இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 நவம்பர், 2016

தேசபக்தி என்னும் பெயரால் திடீரென சாமி வந்து ஆடுபவர்களுக்காக....

"கறுப்பு பணம் ஒழிந்துவிட்டது. புதிய இந்தியா பிறந்து விட்டது. மோடி சாதித்துவிட்டார்" என  நம்பிக் கொண்டிருக்கும் நண்பர்களே!

முதலில் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் மதிப்பு சுமார் 16 லட்சம் கோடி. அதில் 500 மற்றும் 1000 ரூபாயில் இருக்கும் பணம் சுமார் 13 லட்சம் கோடி.
அதில் கறுப்பு பணம் 10 சதவீதம் என்று வைத்துக் கொள்வோம். அதாவது சுமார் 1.3 லட்சம் கோடி.

அதிலும் சிலர் முன்கூட்டியே கறுப்பை வெள்ளையாக மாற்றியிருப்பார்கள். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக RBI தகவல் உள்ளது. RBI இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

ஆகவே மீதம் உள்ள கறுப்பு பணம் சில ஆயிரம் கோடிகள் மட்டுமே. அரசின் இந்த அறிவிப்புக்குப் பின்னர் இதில் சில கோடிகள் வெள்ளையாக மாறியிருக்கும். எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் அழிக்கப்பட்ட கறுப்பு பணம் சில கோடிகள் மட்டுமே.

ஆனால் வெளிநாடுகளில் இந்திய கறுப்பு பண முதலைகள் பதுக்கியுள்ள பணம் 100லட்சம் கோடிக்கும் அதிகம் இருக்கும். நம்மூரு நத்தம் விஸ்வநாதனே 1000 கோடியை எளிதில் குவிக்க முடிகிறது. இந்த மாதிரி நத்தம் விஸ்வநாதன்கள் நாடு முழுக்க உண்டு. அரசியல், சினிமா, தொழில் என பல வழிகளில் சேர்த்து பதுக்கிய பணம் வெளிநாட்டு வங்கிகளில் பத்திரமாக உள்ளது.

கறுப்பு பணம் ஒழிப்பில் அரசுக்கு அக்கறை இருந்தால் இந்த 100 லட்சம் கோடியைப் பறிமுதல் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து சில கோடி பணத்தை மட்டும் அழித்துவிட்டு தன்னை கறுப்பு பண அழிப்பாளராகக் காட்டிக் கொள்வது மக்களை ஏமாற்றும் செயல்.

"இல்லை, வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க மோடி ஏதேனும் திட்டம் வைத்திருப்பார்" என நம்பினால் நீங்கள் அப்பாவியே!  வெளிநாட்டு வங்கி ஒன்று தங்களிடம் வங்கிக்கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை அரசிடம் ஒப்படைத்தது. அந்தப் பெயர்களை இன்றுவரை வெளியிடவில்லை மோடி அரசு. பெயரையே வெளியிடாதவர்கள் எப்படி அவர்களிடமிருந்து பணத்தை மீட்பார்கள்?

அது மட்டுமல்ல, இந்திய வங்கிகளில் 500 கோடிக்கும் அதிகமாக வாராக்கடன் வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியலை அரசிடம் கேட்டது உச்ச நீதிமன்றம். அந்தப் பட்டியலைக் கொடுக்க மறுத்ததும் மோடி அரசுதான்.

"மோடி என்ன செய்தாலும் குத்தம் சொல்வதுதான் உங்கள் வேலையா?" என நீங்கள் எதிர்கேள்வி கேட்கக் கூடும். நிச்சயம் அப்படி இல்லை. தேர்தலில் வாக்களித்தப்படி விலைவாசி குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, 15லட்சம் டெபாசிட் ஆகியவற்றை செய்துகாட்டும் பட்சத்தில் நிச்சயம் மோடி மீது விமர்சனங்கள் வராது.

ஆனால் இதையெல்லாம் ஒருகாலமும்  மோடி அரசால் செய்ய முடியாது. ஏனெனில் இங்கு உண்மையில் ஆட்சி செலுத்துவது கார்பரேட் முதலாளிகள்தான்.

"அது எப்படி? நாம மோடிக்குதானே ஓட்டு போட்டோம்? அவர்தானே பிரதமர்" என கேட்கும் அப்பாவியா நீங்கள்? உங்களுக்கு இரு உதாரணங்கள் சொல்கிறேன்.

1. மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் கம்பெனியிடம் கொடுத்தது மோடி அரசு. அதற்கு ஊதியமாக வசூலிக்கும் பணத்தில் கிட்டத்தட்ட 40% பணம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக மாணவர்களின் கல்விக்கடனில் 40 சதவீதத்தை தள்ளுபடி செய்திருக்கலாமே?. செய்யமாட்டார்கள். ஏனெனில் மாணவர்களை விட ரிலையன்ஸ் நலன்தான் அரசுக்கு முக்கியம்.

2.  நம்ம விவசாயிகள் ஆயிரக்கணக்கில் கடன் கேட்டால் வீட்டுப்பத்திரம், நிலப் பத்திரம் என அனைத்தையும் எடுத்து வரச் சொல்கிறது வங்கி. ஆனால் ஆஸ்திரேலியாவில் திவால் ஆன நிலக்கரி சுரங்கத்தை வாங்க அதானி நிறுவனத்திற்கு 600 கோடி பணத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கிறது SBI வங்கி. ஏனெனில் விவசாயிகளின் நலனை விட அதானியின் நலன் முக்கியம்.

"எல்லாம் சரி, இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு?"
என்று கேள்வி எழுப்புகிறீர்களா?
அதற்கான பதில்:
நீங்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம்தான். மத்தவன் சொல்வதை கேட்காதீர். இந்த சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை சமூகத்தின் அடித்தட்டிலிருந்து பார்க்கப் பழகுங்கள். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டால் பயனடையப் போவது யார் என ஆராயுங்கள்.
அதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் இல்லை என்றால் அமைதியாக வேடிக்கை பார்த்து கடந்து செல்லுங்கள். தேசபக்தி, நாட்டுநலன் என்னும் பெயரால் திடீரென சாமி வந்து ஆடாதீர்கள். உங்கள் ஆட்டத்தால் பாதிக்கப்படுவது இந்த சமூகத்தின் அடித்தட்டு மக்கள்தான்.

- குருநாதன்

வெள்ளி, 29 ஜனவரி, 2016

இந்தியப் பெருச்சாளிகளும், தமிழக அடிமைகளும்

கல்வி' என்பது இந்திய  அரசியல் சட்டத்தின் பொதுப் பட்டியலில் உள்ளது. அதாவது கிட்டத்தட்ட மத்திய அரசு கையில் உள்ளது. கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது/மறுப்பது என எல்லாம் மத்திய அரசு கையில்தான் உள்ளது..

அப்படி இருக்கையில் விழுப்புரம் யோகா கல்லூரியில் மூன்று மாணவிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது என சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதிரானி. மாநில அரசைக் கைகாட்டி தப்ப முயற்சிக்கிறார்.

மாநில அரசுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்றால் இந்திய அரசு தயாரித்து வரும் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் திணிக்க மாட்டோம் என ஸ்மிருதிரானி சொல்வாரா? இங்குள்ள சி.பி.எஸ்.இ (கல்வி)வியாபார நிறுவனங்களை மாநில அரசு தடை செய்தால் ஏற்றுக் கொள்வாரா?
மாநில அரசின் எந்த நடவடிக்கையிலும் இனி மத்திய அரசு தலையிடாது என்று சொல்வாரா?


"இந்தியா முழுக்க மது உள்ளது, ஆகவே தமிழகத்தில் மட்டும் மதுவை தடை செய்ய முடியாது' என நம்மூர் அமைச்சர் அடிமைகள் சொல்வதுண்டு.
"இந்தியா முழுக்க 50% இட ஒதுக்கீடுதான் அனுமதி. தமிழகத்தில் மட்டும் 69% இட ஒதுக்கீடு எதற்கு?' என உச்சநீதிமன்றம் கேட்கிறது.

இப்படியாக தமிழக அடிமைகளைக் காட்டி இந்திய பெருச்சாளிகள் தப்புவதும், இந்தியப் பெருச்சாளிகளை கைகட்டி தமிழக அடிமைகள் தப்பிக்கும் போக்கும்தான் நடைபெறுகிறது..

இந்தியாவில் இருந்து தமிழகம் விடுதலை பெறுவதே தீர்வு.

வெள்ளி, 8 ஜனவரி, 2016

பஞ்சாப் பதன்கோட் தாக்குதலின் பின்னணி இதுவாக இருக்குமோ??

நிகழ்வு 1: "காலிஸ்தான் தனிநாட்டுக்காக பொதுவாக்கெடுப்பு 2020 "(Khalistan referendum 2020) என்று சீக்கியர்கள் பிரகடனம். உள்ளூர், வெளிநாடு என ஆதரவு திரட்டல். refer: http://www.hindustantimes.com/punjab/referendum-2020-khalistan-divides-unites-sikhs-abroad/story-QBIfntRdW0zF7kVpw9XgmN.html

நிகழ்வு 2: இங்கிலாந்து, அமெரிக்கா என மோடி செல்லுமிடமெல்லாம் மோடி அரசின் இந்துத்வப் போக்கை எதிர்த்து சீக்கியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்,
http://singhstation.net/2015/09/sikhs-and-patels-protest-against-modi-at-un-headquarters/
https://www.sikh24.com/2015/09/28/shiromani-akali-dal-amritsar-stages-protest-against-modi-outside-uno-in-new-york/

நிகழ்வு 3: ஜூலை மாதம் பஞ்சாப் குர்டாஸ்பூரில் போலிஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல், https://en.wikipedia.org/wiki/2015_Gurdaspur_attack

நிகழ்வு 4: சீக்கிய அமைப்புகளை தடை செய்யுமாறு இங்கிலாந்து சென்ற போது டேவிட் கேமரூனிடம் மோடி கோரிக்கை, இது நடந்தது நவம்பரில்.  refer: http://www.thehindu.com/news/national/narendra-modi-to-raise-issue-of-radical-sikh-elements-with-david-cameron/article7834581.ece

நிகழ்வு 5: அதே நவம்பரில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் பஞ்சாபில் 'சற்பாத் கல்சா' என்னும் பெயரில் நடத்திய மாபெரும் மாநாடு. மாநாடு முழுக்க சீக்கிய போராளி பிந்த்ரன்வாலேவின் படங்கள் இடம்பெறுகின்றன. 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம் எழுப்பப்பட்டன. refer: http://khalsaforce.in/5-am-update-pictures-of-sarbat-khalsa-2015


நிகழ்வு 6: இவ்வருடத் தொடக்கத்தில் பஞ்சாப் பதன்கோட் விமானப்படை முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல், https://en.wikipedia.org/wiki/2016_Pathankot_attack

இவை அனைத்தையும் கூட்டி கழித்து பாருங்கள்.
ஏதோ ஒன்று புரியும். புரியாதவர்கள் மண்டைய போட்டு பிச்சிக்க தேவையில்லை.

சீக்கியர்களின் தேசிய இன விடுதலை எழுச்சியை முறியடிக்க இந்திய அரசு செய்த திட்டமிட்ட தாக்குதலாக இருக்குமோ என்பது எனது சந்தேகம்.. வெறும் யூகம் மட்டுமே!! இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்..

எதுக்கு இந்திய அரசு செய்ய வேண்டும்?
ஒவ்வொரு உருப்படாத ஏகாதிபத்தியமும் தனது பொது எதிரி என்று யாரையாவது காட்டி தன் நாட்டு மக்களுக்கு போலித் தேசிய உணர்வை வளர்த்தெடுப்பார்கள். அவ்வகையில் பாகிஸ்தானை எதிரியாக காட்டி போலி இந்திய தேசியம் வளர்க்கிறார்கள்.
"பாகிஸ்தானால் சீக்கிய மக்களுக்கு தொல்லை இருக்கும்,  ஆகவே இந்தியாவோடு இணைந்தே இருங்கள்" என்பது போன்ற மனநிலையை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.. ஆகவே என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்..

பாரத் மாதா கீ ஜெய் :) :)

சனி, 5 டிசம்பர், 2015

பாபர் மசூதியைக் கட்டியெழுப்ப இந்துக்களே முன்வாருங்கள்...

#டிசம்பர்6 #பாபர்மசூதி இடிப்பு நாள் தொடர்பாக பேஸ்புக்கில் பதிந்த பதிவு:

மசூதியை இடித்து மனிதத்தை நொறுக்கியவர்கள் ராமனைத் தூக்கிக்கொண்டு அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ஆயத்தமாகிறார்கள்..
மசூதியை பறிகொடுத்தவர்கள், அதனைப் பற்றி சிந்திக்க கூட நேரமில்லாமல் வெள்ள நிவாரணப் பணியில் இரவும் பகலுமாக களத்தில் உள்ளார்கள்.





மீண்டும் கட்டியெழுப்பப்படும் பாபர் மசூதியில் முதல் செங்கல்லும், இறுதி செங்கல்லும் இந்துக்களின் பங்களிப்பாக, அதுவும் தமிழ் மண்ணிலிருந்து இருக்க வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு உண்டு..

 *****************

"பாபர் மசூதிக்கு முன் அங்க என்ன இருந்தது? ராமர் கோவில்லா? ஆம் எனில் அதை இடித்து யார்? நீ அவர்களை பற்றி பேசாசது ஏன்?" என்று ஒரு நண்பர் கேள்வி எழுப்பிருந்தார்.. 
அவருக்கு எழுதிய சிறு பதில் பின்வருமாறு:

It's a big story.

அங்கே மொகலாய மன்னர் பாபரால் கட்டப்பட்ட மசூதி மட்டுமே இருந்தது... இந்தியா முழுக்க அவர்கள் கட்டிய மசூதிகளும் கோட்டைகளும் இன்றும் பல உள்ளன.. அயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற புராணக் கதையோடு இவர்கள் தொடர்புபடுத்திக்கொண்டு அங்கே ராமர் கோவில் இருந்ததாக சொல்லி ஒரு சிலையைக் கொண்டு உள்ளே வைத்து விட்டார்கள்... இந்தியா முழுக்க பிரச்சாரம் செய்து ஆட்களைத் திரட்டி டிசம்பர் ஆறாம் நாள் இடித்துவிட்டார்கள்.. இந்து-முஸ்லிம் ஒற்றுமையே இருக்க கூடாது என்கிற ஒரே நோக்கத்துடன் இடிக்கப்பட்டது.. இதில் பங்கேற்ற சிலர் மனம் திருந்தி ஒப்புதல் வாக்குமூலம் கூட அளித்துள்ளார்கள்..

பாபர் வெளிநாட்டுக்காரர், பாபர் மசூதி நாட்டின் அவமானம் என்கிற பிரச்சாரமும் செய்கிறார்கள்.. செங்கோட்டை, தாஜ்மஹால், செயின்ட் ஜார்ஜ் கோட்டை என பலவும் மொகலாய, ஆங்கிலேய மன்னர்களால் கட்டப்பட்டவையே! அதில் ஏதேனும் ஒன்றில் கை வைத்திருக்கலாமே!! அவ்வாறு செய்ய வில்லை. மசூதியை இடித்தால் மட்டுமே ஒரு பதட்டத்தை தொடர்ந்து நீடிக்கச் செய்ய முடியும் என்பதை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் நன்கு அறிந்திருந்தார்கள்..

அந்த இடத்தில மசூதி கட்டப்படுவதன் மூலம் நீதி வழங்கப்படும். இதனால் இந்து-முஸ்லிம் ஒற்றுமை கூடுமே தவிர எந்த வகையிலும் இந்துக்களுக்கு எந்த தீங்கும், நட்டமும் இல்லை. சவூதி அரேபியாவில் இந்துக் கோவில் கட்ட அந்நாட்டு அரசு நிலம் ஒதுக்குகிறது.. மதவெறி இல்லாத இந்துக்கள் எந்த வகையிலும் பாபர் மசூதிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் தொடர்ச்சியான பொய் பிரச்சாரத்தால் பாபர் மசூதி பற்றி இந்துக்கள் அவ்வளவு பேசுவதில்லை...

அங்கே ராமர் கோவிலுக்குப் பக்கத்தில் பெரிய மாரியம்மன் கோவில் எழுப்ப வேண்டும் என நாம, அதாவது இந்து மதத்தை தழுவிய தமிழர்கள் கோரிக்கை வைத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்... அதுதான் இந்துத்வ அரசியல். அவர்களைப் பொறுத்த வரையில் ராமனை ஒரு தேசிய ஹீரோவாக்கி 'இந்து ராஷ்டிரம்' என்னும் அரசியலை முன்னெடுப்பதே குறிக்கோள்.. இதில் ஆன்மீகம், பக்தி எதுவும் இல்லை.

இந்து பக்கமோ, முஸ்லிம் பக்கமோ இன்று யோசித்தால் இந்தப் பிரச்சினைக்கு எந்த தீர்வும் கிடைக்காது. குழப்பம்தான் வரும். நீதியின் பக்கம் நிற்க வேண்டும்.


திங்கள், 26 அக்டோபர், 2015

செயல்படாத பிரதமரும், செய்யப்படும் விளம்பரமும்


வெளிநாடுகளில் நிலநடுக்கம் வந்தால், வெள்ளப் பெருக்கு வந்தால், தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றால் அடுத்த சில நிமிடங்களில் இந்தியப் பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு போடுகிறார். கிரிக்கெட் போட்டி, பக்கத்துக்கு நாட்டு தேர்தல் என அனைத்துக்கும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் போடுகிறார். 
 
அதன் மூலம் தன்னை ஒரு செயல்படும் பிரதமராகக்(Active PM) காட்டிக் கொள்கிறார். மேல்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் இதனைக் கைதட்டி வரவேற்கிறார்கள். ஆஹோ ஓஹோ என்று புகழ்கிறார்கள். நாட்டைக் காக்க ரட்சகர் வந்துவிட்டார் என நம்புகிறார்கள்.

ஆனால் ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்பட்டால், உபியில் மாட்டுக்கறி சாப்பிட்டவர் அடித்துக் கொல்லப்பட்டால்,
அரியானாவில் தலித் குழந்தைகள் உயிரோடு கொளுத்தப்பட்டால், நாடு முழுக்க மதவாத பாசிஸ்டுகள் மதவெறிப் பேச்சுக்களை பேசும்போதிலும் பிரதமர் மோடி டிவிட்டரில் கூட வாயைத் திறப்பதில்லை.
மேல்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் "இதுக்கெல்லாம் பிரதமர் பேச வேண்டுமா?' என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

இதன்மூலம் ஒரு போலியான தேசபக்தி வளர்த்தெடுக்கப்படுகிறது. அதில் கூட வருத்தம் இல்லை.
ஆனால் மனிதம் சாகடிக்கப்படுகிறது.
"எவன் எங்கு செத்தால் நமக்கு என்ன? நாம 'டிஜிட்டல் இந்தியா' படத்தை ப்ரோபைல் படமா வச்சிட்டு அடுத்த வேலையைப் பார்த்துட்டு போவோம்" என்கிற மோசமான மனநிலை உருவாக்கப்படுகிறது. அதில்தான் வருத்தம்.

வெள்ளி, 1 மே, 2015

பெரியார் ஆதரித்தது தமிழ்த்தேசியம், வீரமணி ஆதரிப்பது இந்திய தேசியம்.

பெரியார் தன் இயக்க நாளிதழுக்கு "விடுதலை" என்று பெயர் வைத்தார். அது தமிழ்த்தேசிய விடுதலையைக் கருத்தில் கொண்டுதான்.. அத்தோடு "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற வாசகத்தையும் இணைத்திருந்தார்..

அதே போல குடியரசு என்கிற பெயரும் "தமிழ்தேசியக் குடியரசைக்" கருத்தில் கொண்டுதான்..

ஆனால் "தமிழ்நாடு தமிழருக்கே" என்னும் முழக்கத்தை நாளிதழிலிருந்து நீக்கிவிட்டு , பொது ஊடகத்தில் "தமிழ்த்தேசிய வியாதிகள்" என்று சொல்லும் அளவுக்கு கி.வீரமணிக்கு துணிச்சல் எவ்வாறு வந்தது?

இந்திய தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடாமல், தமிழ்த்தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடும் வீரமணி கும்பலுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?? என்ன (&^^&$&^க்கு 'தமிழர் தலைவர்' என்கிற அடைமொழி'???

இந்தியாவுக்கு‬ முட்டு கொடுத்து திராவிடம் பேசுகிறவர் எவராக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டே எதிர்க்கலாம்.. ஏனெனில் அது கண்டிப்பாக பிழைப்புவாதமாகத்தான் இருக்கும்..

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

ஈழமும், இந்தியக் கட்சிகளின் பித்தலாட்டங்களும்

* ராஜபக்சே ஒரு கொலைகாரன், கொடூரன் என சமீபகாலமாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட இந்தியக் கட்சிகள் நமக்கு அதிகமாக வகுப்பெடுக்கிறார்கள். இதையே கடந்த ஐந்து வருடங்களாக நாம் சொன்னபோது மறுத்தவர்களும் இவர்களே! உலகக்கோப்பை கிரிக்கெட், காமன்வெல்த் விளையாட்டு, பிரதமர்  பதவியேற்பு விழா என பல நிகழ்வுகளிலும் ராஜபக்சேவை அழைத்து விருந்து வைத்தபோது அவன் ஒரு கொலைகாரன் என்று இவர்களுக்கு தெரியவில்லை போல!!

* சரி, ராஜபக்சே ஒரு கொலைகாரன், குற்றவாளி என்பதே உண்மை.
அவன் செய்த குற்றமென்ன? அவர் யாரைக் கொலை செய்தான்? என்பது குறித்து பேச மறுக்கிறார்கள் அல்லது மறைக்கிறார்கள் இந்த இந்தியக் கட்சிகள்.
அவன் செய்தது இனப்படுகொலை என்ற உண்மையை திட்டமிட்டு மறைக்கிறார்கள். போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என வார்த்தை விளையாட்டு ஆடுகிறார்கள்.

* இலங்கைத்தீவில் அனைத்து தரப்பு மனிதர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் அது மனித உரிமை மீறல்.
இருதரப்பு மக்களும் யுத்தத்தில் அழிக்கப்பட்டிருந்தால் அது போர்க்குற்றம்.
ஆனால் நடந்தது என்ன? தமிழர்கள் மட்டும் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள்.
அதை மூடி மறைப்பதில் இலங்கைக்கு சகல வசதிகளையும் இன்றுவரை செய்து தருகிறது இந்திய அரசு.

* இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து சிந்திக்கிறார்களாம் பாஜக ஆட்சியாளர்கள். இதைத்தானே கடந்த ஐந்து வருடங்களாக காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருந்தது. அப்படியானால் இந்நாள் வரை எந்த சீரமைப்பும் செய்யவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறதா இந்திய அரசு?..
  காங்கிரஸ் சொன்னது பொய்யா? பாஜக சொல்வது பொய்யா? தமிழர்கள் ஏமாந்து கொண்டே இருப்பார்கள் என எண்ணுகிறார்கள் போல.

* இலங்கையின் மொத்த ராணுவத் தொகை இரண்டு லட்சம். அதில் ஒன்றரை லட்சம் பேர் தமிழர் தாயகமான ஈழத்தை ஆக்கிரமித்துள்ளார்கள். ராணுவத்தை வெளியேற்றுவது குறித்து பேச கூட மறுக்கும் இந்திய அரசு தமிழர்களுக்கு நல்லது செய்யும் என்பதை நம்ப தமிழர்கள் என்ன முட்டாள்களா?

* தமிழர்களுக்கு வெளிப்படியாக நல்லது செய்தால் சிங்களர்களுக்கு கோபம் வந்துவிடும், அவர்கள் மீண்டும் ராஜபக்சேவை அரியணை  ஏற்றிவிடுவார்கள் என புதுவகையான பூச்சாண்டி காட்டுகிறார்கள்.
தமிழர்களுக்கு நல்லது செய்வது சிங்களர்களுக்குப் பிடிக்காது என்றால் தமிழனும் சிங்களனும் எப்படி இணைந்து வாழ முடியும்?

* சிங்கள உழைக்கும் மக்களும் தமிழ் உழைக்கும் மக்களும் இணைந்து போராட வேண்டும் என இன்னொரு தரப்பு வகுப்பெடுக்கிறது. நியாயம்தான்.. ஆனால் யதார்த்தம் என்ன? தமிழன் அழிக்கப்படும்போது அதனைத் தடுக்கக் கோரி எந்த சிங்கள உழைக்கும் மக்களோ, அமைப்போ குரல் கொடுக்கவில்லையே! அனைவரும் ஒன்றாகக் கூடி பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்களே!!(அதற்காக அனைந்து சிங்களர்களும் இனப்படுகொலையை ஆதரிக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது).. நடந்தது இனப்படுகொலை என்கிற உண்மையைப் பேசும் ஒரு சிங்கள அமைப்பாவது இருக்கிறதா? அப்புறம் எங்கே ஒன்றா சேர்ந்து போராடுவது??

பொதுவாக்கெடுப்பைத் தவிர வேறு எதுவும் தீர்வாகாது.


வியாழன், 2 அக்டோபர், 2014

இந்திய தேசப்பக்திக்குப் பின்னால் இந்துத்துவம்

காஷ்மீர் விடுதலைப் போராளி யாசின் மாலிக் தமிழகம் வந்து உரையாற்றினால் தேசத்துரோகம் என்கிறார்கள்.
பொன்.ராதாகிருஷ்ணன், ஞானதேசிகன் என அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்கிறார்கள்.

ஆனால் ஆர்எஸ்எஸ் என்னும் மதவாத அமைப்பின் தலைவர் அரசுத் தொலைக்காட்சியில் உரையாற்றப் போகிறார்.
அதைக் கண்டித்து ஒரு பயலும் வாயைத் திறக்க மாட்டான் (காங்கிரஸ்காரன் உட்பட).
மோகன் பகவத் மக்களால் தேர்ந்தெடுப்பட்டவரா? என்று மறந்தும்கூட கேட்டுவிட மாட்டார்கள்.

பிற மதத்தினருக்கு எதிராக பல முறை சர்ச்சையாக பேசியவர் மோகன் பகவத்.
இதெல்லாம் தெரிந்தும் அவர் தூர்தர்சனில் பேச அனுமதிக்கிறார்கள் என்றால், இவர்களின் இந்திய தேசப்பக்திக்குப் பின்னால் இந்துத்துவமும் ஒட்டியிருக்கிறது.

வியாழன், 18 செப்டம்பர், 2014

காவிகளால் நாசமாகப் போகும் கல்வித்துறை


வகுப்பறை என்பது நல்ல மனிதர்களை உருவாக்கும் இடம்.
அப்பேர்பட்ட வகுப்பறையும், கல்வியும் இன்று எப்படி உள்ளன?

தனியார்களின் வசம் சிக்கி சீரழிந்து வருகிறது.
ஒன்றாம் வகுப்புக்கே  லட்சம் ரூபாயை நன்கொடையாக கொடுக்கும் அவல  நிலையில் வந்து நிற்கிறது.
மேற்படிப்பு படிக்க பணம் இல்லாமையால் மாணவிகள் தற்கொலை செய்த அவலம்  இதே தமிழ் மண்ணில் அரங்கேறியுள்ளது.
இருக்கிற அரசுப் பள்ளி, கல்லூரிகளிலும் கழிப்பறை வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை என பல பிரச்சினைகள் உள்ளன.

ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் பார்க்காமல் அதனை அறிவாகப் பார்த்து, தனியாரிடம் பணத்தை வாரி இறைக்க மக்கள் பழக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு கல்வித்துறையில் பல அவலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இதனை எந்த அரசும் கண்டுகொள்வதில்லை.
மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின்னர்  கல்வித்துறையில் செய்த சில புரட்சிகளைப் (?) பார்ப்போம்.

  • பள்ளிகளில் செத்தமொழி(சமஸ்கிருத) வார கொண்டாட்டம். 
  • குரு உத்சவ் என்னும் பெயரில் ஆசிரியர் தினம் 
  • ஆசிரியர் தினத்தில் மாணவர் முன்னர் தோன்றி, விளம்பரம் தேடிக் கொள்ளுதல்
  • தற்போது, இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிக்கை

இதுபோக 'இந்தியைத் திணிக்க வேண்டும்' என காவிக்குரல் கடுமையாக எழுகிறது.
குருகுலக் கல்விமுறையை கொண்டு வரவேண்டும் என ஒரு நீதிபதி சில நாட்களுக்கு முன்னர் சொன்ன அவலமும் உள்ளது.

எப்படியாவது கொல்லைப்புற வழியாக இந்தி, சமஸ்கிருதம் என ஆரியப் பண்பாட்டை புகுத்த துடிக்கிறார்கள் காவிகள். 


மேலும் வலைத்தளங்களில் கட்டாய இந்தி, பள்ளிக் கல்வியில் வேத பாடங்களை கட்டாயமாக்குதல்,  இந்தியா வரலாற்று ஆய்வு குழுவில் பார்ப்பன ஆதிக்கம் என பெரும் அச்சுறுத்தலைத் தருகிறது பாஜக அரசு.

கல்வியை சேவையாக வழங்குவது குறித்து சிந்திக்காமல்,
அறிவியல் ரீதியில் மாணவர்களைப் பலப்படுத்தும்
செயலை முன்னிறுத்தாமல்,
'ஹிந்தி, ஹிந்து, ஹிந்தியா' என தனது பிற்போக்கு இந்துத்வ அரசியலை மாணவர்களிடம் திணிக்க முயற்சி செய்கிறது பாஜக அரசு.


பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றும் கோரிக்கையை மாநில அரசு உடனே முன்னெடுக்க வேண்டும்.
இல்லையேல் காவிகளின் கையில் சிக்கி கல்வித்துறை நாசமாகும்.

சனி, 17 மே, 2014

தமிழக எம்பிக்களால் தமிழகத்திற்கு பயன் இல்லையா?


தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்பிக்களால் எந்த பயனும் இல்லை என்று இணையத்தில் கருத்துக்கள் உலாவ ஆரம்பித்துள்ளன.
'டெண்டுல்கர் சதம் அடித்தும் டீம் தோல்வி' என்ற வகையில் அருமையான ஒப்பீடு வேற நடத்துகிறார்கள்.
அதாவது இந்திய அரசிடம் தமிழக அரசு  பொறுக்கித் தின்ன வேண்டும் என்பதை மறைமுகமாக கூறுகிறார்கள்.


அப்படியான நண்பர்கள் முதலில் இந்திய அரசியலமைப்பை படித்து விட்டு வரவும்.
* மாநிலங்களுக்கு பாராபாட்சம் இல்லாமல் நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும்.
* மாநில அரசின் உரிமைகளில் தலையிடக் கூடாது.
* பொதுப் பட்டியலில் சட்டம் இயற்றும்போது மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும் 
என ஆயிரத்தெட்டு விதிகள் இருக்குது..

ஆனால் நடுவண் அரசினை ஆட்சி செய்பவர்கள்  இந்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு தங்கள் ஆட்சி அல்லது கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள். சலுகைகளை அள்ளி வீசுகிறார்கள். அதன் மூலம் அந்த மாநிலங்களில் தங்கள் கட்சியை வலுவாக காலூன்ற செய்கிறார்கள்.

தங்களுக்கு வாக்குவங்கி இல்லாத மாநிலங்கள் அல்லது தங்கள் ஆட்சி இல்லாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகிறார்கள்.

தமிழக்திற்கு உரிய அளவில் மண்ணெண்ணை வழங்காமை, மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சாரத்தை வழங்காமை, குறைவான நிதி ஒதுக்கீடு ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் நடந்தேறியது.
அதன் பின்னணியில் திமுக இருப்பதாக தமிழக முதல்வர் குற்றம் சாட்டியது பலருக்கும்  நினைவு இருக்கலாம்.

இந்நிலையில் "பாஜக ஆளுகிற மாநிலங்கள் மற்றும்  பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் மட்டுமே பயனடையும்" என்கிற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்  சிலர்.
அதாவது இந்திய போலி ஜனநாயகத்தை ஒத்துக் கொள்கிறார்கள்.
மாநில சுயாட்சி என்கிற கொள்கையை  இந்திய ஒன்றிய நடுவண் அரசு விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது என்பதையும் ஒத்துக் கொள்கிறார்கள்.
"நம்ம மாநிலத்திலும் பாஜக ஜெயித்திருக்கலாமே!" என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறார்கள்.

அது தவறான பார்வை.
கூட்டணி இருக்குதோ இல்லையோ நாடாளுமன்ற தொகுதிகளுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
எம்பிக்கள் கோரிக்கை வைக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
அப்படி நிறைவேற்றாத பட்சத்தில் எம்பிக்கள் தாராளமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வர வேண்டும்.
அல்லது மாநில அரசின் வழியாக நடுவண் அரசுக்கு செல்லும் நிதிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.

இதெல்லாம் இந்த எம்பிக்களால் சாத்தியமில்லை. இனப்படுகொலை அரங்கேறியபோதும் பதவியைக் கெட்டியாக பிடித்துக் கொண்டவர்கள்தான் நம்ம எம்பிக்கள்.
( ஆந்திராவை பிரிக்கிறோம் என்று நடுவண் அரசு அறிவித்தவுடன் சீமாந்திரா பகுதியை சார்ந்த  எம்பிக்கள், அமைச்சர்கள்  அனைவரும் ராஜினாமா செய்தார்கள். அதில் ஒருவர் ஒருபடி மேலே போயி தனி நாட்டு கோரிக்கையை முன் வைத்தார். )

அதிமுக எம்பிக்கள் உத்தமர்கள் கிடையாது. அதற்காக தமிழகத்தில் தேசியக் கட்சிகளை காலூன்ற செய்தால் தமிழகம் நாசமாகப் போகும்.

குஜராத்தி மோடி உத்திரப்பிரதேசத்தில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்.
அதுபோல தேசியக் கட்சிகளில் பலரும் வெவ்வேறு மாநிலங்களில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்.
அவ்வாறு தமிழகத்திலும் கண்டவனும் வந்து போட்டியிட்டு ஜெயிக்கும் நிலை வரக் கூடும்.மாநில உரிமைகள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.மொத்தத்தில் அரசியல் நாசமாய் போகும்.
அதனால் தேசியக் கட்சிகளைப் புறக்கணிப்பது மாநில நலனுக்கு நல்லது.

ஒரு தேசிய கட்சியால் தமிழகம் அனுபவித்த கொடுமைகளை உணருங்கள்.

ஒரு தேசியக் கட்சியை அழிக்கவே இத்தனை காலங்கள் தேவைப்பட்டிருக்கிறது.
இந்த லட்சணத்தில் இன்னொரு தேசியக் கட்சியை காலூன்ற செய்யும் தவறை செய்யாதீர் மக்களே!!

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் இந்திய தேசியக் கட்சிகள் மற்றும் மதவாதக் கட்சிகளைப் புறக்கணித்து நாம் சாதனை படைத்திருக்கிறோம் என்று பெருமை கொள்ளுங்கள்.

மாநில சுயாட்சி கோரிக்கையை வலுப்படுத்தும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடுறது, நடுவண் அரசிடம் பொறுக்கித் தின்பது பற்றி எண்ணிக் கொண்டிருந்தால் கட்டியிருக்கும் கோவணமும் பறிபோகும்.

வெள்ளி, 12 ஜூலை, 2013

ஹிந்து தேசியவாதி மோடி - இப்பவாவது நம்புங்க



நான் ஒரு ஹிந்து தேசியவாதி... அப்படி என்னைப் பற்றிக் கூறுவதிலும் எந்தத் தவறும் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக் சொல்லியுள்ளார் மீடியா புகழ் மோடி..


மோடி மதச்சார்பற்றவர் என அவரது தொண்டர் அடிப்பொடிகள் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ‘டேய் , அப்படியெல்லாம் கிடையாது. மோடி ஹிந்து மதத்தை தூக்கி பிடிப்பவர்’ என்று பலமுறை விவாதம் செய்திருக்கிறேன். ஒருபயலும் ஒத்துக்கொள்ள வில்லை.

இப்போது மோடியே சொல்லிவிட்டார். இப்போது என்ன செய்யப் போகிறார்கள் அவரது அடிப்பொடிகள்? வேறு என்ன!! இன்னொரு கதை எழுதி அடுத்த சினிமாவை அரங்கேற்றுவார்கள்.

மோடி இவ்வாறு சொன்னது சரியா? தவறா? என்ற கேள்விக்கே இடம் கிடையாது. ஒருவன் தன்னை ஹிந்து என்று சொல்லிக் கொள்வதற்கும், ஹிந்து தேசியவாதி என்று சொல்லிக் கொள்வதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. ஒரு தேசத்தையே மதத்தின் பெயரால் அடையாளப்படுத்துகிறது ‘ஹிந்து தேசியவாதி’ என்னும் வார்த்தை.

இதை மோடி சொல்லியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதுதானே அவர் சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை. இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கும் கொள்கை.
விஷுவ இந்து பரிஷத், சிவ சேனா, சூ சாமி, இந்து முன்னணி என பல அமைப்புகளும் இதே கொள்கை உடையவை. அனைவரும் ஒரே கூட்டணியில் நிற்கிறார்கள்.

தான் சொல்வது தவறு என்று மோடிக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் மதவெறியூட்டி விட வேண்டுமல்லவா!! மதவாதத்தை விதைத்து ஓட்டு அறுவடை செய்ய வேண்டுமல்லவா!!

தான் இஸ்லாமிய தேசியவாதி என்றோ, கிருஸ்தவ தேசியவாதி என்றோ யாராச்சும் சொல்லியிருந்தால் [எந்த காலத்திலும் அப்படி யாரும் சொல்லக் கூடாது] இந்த நேரத்திற்கு எதிர்ப்புகள் பலமாக கிளம்பியிருக்கும். சொன்னது மோடியாச்சே!! அவர் சொன்ன கருத்தை தான் வெளியிடுகின்றன தவிர அவரைக் கண்டித்து ஒரு செய்தியையும் காணோம்.

பிஜேபி ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை. மோடி  பிரதமர் ஆகப் போவதும் இல்லை. ஒருவேளை வந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்க அச்சமாக இருக்கிறது.
பரிவார் அமைப்புகளும், சேனா அமைப்புகளும் தமிழகத்தில் ஒருபோதும் தலையெடுக்க கூடாது.
காங்கிரசை எதிர்க்கிறோம் என்னும் பெயரில் பலரும் பிஜேபியின்  பிற்போக்கு கொள்கைகளுக்கு ஆதரவு அளித்துக்கொண்டிருப்பது வருத்தம்!!

சாதி வெறி, மத வெறி வேண்டாம்!
எவர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டாம்!
மனிதநேயம் வளர்த்து மனிதர்களாய் இருப்போம்!

திங்கள், 10 ஜூன், 2013

நரேந்திர மோடி: மீடியாவால் உருவாக்கப்பட்ட மாய பிம்பமா?

பாஜக கட்சியில் தேர்தல் பிரச்சாரக் குழுத்  தலைவராக நரேந்திர மோடியை அந்த கட்சி தேர்வு செய்துள்ளது. 
இதனை பலர் பட்டாசு போட்டு  கொண்டாடுகிறார்கள். ஆளாளுக்கு   வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
இந்திய ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் பலர் கூவுகிறார்கள்.

இப்ப என்ன நடந்து விட்டது? என்னவோ மோடி நாட்டின் பிரதமர் ஆனா ரேஞ்சுக்கு பில்டப்  கொடுக்குறாங்க.
'பிரதமர் பதவிக்கு மோடி தகுதியானவரா? இல்லையா?' என்பதை தேர்தலில் மக்கள் தீர்மானிப்பார்கள் (அதற்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தீர்மானிக்க வேண்டும்). அதனை பற்றி இப்போது விரிவாக பேச  தேவையில்லை.

மோடி என்னும் பெயர் எப்படி பலரை சென்றடைந்துள்ளது? என்பதை பார்ப்போம்.
நான் பல மாநில நண்பர்களிடம் பேசும் வாய்ப்பு பெற்றவன். அனைவரிடமும் அரசியல் பேசி அவர்களுடைய விருப்பத்தை கேட்டு அறியும் பழக்கம் உள்ளவன்.

மோடியை ஆதரிப்பவர்கள் கூறும் கருத்துகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும்.

* குஜராத் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது

* காங்கிரஸ் சரியில்லை. பிஜேபி வரட்டும்.


பெரும்பாலும் இந்த இரு பதில்கள் மட்டும் வரும்.
இந்த இரு கருத்துக்களில் இரண்டாம் கருத்து எந்த ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை.
திமுக, அதிமுக என்று மாறி மாறி நாம் ஏமாறுவது போலத்தான்.

முதலாவது கருத்தை நாம் யோசிக்க வேண்டும்.
  • குஜராத்ல இருக்குற ஒரு பயலுக்கும் தமிழர் பிரச்சினைகள் ஏதும் தெரியல.  ஆனால் இங்க இருக்குற பலர்  'குஜராத் வளருது, மோடி அப்படி, இப்படி'-ன்னு சொல்லுறாங்க. 
          குஜராத்-ல  நடக்கிறது எப்படி தமிழனுக்கு தெரிஞ்சிது? தமிழ்நாட்டுல நடக்குறது ஏன் குஜராத்திக்கு தெரியல?
  •  பல மாநிலங்களிலும் பல நிகழ்வுகள் நடக்கின்றன. அவை எவையும் வேறு எந்த  மாநில மக்களிடமும் சென்று அடைவதில்லையே!! ஏன்?

ரொம்ப சிம்பிள்.
தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதா குடிநீர் திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைக்கிறார். ஆந்திராவில் முதல்வர் கிரண்குமார் ஏதாவது   திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைக்கிறார். இவர்கள் செயல்படுத்தும் திட்டங்கள் மாநில தொலைக்காட்சிகளில், செய்திதாள்களில்  மட்டும் காட்டப்படும். அதை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.
ஆனால் குஜராத்தில் மோடி ஏதேனும் ஒரு அறிக்கைகொடுத்தால் கூட அதனை அனைத்து இந்திய ஊடகங்களும் திரும்ப திரும்ப ஒளிபரப்புகின்றன. செய்திதாள்களில் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள்.

பலர் கருத்துப்படி மோடி வல்லவர், நல்லவர் என வைத்துக் கொள்வோம்.
அப்படியானால்
  • பா.ஜ.க வில் திறமையான தலைவர்கள் வேறு யாரும் இல்லையா??
  • இந்தியா முழுக்க வேறு தலைவர்கள் யாரும் இல்லையா?
  • மிகத் திறமையானவர், குஜராத் வளர்ச்சியடைந்துள்ளது என்றால் அவர் ஏன் தேர்தலில் கோடி கோடியாக செலவு செய்து முட்டி மோதினார்?
மோடி என்னென்ன செய்தார்? அவரது கொள்கைகள்/சாதனைகள்  என்ன?  மற்ற முதல்வர்களிடமிருந்து எவ்வகையில் வேறுபடுகிறார் என எதையும் சொல்லாமல் வெறும் மோடி புராணத்தை மட்டுமே பலர் பாடுகிறார்கள்.
மோடி என்னும் பிம்பம் மீடியாக்களால் உருவாக்கப்பட்டது என்பது கண்கூடாக  தெரிகிறது.

நேற்று மோடி தேர்தல் பிரச்சாரக் குழுத்  தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர் பலர் தங்கள் கருத்துக்களை இணையங்களில் பதிவு செய்திருந்தார்கள்.  பலர் கருத்துக்களில் மதவாதம் தலைவிரித்து ஆடியது.
அதில் ஒரு கருத்தை பாருங்கள்

கட்சியின் கொள்கைகள்/சாதனைகள் எவற்றையும் முன் வைக்காமல் ஒரு தனி மனிதரை முன்னிறுத்தி அரசியல் செய்வதால் பா.ஜ.க விற்கு பின்னடைவே!! அன்ன ஹாசாரே ஏன் வீழ்ந்தார் என்பதை பா.ஜ.க சிந்திக்க வேண்டும்,

சனி, 23 மார்ச், 2013

இதைக் கூட இந்தியாவால் செய்யமுடியாதா??


தமிழீழ விடுதலைக்காக தமிழகத்தில் மாணவர்கள் தன்னெழுச்சி போராட்டம் ஆரம்பித்து பொதுமக்கள், பணியாளர்கள் போராட்டம் என நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது.

ஆனால் இந்தியா அதே கள்ள மௌனம் சாதிக்கிறது. நடந்தது இனப்படுகொலை என்பதைக் கூட இந்தியாவால் தைரியமாக சொல்ல முடியவில்லை (இந்தியாவும் உடந்தைதானே!!). இந்தியா மீது தமிழர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். காங்கிரஸ், பிஜேபி மற்றும் பல இந்தியக் கட்சிகளும் தமிழர்கள் பற்றிக் கண்டுகொள்வதில்லை. தமிழகக் கட்சிகளும் கூட்டணி கணக்கில் இறங்கிவிட்டார்கள்.

 இந்நிலையில் இந்தியாவுக்கு கீழ்க்காணும் கோரிக்கைகளை வைக்கிறேன்.
இது ஏற்கனவே பலரும் வைத்ததுதான்.

1. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது. (புறக்கணிக்கப்போவதாக கனடா ஏற்கனவே அறிவித்துவிட்டது)

2. IPL கிரிக்கெட் விளையாட்டில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ளக் கூடாது.

3. தமிழ்மண்ணிலிருந்து இலங்கைத் தூதரகம் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

4.  இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்  (ஏற்கனவே தமிழக அரசு விதித்துவிட்டது)

5. தமிழக மீனவர் மீதான தாக்குதல்களுக்காக இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும். இனி தாக்குதல்கள் நடைபெறாது என்பதை உறுதி செய்யவேண்டும்..

Demands to Indian Government

1.India should not attend common wealth meeting to be held in genocidal srilanka.  (Canada already announced that they wont attend that meeting)


2. Srilankan players should not be allowed to play in IPL matches.

3. Genocidal Srilankan embassy should be removed from Tamilnadu

4. Indian Government should impose economical ban on Srilanka (Tamilnadu Govt already imposed economical ban on srilanka)

5. India should condemn Srilanka for its attacks on Tamilnadu fishermen.


நான்காவது கோரிக்கை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் மிக எளிதாக நிறைவேற்றப்படக்கூடிய  கோரிக்கைகளே!!

கிரிக்கெட்டை ஏன் புறக்கணிக்க வேண்டும் எனப் பலர் கேள்வி கேட்கக் கூடும்.
அவர்கள் இந்தப் பதிவை படித்துத் தெளிவாகுங்கள்.

இதைக் கூட இந்தியாவால் செய்யமுடியாதா??

செவ்வாய், 12 மார்ச், 2013

இந்தியா நடத்தும் இன அழிப்பு

எப்படியெல்லாம் ஒரு இனத்தை அழிக்கலாம்?
  • இனத்தின் மக்களை அழித்தல்
  • இனத்தின் மொழியை அழித்தல்
  • இனக் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு இவற்றை திரித்தல்/அழித்தல்
இதில் கடைசி இரண்டு முறைகளை அவ்வப்போது தமிழினம் மீது ஏவுகிறது இந்திய ஆதிக்கம்.

ஏற்கனவே இந்திய ஆதிக்கத்தால் தமிழினம் மீது நடத்தப்பட்டத்  தாக்குதல்கள்
  • தமிழர் வரலாறுகளை மத்தியப்  பாடத்திட்டங்களில் திரித்து எழுதுதல்
  • தமிழர் வரலாற்றைக்  கேலி செய்தல்
  • தமிழர் வீரவிளையாட்டைத் தடை செய்தல்
இப்போது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதத்   தடை

கடந்த சில வருடங்களாக தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது குறிப்பிடத்தக்கது. இனி தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை கண்டிப்பாக குறையும். பலரும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

இதுவும் ஒருவகையில் மறைமுக இந்தி திணிப்பே! 
பிற மொழிகளில் எழுதத் தடை விதித்தவர்கள் ஏன் இந்திக்கும் தடை விதிக்கவில்லை? ஆங்கிலத்தில் மட்டும் தேர்வுகள் நடத்தலாமே? அனைத்து மாநிலங்களிலும் ஆங்கிலம் உள்ளதே!
 
ஏற்கனவே தமிழகத்தில் பலரும் 'ஐயோ! நமக்கு இந்தி தெரியலையே!' என்று வருந்துவதுண்டு (ஒரு காலத்தில் நானும் வருந்தினேன்). இப்போது அந்த குரல் பலம் பெறும். இந்தி மிக அவசியம் என்னும் உணர்வு தமிழாகளிடம் ஏற்படும்.

ஏற்கனவே தமிழகத்தின் நகரங்களில் பல பள்ளிகளில் (வித்யாலயா) இந்தியைக் கட்டாயம் ஆக்கியுள்ளார்கள். இது யார் செயல் என்பதும் பலர் அறிந்ததே!

பிற இனங்களின் மொழிகளைப் புறக்கணித்து, ஒடுக்க நினைக்கும் இந்திய ஆதிக்கத்தின் நரித்தனத்தை முறியடிப்போம்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்.
இவ்விசயத்தில் தமிழகத்தின் பல கட்சிகளும் ஒன்றுபட்டு மத்திய அரசை எதிர்த்து நம் உரிமையை மீட்க வேண்டும்.


இந்திய ஒன்றியம்  என்பது பல இனங்களைக் கொண்டு கட்டியமைக்கப்பட்ட கட்டமைப்பே.

என் இனத்தின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு அனைத்தையும் மறைத்துவிட்டு எனக்கு 'இந்தியன்'னு பட்டம் கொடுப்பீங்க. அதை வாங்கிட்டு இளிச்சுட்டு போக நான் முட்டாள் இல்லை.

பின் குறிப்பு:
நான் எந்த மொழிக்கும் எதிரானவனில்லை.
எந்த மொழியையும் கற்பதில் தவறில்லை.
ஆனால் கட்டாய மொழித்திணிப்பு  மாபெரும் குற்றம்.

இதுபற்றி நான் ஏற்கனவே எழுதிய கட்டுரை
தமிழினத்தைக் காத்திட இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம்

வியாழன், 7 மார்ச், 2013

தோழர் திருமா எடுத்த மாபெரும் ஆயுதம்

மக்களவையில் நேற்று  ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிய விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசியதன ஒரு பகுதி:

"இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டும். ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் இந்தியா பழி சுமக்க நேரிடும். தமிழர்கள் இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடும் நிலை உருவாகும். "


'தனி நாடு '  என்பதுதான் தோழர் திருமா எடுத்த மாபெரும் ஆயுதம்.

மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின்போது திமுக எம்.பி திருச்சி சிவா அவர்களும் இதே கருத்தை மறைமுகமாக வைத்தார். 'இலங்கை வேண்டுமா? தமிழகம் வேண்டுமா? என்பதை இந்தியா தீர்மானிக்கட்டும்' என்றார்.

ஒட்டுமொத்த தமிழர்களும் இலங்கையைக் கண்டிக்கிறார்கள்.
இனப்படுகொலைக்குத் தீர்வு வேண்டும் என்கிறார்கள்.
இந்தியா இலங்கையை எதிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
சிலர் தீக்குளித்து இன்னுயிரை மாய்க்கிறார்கள்.

ஆனாலும் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
'இலங்கை நம் நட்பு நாடு. நாம் அவர்களை எதிர்க்க கூடாது'.
அதாவது இலங்கையை தனது மாநிலமாக பாவித்து பேசுகிறது இந்திய ஏகாதிபத்தியம்.

இடையில் பல இந்திய ஊடகங்கள், சு.சாமி போன்ற  அரசியல் தரகர்கள் தமிழர்களுக்கு எதிராக நிற்கிறார்கள். (கேடுகெட்ட தினமலர் இன்று  எப்படி கார்ட்டூன் போட்டுருக்கான்னு பாருங்க!!)

 இந்தியாவின் இரு அவைகளிலும் தமிழர் பிரச்சினை என்றாலே வட மாநில உறுப்பினர்கள் வெளியே காற்று வாங்க சென்று விடுகிறார்கள்.

அப்படியானால் தமிழன் என்ன செய்வது?
எப்படி இந்தியாவை ஆட்டம் காணச் செய்வது?

அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.
ஆம்! 'தனித் தமிழ்நாடு' கோஷம். இது வெற்றுக் கோஷம் அல்ல. நம் உரிமை.
அதை நாம் கையில் எடுக்கும் போது இந்திய வல்லாதிக்கம் நடுங்கும்.

கடிதம் எழுதி காலத்தைப் போக்குவது ஒட்டு வங்கி அரசியலுக்கு உதவுமே தவிர, தீர்வாகாது.

திருமாவின் இந்த கோஷம் தமிழக மக்களை சென்றடையாது. ஒருவேளை செல்லும்பட்சத்தில் தமிழக மக்கள் விழிப்புணர்வு ஏறுவார்கள். விழிப்புணர்வு பெற்றுவிட்டால் ஏமாற்று அரசியல் பண்ண முடியாதே!!!

திருமாவின் பேச்சை ஊடகங்கள் மறைக்கும். 'காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்' என திருமா தமிழில் ஆவேசமாகப் பேசியதை ஒளிபரப்பிய சன் டி.வி 'தனி நாடு' முழக்கத்தை கட் செய்து விட்டது. இதுதான் போலித் திராவிடம்!!

தோழர் திருமா மட்டும் இந்த ஆயுதத்தை எடுத்தால் போதாது. ஒட்டுமொத்த தமிழர்களும் ஓரணியில் திரண்டு  'தனித் தமிழ்நாடு' கோஷத்தை வலுவாக உயர்த்த வேண்டும்.

“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.”- தமிழீழத் தேசியத் தலைவர்  பிரபாகரன் 

திங்கள், 11 பிப்ரவரி, 2013

உமர் அப்துல்லாவின் கொலைவெறி!

ராஜீவ்காந்தி, பியாந்த் சிங் கொலையாளிகள் வரிசையாக தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் நிலையில், அப்சல் குருவை மட்டும் தேர்ந்தெடுத்து தூக்கிலிட்டது ஏன் என காஷ்மீர் முதல்வர் உமர்அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.


அப்சல் குருவை குறிவைத்து தூக்கில் போடவில்லை என்பதை காஷ்மீர் இளைஞர்களுக்கும், உலகத்தாருக்கும் நிருபிக்க வேண்டிய கடமை நீதித்துறைக்கும், அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது. ராஜீவ்காந்தி மற்றும் பியாந்த் சிங் கொலையாளிகளின் தூக்கு தண்டனை குறித்து பாஜ தலைவர்கள் மவுனமாக இருப்பது ஏன்? இவ்வாறு உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் சொல்வது எப்படி இருக்குது தெரியுமா: "என் வீட்டில் மட்டும் எழவு விழுந்து விட்டதே! ஊரில் மத்தவன் எல்லாம் நல்லா இருக்குறானே!!" என்று வன்மத்தோடு புலம்புவது போல உள்ளது.

அப்சல் குரு தூக்கு விசயத்தில் இந்தியாவின் பாசிசம் வெளிப்பட்டுள்ளது என்பது அறிந்ததே! சட்டம் தன் கடமையை சரிவர செய்யவில்லை என்பதும் அறிந்ததே! கண்டிப்பாக அது கண்டனத்துக்குரியதே!

அதற்காக பரிகாரமாக இன்னும் உயிர்களை எடுக்க வேண்டும் என சொல்வது எப்படி நியாயம் ஆகும்? அதுவும் மக்களை,ஊடகங்களை, பாஜக ஆகியவற்றை   உசுப்பேற்றி விடுவது என்ன காரியம்??

உமர் அப்துல்லா மட்டும் இந்த கொலைவெறி பிடித்து அலையவில்லை. Times Now, CNN IBN போன்ற ஊடகங்களும் இதே கொலைவெறியில் மக்களை உசுப்பேற்றும் பணியில் இறங்கியுள்ளன.

ராஜீவ் கொலை விசாரணையில் உள்ள பல ஓட்டைகளை ஏன் இந்திய ஏகாதிபத்தியம் மூடி மறைக்கிறது? அதை பற்றி  உமர் அப்துல்லாவும், ஊடகங்களும் ஏன் வாய் திறப்பதில்லை? பாராளுமன்ற தாக்குதல் வழக்கிலும் பல சர்ச்சைகள் உள்ளனவே! அதை பற்றியும் ஏன் வாய் திறப்பதில்லை?

"இந்திய ஏகாதிபத்தியம் முக்கிய குற்றவாளிகளை கொன்றோ, (தப்பிக்கவோ) விட்டுவிட்டு அப்பாவிகளை உள்ளே தள்ளி உண்மைகளை மறைத்துவிடும் என்பதே இந்த வழக்குகள் நமக்களிக்கும் சேதி போலும்." - இக்பால் செல்வன்

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

அப்சல் குரு தூக்கு - இந்தியாவின் பாசிசம்

விடுமுறை நாட்களில் லேட்டாக எழும்புவதுதான் வழக்கம். அப்படித்தான் சனிக்கிழமையன்றும் எழுந்து தொலைக்காட்சியை ஆன் செய்தால் CNN-IBN சானலில் 'Afsal Guru Hanged' என்று Flash news ஓடிக் கொண்டிருந்தது.

எந்த ஒரு அதிர்ச்சியும் இல்லை. அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட போதே எனக்கு தெரியும் "இனி எதிர்க்கட்சிகளை சமாளிக்கவும், மக்களை திருப்திபடுத்தவும்(??), மக்களை திசைதிருப்பவும்  இதுபோன்ற கொலைகள் நடந்து கொண்டே இருக்கும்" என்று.

ஒரு நாட்டின் சட்டம் நம்பகத்தன்மையாக இருக்க வேண்டும்.
ஏழை, பணக்காரன், அதிகாரம்  படைத்தவன் என எல்லோருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும்.
விசாரணைகள் எந்த ஒரு ஒழிவு மறைவுமின்றி நடைபெற வேண்டும்.
அப்படி இருக்கும்பட்சத்தில் மட்டுமே அந்த சட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் தண்டனைகளை சரி என்று கூற முடியும்.

ஆனால்  இங்கு சட்டம் எப்படி இருக்கிறது? தலைமை எப்படி இருக்கிறது?
அதை நீங்களே யோசித்து முடிவெடுத்து கொள்ளுங்கள். நீதிபதிகளையே விலைபேசி வாங்கும் நிலையில்தான் நாடு உள்ளது.

அமெரிக்காவிலிருந்து எஸ்.எம் கிருஷ்ணா அவர்கள் பிரதமருக்கு செய்தி அனுப்புகிறார். காவிரியின் ஷட்டர் உடனே மூடப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்துகொண்டு கார்த்திக் சிதம்பரம் வழக்கு போடுகிறார். பாண்டிச்சேரியில் Tweet செய்த நபர் கைது செய்யப்படுகிறார்.

இணையங்களில் அரசியல்வாதிகளின் முகமூடி கிழிக்கப்படுகிறது. அதை சமாளிக்க என்று IT Act என்று புதிய சட்டம். நம்ம முதல்வர் ஒருபடி மேலே சென்று இணைய குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை அறிவித்து விட்டார்.

இதுதான் இன்றைய சட்டத்தின் நிலை. இன்னும் பல பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்போ விசயத்துக்கு வருவோம்.
"அப்சல் குரு குற்றவாளி. அவனை தூக்கிலிட்டது சரியே!" என்று பலர் ஆனந்த கூத்தாடுகிறார்கள். சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். "இந்தியாவின் குடியரசு நிரூபிக்கப்பட்டுள்ளது! பாரத் மாதா கீ ஜெய்!" என்கிறார்கள்.

ஒரு உயிர்  பறிபோனதில்  அவ்வளவு மகிழ்ச்சியா?
உடனே எழுப்பப்படும் எதிர்கேள்வி "அப்சல் குரு பலரை கொள்ளவில்லையா? அவன் செய்தது நியாயமா?".
அப்சல் குரு கொலையாளி என்று இந்தியாவும் அதன் சட்டமும் கூறுகிறது. அதன்மீது எனக்கு நம்பிக்கை கிடையாது.

இருந்தாலும் உங்கள் வாதப்படி அவர் குற்றவாளி என்றே வைத்துக் கொள்வோம்.
கொலைக்கு கொலை ஈடாகுமா?
இதுதான் உங்கள் பாரதம் கற்றுக் கொடுத்ததா?
இதுதான் அஹிம்சையா?
இதுதான் தேசப்பற்றா?

சில நாட்களுக்கு முன்னர் "பத்து பாகிஸ்தானியர்கள் தலை வேண்டும்" என இந்திய எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா கொக்கரித்தார். தலைவர்கள்தான் இப்படி  ஓட்டு வங்கி அரசியலுக்காக கொக்கரிக்கிறார்கள் என்றால் நாமும் அதையே செய்யலாமா?


கொலைக்கு கொலை ஈடு என்றால் இன்று இந்தியாவில் பலரும் தூக்கிலிடப்பட்டு இருக்க வேண்டுமே!!

 ஈழ ஆதரவாளன் என்பதால் பலரும் என்னிடம் எழுப்பும் கேள்வி "ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி மரண தண்டனை வாங்கி தர வேண்டாமா?".
 ராஜபக்சேவுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டாலும் அதை நான் எதிர்ப்பேன். ராஜபக்சேவின் உயிரை எடுப்பதோ, செயவர்த்தனேவின் உயிரை எடுப்பதோ ஈழ மக்களுக்கு தீர்வு கிடையாது. அதுதான் தீர்வு என்று எண்ணியிருந்தால் அதை என் தலைவர் என்றோ செய்து முடித்திருப்பார். ஆனால் ஈழ மக்களின் எண்ணம் அது இல்லை. அவர்களின் நிலம் அவர்களுக்கு வேண்டும். அவர்களின் இன உரிமை அவர்களுக்கு வேண்டும்.

"ராஜீவ் கொலையில்  குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள மூவரை ஏன் இன்னும் தூக்கிலிடவில்லை?
பஞ்சாப் முன்னாள் முதல்வரை கொன்ற குற்றவாளிகளை  ஏன் இன்னும் தூக்கிலிடவில்லை?" என்று இந்திய ஊடகங்களும், அரைகுறை அரசியல்வாதிகளும் தங்கள் விஷத்தை கக்குகிறார்கள்.

ராஜீவ் கொலை விசாரணையில் உள்ள பல  ஓட்டைகளை இந்திய ஏகாதிபத்தியம் ஏன் மூடி மறைக்கிறது??
ஆயுள் தண்டனை அனுபவித்து முடித்த பின்னரும் சகோதரி நளினியை ஏன் விடுதலை செய்யவில்லை?
அதை பற்றி ஒரு பையலும் கேள்வி கேட்க மாட்டான்.

பாராளுமன்ற தாக்குதலில் குருநாதனுக்கும்(நான்தான் ) தொடர்பு உண்டு. அவரை தூக்கிலிடுங்கள் என்று இந்திய சட்டம் சொல்லும்.
இல்லை அவன் டெல்லி பக்கமே போனதில்லை என்று என் பெற்றோரும், நண்பர்களும் சாட்சி சொல்லுவார்கள். ஆனால் சாட்சிகள்  நிராகரிக்கப்படும். நான் டெல்லியில் இருந்ததாக ஆதாரங்கள் தயாரிக்கப்படும். நான் தூக்கிலிடப் படுவேன்.
"இவன் லூசு மாதிரி உளறுகிறான் ! அப்படியெல்லாம் நடக்காது!" என்று இதை படிக்கும் பலரும் எண்ணலாம். ஆனால் அப்படி நடந்தாலும் அதை யாரும் தடுக்க முடியாது.

அப்சல் குரு தூக்கிலிடப்படுவதற்கு  முன்னர் அவரது குடும்பத்தினரை கூட சந்திக்கவிடாமல் மனிதநேயமற்று, மாபெரும் குற்றத்தை செய்துள்ளது இந்திய ஏகாதிபத்தியம்.

இந்தியப் பாசிசத்தின் பசி இன்னும் அடங்கவில்லை.

திங்கள், 21 ஜனவரி, 2013

தீவிரவாதிகள் இந்துக்கள் அல்ல!

அனைத்து மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவோரை  மத அடிப்படையில் அடையாளக் கூடாது என்னும் கருத்தை வலியுறுத்தி தீவிரவாதிகள் முஸ்லீம்கள் அல்ல! என்னும் கட்டுரை பதிவு செய்திருந்தேன்.

அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு.

கடந்த ஞாயிறு அன்று ஜெய்ப்பூரில் பேசிய இந்தியாவின் உள்துறை  அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே "பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் இந்துத் தீவிரவாதத்தை வளர்க்கின்றன" என்று கூறியிருந்தார். 

இக்கருத்தை  பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் கடுமையாக எதிர்ககும் அதேவேளையில் லஸ்கர்-இ-தொய்பா என்னும் தீவிரவாத அமைப்பு சுஷில்குமார் கருத்தை வரவேற்றுள்ளது

"தீவிரவாதிகளின் செல்லப்பிள்ளை (Darling of Terrorists) சுஷில்குமார் ஷிண்டே" என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கூறியுள்ளது.


அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு,  மெக்கா மசூதி குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு மற்றும் பல தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்பு உள்ளதாகவும், பழியை சிறுபான்மையினர் மீது போடுவதாகவும்  காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஷிண்டே கருத்தை பல காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்கிறார்கள்.
நானும் வரவேற்கிறேன்.

ஆனால் அவர் சொன்ன விதத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மேற்கூறிய தீவிரவாத செயல்களில்  ஈடுபட்டோரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏற்றுக்கொல்லும்பட்சத்தில் அவர்களை "ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்" என்று சொல்லலாம். தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவோரை எக்காலத்திலும்  மத அடிப்படையில் அடையாளக் கூடாது. 

நேற்று CNN-IBN தொலைக்காட்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் "இந்துத் தீவிரவாதம் என்ற வார்த்தை தவறு. சங் தீவிரவாதம்(Sangh Terrorism) என்று சொல்லலாம்" என்று கூறியிருந்தார். திக்விஜய் சிங் சொல்வது ஏற்புடையது.
 
இந்துத் தீவிரவாதம், இஸ்லாமிய  தீவிரவாதம், கிருஸ்தவ தீவிரவாதம் போன்ற வார்த்தைகள் மக்களிடையே மேலும் மேலும் விரிசலை ஏற்படுத்துமே தவிர ஒருகாலமும் தீவிரவாதத்தை குறைக்காது. 
  
மேற்கூறிய தீவிரவாத செயல்களில் முறையான விசாரணை இதுவரை செய்யப்படவில்லை. விசாரணையை ஏன் காங்கிரஸ் முடுக்கி விடவில்லை? 

தேர்தல் நேரத்தின்போதும், மக்கள் பிரச்சினைகளை திசைமாற்றவும், எதிக்கட்சிகளின் கவனத்தை திசைதிருப்பவும் காங்கிரஸ் எடுக்கும் கேவலமான ஆயுதம்தான்  இந்துத் தீவிரவாதம், காவித்தீவிரவாதம் போன்ற வார்த்தைகள். 

குஜராத் தேர்தலின்போதும் இந்த ஆயுதத்தை எடுத்தார்கள்.
2G ஊழல், காமன்வெல்த் ஊழல் பிரச்சினைகள் உச்சத்தில் இருந்தபோதும் இந்த ஆயுதத்தை எடுத்தார்கள்.
இப்போது கூட ரயில் கட்டண உயர்வை திசைதிருப்ப  இந்த ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள் என தோன்றுகிறது.
2014 தேர்தலின்போதும் இந்த ஆயுதத்தை எடுப்பார்கள். ஆனால் தீவிரவாதத்தை குறைக்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.

இது பல கட்சிகளுக்கும் பொருந்தும்.
எத்தனை முறை சொன்னாலும் இந்த ஓட்டுப்பொறுக்கிகளுக்கு உரைக்காது. மக்கள் பிரச்சினைகள் எத்தனையோ உள்ளன. அவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வார்த்தை விளையாட்டு விளையாடிக்கொண்டே இருப்பார்கள்.

காங்கிரஸ், பாரதிய ஜனதா  தலைவர்களின் கருத்துக்கள், இந்திய நிகழ்வுகள்  பற்றி நான் மிகுந்த அக்கறை செலுத்துவது கிடையாது. ஆனாலும் அவர்களது கருத்து, செயல்பாடுகளால் ஏற்கனவே பிரிந்து கிடக்கும் தமிழ்த்தேசத்தில் மேலும் பிரிவு வந்து விடக்கூடாது என்பதை சொல்லவே இந்த பதிவு.

மனித நேயம் குறைந்துவரும் இந்த காலக்கட்டத்தில் மனித நேயம் வளர்ப்போம்!

நன்றி.

2014-இல் பிரதமராகும் ராகுல்காந்தி

தலைப்பை பார்த்ததும் சிலர் அதிர்ச்சி அடையலாம். இதெல்லாம் நடக்குற காரியமா?  என எண்ணலாம். ஆனால் இது நடந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

ஊழல், விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல்  விலை உயர்வு  மற்றும் பல  குற்றச்சாட்டுகளால்  மத்திய காங்கிரஸ் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

'அவ்வளவுதான், இனி காங்கிரஸ் வரவே வராது' என பலரும் நிம்மதி பெருமூச்சு விடலாம். மோடி வரட்டும் என இணையங்களில் பலர் விவரம் தெரியாமல் வீரவசனம் பேசலாம் [வீரவசனம் பேசியவர்களில் நானும் ஒருவன் :)].

ஆனால் அனைத்தையும் தாண்டி  2014-இல் காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். சோனியாவின் தவப்புதல்வர்  ராகுல்காந்தி பிரதமராக ஆட்சிக் கட்டிலில் அமருவார்.

 எப்படி சாத்தியமாகும்? 
  • மக்களின் மறதி. இறுதி நேரத்தில் கொடுக்கப்படும் போலி வாக்குறுதிகள் பழைய நிகழ்வுகளை மக்கள் மறந்து விட செய்துவிடும்.
  • சரியான எதிர்க்கட்சி இல்லாமை. பிரதான எதிர்க்கட்சியான பி.ஜே.பி யின் தலைவரை ஒரு மதவாத அமைப்பு தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. (இவர்கள் ஆட்சிக்கு வந்து என்னத்த கிழிக்க??). மூன்றாவது அணி இந்தியாவில்  எக்காலத்திலும் சாத்தியம் கிடையாது
  • காங்கிரசுக்காக பணம் வாரியிறைக்க தயாராக உள்ள  தொழிலதிபர்கள்
  • தம் மாநிலங்களில் செத்துப்போன காங்கிரஸ் பிணத்தை சுமக்க தயாராக உள்ள மாநிலக்கட்சிகள். தங்கள் சுயநலத்திற்காக, பதவிகளுக்காக இந்த மாநிலக்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
  • சோனியா மற்றும் சில காங்கிரஸ் தலைவர்களின்  ராஜதந்திரம். நம்ம ஊரு கருணாநிதியை அரசியல் சாணக்கியர் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சாணக்கியரையே அலறவிட்டவர்கள் இவர்கள்.  தேர்தல் வியூகம்(??) வகுப்பதில் காங்கிரஸ்காரர்கள் கில்லாடிகள்.

ஆக கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து பார்த்தால்  2014-இல் பிரதமராவார் ராகுல்காந்தி. இது எனது சிறு கணிப்பு. உங்கள் கணிப்புகளையும் பதிவு செய்யலாம்.

[பின் குறிப்பு: இந்தியாவை யார்  ஆண்டாலும் தமிழர்களுக்கு ஒரு நன்மையையும் கிடையாது. அதனால் இந்தியாவை  ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கு கவலை இல்லை.]