தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 மே, 2015

பார்ப்பான் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?? #டவுட்டு

"பார்ப்பான் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான்" என ஒரு பதிவைப் பார்த்தேன்..

அது என்னய்யா!!
"பார்ப்பான் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான்" என்று எழுத வேண்டியதுதானே!!

மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க.. இழிவு நிலையை பேசும்போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க??

அடுத்து, தமிழன் என்றாலே பார்ப்பானும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க.. தமிழ் என்றாலே சாதி என்றுதான் சொல்லுறீங்க..
அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?
சாதிய தலைவர் அல்லது பார்ப்பனிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியதுதானே!!

‪#‎டவுட்டு‬

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

பிறமாநிலத்தவரின் தாய்மொழிப்பற்றும் தமிழனின் அடிமைப்புத்தியும்

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் சென்னை - கர்நாடக அணிகள் மோதிய அரையிறுதியில் டாஸ் போட்ட பின்னர் கன்னட நடிகர் சுதீப் அவர்கள் பேசினார். தன் தாய்மொழியான கன்னடத்தில் பேசிக் கொண்டே இருந்தார்.
குறுக்கிட்ட கேள்வியாளர் 'சார், ஆங்கிலத்தில் பேசலாமே! என்றார்.
"என் ஊரு, என் மக்கள், கன்னடத்தில் பேசினால்தான் நல்லா இருக்கும்" என்றார்.
பின்னர் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் பேசி முடித்துக் கொண்டார்.

ஜெயா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பத்திரிகை நிருபர்களிடம் வாசிக்க வந்த வழக்கறிஞர் 'முதலில் கன்னடம், பின்னர் ஆங்கிலம்' என்று கூறி கன்னட பத்திரிகைகளுக்கு முதலில் பேட்டிக் கொடுத்தார்.

சென்னையில் உள்ள ஆந்திரா உணவகங்களில் போர்டு, பில், புகைப்படங்கள், வாசகங்கள் என அனைத்தும் அவர்களின் தாய்மொழியான தெலுங்கில் இருக்கிறது.

மலையாளிகள் பற்றி சொல்லவே தேவையில்லை.
ஹைதராபாத்தில் உள்ள மலையாள உணவகங்களுக்கு சென்றால் ஏதோ கேரள வரலாற்றுக் கண்காட்சிக்கு சென்றது போல இருக்கும். மெனு கார்டு, புகைப்படங்கள் என அனைத்திலும் மலையாளப் பண்பாடு தூக்கலாக இருக்கும்.

மேலே உள்ளவர்களின் தாய்மொழிப் பற்றைப் பாராட்டுகிறோம்.

தமிழனின் நிலை என்ன?
காதல் தொடர்பான நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியில் பரிசு வென்ற சகோதரி என்ன மொழியில் பேசினார்? என்ன பேசினார்? என்றே தெரியவில்லை.
தமிழர்களின் பெரும்பாலும் பார்க்கும் நிகழ்ச்சியில் தமிழில் பேசினால்தானே நம் கருத்துக்கள் பல மக்களையும் சென்றடையும் என்கிற பொது அறிவு கூட அந்த சகோதரிக்கு தெரியாமல் போனது.
தமிழில் பேசும்போது ஆங்கில வார்த்தைகள் தற்செயலாக குறுக்கே வருவது வேறு.
ஆனால் வேணுமென்றே ஆங்கிலத்தை இழுத்து திணிப்பது வேறு.

"கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்,
தமிழ் கத்துக்க ட்ரை பண்ணுறேன்" என வெளிமாநில சகோதர, சகோதரிகள் தமிழ் நோக்கி நகருகிறார்கள்.
ஆனால் தமிழனோ ஆங்கிலம் நோக்கி நகருகிறான்.

தமிழ் சோறு போடுமா? தமிழ் தமிழ்னு என் சாகுறீங்க? என்று சோற்றைப் பற்றி மட்டுமே யோசிக்கும் பாரத மாதாவின் பக்தர்கள் கேட்கிறார்கள். ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை வரவேற்கும் மூடர்கள் இவர்கள். அடுத்தவன் மொழிக்கு பல்லக்கு தூக்கும் அடிமைகள் இவர்கள்.

தமிழில் சாதி இருக்குது (உப்பு இருக்கு, காரம் இல்லை என்றும் சொல்லுவாங்க), தமிழை மட்டும் வைத்து என்ன செய்ய? என தமிழகத்திலும் சில வெங்காயங்கள் கிளம்பியிருக்குது.

இந்த மூடர்களின் பேச்சுக்களை புறந்தள்ளுவீர்.
மொழி அழிந்தால் இனம் அழியும்.
தமிழை வாழ வைப்போம்!
தமிழனிடத்தில் தமிழில் பேசுவோம்.

Provisional store என்பதை 'ப்ரொவிஷனல் ஸ்டோர்' என எழுதி போர்டு வைத்தால் தமிழ் வாழாது.
மளிகைக் கடை என்று எழுதினால்தான் தமிழ் வாழும்.

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தூத்துக்குடி வட்டார மொழியை நான் இழந்த கதை

தூத்துக்குடியில் மேற்படிப்பு படிக்கும்வரையில் நான் பேசும் தமிழில் ஆங்கிலக் கலப்பு அதிகம் இருக்காது.
ஏல, வால, போல, என்று சரளமாக தூத்துக்குடி தமிழ் பேசுவேன். தமிழின் சிறப்பான 'ழ' என்பதைக் கூட 'ல' என்று பேசியே பழக்கமாகி விட்டது.

'அவங்க சொல்லுவாங்க' என்பதை 'அவிய சொல்லுவாவ' என்றுதான் சொல்லுவேன்.

என்று கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தேனோ, அப்புறம் தூத்துக்குடி தமிழ் பேசுவதைக் குறைத்துக் கொண்டேன்.
பல மாவட்ட மாணவர்களும் படிக்கும் சென்னை கல்லூரிகளில் ஆங்கிலம் கலந்து பேசுவதையே ஒரு பெருமையாகக் கருதுகிறார்கள்.
வட்டார வழக்கில் பேசினால் அதிகம் கேலி செய்வார்கள்.

பசித்தால் 'வயிறு பசிக்கு' என்றுதான் எங்க ஊருல சொல்லுவாவ.
ஆனால் கல்லூரி விடுதியில் நான் 'வயிறு பசிக்கு' என்று சொல்லும்போதெல்லாம் கேலி செய்ய ஒரு கூட்டமே உண்டு.

கல்லூரியில் ஆசிரியரிடம் பேசும்போது சார், மிஸ், மேம் என கண்டதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம்.
எங்க ஊர்ல அந்தப் பழக்கமே கிடையாது.
இங்கேயும் நான் அதையே தொடர்ந்ததால் நான் மரியாதைக் குறைவாக பேசுவதாகவும், திமிராக பேசுவதாகவும் சொன்ன ஆசிரியர்கள் உண்டு.

தூத்துக்குடி பாஷையில் பேசும்போது மிகவும் வேகமாக பேசுவேன். அது இங்கே பல நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் புரிவதில்லை. அதனால் வேகத்தைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

கல்லூரியில் ஆங்கில வழியில் படித்ததால் சில ஆங்கில சொற்கள் நாவில் அடிக்கடி குடி கொண்டன.
அப்புறம் வேலை நிமித்தமாக ஆங்கிலத்தில் பேசுவதாலும், வேறு மாநிலங்களுக்கு சென்றதாலும் ஆங்கிலம் நிரந்தரக் குடி கொண்டது.

அதனால் தூத்துக்குடி வட்டார பாஷை முன்னர் போல வருவதில்லை. கால ஓட்டத்தில் காணாமல் போனது.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல அவ்வப்போது தூத்துக்குடி தமிழ் வாயில் வருவதுண்டு.

தற்போது ஒரு கட்டத்தில் யோசித்துப் பார்க்கையில் என் மீது எனக்கே சற்று வருத்தம்.
தூத்துக்குடி வட்டார பாஷையை இழந்தது கூட எனக்கு பெரும் வருத்தம் அல்ல. ஆனால் என் தமிழில் அதிக ஆங்கிலம் கலப்பு இருப்பது பெரும் வருத்தமாக உள்ளது.

படிப்படியா ஆங்கிலக் கலப்பை தவிர்க்க வேண்டுமென்பதே இந்த வருட புது ஆண்டு சபதம்.
இப்போது சற்று முன்னேற்றம் இருக்கிறது. பேஸ்புக், ப்ளாக்கர் ஆகியவற்றில் தமிழில் எழுவதும், தமிழ்  நூல்கள் படிப்பதுமே இதற்கு காரணம்.

வாழ்க தமிழ்!!

(நேற்று நீயா நானா நிகழ்ச்சி வட்டார மொழி வழக்கு குறித்து இருந்ததால் பழைய ஞாபகங்கள் வந்து சென்றன.)