ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தூத்துக்குடி வட்டார மொழியை நான் இழந்த கதை

தூத்துக்குடியில் மேற்படிப்பு படிக்கும்வரையில் நான் பேசும் தமிழில் ஆங்கிலக் கலப்பு அதிகம் இருக்காது.
ஏல, வால, போல, என்று சரளமாக தூத்துக்குடி தமிழ் பேசுவேன். தமிழின் சிறப்பான 'ழ' என்பதைக் கூட 'ல' என்று பேசியே பழக்கமாகி விட்டது.

'அவங்க சொல்லுவாங்க' என்பதை 'அவிய சொல்லுவாவ' என்றுதான் சொல்லுவேன்.

என்று கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தேனோ, அப்புறம் தூத்துக்குடி தமிழ் பேசுவதைக் குறைத்துக் கொண்டேன்.
பல மாவட்ட மாணவர்களும் படிக்கும் சென்னை கல்லூரிகளில் ஆங்கிலம் கலந்து பேசுவதையே ஒரு பெருமையாகக் கருதுகிறார்கள்.
வட்டார வழக்கில் பேசினால் அதிகம் கேலி செய்வார்கள்.

பசித்தால் 'வயிறு பசிக்கு' என்றுதான் எங்க ஊருல சொல்லுவாவ.
ஆனால் கல்லூரி விடுதியில் நான் 'வயிறு பசிக்கு' என்று சொல்லும்போதெல்லாம் கேலி செய்ய ஒரு கூட்டமே உண்டு.

கல்லூரியில் ஆசிரியரிடம் பேசும்போது சார், மிஸ், மேம் என கண்டதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம்.
எங்க ஊர்ல அந்தப் பழக்கமே கிடையாது.
இங்கேயும் நான் அதையே தொடர்ந்ததால் நான் மரியாதைக் குறைவாக பேசுவதாகவும், திமிராக பேசுவதாகவும் சொன்ன ஆசிரியர்கள் உண்டு.

தூத்துக்குடி பாஷையில் பேசும்போது மிகவும் வேகமாக பேசுவேன். அது இங்கே பல நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் புரிவதில்லை. அதனால் வேகத்தைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

கல்லூரியில் ஆங்கில வழியில் படித்ததால் சில ஆங்கில சொற்கள் நாவில் அடிக்கடி குடி கொண்டன.
அப்புறம் வேலை நிமித்தமாக ஆங்கிலத்தில் பேசுவதாலும், வேறு மாநிலங்களுக்கு சென்றதாலும் ஆங்கிலம் நிரந்தரக் குடி கொண்டது.

அதனால் தூத்துக்குடி வட்டார பாஷை முன்னர் போல வருவதில்லை. கால ஓட்டத்தில் காணாமல் போனது.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல அவ்வப்போது தூத்துக்குடி தமிழ் வாயில் வருவதுண்டு.

தற்போது ஒரு கட்டத்தில் யோசித்துப் பார்க்கையில் என் மீது எனக்கே சற்று வருத்தம்.
தூத்துக்குடி வட்டார பாஷையை இழந்தது கூட எனக்கு பெரும் வருத்தம் அல்ல. ஆனால் என் தமிழில் அதிக ஆங்கிலம் கலப்பு இருப்பது பெரும் வருத்தமாக உள்ளது.

படிப்படியா ஆங்கிலக் கலப்பை தவிர்க்க வேண்டுமென்பதே இந்த வருட புது ஆண்டு சபதம்.
இப்போது சற்று முன்னேற்றம் இருக்கிறது. பேஸ்புக், ப்ளாக்கர் ஆகியவற்றில் தமிழில் எழுவதும், தமிழ்  நூல்கள் படிப்பதுமே இதற்கு காரணம்.

வாழ்க தமிழ்!!

(நேற்று நீயா நானா நிகழ்ச்சி வட்டார மொழி வழக்கு குறித்து இருந்ததால் பழைய ஞாபகங்கள் வந்து சென்றன.)

3 கருத்துகள்:

  1. vattara mozhi alivathuthan nallathu pechu tamilum elthu tamilum ore mathiri irukka vendum.vattara mozhi valaruvathu pirkalathil thani mozhi ya marum. enbathu mozhi arinargal karuthu.

    பதிலளிநீக்கு
  2. I am also from Tuticorin. But my wife and children are not from Tuticorin. Since their birth, the children are away from Tuticorin. Only once they went. But I speak only Tuticorin Tamil at home calling my sons vala pola. ingittu angittu, kaar niki, pasikku etc. Because in speaking the Tamil I was born with makes my speech truthful to me. My children and wife understand although they cannot speak like me.

    பதிலளிநீக்கு