திங்கள், 31 டிசம்பர், 2012

விவசாயிகளின் உயிரை விட 'நாற்பது' பெரியதா?

நேற்று எதேச்சையாக ஜெயா தொலைக்காட்சி செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சென்னையில்  நடந்த அதிமுக செயற்குழு- பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதா: "லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட தொண்டர்கள் தயாராக வேண்டும். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியின்றி போட்டியிட தயாராவோம். இந்தத் தேர்தலில் ஈடு இணையற்ற வெற்றியைப் பெறுவோம். மத்தியில் அதிகாரத்தின் மூலம் நமது அனைத்து உரிமைகளையும் பெறுவோம்."
 
 
காவிரி விவகாரத்தில்  காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா தமிழகத்தை வஞ்சிக்கிறது என்றும், அதற்கு கருணாநிதி உடந்தை எனவும் பேசிக் கொண்டிருந்தார்.

முதல்வருக்கு சில கேள்விகள்:
1). நீங்கள் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி, மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடத்தலாமே!! ஏன் செய்யவில்லை? ஆளும்கட்சி போராடக்கூடாது என எந்த சட்டத்திலும் இல்லையே! எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் போராட்டம் மேல் போராட்டம் நடத்துவதில் உங்களையும், கருணாநிதியையும் வெல்ல ஆளே கிடையாது.

2). 2014-இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்பவே தயாராகிறீர்கள். தற்போது மடிந்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கும், பயிர்களுக்கும் என்ன பதில்? உங்களது நோக்கம் முழுவதும் தேர்தலில் வாக்கு பெறுவதில் மட்டுமே உள்ளதே தவிர விவசாயிகள் மீது அக்கறையில்லை.

3). வளமான தமிழகமும், வளமான பாரதமும் அமைப்போம் என்கிறீர்கள். மத்தியில் அதிகாரத்தை பிடிப்போம் என்கிறீர்கள்.
சிரிப்புதான் வருது. மத்தியில் அதிகாரம் கிடைத்து விட்டால் இங்கு அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடுமா? இப்படி தேர்தல் கூட்டம் நடத்தி நேரத்தை வீணாக்காமல் மக்களுக்காக ஆக்கப்பூர்வ பணிகள் செய்ய முயற்சி செய்யுங்கள்.
 
இந்த அனைத்து கேள்விகளும் திமுக கட்சிக்கும் பொருந்தும்.
 
தற்போதைக்கு உங்களது அக்கறை  எல்லாம் 'நாற்பது'  மீது உள்ளதே தவிர மக்கள் மீது இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக