புதன், 9 ஜனவரி, 2013

கூடங்குளத்திலிருந்து ஒரு கடிதம்

நன்றி: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22599:2013-01-09-23-51-18&catid=1:articles&Itemid=264

சனவரி 9, 2013
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை 627 104
திருநெல்வேலி மாவட்டம்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தி.மு.க. தலைவர் திருமிகு. கலைஞர் கருணாநிதி அவர்கள்,
சென்னை

மாண்புமிகு முதல்வர் அவர்களே, திருமிகு. கலைஞர் அவர்களே:

வணக்கம். தாங்கள் இருவரும் எதிரும் புதிருமான அரசியல் நடத்தி வந்தாலும், ஒட்டு மொத்த தமிழக மக்கள் நலனுக்காகக்கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவோ, நேரில் பார்த்துக்கொள்ளவோ மாட்டீர்கள் என்றாலும், தங்கள் இருவருக்குமாகச் சேர்த்து இந்தக் கடிதம் எழுதப்படவேண்டியிருக்கிறது. தற்போது மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்து வருகிற தங்கள் கட்சிகள்தான் தமிழகத்தின் அரசியலை, சமூகப் பொருளாதார விடயங்களை கடந்த அரை நூற்றாண்டாக மாறி மாறி மேலாண்மை செய்து வருகிறீர்கள்.

தமிழகத்தின் மிக முக்கியமான தங்கள் இருவரின் ஆளுமைகளைப் பற்றிய ஒப்பீடு செய்வதோ, தாங்கள் இருவரும் வழிநடத்தும் தமிழகத்தின் இரு முக்கிய திராவிட இயக்கங்களின் நிறை குறைகளைப் பற்றி அலசுவதோ, தங்கள் கட்சிகளின் ஆட்சிகளைப் பற்றிய விமரிசனத்தில் ஈடுபடுவதோ இந்தக் கடிதத்தின் நோக்கமல்ல. மாறாக, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வருகிற நாங்கள் அந்தப் பிரச்சினையில் தமிழக மக்களை எப்படி இருவருமாக சேர்ந்து கரிசனமின்றி கைவிட்டுவிட்டீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

துவக்கத்தில் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்த தி.மு.க., தனது நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசியபோது அதை அமோதிக்கவே செய்தது. கட்சியின் முக்கியத் தலைவர் திரு. முரசொலி மாறன் கூட கூடங்குளம் திட்டத்தை எதிர்த்தார். பின்னர் கூடங்குளத்தை ஆதரித்த தி.மு.க. அரசு 1989மே மாதம் 1-ம் நாள் கன்னியாகுமரியில் நடந்த எதிர்ப்பு மாநாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியது; ஒரிருவரைக் கொன்று, பலரைக் காயப்படுத்தியது. மன்மோகன் சிங் அமைச்சரவைக் கொண்டு வந்த இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்த தி.மு.க. மேலவை உறுப்பினர் திருமிகு. கனிமொழி 2007-ம் ஆண்டு நிகழ்த்திய தனது பாராளுமன்ற கன்னிப்பேச்சில் அணு ஆற்றல் துறையில் இந்தியா தன்னிறைவடைய வேண்டியதன் தேவையைப் பற்றி விவரித்து, கூடங்குளம் திட்டம் தொய்வடைந்து கிடக்கிறதே எனும் கவலையைத் தெரிவித்தார்.

ஆனால் தமிழக முதல்வர் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தீர்கள். அமெரிக்காவின் அணுசக்திக் கப்பல் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் 2007 யூன் மாதம் சென்னைக்கு வந்தபோது கதிர்வீச்சு ஆபத்து எழுமென்பதால் கப்பல் வரக்கூடாது என்று ஆணித்தரமாக ஆட்சேபித்தீர்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான உச்சக்கட்டப் போராட்டம் துவங்கியபோது, முதலில் உலையை ஆதரித்த முதல்வர், மக்கள் போராட்டத்தை மதித்து நிலைப்பாட்டை மாற்றி, மக்களுக்கு ஆதரவாக அமைச்சரவை தீர்மானம் இயற்றினீர்கள். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மாற்றுவழி மின்சாரத் திட்டங்கள் பற்றிப் பேசினீர்கள், திட்டமிட்டீர்கள். ஒரு முறை கூட கூடங்குளம் திட்டத்தை ஆதரித்துப் பேசவில்லை. “உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்று போராடும் மக்களுக்கு உத்தரவாதம் அளித்தீர்கள்.

கூடங்குளம் திட்டம் காலதாமதமானதற்கு முதல்வர்தான் காரணம் என்று கலைஞர் அவர்கள் குற்றம் சாட்டினீர்கள். தமிழகத்தின் மின்சாரப் பிரச்சினைக்கு கூடங்குளமே தீர்வு என்று சொல்லி, கையிலே வெண்ணெய்யை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் நெய்க்கு அலைவதாக முதல்வரை பகடிப் பேசினீர்கள்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்த கையோடு, முதல்வர் அவர்கள் எந்தக் காரணமும் சொல்லாமல், இனியன் குழு அறிக்கையை மக்களோடு பகிர்ந்து கொள்ளாமல், தங்கள் நிலைப்பாட்டை அவசரம் அவசரமாக மாற்றிக் கொண்டீர்கள். அனுசரணையோடு எங்களிடம் அளவளாவிய தாங்கள், அப்படியே மாறி எங்களைக் கைது செய்தீர்கள், தங்களையும், தங்கள் கட்சியையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்து வந்த உண்மையான உழைத்து வாழும் மீனவ மக்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசி, தடியடி நடத்தி, சுட்டுக் கொன்றது தங்கள் காவல்துறை.

இந்தியாவிலேயே மிகப்பெரிய, இறக்குமதி செய்யப்பட்ட, தரம் நிரூபிக்கப்படாத ரஷ்யாவின் அணுமின் நிலையம் கூடங்குளத்தில் கட்டப்படுகிறது. ஒரு மிகப்பெரிய அணு உலைப் பாலைவனம் “பூங்கா” என்ற பெயரில் உள்ளூர் மக்களுக்கு எந்த தகவலும் தரப்படாது, அவர்கள் அனுமதியின்றி, முன்தயாரிப்பு உதவிகளின்றி கட்டப்படுகிறது. தாங்கள் இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு அதனை ஆதரிக்கிறீர்கள்.

கூடங்குளத்திலிருந்து ஐநூறு மெகாவாட் மின்சாரம் எங்களுக்கு வேண்டும் என்று உரிமை கொண்டாடும் கேரள முதல்வர் தனது மாநிலத்தில் ஓர் அணு உலையைக்கூடத் திறக்க முன்வரவில்லையே, அதனை தாங்கள் இருவரும் கவனித்தீர்களா? கூடங்குளம் கழிவுகளை கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகத்தில் எங்குமே புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில முதல்வரும், கர்நாடகாவின் மத்திய காங்கிரஸ் அமைச்சர்களும் கடுமையாக எதிர்ப்பதை கவனித்தீர்களா? எங்களை தேச துரோகிகள் என்றும், இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும் என்றும் சொன்ன பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவில் கோலார் பிரச்சினையில் அணுசக்திக்கு எதிரான ஒரே நிலைப்பாடு எடுப்பதையும் தாங்கள் அவதானித்திருப்பீர்கள். தாங்கள் இருவரும் ஏன் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன் வரவில்லை? தாங்கள் இருவரும் இவ்வளவு சக்திமிக்க தலைவர்களாக, ஆட்சிப் பீடத்தில் இருக்கும்போதே தமிழர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு, இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் இந்திய அரசால்.

கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு தாருங்கள் என்று முதல்வர் கேட்கிறீர்கள்; அதற்கும் மத்திய அரசு செவிமடுக்கவில்லை. ஏதோ கடமைக்குக் கேட்டது போல, தாங்களும் அதனைக் கண்டு கொள்ளவில்லை. அதிக மின்சாரம் கிடைத்து, தமிழக மின்தட்டுப்பாடு தீர்ந்துவிட்டால் எங்கே அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு அதிகரித்துவிடுமோ, நமக்கு செல்வாக்கு குறைந்து விடுமோ என்று மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. உதவி செய்ய மறுக்கிறது. தமிழ் மக்களுக்காக உழைப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தங்கள் இரு கட்சிகளும், அரசுகளும் உண்மையில் தங்கள் நலனுக்காகத்தான் இயங்குகிறீர்களோ என்று நாங்கள், சாதாரண மக்கள், ஐயுறுகிறோம்.

இந்த நிலையில் இரண்டு அண்மை நிகழ்வுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி பகுதியில் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகத்தால் கடலோர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், மீஞ்சூரில் அமைந்துள்ள “கடல் நீரைக் குடிநீராக்கும்” திட்டத்தினால் பழவேற்காடு பகுதியைச் சுற்றியுள்ள பதினைந்து கிராமங்களில் மீனவ மக்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டு அம்மக்களுக்கு நிவாரணமும், வேலை வாய்ப்புக்களும் உதவிகளும் அறிவிக்கிற முதல்வர் கூடங்குளம் அணுமின் நிலையத்தால், அதனுள் இருக்கிற நான்கு “கடல் நீரைக் குடிநீராக்கும்” திட்டங்களால் எங்கள் பகுதி மக்களுக்கு எந்தத் தீங்கும் வராது, எதிர்ப்போர் “மாயவலை” விரிக்கிறார்கள் எனப் பேசுவது ஏன் என்று எங்களுக்குப் புரியவில்லை. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்கள்தான் தங்கள் மீன்பிடித் தொழிலால் மிக அதிகான வருமானத்தையும், அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தருகிறார்கள் என்பது தங்கள் இருவருக்கும் தெரியாததல்ல. துறைமுகத்தையும், அணு உலையையும் எப்படி ஒன்றாக பாவிக்க முடியும்? எங்கள் பகுதியில் ஐநூறு கோடி ரூபாய் செலவில் மக்கள் ஓடுவதற்கு சாலைகளும், சாவதற்கு மருத்துவமனைகளும் கட்டித்தருகிறோம் என்று அறிவித்திருக்கின்றன தங்களின் அரசுகள்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையை பாதுகாக்க சனவரி 19அன்று தங்கள் தலைமையில் ஒரு மிகப் பெரிய போராட்டமே அறிவித்திருக்கிறீர்கள். அந்த ஊருக்கு அருகாமையில் இடிந்தகரையில் கடந்த ஐநூறு நாட்களுக்கு மேலாக நாங்கள் தமிழினத்தின் மண்ணுக்காக, கடலுக்காக, நீருக்காக, காற்றுக்காக, உணவுக்காக, எதிர்கால சந்ததிகளுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம். தாங்களோ, தங்கள் கட்சியை சார்ந்த அதிகாரபூர்வமான ஒரு பிரதிநிதியோ இதுவரை எங்களை வந்து பார்க்கவில்லை. ஒரு சிலைக்குக் கொடுக்கும் மரியாதையை தமிழ் மக்களுக்குத் தர மறுப்பதேன்? தமிழர் வாழ்ந்தால்தானே திருவள்ளுவர் வாழ்வார்?

தமிழ் மக்களாகிய நாங்கள் தாங்கள் இருவரிடமும் மீண்டும் ஒருமுறை எங்கள் விண்ணப்பத்தை முன்வைக்க விரும்புகிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயங்க அனுமதிக்காதீர்கள். தமிழ் மண்ணில் இந்த அணு அரக்கனை கால் பதிக்க, கோலோச்ச, நம் வருங்கால தமிழனத் தலைமுறைகளைத் துன்புறுத்த அனுமதிக்காதீர்கள். தாங்கள் இருவரும் தங்களின் நீண்ட பொதுவாழ்வு மூலமாக தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் இதைச் செய்வீர்கள், செய்ய வேண்டும் என்று அன்போடும், பணிவோடும் கேட்டுக் கொள்கிறோம்.

சுயநலக் காரண காரியங்களை மட்டுமே கருத்திற்கொண்டு, தமிழ் மக்களைக் கைவிட்டால் ஒரு மிகப் பெரிய வரலாற்றுப் பிழையை செய்வதோடு எதிர்கால தமிழ் சமுதாயம் தாங்கள் இருவரையும், தங்கள் கட்சிகளையும் பழிக்க ஏதுவாகும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். “அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூம்” என்பது தமிழரின் உறுதியான நம்பிக்கை ஆயிற்றே? வணக்கம்.

தங்களன்புள்ள,

சுப. உதயகுமார், ம. புஷ்பராயன், மை.பா. சேசுராசு,

இரா.சா. முகிலன், பீட்டர் மில்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக