வெள்ளி, 18 ஜனவரி, 2013

இதுதான்டா தமிழ்த் தேசியம்!!

 இணையதளத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது தமிழ்த் தேசியம் தொடர்பாக தோழர் க.அருணபாரதியின் அருமையான கருத்துக்கள் கண்ணில் தென்பட்டன .
 அவை இதோ:
 தமிழ்நாட்டு முதல்வர் பதவியில், “மானத்தமிழன்” அமர்ந்தாலும், மார்வாடி அமர்ந்தாலும் அதன் விளைவாக தமிழ் இனத்திற்கு ஏதும் கிடைக்கப் போவதில்லை. 
 தமிழீழச் சொந்தங்களை அழித்தொழிக்கும் இலங்கைப் போரை நிறுத்த வேண்டுமென கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரும் தீர்மானம், இலங்கை மீது பொருளியல் தடை கோரும் தீர்மானம் என ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு இந்திய அரசின் குப்பைத் தொட்டிக்குள் விழுந்த தீர்மானங்களைப் போல, அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து வெறும் தீர்மானங்கள் மட்டுமே போடுவதைத்தான் தமிழக சட்டமன்றம் செய்ய முடியுமே தவிர, ஒருக்காலும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அரசியல் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.
சிங்கள ஆதிக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொள்ள வேண்டுமென தமிழீழ மக்களைத் திரட்ட, தமிழீழத் தமிழர்களால் வழங்கப்படுகின்ற கருத்தியலே, அவர்களால் ‘தமிழ்த் தேசியம்’ என முன்வைக்கப்படுகிறது. அதே போல், இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக உள்ள தமிழ்நாடு தம்மை விடுவித்துக் கொண்டு தனித் தமிழ்த் தேசமாக மலர வேண்டும் என்பதே தமிழகத்தில் ‘தமிழ்த் தேசியம்’ ஆக இருக்க முடியும்.
ஆனால், இந்திய அரசியலமைப்பையும், இறையாண்மையையும் ஏற்றுக் கொண்டு நடைபெறும் தேர்தல்களில் பங்கேற்பதும், தமிழ் இனத்தை இந்திய அரசுக்குக் காட்டிக் கொடுக்கும் மசோதா மன்றமாகத் திகழும் தமிழக சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவதும் தான் ‘தமிழ்த் தேசியம்’ என நாம் தமிழர் கட்சி, தமிழர் களம், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சியினர் பேசுகின்றனர்.
தேர்தல் அரசியல் மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியம் என்ன இடஒதுக்கீடு போன்ற சீர்திருத்தக் கொள்கையா என்று கூட இவர்கள் சிந்திப்பதில்லை.
 ‘அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ எனப் பேசி தேர்தல்களில் பங்கேற்று மக்களை ஏய்த்த தி.மு.க.வின் வழித்தோன்றல்களாகவே இவர்கள் மக்களிடம் தென்படுவார்கள். ம.தி.மு.க., பா.ம.க., கொ.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சி, தமிழர் களம் என எத்துணை அமைப்புகள் வந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல.
தேர்தல்களில் வெற்றி பெற்று பதவிகள் பெறலாம், தமிழ்ச் சமூகத்திற்கு சில கூடுதல் உரிமைகளைக் கூடப் பெற்றுத் தரலாம் என்றாலும், ஒருபோதும் தமிழ்த் தேசிய விடுதலையைப் பெற்றுத் தர முடியாது. 
ஏனெனில், தமிழ்த் தேசியம் என்பது நாம் கேட்டுப் பெற வேண்டிய சலுகையல்ல; அது ஒர் தேசிய இனத்தின் விடுதலை இலக்கு. அதனை மக்கள் எழுச்சிப் போராட்டங்களே பெற்றுத் தரும், அதில் தேர்தல் கட்சிகளுக்கு இடமில்லை.
 
(கட்டுரையாளர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக