தமிழ்த் தேசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்த் தேசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஜனவரி, 2018

வரலாறு தெரிய வேண்டும் என்பதெல்லாம் ஓர் அரசியல் தகுதியா?

"ரஜினிக்குத்  தமிழர் வரலாறு தெரியுமா? பூலித்தேவனைப் பற்றித் தெரியுமா? தீரன் சின்னமலை பற்றித் தெரியுமா?..." என தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

உடனே பத்ரி சேசாத்திரிக்கு கோபம் வந்துவிட்டது. அவரும் ரஜினியின் "ஆன்மீக" வழியில் செல்லும் நபராச்சே!
(பாபர் மசூதி இடிப்பின்போது பெரும்  மகிழ்ச்சியில்  இருந்த 'ஆன்மீக'வாதிதான் இந்த சேசாத்திரி.)

"வரலாறு தெரிந்து என்ன செய்யப் போகிறார்? இதெல்லாம் ஒரு தகுதியா? ஓபிஎஸ்க்கு வரலாறு  தெரியுமா?..." என எதிர் கேள்வி எழுப்பியிருந்தார் பத்ரி.

மேலோட்டமாக யோசித்தால் பத்ரி கூறுவது சரிதானே எனத் தோன்றும். ஆனால் முற்றிலும் தவறு.

மேலும் அவரது கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது.
வரலாறு தெரியாத காரணத்தினால்தான் ஓபிஎஸ் போன்றோரை இந்துத்துவக்/பிராமணக்  கும்பல் தங்களின் அடிமையாகப்  பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.

வரலாற்றை மறந்த காரணத்தினால்தான் விடுதலைப் போராளிகளை, பெருமைமிக்க அடையாளங்களை சாதியக் கும்பல்கள் தங்கள் வசப்படுத்திக் கொண்டன.
தற்போது இந்துத்துவக் கும்பலும் அந்தப் பணியைத்தான் செய்கின்றன. மருது ஜெயந்தி கொண்டாடுவது, தீரன் சின்னமலைக்கு விழா எடுப்பது என பல செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இதனை எதிர்கொண்டு முறியடிக்க அரசியல் செய்ய வேண்டும். அதற்கு வரலாற்றுப் பார்வை வேண்டும்.
ஆகவே இங்கு அரசியலில் இருப்போருக்கு வரலாற்றுப் பார்வை கட்டாயம் இருக்க  வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

புதன், 5 அக்டோபர், 2016

நிசப்தம் மணிகண்டன் அவர்களுக்கு மறுப்பு/விவாத கட்டுரை

அன்புள்ள மணிகண்டன்  அவர்களுக்கு வணக்கம்.
சில நாட்களாக  சமூக வலைத்தளங்களில் இயங்குவதை  நிறுத்திக் கொண்டாலும் உங்களின் நிசப்தம் தளத்தை தொடர்ந்து  படித்து வருகிறேன். உங்களின் யதார்த்த எழுத்து நடைதான் காரணம்.

தனித் தமிழ்நாடு கோரிக்கையை  விமர்சித்து  நீங்கள் கட்டுரை எழுதும் அளவுக்கு தமிழ்தேசியத் தாகமும் குரலும்  அதிகரித்து விட்டது. ஒரு தமிழ்த்தேசியவாதியாக மகிழ்ச்சி அடைகிறேன்.
கட்டுரையைப் படிக்க: http://www.nisaptham.com/2016/10/blog-post_76.html



உங்களின் கட்டுரைக்கு மறுப்பு எழுத ஆர்வம் உள்ளது. மறுப்பு என்பதை விட விவாதம் என்றே எடுத்துக் கொள்ளலாம். 
விவாதம் என்பதற்காக  தாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.  தமிழ்த்தேசியவாதிகளின் குரலை சற்று கேட்டுப் பாருங்கள் என்றே சொல்ல விழைகிறேன்.

//எந்தவொரு பிரச்சினையிலும் தேசத்தின் மீதான வன்மத்தைக் கக்குவதைப் பார்க்கும் போது எரிச்சலாக இருக்கிறது//
தேசத்தின் பெயரால் அயோக்கியத்தனம் நடைபெறும்போது தேசத்தின் மீது விமர்சனம் எழுப்பப்படுவது இயல்புதான். தேசம் என்பதை புனிதமாகக் காட்டி வழிபாடு செய்ய வேண்டாம். ஏனெனில் இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று எதுவுமில்லை.

//‘இதுதான் தீர்வு’ என்று முதலிலேயே சொல்லிவிட்டு விவாதத்தைத் தொடங்கக் கூடாது. //
அப்படி யாரும் எடுத்த எடுப்பிலேயே தனிநாடு கோரிக்கையோடு கிளம்பவில்லை. 
உதாரணத்திற்கு  தோழர் மணியரசன், தோழர் தியாகு, தோழர் பழ.நெடுமாறன்  போன்ற தமிழ்தேசியவாதிகளின் அரசியல் பயணத்தை திருப்பி பாருங்கள். இந்திய நீரோட்டத்தின் பாதையிலிருந்து விலகி தமிழ்த்தேசியம் நோக்கி வந்திருக்கிறார்கள்.
அண்ணன் சுப.உதயகுமாரால் ஆம் ஆத்மி கட்சியில் நீடிக்க முடியவில்லையே. ஏன் என்று அவரைக் கேட்டுப் பாருங்கள்.
"நோய் நாடி நோய் முதல்நாடி" என்கிற குறள் இங்கு நினைவுக்கு வருகிறது. 
இந்திய தேசியம் நம்மைப் பிடித்த நோயாகவும், தமிழக விடுதலையை அதற்கு நன்மருந்து எனவும் சொல்கிறோம்.

//தமிழகத்தை தனியாக்கி தமிழனை பிரதமராக நியமித்துவிட்டால் பாலாறும் தேனாறும் ஓடுமா என்ன? அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வாய்ப்பே இல்லை.//
உலகம் முழுக்க பல நாடுகள் ஏன் உருவாகின என்பதை ஆராய கேட்டுக் கொள்கிறேன். பாலாறும் தேனாறும் ஓடும் என சொல்லவில்லை. ஆனால் தற்போது இருக்கும் நிலையை விட மிகவும் நல்ல முறையில் தமிழ்நாடு அமையும்.
தமிழ்நாட்டுக்கு என்று தனியாக பொருளாதாரக் கொள்கை, மருத்துவக் கொள்கை, கல்விக் கொள்கை என பலவற்றை உருவாக்க முடியும். அதிகாரத்தைப் பரவலாக்க முடியும். 
மக்களின் நிர்ப்பந்தமே வெற்றி பேரும். சுருங்கச் சொன்னால் மக்களே ஆள்வார்கள். எட்டு கோடி தமிழர்களால் இந்தியப் பேரினவாதத்தை எதிர்த்து நிற்க முடியாது. ஆனால் தமிழ்தேசியத் தலைமையை எதிர்த்து நிற்க முடியும். நிர்ப்பந்திக்க முடியும்.

//தமிழனுக்கும் மலையாளத்தானுக்குமான பிரச்சினைக்கு பதில் வன்னியனுக்கும் பறையனுக்குமான பிரச்சினையாக இருக்கும்.//
தனித் தமிழ்நாடு கோரிக்கையை உயர்த்திப் பிடிக்கும்போது பலரும் சாதியச் சிக்கலை முன்னிறுத்துவது இயல்புதான். 
ஆனால் நான் பழகியவரையில் பல தமிழ்த்தேசிய நண்பர்களும் சாதி மறுப்பு கொள்கை கொண்டவர்கள். ஆகவே தமிழ்த்தேசிய உணர்வோடு சாதிமறுப்பு உணர்வும் சேர்ந்தே வருகிறது.
"நாம் தமிழர்" என்கிற உணர்வு மிகவும் வலுப்பெறும்போது சாதி பின்னுக்குத் தள்ளப்பட்டு. ஒழிக்கப்படும்.
சாதி ஒழிப்பை முன்னிறுத்தி தமிழ்தேசியம் பேசினால் மணிகண்டன் ஏற்றுக் கொள்வாரா?
இந்திய அரசியல் சட்டம் சாதியை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறதே! அதனை ஏற்றுக் கொண்டு சாதிஒழிப்பு பற்றி பேசுவது முரண்.

//நம்மிடமே சிக்கல்கள் நிறைந்து கிடக்கின்றன. சாதி, இனம், குலம், கூட்டம் என்று கிணற்றுக்குள் சிக்கிய தவளைகளைப் போல தலையை மேலே எடுக்கிறவனையெல்லாம் இழுத்து இழுத்துக் கீழே எறிந்துவிட்டு இந்த நாடுதான் தமிழனை மேலே வர அனுமதிப்பதில்லை என்று பேசுவதைப் போன்ற அபத்த நகைச்சுவை வேறு இருக்க முடியாது. //
இந்திய தேசியத்தைக் காக்கும் தீவிரம் தவிர வேறு எதுவும் இந்த வார்த்தைகளில் தெரியவில்லை. மக்களைக் குறை சொல்லி தப்பிக்கும் தந்திரமாக உள்ளது.
எட்டு கோடி மக்களின் குரலான தமிழக சட்டசபை தீர்மானங்கள் டெல்லி குப்பைத்தொட்டிக்கு போகிறதே! அதனை நிறுத்துவது எப்படி என்பதை மணிகண்டன் விளக்கினால் நலம்.

//இந்திய தேசியம் பேசுகிறவனையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஸ்லீப்பர் செல் என்றும், இந்துத்துவவாதி என்றும் ஓரங்கட்டுகிறார்கள். //
இது தவறான அணுகுமுறைதான். சிலர் ஆர்வக்கோளாறில் செய்வதை நான் கவனித்திருக்கிறேன். இது உணர்ச்சிவேகத்தின் வெளிப்பாடுதான்.
தவிர்க்கப்பட வேண்டியது.

//முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். நமக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது குரல் எழுப்பலாம். போராடி பெற்றுக் கொள்ளலாம். //
எப்படி போராடுவது என்பதை விளக்கினால் இன்னும் நலம். 
தமிழர்களாக ஒன்றுபட்டுத்தான் போராடனும். அப்படி ஒன்றுபடுவதையே  இனவாதம், பிரிவினைவாதம் என்கிறீர்களே!
ஒன்றுபட்டுதான் நிற்கிறோம். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் நிருபராதிகளை விடுவிக்க முடியவில்லையே!
காவிரி உரிமையை மீட்க முடியவில்லையே! பாலாற்றில் அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த முடியவில்லையே! மக்கள்விரோத பாராளுமன்ற தீர்மானங்களை தடுத்து நிறுத்த முடியவில்லையே!
என்ன செய்தால் தமிழர்களின் உரிமைகளை மீட்க முடியும் என்பதையும் தாங்கள் சொல்லியாக வேண்டும். அப்படி இல்லாமல் தனித் தமிழ்நாடு கோரிக்கையை அரைவேக்காட்டுத்தனம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
காஷ்மீரிகள் மீதான இனப்படுகொலைக்கு என்ன நீதி? ஆக்கிரமிப்பு ராணுவத்தை எப்படி அகற்றுவது? விடுதலை ஒன்றுதான் தீர்வு.

//இந்த நாட்டில் ஆயிரம் குறைகள் உண்டு. அத்தனை குறைகளோடும் அத்தனை சிக்கல்களோடும் இந்த தேசத்தை மனதார நேசிக்கிறேன்.//
சிறுவயதில் இருந்து இந்திய தேசிய உணர்வு ஊட்டப்படுவதால்தான் இப்படி சொல்ல முடிகிறது. நானும் அதனை கடந்து வந்தவன்தான்.
நான் தமிழ்த்தேசியவாதியாக மாறக் காரணம் இந்தியப் பேரினவாதம் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகள்தான். 
"பிரச்சினைகள் ஓர் ஓரமாக இருக்கட்டும், நாம் தேசிய கீதத்தை ரசிப்போம், தேசியக் கோடிக்கு வணக்கம் செலுத்துவோம்" என்பதே ஒருவகையில் மக்கள் விரோத நிலைப்பாடுதான்.
"தமிழனைக் கொல்லும் சிங்கள ராணுவம் மீது எப்போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்யப் போவீர்கள்?" என இந்தியப் பேரரசை நோக்கி கேள்வி கேட்பதில் தவறு ஏதும் இல்லையே!

"சரி, தனித் தமிழ்நாடு தவிர வேறு தீர்வு இல்லையா?" என்று நீங்கள் கேட்கக் கூடும்.
கண்டிப்பாக உண்டு. அதனையும் விவாதிக்கலாம்.
அதிகாரப் பரவலாக்கல் என்கிற தீர்வு உண்டு. மத்தியப் பட்டியலில் சில துறைகளை ஒதுக்கிவிட்டு, முழு அதிகாரத்தையும் மாநில அரசுகளுக்கு ஒதுக்குவதுதான்.
பொருளாதாரக் கொள்கை, மருத்துவக் கொள்கை, கல்விக் கொள்கை, வேளாண் கொள்கை  என அனைத்தையும் மாநில அரசுகள் தீர்மானிக்க வேண்டும்.
அப்படி செய்தால் இந்திய ஒன்றியம் தாக்குப் பிடிக்க வாய்ப்புகள் உண்டு.
மணிகண்டன் போன்றவர்கள் அதனை வழிமொழிவார்களா?

அதெல்லாம் ஒரு போதும் சாத்தியம் ஆகாது, ஆகவே விடுதலை ஒன்றே தீர்வு என்கிற தமிழ்த்தேசிய அரசியல் என்கிற ஒன்றை என்னைப் போன்ற சிலர் முன்வைக்கிறோம்.
அதனை விவாதிக்க வேண்டுமேயொழிய, அரைவேக்காட்டுத்தனம், முரட்டுத்தனம் என ஒதுக்கக் கூடாது.
தொடர்ந்து விவாதிப்போம். நன்றி 

பின்குறிப்பு: பாகிஸ்தானிலிருந்து பலோசிஸ்தான் விடுதலை அடைய விரும்புகிறது. இந்திய அரசும் மறைமுக ஆதரவு கொடுக்க ஆரம்பித்துள்ளது என்பது தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

வெள்ளி, 1 மே, 2015

திராவிடப் போலிகளை அம்பலப்படுத்துவோம்

திராவிடம் பேசும் சில பிழைப்புவாதிகளின் (அனைவரும் அல்ல) மடைமாற்றும் அரசியல், பிழைப்புவாத அரசியல் பற்றி  நிறையபேசுவோம்..வாருங்கள்..

* இருபது தமிழர்கள் படுகொலைக்கு திக, திமுக  சார்பில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை.. கிருஷ்ணகிரியில் தலித் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்ட விசயத்தை பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. இந்த இரு விசய பின்னணியை ஆராய்ந்தால் திக யாருக்கான அமைப்பு என்று தெரிந்து விடும்.
இந்த இரு விசயங்களில் பார்ப்பான் ஈடுபட்டிருந்தால் திக போராட வந்திருக்கும்.. அதிமுக ஈடுபட்டிருந்தால் திமுக போராட வந்திருக்கும்.. இதுதான் திராவிட அரசியல்..

* விஜயகாந்துக்கு அறிவுரை கொடுப்பது போல திமுக-விஜயகாந்த் கூட்டணிக்கு அடித்தளம் போட்டுக் கொண்டிருக்கிறார் வீரமணி. மோடியை பெரியாருடன் ஒப்பிட்டபோது விஜயகாந்துக்கு எதிராக திராவிட அமைப்புகள் எந்தப் போராட்டத்தையும் செய்யவில்லை.. அதுவே ஒரு வடநாட்டான் பேசியிருந்தால் இங்கே கூச்சல் போட்டிருப்பார்கள் . ஆனால் பொறுக்கித் தின்ன இப்போது விஜயகாந்தும் தேவைப் படுகிறாரே!! அவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க..

* வே.மதிமாறன் என்னும் நபருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.. மேடையில் பேரா.அன்பழகனை வைத்துக் கொண்டு 'அடுத்து திமுக ஆட்சிதான்' என்று பேசுகிறார்.. இப்படி பொறுக்கித் தின்பதற்கு எதுக்கு விருது??
பாரதி, வள்ளுவன் என அனைவரிடம் இருக்கும் பிழைகளை சுட்டிக் காட்டினால் முற்போக்கு.. அதுவே பெரியாரின் பிழைகளை சுட்டிக் காட்டினால் உடனே பார்ப்பனிய அடிமை, சாதிவெறியன் என பட்டம் கொடுத்துவிடுவார்கள் பெரியார் திடல் பக்தர்கள்.

* தருமபுரி சேரி சூறையாடலில் ஈடுபட்டவர்களில் அதிகம் பேர் திமுகவினர். மதிமுக, தேமுதிக கட்சியினரும் உண்டு. ஆனால் அந்தக் கட்சியினர் எந்த நடவடிக்கையாவது எடுத்தார்களா?? இல்லவே இல்லை.. மிக நுட்பமாக வன்னியர்-பறையர் பிரச்சினையாக மாற்றினர். (ராமதாசின் செயல்களும் அப்படிதான் இருந்தது. அவரும் அதைதான் விரும்பியிருப்பார்..).

* ராமதாசும் அவர் மகனும் தனித் தமிழ்நாடு கோரிக்கையை ஆதரிப்பவர்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு தமிழ்த்தேசிய அடையாளம் கொடுத்து தமிழ்த்தேசியம் என்றாலே சாதிதான் என்று கேலி செய்கிறார்கள்.

* சாதி நிகழ்வுகளில் பங்கேற்கும் திராவிடக் கட்சிகள் பற்றி திராவிடம் பேசுகிறவர்கள் ஏன் வாய் திறப்பதில்லை?? உடனே ஒரு வேதவாக்கு சொல்லுவார்கள் "ஓட்டு அரசியல் என்றாலே சந்தர்ப்பவாதம்" என்று. அது சரிப்பா, அந்த சந்தர்ப்பவாதிகளை பற்றிப் பேசாமல் எப்படி அய்யா சாதியை ஒழிக்கப் போகிறீர்கள்??  "அனைத்துக் கட்சிப் பெயரிலும் திராவிடம் இருக்கிறது.அதனால்திராவிடத்தைவீழ்த்தமுடியாது"என்கிறார் கி.வீரமணி.அப்ப மட்டும் திராவிடக் கட்சிகளை கூட்டு சேர்த்துக் கொள்கிறீர்கள்.. அவர்களின் சாதி சார்பை ஏனய்யா மூடி மறைக்கிறீர்கள்??

* திராவிடக் கட்சிக்காரர்கள்தான் தமிழகத்தில் பாதி இருக்கிறார்கள். இவர்கள் சாதி ஒழிப்பை மேற்கொண்டிருந்தால் சாதி இந்நேரம் ஒழிந்திருக்குமே!! ஒருபோதும் செய்யமாட்டார்கள். ஆனால் சாதி ஒழிப்பு போராளிகள் போல வேஷம் போடுவார்கள். (இந்த வேஷம் போடுற வித்தை தமிழ்தேசியவாதிகளுக்கு தெரியவில்லை.. )

* திராவிடக் கட்சிகளை சார்ந்தவர்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் அம்பேத்கர் ஏன் இன்னும் கூண்டுக்குள் இருக்கிறார்?? இதையெல்லாம் பற்றி பேசாமல் சாதி ஒழிப்பு நாடகம் போடுகிறார்கள்.

* அண்மையில் திக-திவிக-தபெதிக உள்ளிட்ட அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலையை கருணாநிதி ஆலோசனையின் பேரில் சுபவீ மேற்கொண்டிருக்கிறார்.. ஆனால் கோவை ராமகிருஷ்ணன் (தபெதிக) நழுவிக் கொண்டார்.. அவருக்கு வாழ்த்துகள்..

* முருகனை முப்பாட்டன் என்றுகூறி  சீமான் வேல் ஏந்தினால் சுபவீ பக்கம் பக்கமாக கட்டுரை  எழுதுகிறார். கேலி செய்கிறார்.ஆனால் பார்ப்பான் ராமானுஜர் பற்றி  தொடர் எழுதப் போகிறாராம் கலைஞர்.. திராவிடம் பேசுகிறவர்கள் அனைவரும் நவத்துவாரங்களையும் மூடிக் கொண்டு இருப்பதை கவனித்தீர்களா!! இவ்வளவுதான்யா பார்ப்பனிய எதிர்ப்பு..

* "இந்திய தேசிய கீதத்தில் திராவிடம் என்னும் சொல் இருக்கிறது. அதனால் திராவிடத்தை வீழ்த்த முடியாது" என்கிறார் கலைஞர்.

" தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் ஏன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள்?" என்கிறார் சுபவீ.. 
பார்ப்பனிய இந்திய தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போட திராணி இல்லாத திக கும்பல் தமிழ்தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடுகிறது.. அப்புறம் எதுக்குப்பா தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறீர்கள்? வடநாட்டு பக்கம் போயிட வேண்டியதுதானே!! ஆக திராவிடத்தை வளர்க்கிறோம் என்னும் பெயரில் இந்தியத்தைதான் வளர்க்கிறார்கள்..


* "ஓட்டு அரசியலில் அடித்துக் கொள்ளுங்கள். ஆனால் திராவிடத்தைக் காத்திட ஒன்று சேருங்கள்" என அதிமுக, திமுகவுக்கு அழைப்பு விடுக்கிறார் அய்யா வைகோ.
திமுக எதிர்ப்பு என்பது அதிமுகவின் கொள்கை.
அதிமுக எதிர்ப்பு என்பது திமுகவின் கொள்கை. நடுவுல எங்கிருந்து வந்தது திராவிடம்? அய்யா வைகோதான் இதுக்கு பதில் சொல்லணும்.

இதையெல்லாம் அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியவாதிகள் சாதிய அபிமானிகளாக இருப்பதால் திராவிடப்  பிழைப்புவாதிகளை  தீவிரமாக எதிர்க்க முடியவில்லை.. சம்பந்தமே இல்லாமல் பெரியாரையும் திராவிடத்தையும் எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்..

பின் குறிப்பு: கட்டுரை படித்துவிட்டு எனக்கும் பார்ப்பனிய அடிமை, சாதி வெறியன் பட்டம் கொடுத்தால் மகிழ்ச்சியே!!

பெரியார் ஆதரித்தது தமிழ்த்தேசியம், வீரமணி ஆதரிப்பது இந்திய தேசியம்.

பெரியார் தன் இயக்க நாளிதழுக்கு "விடுதலை" என்று பெயர் வைத்தார். அது தமிழ்த்தேசிய விடுதலையைக் கருத்தில் கொண்டுதான்.. அத்தோடு "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற வாசகத்தையும் இணைத்திருந்தார்..

அதே போல குடியரசு என்கிற பெயரும் "தமிழ்தேசியக் குடியரசைக்" கருத்தில் கொண்டுதான்..

ஆனால் "தமிழ்நாடு தமிழருக்கே" என்னும் முழக்கத்தை நாளிதழிலிருந்து நீக்கிவிட்டு , பொது ஊடகத்தில் "தமிழ்த்தேசிய வியாதிகள்" என்று சொல்லும் அளவுக்கு கி.வீரமணிக்கு துணிச்சல் எவ்வாறு வந்தது?

இந்திய தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடாமல், தமிழ்த்தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடும் வீரமணி கும்பலுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?? என்ன (&^^&$&^க்கு 'தமிழர் தலைவர்' என்கிற அடைமொழி'???

இந்தியாவுக்கு‬ முட்டு கொடுத்து திராவிடம் பேசுகிறவர் எவராக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டே எதிர்க்கலாம்.. ஏனெனில் அது கண்டிப்பாக பிழைப்புவாதமாகத்தான் இருக்கும்..

வியாழன், 5 மார்ச், 2015

திராவிடத்தின் பதட்டம்

திராவிட இயக்கத்தை வீழ்த்திவிட முடியாது என சில மாதங்களாக வைகோவும் கருணாநிதியும் மாறிமாறி அறிக்கை விடுவது காமெடியாக இருக்கிறது. அவர்களின் பீதியும் தெரிகிறது.

சாதி ஒழிப்புதான் திராவிடம் என்றீர்.
கருணாநிதியும் வைகோவும் என்று சாதி ஒழிப்பு பேசினார்கள்?

மதவாத எதிர்ப்புதான் திராவிடம் என்றீர்.
கருணாநிதியும் வைகோவும் என்று மதவாத எதிர்ப்பு பேசினார்கள்?
இப்படி கேட்டுக்கொண்டே போகலாம்.

இவர்கள் சொல்வதைப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்குத் தடை விதித்த ஓ.பன்னீர்செல்வம்தான் தமிழகத்தின் ஆகப்பெரும் திராவிடத் தலைவர்.


கருணாதியின் திராவிடத்தை 'முதலமைச்சு திராவிடம்' என்று எவரும் சொல்லவில்லை.
விஜயகாந்தின் திராவிடத்தை 'போலித் திராவிடம்' என்று எவரும் சொல்லவில்லை.
கருணாநிதியையும் விஜயகாந்தையும் திராவிட இயக்க தலைவர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்கிறார்கள்.


(பெரியார் திடலில் விஜயகாந்திற்கு பெரியார் விருதும் வழங்கப்பட்டுள்ளதாக வரலாறு சொல்கிறதே! உண்மையா?)

ஆனால் போலித் தமிழ்த்தேசியம், முதலமைச்சு தமிழ்த்தேசியம் போன்ற வார்த்தைகள் இயல்பாக உதிக்கிறார்கள் திராவிடக் கருத்தியல் கொண்டவர்கள்.
தெருவுக்கு நாலு பெரு இருக்கிறபோதே இந்த பதட்டம் என்றால், நாளை தெரு முழுக்க தமிழ்த்தேசியவாதிகள் நிறைந்துவிட்டால்????

செவ்வாய், 12 மார்ச், 2013

இந்தியா நடத்தும் இன அழிப்பு

எப்படியெல்லாம் ஒரு இனத்தை அழிக்கலாம்?
  • இனத்தின் மக்களை அழித்தல்
  • இனத்தின் மொழியை அழித்தல்
  • இனக் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு இவற்றை திரித்தல்/அழித்தல்
இதில் கடைசி இரண்டு முறைகளை அவ்வப்போது தமிழினம் மீது ஏவுகிறது இந்திய ஆதிக்கம்.

ஏற்கனவே இந்திய ஆதிக்கத்தால் தமிழினம் மீது நடத்தப்பட்டத்  தாக்குதல்கள்
  • தமிழர் வரலாறுகளை மத்தியப்  பாடத்திட்டங்களில் திரித்து எழுதுதல்
  • தமிழர் வரலாற்றைக்  கேலி செய்தல்
  • தமிழர் வீரவிளையாட்டைத் தடை செய்தல்
இப்போது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதத்   தடை

கடந்த சில வருடங்களாக தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது குறிப்பிடத்தக்கது. இனி தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை கண்டிப்பாக குறையும். பலரும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

இதுவும் ஒருவகையில் மறைமுக இந்தி திணிப்பே! 
பிற மொழிகளில் எழுதத் தடை விதித்தவர்கள் ஏன் இந்திக்கும் தடை விதிக்கவில்லை? ஆங்கிலத்தில் மட்டும் தேர்வுகள் நடத்தலாமே? அனைத்து மாநிலங்களிலும் ஆங்கிலம் உள்ளதே!
 
ஏற்கனவே தமிழகத்தில் பலரும் 'ஐயோ! நமக்கு இந்தி தெரியலையே!' என்று வருந்துவதுண்டு (ஒரு காலத்தில் நானும் வருந்தினேன்). இப்போது அந்த குரல் பலம் பெறும். இந்தி மிக அவசியம் என்னும் உணர்வு தமிழாகளிடம் ஏற்படும்.

ஏற்கனவே தமிழகத்தின் நகரங்களில் பல பள்ளிகளில் (வித்யாலயா) இந்தியைக் கட்டாயம் ஆக்கியுள்ளார்கள். இது யார் செயல் என்பதும் பலர் அறிந்ததே!

பிற இனங்களின் மொழிகளைப் புறக்கணித்து, ஒடுக்க நினைக்கும் இந்திய ஆதிக்கத்தின் நரித்தனத்தை முறியடிப்போம்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்.
இவ்விசயத்தில் தமிழகத்தின் பல கட்சிகளும் ஒன்றுபட்டு மத்திய அரசை எதிர்த்து நம் உரிமையை மீட்க வேண்டும்.


இந்திய ஒன்றியம்  என்பது பல இனங்களைக் கொண்டு கட்டியமைக்கப்பட்ட கட்டமைப்பே.

என் இனத்தின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு அனைத்தையும் மறைத்துவிட்டு எனக்கு 'இந்தியன்'னு பட்டம் கொடுப்பீங்க. அதை வாங்கிட்டு இளிச்சுட்டு போக நான் முட்டாள் இல்லை.

பின் குறிப்பு:
நான் எந்த மொழிக்கும் எதிரானவனில்லை.
எந்த மொழியையும் கற்பதில் தவறில்லை.
ஆனால் கட்டாய மொழித்திணிப்பு  மாபெரும் குற்றம்.

இதுபற்றி நான் ஏற்கனவே எழுதிய கட்டுரை
தமிழினத்தைக் காத்திட இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம்

வியாழன், 7 மார்ச், 2013

தோழர் திருமா எடுத்த மாபெரும் ஆயுதம்

மக்களவையில் நேற்று  ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிய விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசியதன ஒரு பகுதி:

"இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டும். ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் இந்தியா பழி சுமக்க நேரிடும். தமிழர்கள் இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடும் நிலை உருவாகும். "


'தனி நாடு '  என்பதுதான் தோழர் திருமா எடுத்த மாபெரும் ஆயுதம்.

மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின்போது திமுக எம்.பி திருச்சி சிவா அவர்களும் இதே கருத்தை மறைமுகமாக வைத்தார். 'இலங்கை வேண்டுமா? தமிழகம் வேண்டுமா? என்பதை இந்தியா தீர்மானிக்கட்டும்' என்றார்.

ஒட்டுமொத்த தமிழர்களும் இலங்கையைக் கண்டிக்கிறார்கள்.
இனப்படுகொலைக்குத் தீர்வு வேண்டும் என்கிறார்கள்.
இந்தியா இலங்கையை எதிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
சிலர் தீக்குளித்து இன்னுயிரை மாய்க்கிறார்கள்.

ஆனாலும் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
'இலங்கை நம் நட்பு நாடு. நாம் அவர்களை எதிர்க்க கூடாது'.
அதாவது இலங்கையை தனது மாநிலமாக பாவித்து பேசுகிறது இந்திய ஏகாதிபத்தியம்.

இடையில் பல இந்திய ஊடகங்கள், சு.சாமி போன்ற  அரசியல் தரகர்கள் தமிழர்களுக்கு எதிராக நிற்கிறார்கள். (கேடுகெட்ட தினமலர் இன்று  எப்படி கார்ட்டூன் போட்டுருக்கான்னு பாருங்க!!)

 இந்தியாவின் இரு அவைகளிலும் தமிழர் பிரச்சினை என்றாலே வட மாநில உறுப்பினர்கள் வெளியே காற்று வாங்க சென்று விடுகிறார்கள்.

அப்படியானால் தமிழன் என்ன செய்வது?
எப்படி இந்தியாவை ஆட்டம் காணச் செய்வது?

அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.
ஆம்! 'தனித் தமிழ்நாடு' கோஷம். இது வெற்றுக் கோஷம் அல்ல. நம் உரிமை.
அதை நாம் கையில் எடுக்கும் போது இந்திய வல்லாதிக்கம் நடுங்கும்.

கடிதம் எழுதி காலத்தைப் போக்குவது ஒட்டு வங்கி அரசியலுக்கு உதவுமே தவிர, தீர்வாகாது.

திருமாவின் இந்த கோஷம் தமிழக மக்களை சென்றடையாது. ஒருவேளை செல்லும்பட்சத்தில் தமிழக மக்கள் விழிப்புணர்வு ஏறுவார்கள். விழிப்புணர்வு பெற்றுவிட்டால் ஏமாற்று அரசியல் பண்ண முடியாதே!!!

திருமாவின் பேச்சை ஊடகங்கள் மறைக்கும். 'காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்' என திருமா தமிழில் ஆவேசமாகப் பேசியதை ஒளிபரப்பிய சன் டி.வி 'தனி நாடு' முழக்கத்தை கட் செய்து விட்டது. இதுதான் போலித் திராவிடம்!!

தோழர் திருமா மட்டும் இந்த ஆயுதத்தை எடுத்தால் போதாது. ஒட்டுமொத்த தமிழர்களும் ஓரணியில் திரண்டு  'தனித் தமிழ்நாடு' கோஷத்தை வலுவாக உயர்த்த வேண்டும்.

“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.”- தமிழீழத் தேசியத் தலைவர்  பிரபாகரன் 

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

என்னாது? பெரியார் தீவிரவாதியா?

 'திராவிட பயங்கரவாதம்' என்னும் தலைப்பில் பெரியாரையும், திராவிடத்தையும் ஒரு பதிவர் சாடியிருந்தார். அவருடைய அந்த பதிவில் எனது பின்னூட்டம் இருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் இந்த தனிப்பதிவு. (அந்தப் பதிவர் மன்னிக்கவும்.)


அதுவும் ஒரு இஸ்லாமிய நண்பரிடமிருந்து அப்பதிவை எதிர்பார்க்கவில்லை. அனைவரும் சுயமாக சிந்திக்க வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார். அதனால் அந்த நண்பரின் சுய சிந்தனையை வரவேற்கிறேன். ஆனால் சிந்தனை என்னும் பெயரில் தவறான கருத்துக்களை பரப்புவது சரியன்று. பெரியார் சொல்லாத ஒரு கருத்தை பெரியார் சொன்னதாக கூறுகிறது அந்த கருத்து. இம்மாதிரியான திரிப்பு வரவேற்கதக்கதல்ல.

பல மூட நம்பிக்கைகளை உட்கொண்ட, மக்களை சாதிரீதியாக பிளவுப்படுத்திய இந்து மதத்தை கடுமையாக எதிர்த்த பெரியார் மற்ற மதங்களை கடுமையாக  எதிர்க்கவில்லை. ஒரு கட்டத்தில் இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றே வழி என்று சொன்னார். அதற்கு தாங்கள் அளிக்கும் மரியாதை பிரம்மாதம்.

சுயமரியாதை,  பகுத்தறிவு,  சாதி மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு,  சமத்துவம், சமூக முன்னேற்றம், பெண்ணுரிமை மற்றும் பல முற்போக்கு கருத்துக்களை தமிழ்ச்சமூகத்தில் விதைத்த தந்தை பெரியாரை எப்படி விமர்சிக்க முடிகிறது? அப்படி விமர்சித்து இந்த சமூகத்திற்கு தாங்கள் சொல்ல வரும் மாற்றுக் கருத்து என்ன? இல்லை வெறுமென பொழுதுபோக்குக்காக விமர்சிக்கிறார்களா?

திராவிடம் என்பது தமிழ்த் தேசியத்திற்கு என்று மற்றொரு கருத்து நிலவுகிறது. அதுவும்  தவறு. தமிழ்த் தேசியத்தின் முன்னோடியே  தந்தை பெரியார்தான் .
பெரியாரையும் அம்பேத்கரையும் ஓரம்கட்டி விட்டு சமூகத்தில் ஒரு புரட்சியையும் செய்ய முடியாது. புரட்சி செய்யாமல் தமிழ்த் தேசியம் அமைக்க முடியாது.

சாதி, மதங்களை தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பது போல இருக்கிறது அந்த நண்பரின் பதிவு.
சாதிப்பெருமை, மதப்பெருமை பேசி இதுவரை கிழித்தது என்ன? இன்னும்  பேசி பேசி என்ன கிழிக்கப் போகிறீர்கள்?
 
"உன் சாத்திரத்தைவிட உன் முன்னோர்களைவிட உன் வெங்காயம் வெளக்கமாத்தவிட உன் அறிவு பெரிது, அதைச்சிந்தி" -தந்தை பெரியார்

குறிப்பு: நானும் சாதிப்பெருமை, மதப்பெருமை பேசியவன்தான். திருந்திவிட்டேன். மற்றவர்களும் திருந்த வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.
 
நன்றி