிலும் ஜனநாயகம் கிடையாதா.. அங்கெல்லாம் தேர்தல்ல நிக்க முடியாதா?
தமிழ்நாடேதான் வேணுமா ரசினிக்கு???

************

நேரே தேர்தலுக்கு வந்து முதல்வர் ஆவதுதான் ரஜினியின்  கொள்கை..

இன்னும் மூணரை வருசம் இருக்கு..
அதுக்குள்ளே இன்னிக்கு பேசினதை அவரே மறக்க வாய்ப்பு உண்டு

*************

கொள்கையை கேட்டால் தலையே சுத்துதான் ரஜினிக்கு..
என்ன ஒரு ஆணவப் பேச்சு!
இன்னும் என்னென்னவோ கேள்விகள் வரும்.  அதுக்கு நெஞ்சு வலி வருமோ!!

***********
தமிழர் எழுச்சியோடு துவங்கிய 2017 வருடம்
ஒரு கோமாளி பற்றிய அரசியல் விவாதத்தோடு முடிகிறது..
**********


வெள்ளி, 8 டிசம்பர், 2017

அய்யா வழி வேறு, இந்து மதம் வேறு

பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என வருணாசிரமம் படி மனிதரை நால்வகையாய் கூறுபோட்டது இந்து மதம்.
"அய்யா வழி மக்கள்" என்று ஒருமைப்படுத்தி அன்பை மட்டுமே போதித்தது அய்யா வழி.

சாணார்(நாடார்) உள்ளிட்ட பதினெட்டு சாதியினர் இடுப்பில்தான் துண்டைக் கட்ட வேண்டும் என்று நிர்ப்பந்தித்தது பிராமண இந்து மதம்.
துண்டை எடுத்து சுயமரியாதையுடன் தலையில் கட்டி விட்டது அய்யா வழி.

மேல்சாதி, கீழ்சாதி என பிரித்து வைத்து மனுதர்மம் காத்தது இந்து மதம்.
“தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்” என்கிறது அய்யா வழி.
அனைவரும் சமபந்தியில் அமரவைத்து, உணவளித்து உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டியது அய்யா வழி.

குறிப்பிட்ட சில சாதிகள் மட்டுமே கோவில் கருவறைக்குள் செல்ல அனுமதிப்பது இந்து மதம்.
அனைத்து சாதியினரும் நிழல்தாங்களுக்குள் செல்ல அனுமதிப்பது அய்யா வழி.

இதிகாச கற்பனைத் தெய்வங்களை வணங்க சொன்னது இந்துமதம்.
"உனக்குள் இருக்கும் உன்னை உணர்" என்று வலியுறுத்தும் விதமாக கண்ணாடியை நிழல்தாங்களுக்குள் வைத்து வணங்க சொன்னது அய்யா வழி.

பில்லி, சூனியம், மந்திரம், யாகம்,  உள்ளிட்ட  மூடநம்பிக்கைகளை  ஊக்குவிப்பது  இந்துமதம்.
அனைத்து மூடநம்பிக்கைகளையும் கடலில் தூக்கி வீசுங்கள் என கூறியவர் ஐயா வைகுண்டர்.

பெண்களைத் தீட்டு என்று கூறி கோவிலுக்குள் விட மறுத்தது இந்து மதம்.
பெண்களையும் அய்யா வழிப் பதிகளில் அனுமதித்து பாலின சமத்துவம் அளித்தது அய்யா வழி.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய  இந்துமத, பிராமண, உயர்சாதிக் கொடுமைகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற புரட்சி செய்தவர் ஐயா வைகுண்டர்.
அவர் போதித்த அகிலத்திரட்டும், இந்துமத பகவத் கீதையும் ஒன்றல்ல.
வைகுண்டர் வழிவந்தவர்கள் இன்று இந்து மதத்தின் பிடியில் சிக்கித் தவிப்பது காலத்தின் கொடுமை.

புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறி விழுங்கிய இந்துமதம் வைகுண்டரையும் அவ்வாறே விழுங்கியது.

செவ்வாய், 3 ஜனவரி, 2017

திராவிடத்தின் விளம்பர அரசியலும், தலித் கேடய அரசியலும்

சமீப காலமாக பட்டியல் வகுப்பு மக்களைக் கேடயமாக்கி நடத்தப்படும் தமிழர் விரோத அரசியல் நடத்தப்படுவது தெரிகிறது.
அதாவது தமிழ்நாட்டில் எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் அதனை சாதியப் பிரச்சினையோடு ஒப்பீடு செய்து போராட்டத்தினை மழுங்கடிக்கும் வேலையை சில திராவிட அறிவாளிகள் செய்கிறார்கள். அது புரியாமல் பட்டியல் வகுப்பு மக்கள் சிலரும் இந்த வலைப்பின்னலில் வீழ்கிறார்கள்.

"காவிரிக்குப் போராடுறீங்களே, சாதியத்திற்கு எதிராகப் போராடுனீங்களா?

ஜல்லிக்கட்டுக்குப் போராடுறீங்களே, சாதியத்திற்கு எதிராகப் போராடுனீங்களா?"
என குதர்க்கமானக் கேள்விகளைக் கேட்டுவிட்டு நகர்ந்துவிடுவார்கள் திராவிட அறிவாளிகள். மற்றதை பட்டியல் வகுப்பு தோழர்கள் தொடர்வார்கள்.

தமிழ்நாட்டில் சாதி ஒழிய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இது போன்ற ஒப்பீடுகளால் சாதி ஒழிந்து விடுமா?
தமிழகத்தில் பெரும்பான்மை மக்களை உறுப்பினர்களாகக் கொண்ட திராவிடக் கட்சிகள் ஒருநாளும் சாதி  ஒழிப்பை பேசியதில்லையே? ஏன்? இதுகுறித்து பட்டியல் வகுப்பு தோழர்கள் என்றாவது சிந்தித்ததுண்டா?

தருமபுரி நாயக்கன்கோட்டை  சேரி எரிப்பில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக கட்சிகளை சார்ந்த அனைவரும் ஈடுபட்டார்கள். திமுக உறுப்பினர்கள் பதினாறு பேர் ஈடுபட்டார்கள். அவர்கள் மீது திமுக என்ன நடவடிக்கை எடுத்தது? திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் திமுகவை நோக்கி ஏன் கேள்வி கேட்பதில்லை?
அப்புறம் எப்படி சாதிய ஒடுக்குமுறைகள் குறையும்??

ஆட்சியில் எந்த திராவிடக் கட்சி அமர்ந்தாலும் "திராவிட ஆட்சி" என புகழும் சுபவீ, வீரமணி வகையறாக்களை கேள்வி கேட்காமல் காவிரிக்கும், ஜல்லிகட்டுக்கும் வந்து போராடுபவர்களை மட்டுமே கேள்வி கேட்பது ஏன்? அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களை கேள்வி கேட்காமல் போராட்ட சக்திகளை கேள்வி எழுப்பி என்ன சாதிக்கப் போகிறோம்?

உண்மையில்   "பட்டியல் வகுப்பு மக்களுக்கு நாங்கள் போராடுவோம். அவர்கள் எங்களுக்கு கீழே இருக்க வேண்டும்" என்கிற ஆதிக்க மனப்பான்மைதான்   திராவிட அரசியலில் இருக்கிறது.

சமீபத்திய இரு உதாரணங்களை சொல்கிறேன்.

1. கலைஞரை சந்திக்க திருமா சென்றபோது அரசியல் நாகரீகம் என்றார்கள் திமுகவினர்.
அதுவே சசிகலாவை சந்திக்க திருமா சென்றபோது "சசியை சந்தித்த முதல் அடிமை" என்றார்கள். திருமா அடிமை மனப்பான்மையோடு இருக்கிறார் என சாடினர்.
தேவந்திரர்களை போல சுயமரியாதையோடு இருக்க வேண்டும் என பாடம் எடுத்தார்கள். அதாவது இரு கட்சிகளுக்கும் நடுவே சண்டை மூட்டுகிறார்களாம்.

2. தனது புத்தாண்டு வாழ்த்தின்போது "திராவிட மாயையை அகற்றுவோம். சாதிய வேறுபாடுகளை களைந்து தமிழராய் ஒன்றுபடுவோம்" என்று சொல்லியிருந்தார் மருத்துவர் கிருஷ்ணசாமி.
"நீ படிக்கவே திராவிடம் தான் காரணம், பெரியார்தான் காரணம்" என்று அவரது பக்கத்தில் சென்று சண்டை போட்டார்கள் பெரியார் பக்தர்கள்.
அதாவது கிருஷ்ணசாமியும் அவர் சார்ந்த சமூகமும் தங்களது அரசியலுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்கிற ஆதிக்க மனப்பான்மை.

அப்புறம் ரொம்ப நாளா திராவிடத்தின் விளம்பர அரசியல் குறித்து சில சந்தேகங்கள் இருக்கின்றன.

1. திராவிடக் கட்சிகள் அனைத்திற்கும் தாங்கள்தான் தாய்க்கழகம் என உரிமை கொண்டாடும் திராவிடர் கழகம்
மாட்டுக்கறி விருந்து, தாலியகற்றும் நிகழ்வு ஆகிய அடையாளப் போராட்டங்களில் ஏன் திராவிடக் கட்சிகளை அழைப்பதில்லை?
மாறாக விசிக, ஆதித்தமிழர் போன்ற கட்சிகளை ஏன் அழைக்கிறார்கள்?

2. திமுக மேடைகளில் சுப.வீ, கி.வீரமணி ஆகியோர் பேசும்போது ஏன் மாட்டுக்கறி, தாலியகற்றுதல் ஆகியவை பற்றி பேசுவதில்லை?

அதாவது ஆதித்தமிழன் இருக்கும் கட்சிகளின்(விசிக, ஆதிதமிழர் போன்ற தலித் கட்சிகள்) மேடைகளில் முற்போக்கு பேசுவது,
சாதித் தமிழன் இருக்கும் கட்சிகளின்(திராவிடக் கட்சிகள்) மேடைகளில் வெறும் ஓட்டு பொறுக்குவது,
இதைதான் செய்து கொண்டிருக்கிறார்கள் திராவிடத்தின் பெயரால்.
முற்போக்கும் ஆச்சு, பணமும் சம்பாதித்த மாதிரி ஆச்சு.

அதனால்தான் தமிழகத்தில் சாதி ஒழிப்பு என்பது கானல் நீராகவே உள்ளது.

சனி, 12 நவம்பர், 2016

தேசபக்தி என்னும் பெயரால் திடீரென சாமி வந்து ஆடுபவர்களுக்காக....

"கறுப்பு பணம் ஒழிந்துவிட்டது. புதிய இந்தியா பிறந்து விட்டது. மோடி சாதித்துவிட்டார்" என  நம்பிக் கொண்டிருக்கும் நண்பர்களே!

முதலில் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் மதிப்பு சுமார் 16 லட்சம் கோடி. அதில் 500 மற்றும் 1000 ரூபாயில் இருக்கும் பணம் சுமார் 13 லட்சம் கோடி.
அதில் கறுப்பு பணம் 10 சதவீதம் என்று வைத்துக் கொள்வோம். அதாவது சுமார் 1.3 லட்சம் கோடி.

அதிலும் சிலர் முன்கூட்டியே கறுப்பை வெள்ளையாக மாற்றியிருப்பார்கள். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக RBI தகவல் உள்ளது. RBI இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

ஆகவே மீதம் உள்ள கறுப்பு பணம் சில ஆயிரம் கோடிகள் மட்டுமே. அரசின் இந்த அறிவிப்புக்குப் பின்னர் இதில் சில கோடிகள் வெள்ளையாக மாறியிருக்கும். எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் அழிக்கப்பட்ட கறுப்பு பணம் சில கோடிகள் மட்டுமே.

ஆனால் வெளிநாடுகளில் இந்திய கறுப்பு பண முதலைகள் பதுக்கியுள்ள பணம் 100லட்சம் கோடிக்கும் அதிகம் இருக்கும். நம்மூரு நத்தம் விஸ்வநாதனே 1000 கோடியை எளிதில் குவிக்க முடிகிறது. இந்த மாதிரி நத்தம் விஸ்வநாதன்கள் நாடு முழுக்க உண்டு. அரசியல், சினிமா, தொழில் என பல வழிகளில் சேர்த்து பதுக்கிய பணம் வெளிநாட்டு வங்கிகளில் பத்திரமாக உள்ளது.

கறுப்பு பணம் ஒழிப்பில் அரசுக்கு அக்கறை இருந்தால் இந்த 100 லட்சம் கோடியைப் பறிமுதல் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து சில கோடி பணத்தை மட்டும் அழித்துவிட்டு தன்னை கறுப்பு பண அழிப்பாளராகக் காட்டிக் கொள்வது மக்களை ஏமாற்றும் செயல்.

"இல்லை, வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க மோடி ஏதேனும் திட்டம் வைத்திருப்பார்" என நம்பினால் நீங்கள் அப்பாவியே!  வெளிநாட்டு வங்கி ஒன்று தங்களிடம் வங்கிக்கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை அரசிடம் ஒப்படைத்தது. அந்தப் பெயர்களை இன்றுவரை வெளியிடவில்லை மோடி அரசு. பெயரையே வெளியிடாதவர்கள் எப்படி அவர்களிடமிருந்து பணத்தை மீட்பார்கள்?

அது மட்டுமல்ல, இந்திய வங்கிகளில் 500 கோடிக்கும் அதிகமாக வாராக்கடன் வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியலை அரசிடம் கேட்டது உச்ச நீதிமன்றம். அந்தப் பட்டியலைக் கொடுக்க மறுத்ததும் மோடி அரசுதான்.

"மோடி என்ன செய்தாலும் குத்தம் சொல்வதுதான் உங்கள் வேலையா?" என நீங்கள் எதிர்கேள்வி கேட்கக் கூடும். நிச்சயம் அப்படி இல்லை. தேர்தலில் வாக்களித்தப்படி விலைவாசி குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, 15லட்சம் டெபாசிட் ஆகியவற்றை செய்துகாட்டும் பட்சத்தில் நிச்சயம் மோடி மீது விமர்சனங்கள் வராது.

ஆனால் இதையெல்லாம் ஒருகாலமும்  மோடி அரசால் செய்ய முடியாது. ஏனெனில் இங்கு உண்மையில் ஆட்சி செலுத்துவது கார்பரேட் முதலாளிகள்தான்.

"அது எப்படி? நாம மோடிக்குதானே ஓட்டு போட்டோம்? அவர்தானே பிரதமர்" என கேட்கும் அப்பாவியா நீங்கள்? உங்களுக்கு இரு உதாரணங்கள் சொல்கிறேன்.

1. மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் கம்பெனியிடம் கொடுத்தது மோடி அரசு. அதற்கு ஊதியமாக வசூலிக்கும் பணத்தில் கிட்டத்தட்ட 40% பணம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக மாணவர்களின் கல்விக்கடனில் 40 சதவீதத்தை தள்ளுபடி செய்திருக்கலாமே?. செய்யமாட்டார்கள். ஏனெனில் மாணவர்களை விட ரிலையன்ஸ் நலன்தான் அரசுக்கு முக்கியம்.

2.  நம்ம விவசாயிகள் ஆயிரக்கணக்கில் கடன் கேட்டால் வீட்டுப்பத்திரம், நிலப் பத்திரம் என அனைத்தையும் எடுத்து வரச் சொல்கிறது வங்கி. ஆனால் ஆஸ்திரேலியாவில் திவால் ஆன நிலக்கரி சுரங்கத்தை வாங்க அதானி நிறுவனத்திற்கு 600 கோடி பணத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கிறது SBI வங்கி. ஏனெனில் விவசாயிகளின் நலனை விட அதானியின் நலன் முக்கியம்.

"எல்லாம் சரி, இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு?"
என்று கேள்வி எழுப்புகிறீர்களா?
அதற்கான பதில்:
நீங்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம்தான். மத்தவன் சொல்வதை கேட்காதீர். இந்த சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை சமூகத்தின் அடித்தட்டிலிருந்து பார்க்கப் பழகுங்கள். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டால் பயனடையப் போவது யார் என ஆராயுங்கள்.
அதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் இல்லை என்றால் அமைதியாக வேடிக்கை பார்த்து கடந்து செல்லுங்கள். தேசபக்தி, நாட்டுநலன் என்னும் பெயரால் திடீரென சாமி வந்து ஆடாதீர்கள். உங்கள் ஆட்டத்தால் பாதிக்கப்படுவது இந்த சமூகத்தின் அடித்தட்டு மக்கள்தான்.

- குருநாதன்