வியாழன், 31 ஜனவரி, 2013

இந்திய ஆதிக்கமே! ஒழிந்து போ!

"சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் நியாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?" - முத்துக்குமார்.

இப்போது  இந்தியா தனது  நரித்தனத்தை மீண்டும் அரங்கேற்ற உள்ளது.
கொலைபாதகன் ராஜபக்சேவை திரும்பத்திரும்ப இந்தியாவுக்கு வரவழைத்து, அவனுக்கு இந்தியாவில் எதிர்ப்பே கிடையாது என்று உலகுக்குச் சொல்ல, இந்திய அரசு வஞ்சகம் செய்கின்றது. ராஜபக்சேவை பீகாருக்கும், திருப்பதிக்கும் அழைத்து உபசரிக்க உள்ளது இந்திய ஆதிக்கம். இந்த செய்தியை ஊடகங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தெரியாவண்ணம் தன் நரித்தனத்தை மீண்டும் அரங்கேற்ற உள்ளது.
இப்படி நீதியின் வெளிச்சம் ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்துவிடாமல் தடுக்க, இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, நயவஞ்சகமான வேலையைத் தற்போது தீவிரப்படுத்தி இருக்கின்றது. தன்னையும் பாதுகாத்து தன் நண்பன் இலங்கையையும் பாதுகாக்க துடிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்.

தற்போது, இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களின் நிலைமை, கற்பனைக்கு அப்பாற்பட்ட அவலம் ஆகும். தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் வேகமாக நடக்கின்றது. தமிழர் தாயகமே, சிங்கள ராணுவ முகாம் ஆகிவிட்டது. மாவீரர் துயிலகங்களை இடித்து, ராணுவ முகாம் ஆக்கிவிட்டனர். தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்து, பௌத்த விகாரைகளைக் கட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த தமிழர்களின் மொழி, இன அடையாளமே இல்லாமல் அழிக்கின்ற கலாச்சாரப் படுகொலை நடக்கின்றது.

தற்போது, மனித உரிமை கவுன்சில் கூட்டம், மார்ச் மாதத் தொடக்கத்தில் ஜெனீவாவில் நடக்க இருப்பதால், இந்திய அரசு துரோகத்தின் அடுத்த கட்டமாக, பீகாரில் உள்ள புத்த கயாவுக்கு இராஜபக்சே வருவதற்கான ஏற்பாட்டைச் செய்து இருக்கின்றது. பிப்ரவரி 8 ஆம் தேதி, புத்த கயாவுக்கு ராஜபக்சே வரப்போவதாகவும், பீகார் முதல் அமைச்சர் நிதீஷ்குமாரைச் சந்திக்கப் போவதாகவும், இலங்கை அரசின் தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்து உள்ளார்.

‘இராஜபக்சே பீகாருக்கும் சென்றும், ஏன், தமிழ்நாட்டின் தலைவாயிலில் உள்ள திருப்பதி கோவிலுக்கும் சென்றும் வழிபட்டதை உலகத்துக்குச் சொல்லுவதற்காக, திட்டமிட்டு மத்திய காங்கிரஸ் அரசு, இந்தத் துரோகத்திலும் அராஜகத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று அய்யா வைகோ தெரிவித்துள்ளார். அதுதான் உண்மை.




திருப்பதிக்கு வரும் ராஜபக்சே வருகையை கண்டித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பிப்ரவரி 8 ம் தேதி, கருப்புக்கொடி அறப்போராட்டம் நடைபெறும் இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ராஜபக்சே வருகையை எதிர்த்தும், தமிழர் உணர்வுகளை மதிக்காமல் தொடர்ந்து நரித்தனம் செய்யும் இந்திய ஆதிக்கத்தின் தலையில் இடியை இறக்கிட தமிழர்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்.

1 கருத்து:

  1. //தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்து, பௌத்த விகாரைகளைக் கட்டுகின்றனர். //
    putham saram kachami

    பதிலளிநீக்கு