ஆந்திரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆந்திரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 ஜூன், 2013

அப்துல்கலாம் சீடர் சொல்லிக்கொடுத்த அரைகுறை அரசியல்

ஆந்திரா மாநிலத்தை சார்ந்த சிபிஐ அதிகாரி ஒருவர் அலுவலகத்திற்கு உரையாற்ற வந்திருந்தார். பொறியியல் படித்து பின்னர் ஆசிரியராக பணியாற்றி இப்போது சிபிஐ துறையில் பணி புரிகிறார். சத்யம் நிறுவன ஊழல், ஜகன்மோகன் ஊழல் வழக்குகளில் முக்கிய பணியாற்றியவர்.
அவர் உரையாற்றி முடித்ததும் பலரும் ‘ஆஹோ ஓஹோ’ என்று புகழ்ந்தார்கள். ஆனால் அது என்னிடத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.


முதலில் அவர் கூறிய நல்ல செய்திகளை பார்ப்போம். மது ஒழிப்பு, இயற்கை பாதுகாப்பு, ஆரோக்கிய உணவு முறை, தாய் மொழிப்பற்று, லஞ்ச ஒழிப்பு, புத்தகங்கள் வாசிக்கும் முறை, குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பதை அருமையாக விளக்கினார். அதற்காக ஒரு சபாஷ் போடலாம்.

அடுத்து அவர் எடுத்துரைத்த முரண்பட்ட கருத்துக்களைக் காண்போம்.


1. சிபிஐ அமைப்பு என்பது எந்த காலத்திலும் யாருடைய அழுத்தத்திற்கும் கட்டுப்பட்டு நடந்தது கிடையாது என பொய்மூட்டையை அவிழ்த்து விட்டார். //கூடங்குளம் அணு உலை மிகுந்த பாதுகாப்பானது என்று அய்யா கலாம் சொன்ன பொய்யை மிஞ்சி விட்டார். காங்கிரசுடன் கூட்டணி முறிந்த அடுத்த நாளே ஸ்டாலின் வீட்டிற்கு சிபிஐ ஏன் வந்தது என்றும், ஜகன்மோகன் இன்று சிறையில் இருக்க யார் காரணம் என்பதையும் மறந்து விட்டார் போல!!

2. நாட்டின் மோசமான நிலைக்கு ஊழல் மட்டுமே காரணம் என்று கூறினார். //ஊழல் மட்டும்தான் காரணமா? இப்படி கூறி யாரைக் காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. தண்ணீர், மின்சாரம், பெட்ரோல், போக்குவரத்து என பல துறைகளையும் தனியாரிடம் கொடுத்து நாட்டை சீரழித்தது ஒரு காரணம் என்பது அவருக்கு தெரியாமல் போனதா?? அதை ஏன் இளம்தலைமுறையினரிடம் எடுத்துக் கூற மறுக்கிறார்?

3. அரசு, காவல்துறையுடன் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார் // நல்ல கருத்து. ஆனால் இங்கே என்ன நடக்கிறது என்னும் உண்மையை ஏன் அவர் சொல்ல மறுக்கிறார்? மக்களே இணைந்து போராட்டம் நடத்த முடியவில்லை. இந்நிலையில் மக்கள் எப்படி காவல்துறையுடன் இணைந்து செயல்படுவது? இந்திய அரசியலமைப்பு விதி 19-படி பொது இடத்தில் ஆயுதம் இல்லாமல் கூடுவதற்கு உரிமை உண்டு. அந்த உரிமை இப்போது அனைவருக்கும் இருக்குதா?? கட்சி மாநாடு வேண்டுமானால் போடலாம். மக்கள் போராட முடியுமா?? டெல்லியில் அடி, தெலங்கானாவில் அடி, கூடங்குளத்தில் அடி, சட்டீஸ்கரில் அடி என மக்கள் மீது அரசு நடத்தும் பயங்கரவாதத்தை அவர் ஏன் எடுத்துக் கூற மறுக்கிறார்?

4. ஏழைகளுக்கு, ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்துகொண்டே இருங்கள் என்றார். //நல்ல விசயம்தான். ஆனால் இப்படி சொல்வதன் மூலம் ஏழ்மை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதை மறைமுக சொல்கிறார். மக்கள் ஏன் வறுமை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்? அதனை எப்படி தடுப்பது என்று சொல்லித் தராமல் வெறுமென ‘உதவி செய்யுங்கள்’ என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

5. கேதர்நாத் இயற்கை சீற்றத்திற்கு காரணம் நாம் இயற்கையை அழித்துதான் என்று சொல்லி முடித்துக் கொண்டார். //அந்த ‘நாம்’ யாரைக் குறிக்கும்? காட்டை அழித்து சொகுசு விடுதிகள் நிறுவி கல்லா கட்டியவர்களையா? பாக்சைட் எடுக்கிறோம், இரும்பு எடுக்கிறோம் என்ற பெயரில் இயற்கையை அழிக்கும் பன்னாட்டு கம்பெனிகளையா?

6. சாதி, மதப் பிரிவினைகள் கூடாது என்று சொன்னார். //நல்லக் கருத்து. ஆனால் குறிப்பிட்ட மத புத்தகங்களைப் படியுங்கள் என்று தன் உரையின் நடுவே மதப் பிரச்சாரமும் செய்தார். அனைத்து மதத்தினரும் பணிபுரியும் கம்பெனியில் குறிப்பிட்ட மதம் சார்ந்த பாடலைப் பாடிய பின்னர்தான் நிகழ்ச்சியே ஆரம்பித்தது. சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் ஏதாவது ஒரு ஒடுக்குமுறையையாவது உதாரணம் சொல்லியிருக்க வேண்டும். அதை சொல்லவில்லை. தெலங்கானா மக்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டார்கள் என்பதையாவது சொல்லியிருக்கலாம்.

7. அசைவம் சாப்பிடுவதை பாவச்செயல் போல சித்தரித்தார். இந்த கருத்தை பலரும் மறைமுகமாக பரப்பி வருகிறார்கள். ஒரு சிறுகதையின் நடுவே அவர் இந்த கருத்தை சொன்னதால் பலரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை.

நுனிப்புல் மேய்வது போல அரசியல் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆக மொத்தத்தில் ஒரு முதலாளித்துவ அரசின் பிரதிநிதியாகப் பேசினார். அப்துல்கலாம் அவர்கள் உருவாக்கிய ‘2020 வல்லரசு இந்தியா’ என்னும் இலக்கை அடைவோம் என்று பேசி முடித்தார். கரவோசையில் அரங்கம் அதிர்ந்தது.

‘அணு உலைக்கு கலாம் சர்டிபிகேட் கொடுத்துட்டார். ஏன்டா போராடுறீங்க?’ என்று சொல்பவர்களும், ‘அனைத்திற்கும் மக்கள்தான் காரணம்’ என ரசிகர் மன்ற அரசியல் பேசுபவர்களும், ‘ஈழம் என்பது அடுத்தவன் பிரச்சினை.இங்கே ஏன்டா போராடுறீங்க? நம்ம நாட்டு பிரச்சினையை பார்ப்போம்’ என்று மனித்தன்மையற்று பேசுபவர்களும் எவ்வாறு உருவாக்கப்படுகிறார்கள்? யாரால் உருவாக்கப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.

வியாழன், 21 பிப்ரவரி, 2013

ஹைதராபாத் - ஒரு பார்வை

நேற்று சன் டிவி செய்திகள் பார்த்துக்கொண்டிருந்த போது, விளம்பரவேளையில் தற்செயலாக CNN பக்கம் திருப்பினேன். 'Bomb Blasts in Hyderabad ' என்று ப்ளாஷ் நியுஸ் போய்க்கொண்டிருந்தது.

உடனே எனது பெற்றோரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் வரிசையாக தொலைப்பேசி அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. 'குண்டு வெடித்தது எந்த ஏரியா? உங்க ஏரியாவா? பத்திரமா இரு. வெளியே எங்கும் போகாதே. யாரிடமும் ரொம்ப பழகாதே!' என்று ஏகப்பட்ட அன்புக்கட்டளைகள்.

சம்பவம் நடந்த தில்ஷுக் நகர் ( Dilsukhnagar), ஹைதராபாத் பற்றி எனக்குத் தெரிந்த விசயங்களை பகிர்கிறேன்.

தில்ஷுக் நகர் கிட்டத்தட்ட சென்னை கோயம்பேடு மாதிரியான பகுதி. ஆந்திராவின் கோட்டி(Koti) என்னும் பகுதியில் வெளிமாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் புறப்படும். அங்கிருந்து புறப்படும் பேருந்துகள் அடுத்து மலாக்பெட்(Malakpet) வழியாக தில்ஷுக் நகரை வந்தடையும். ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பயணம் செய்த பலருக்கும் இது தெரிந்திருக்கும்.


 ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் வட மாநில நண்பர்கள் அதிகம். பானிபூரி, குட்கா,  பாஸ்ட்புட் உணவுக்கடைகள், டீ கடைகள்  மற்றும் பல சிறுகடைகள் சாலைகளை ஆக்கிரமித்து எங்கும் நிறைந்திருக்கும். பெரும் வணிக வளாகங்களில் பல  துணிக்கடைகள், செருப்புக்கடைகள் அமைந்திருக்கும். இதனால் சாலைகளில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.

பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்களில் சொல்லவே தேவையில்லை. மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

 அமீர்பேட், பேகம்பேட், தில்ஷுக் நகர்  ஆகிய பகுதிகளில் மென்பொருள் படிப்பு, ப்ராஜெக்ட்  சொல்லித்தரும் சிறுசிறு நிறுவனங்கள் பல உள்ளன. மாணவர்கள் கூட்டம் இந்தப் பகுதிகளில் அதிகமாக இருக்கும்.

இதுபோக சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், ஏகப்பட்ட சுற்றுலாத்தலங்கள் நகர் முழுவதும் நிறைந்திருக்கின்றன. 


 நகரின் இன்னொரு புறத்தில் (மாதாபூர், ஹைடெக் சிட்டி) நம்ம ஆட்கள் (அதாங்க சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ்) ஆக்கிரமிப்பு அதிகம்.

இதுபோக மெட்ரோ ரயில் கட்டமைப்பு வேலைகள் நகர் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
 

இவ்வாறாக ஹைதராபாத், செகந்திராபாத் நகர் முழுவதும் மக்கள் அடர்த்தி அதிகம். சென்னையை விட அதிகம் என்றுதான் தெரிகிறது.

 இப்படிப்பட்ட மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள  ஹைதராபாத்தின் தில்ஷுக் நகர் பகுதியை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர்.
ஹைதராபாத்தில் ஏற்கனவே பல தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.

சம்பவ இடத்தை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, காவல்துறை, உளவுப்பிரிவு, மீட்பு பணியில் ஈடுபடுவோர், மீடியாக்கள் என கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.

இவ்வாறு பதட்டமான இடத்திற்கு ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் ஏன் வருகின்றனர்? முதல்வர், அந்தப்பகுதி எம்.எல்.ஏ, எம்.பி ஆகியோர்  வருகையில் தவறில்லை. ஆனால்  மற்ற  ஓட்டுப்பொறுக்கிகள் ஏன் வருகிறார்கள்? அங்கும்  ஓட்டுப்பொறுக்கவா?

மக்கள் அதற்கும் ஒருபடி மேல். வேடிக்கை பார்க்க கூட்டம் கூட்டமாக  வந்துகொண்டு இருந்தனர். போலிஸ் தடியடி நடத்தும் அளவிற்கு கூட்டம் அதிகமானது 

குண்டுவெடிப்பு நடந்த இடத்திலும் வேடிக்கையா??



வியாழன், 17 ஜனவரி, 2013

மூன்றாகப் பிரியும் ஆந்திரா மாநிலம்

ஆந்திரா மாநிலம் என்பது மூன்று பகுதிகளை உள்ளடக்கியது.
தெலங்கானா 
ராயலசீமா 
ஆந்திரா (கடற்கரை பகுதி)

இவற்றில் ராயலசீமா, ஆந்திரா (கடற்கரை பகுதி) ஆகியவை சென்னை மாகாணத்தில் உள்ளடங்கி இருந்த பகுதிகள். மொழிவாரிப் பிரிவினைக்குப் பிறகு  சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டவை.



தெலங்கானா என்பது நிஜாம்களால் ஆளப்பட்ட 'ஹைதராபாத் மாநிலம்'.(http://en.wikipedia.org/wiki/Hyderabad_state)
( ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் ஹைதராபாத் உள்ளடங்க மறுத்தது வரலாறு)

1956-இல் ஹைதராபாத்தின் சில பகுதிகள் மும்பை மற்றும் மைசூர் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டது. ஹைதராபாத்தில் வசித்த தெலுங்கர் அல்லாதவர்கள் மும்பை மற்றும் மைசூர் மாநிலங்களுக்கு குடியேறினர்.

மீதமுள்ள பகுதிதான் தெலங்கானா. அப்பகுதி மக்களின் விருப்பமில்லாமல் தெலங்கானா ஆந்திரா மாநிலத்துடன்[ராயலசீமா, ஆந்திரா (கடற்கரை பகுதி)]
இணைக்கப்பட்டது. இதை செய்தவர் ஜவகர்லால் நேரு. மக்கள் தொடர்ந்து தெலங்கானாவை மட்டும் விரும்பினால் ஐந்து வருடங்களுக்கு பின்னர் பிரிக்கப்படும் என போலி வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தெலங்கானா தனி மாநில போராட்டம் 1969-இல் இருந்து தொடர்கிறது

ஒன்றுபட்ட ஆந்திராவில் தெலங்கானா பகுதிதான் நிலப்பரப்பில் பெரியது.
கிட்டத்தட்ட 45 சதவிகிதம்.பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள், இயற்கை வளங்களை தெலங்கானா பகுதி கொண்டுள்ளது.

 தெலங்கானா பகுதி வளங்களை மட்டும்  இதர பகுதியினர் தங்கள் நலனுக்குப் பயன்படுத்திவிட்டு தெலங்கானா மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக இங்குள்ள நண்பர்கள் சொல்லுகிறார்கள். அதிலும் குறிப்பாக ராயலசீமா அரசியல்வாதிகளின் ஆதிக்கம்  மிக அதிகமாக உள்ளதாம்.

இவ்வாறாக ஆந்திர மாநிலத்தைப் பிரித்து ஹைதராபாத்தை தலைநகராகக் கொண்டு தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பது அரை நூற்றாண்டுகால கோரிக்கை. 


இதற்கான போராட்டங்கள் நாட்டையே உலுக்கியவை. தெலுங்கானா தனி மாநிலம் கோரி உயிரை மாய்த்தவர்கள் ஏராளம்! இதைத் தொடர்ந்து தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது குறித்து ஆராய கிருஷ்ணா கமிஷன் அமைக்கப்பட்டது. (http://en.wikipedia.org/wiki/Telangana_movement)
தெலுங்கா ராஷ்டிரிய சமிதி(TRS) கட்சிதான் தொடர்ந்து தெலுங்கானாவுக்கு குரல் கொடுத்து வருகிறது.

தெலுங்கா ராஷ்டிரிய சமிதி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யுனிஸ்ட், தெலுங்கு தேசம் ஆகிய  கட்சிகள் தனி தெலுங்கானாவை ஆதரிக்கின்றன.

ஆளும் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும்  பிரதான கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை நடுநிலை வகித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன.

மஜ்லிஸ் ஏ இதேஹாதுல் முஸல்மீன்(MIM), மார்ச்சிஸ்ட் கம்யுனிஸ்ட் ஆகிய கட்சிகள் தனி தெலுங்கானா அமைவதை  எதிர்க்கின்றன.
 
தெலுங்கானா விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர். தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளுக்கு வாக்களித்தால் ஹைதராபாத்துக்கு போக பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்று சொன்னவர். அதேபோல் தெலுங்கானாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கோஷம் போட்டு பதாகை ஏந்தியவர் ஜெகன்மோகன்.





கடந்த டிசம்பர் மாதத்தில் தெலுங்கானா அமைவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
தெலுங்கானா பற்றிய இறுதி முடிவை வருகின்ற 28-ஆம் தேதி அறிவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

'ஜெய் தெலுங்கானா'  கோஷம் வெற்றி பெறப் போகிறது. தெலுங்கானா தனி மாநிலம் அமைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இதற்கிடையில் ராயலசீமா பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி 'ஜெய் ராயலசீமா' என்கிற புது கோஷம் எழுந்துள்ளது.
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/rps-will-fight-for-rayalaseema/article4318203.ece

ஏற்கனவே ஆந்திராப்பகுதியை மட்டும் தனியாக பிரிக்கக் கோரி 1972 ஆம் ஆண்டில் 'ஜெய் ஆந்திரா' கோஷம் எழுப்பப்பட்டு பின்னர் வலுவிழந்தது.

ஆக மொத்தம் தெலுங்கானா,  ராயலசீமா, ஆந்திரா என மூன்று மாநிலங்கள் உருவாகும் நிலை உள்ளது.

என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பிரிவினை தேவையற்றது என்றே கருதுகிறேன்.  ஒரு மொழி பேசும் ஓர் இன மக்கள் பிரிந்து இருப்பது நல்லது அல்ல.
ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்  என்பது போல  இந்தப் பிரிவினையால் அரசியல்வாதிகள் பயன் பெறுவார்கள். எப்படியானாலும் மூன்று மாநிலங்களும் தன்னை எதிர்க்க மாட்டார்கள் என்பதால்  போலி இந்திய தேசியமும் பயன்பெறும்.

இந்தியா என்பது பல இனத்து மக்களால் ஒன்றுபட்டு கட்டமைக்கப்பட்ட இயற்கை தேசம் அல்ல.
ஆட்சியாளர்களின் வசதிக்கேற்ப பல இனத்து மக்களை அடிமைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட செயற்கை தேசம்.


அதற்கு ஆந்திர மாநில  பிரிவினை ஓர் உதாரணம்