சனி, 22 ஜூன், 2013

அப்துல்கலாம் சீடர் சொல்லிக்கொடுத்த அரைகுறை அரசியல்

ஆந்திரா மாநிலத்தை சார்ந்த சிபிஐ அதிகாரி ஒருவர் அலுவலகத்திற்கு உரையாற்ற வந்திருந்தார். பொறியியல் படித்து பின்னர் ஆசிரியராக பணியாற்றி இப்போது சிபிஐ துறையில் பணி புரிகிறார். சத்யம் நிறுவன ஊழல், ஜகன்மோகன் ஊழல் வழக்குகளில் முக்கிய பணியாற்றியவர்.
அவர் உரையாற்றி முடித்ததும் பலரும் ‘ஆஹோ ஓஹோ’ என்று புகழ்ந்தார்கள். ஆனால் அது என்னிடத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.


முதலில் அவர் கூறிய நல்ல செய்திகளை பார்ப்போம். மது ஒழிப்பு, இயற்கை பாதுகாப்பு, ஆரோக்கிய உணவு முறை, தாய் மொழிப்பற்று, லஞ்ச ஒழிப்பு, புத்தகங்கள் வாசிக்கும் முறை, குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பதை அருமையாக விளக்கினார். அதற்காக ஒரு சபாஷ் போடலாம்.

அடுத்து அவர் எடுத்துரைத்த முரண்பட்ட கருத்துக்களைக் காண்போம்.


1. சிபிஐ அமைப்பு என்பது எந்த காலத்திலும் யாருடைய அழுத்தத்திற்கும் கட்டுப்பட்டு நடந்தது கிடையாது என பொய்மூட்டையை அவிழ்த்து விட்டார். //கூடங்குளம் அணு உலை மிகுந்த பாதுகாப்பானது என்று அய்யா கலாம் சொன்ன பொய்யை மிஞ்சி விட்டார். காங்கிரசுடன் கூட்டணி முறிந்த அடுத்த நாளே ஸ்டாலின் வீட்டிற்கு சிபிஐ ஏன் வந்தது என்றும், ஜகன்மோகன் இன்று சிறையில் இருக்க யார் காரணம் என்பதையும் மறந்து விட்டார் போல!!

2. நாட்டின் மோசமான நிலைக்கு ஊழல் மட்டுமே காரணம் என்று கூறினார். //ஊழல் மட்டும்தான் காரணமா? இப்படி கூறி யாரைக் காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. தண்ணீர், மின்சாரம், பெட்ரோல், போக்குவரத்து என பல துறைகளையும் தனியாரிடம் கொடுத்து நாட்டை சீரழித்தது ஒரு காரணம் என்பது அவருக்கு தெரியாமல் போனதா?? அதை ஏன் இளம்தலைமுறையினரிடம் எடுத்துக் கூற மறுக்கிறார்?

3. அரசு, காவல்துறையுடன் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார் // நல்ல கருத்து. ஆனால் இங்கே என்ன நடக்கிறது என்னும் உண்மையை ஏன் அவர் சொல்ல மறுக்கிறார்? மக்களே இணைந்து போராட்டம் நடத்த முடியவில்லை. இந்நிலையில் மக்கள் எப்படி காவல்துறையுடன் இணைந்து செயல்படுவது? இந்திய அரசியலமைப்பு விதி 19-படி பொது இடத்தில் ஆயுதம் இல்லாமல் கூடுவதற்கு உரிமை உண்டு. அந்த உரிமை இப்போது அனைவருக்கும் இருக்குதா?? கட்சி மாநாடு வேண்டுமானால் போடலாம். மக்கள் போராட முடியுமா?? டெல்லியில் அடி, தெலங்கானாவில் அடி, கூடங்குளத்தில் அடி, சட்டீஸ்கரில் அடி என மக்கள் மீது அரசு நடத்தும் பயங்கரவாதத்தை அவர் ஏன் எடுத்துக் கூற மறுக்கிறார்?

4. ஏழைகளுக்கு, ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்துகொண்டே இருங்கள் என்றார். //நல்ல விசயம்தான். ஆனால் இப்படி சொல்வதன் மூலம் ஏழ்மை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதை மறைமுக சொல்கிறார். மக்கள் ஏன் வறுமை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்? அதனை எப்படி தடுப்பது என்று சொல்லித் தராமல் வெறுமென ‘உதவி செய்யுங்கள்’ என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

5. கேதர்நாத் இயற்கை சீற்றத்திற்கு காரணம் நாம் இயற்கையை அழித்துதான் என்று சொல்லி முடித்துக் கொண்டார். //அந்த ‘நாம்’ யாரைக் குறிக்கும்? காட்டை அழித்து சொகுசு விடுதிகள் நிறுவி கல்லா கட்டியவர்களையா? பாக்சைட் எடுக்கிறோம், இரும்பு எடுக்கிறோம் என்ற பெயரில் இயற்கையை அழிக்கும் பன்னாட்டு கம்பெனிகளையா?

6. சாதி, மதப் பிரிவினைகள் கூடாது என்று சொன்னார். //நல்லக் கருத்து. ஆனால் குறிப்பிட்ட மத புத்தகங்களைப் படியுங்கள் என்று தன் உரையின் நடுவே மதப் பிரச்சாரமும் செய்தார். அனைத்து மதத்தினரும் பணிபுரியும் கம்பெனியில் குறிப்பிட்ட மதம் சார்ந்த பாடலைப் பாடிய பின்னர்தான் நிகழ்ச்சியே ஆரம்பித்தது. சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் ஏதாவது ஒரு ஒடுக்குமுறையையாவது உதாரணம் சொல்லியிருக்க வேண்டும். அதை சொல்லவில்லை. தெலங்கானா மக்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டார்கள் என்பதையாவது சொல்லியிருக்கலாம்.

7. அசைவம் சாப்பிடுவதை பாவச்செயல் போல சித்தரித்தார். இந்த கருத்தை பலரும் மறைமுகமாக பரப்பி வருகிறார்கள். ஒரு சிறுகதையின் நடுவே அவர் இந்த கருத்தை சொன்னதால் பலரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை.

நுனிப்புல் மேய்வது போல அரசியல் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆக மொத்தத்தில் ஒரு முதலாளித்துவ அரசின் பிரதிநிதியாகப் பேசினார். அப்துல்கலாம் அவர்கள் உருவாக்கிய ‘2020 வல்லரசு இந்தியா’ என்னும் இலக்கை அடைவோம் என்று பேசி முடித்தார். கரவோசையில் அரங்கம் அதிர்ந்தது.

‘அணு உலைக்கு கலாம் சர்டிபிகேட் கொடுத்துட்டார். ஏன்டா போராடுறீங்க?’ என்று சொல்பவர்களும், ‘அனைத்திற்கும் மக்கள்தான் காரணம்’ என ரசிகர் மன்ற அரசியல் பேசுபவர்களும், ‘ஈழம் என்பது அடுத்தவன் பிரச்சினை.இங்கே ஏன்டா போராடுறீங்க? நம்ம நாட்டு பிரச்சினையை பார்ப்போம்’ என்று மனித்தன்மையற்று பேசுபவர்களும் எவ்வாறு உருவாக்கப்படுகிறார்கள்? யாரால் உருவாக்கப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.

2 கருத்துகள்:

 1. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... நீங்கள் புரிந்து கொண்டது குறைவு...

  நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரை நான் குறை சொல்ல வரவில்லை. அவர் மிக நேர்மையான அதிகாரி. நல்ல மனிதர். அவர் சொன்ன பல கருத்துகளை நான் பாராட்டுகிறேன். ஆனால் இன்றைய சமூகத்தின் உண்மைநிலையை எடுத்துசொல்ல தவறி விட்டார்.
   சமூக அவலங்களை எடுத்து சொல்லாமல் சமூகத்தை திருத்த முடியாது தோழர்.

   நீக்கு