ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

அப்சல் குரு தூக்கு - இந்தியாவின் பாசிசம்

விடுமுறை நாட்களில் லேட்டாக எழும்புவதுதான் வழக்கம். அப்படித்தான் சனிக்கிழமையன்றும் எழுந்து தொலைக்காட்சியை ஆன் செய்தால் CNN-IBN சானலில் 'Afsal Guru Hanged' என்று Flash news ஓடிக் கொண்டிருந்தது.

எந்த ஒரு அதிர்ச்சியும் இல்லை. அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட போதே எனக்கு தெரியும் "இனி எதிர்க்கட்சிகளை சமாளிக்கவும், மக்களை திருப்திபடுத்தவும்(??), மக்களை திசைதிருப்பவும்  இதுபோன்ற கொலைகள் நடந்து கொண்டே இருக்கும்" என்று.

ஒரு நாட்டின் சட்டம் நம்பகத்தன்மையாக இருக்க வேண்டும்.
ஏழை, பணக்காரன், அதிகாரம்  படைத்தவன் என எல்லோருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும்.
விசாரணைகள் எந்த ஒரு ஒழிவு மறைவுமின்றி நடைபெற வேண்டும்.
அப்படி இருக்கும்பட்சத்தில் மட்டுமே அந்த சட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் தண்டனைகளை சரி என்று கூற முடியும்.

ஆனால்  இங்கு சட்டம் எப்படி இருக்கிறது? தலைமை எப்படி இருக்கிறது?
அதை நீங்களே யோசித்து முடிவெடுத்து கொள்ளுங்கள். நீதிபதிகளையே விலைபேசி வாங்கும் நிலையில்தான் நாடு உள்ளது.

அமெரிக்காவிலிருந்து எஸ்.எம் கிருஷ்ணா அவர்கள் பிரதமருக்கு செய்தி அனுப்புகிறார். காவிரியின் ஷட்டர் உடனே மூடப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்துகொண்டு கார்த்திக் சிதம்பரம் வழக்கு போடுகிறார். பாண்டிச்சேரியில் Tweet செய்த நபர் கைது செய்யப்படுகிறார்.

இணையங்களில் அரசியல்வாதிகளின் முகமூடி கிழிக்கப்படுகிறது. அதை சமாளிக்க என்று IT Act என்று புதிய சட்டம். நம்ம முதல்வர் ஒருபடி மேலே சென்று இணைய குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை அறிவித்து விட்டார்.

இதுதான் இன்றைய சட்டத்தின் நிலை. இன்னும் பல பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்போ விசயத்துக்கு வருவோம்.
"அப்சல் குரு குற்றவாளி. அவனை தூக்கிலிட்டது சரியே!" என்று பலர் ஆனந்த கூத்தாடுகிறார்கள். சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். "இந்தியாவின் குடியரசு நிரூபிக்கப்பட்டுள்ளது! பாரத் மாதா கீ ஜெய்!" என்கிறார்கள்.

ஒரு உயிர்  பறிபோனதில்  அவ்வளவு மகிழ்ச்சியா?
உடனே எழுப்பப்படும் எதிர்கேள்வி "அப்சல் குரு பலரை கொள்ளவில்லையா? அவன் செய்தது நியாயமா?".
அப்சல் குரு கொலையாளி என்று இந்தியாவும் அதன் சட்டமும் கூறுகிறது. அதன்மீது எனக்கு நம்பிக்கை கிடையாது.

இருந்தாலும் உங்கள் வாதப்படி அவர் குற்றவாளி என்றே வைத்துக் கொள்வோம்.
கொலைக்கு கொலை ஈடாகுமா?
இதுதான் உங்கள் பாரதம் கற்றுக் கொடுத்ததா?
இதுதான் அஹிம்சையா?
இதுதான் தேசப்பற்றா?

சில நாட்களுக்கு முன்னர் "பத்து பாகிஸ்தானியர்கள் தலை வேண்டும்" என இந்திய எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா கொக்கரித்தார். தலைவர்கள்தான் இப்படி  ஓட்டு வங்கி அரசியலுக்காக கொக்கரிக்கிறார்கள் என்றால் நாமும் அதையே செய்யலாமா?


கொலைக்கு கொலை ஈடு என்றால் இன்று இந்தியாவில் பலரும் தூக்கிலிடப்பட்டு இருக்க வேண்டுமே!!

 ஈழ ஆதரவாளன் என்பதால் பலரும் என்னிடம் எழுப்பும் கேள்வி "ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி மரண தண்டனை வாங்கி தர வேண்டாமா?".
 ராஜபக்சேவுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டாலும் அதை நான் எதிர்ப்பேன். ராஜபக்சேவின் உயிரை எடுப்பதோ, செயவர்த்தனேவின் உயிரை எடுப்பதோ ஈழ மக்களுக்கு தீர்வு கிடையாது. அதுதான் தீர்வு என்று எண்ணியிருந்தால் அதை என் தலைவர் என்றோ செய்து முடித்திருப்பார். ஆனால் ஈழ மக்களின் எண்ணம் அது இல்லை. அவர்களின் நிலம் அவர்களுக்கு வேண்டும். அவர்களின் இன உரிமை அவர்களுக்கு வேண்டும்.

"ராஜீவ் கொலையில்  குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள மூவரை ஏன் இன்னும் தூக்கிலிடவில்லை?
பஞ்சாப் முன்னாள் முதல்வரை கொன்ற குற்றவாளிகளை  ஏன் இன்னும் தூக்கிலிடவில்லை?" என்று இந்திய ஊடகங்களும், அரைகுறை அரசியல்வாதிகளும் தங்கள் விஷத்தை கக்குகிறார்கள்.

ராஜீவ் கொலை விசாரணையில் உள்ள பல  ஓட்டைகளை இந்திய ஏகாதிபத்தியம் ஏன் மூடி மறைக்கிறது??
ஆயுள் தண்டனை அனுபவித்து முடித்த பின்னரும் சகோதரி நளினியை ஏன் விடுதலை செய்யவில்லை?
அதை பற்றி ஒரு பையலும் கேள்வி கேட்க மாட்டான்.

பாராளுமன்ற தாக்குதலில் குருநாதனுக்கும்(நான்தான் ) தொடர்பு உண்டு. அவரை தூக்கிலிடுங்கள் என்று இந்திய சட்டம் சொல்லும்.
இல்லை அவன் டெல்லி பக்கமே போனதில்லை என்று என் பெற்றோரும், நண்பர்களும் சாட்சி சொல்லுவார்கள். ஆனால் சாட்சிகள்  நிராகரிக்கப்படும். நான் டெல்லியில் இருந்ததாக ஆதாரங்கள் தயாரிக்கப்படும். நான் தூக்கிலிடப் படுவேன்.
"இவன் லூசு மாதிரி உளறுகிறான் ! அப்படியெல்லாம் நடக்காது!" என்று இதை படிக்கும் பலரும் எண்ணலாம். ஆனால் அப்படி நடந்தாலும் அதை யாரும் தடுக்க முடியாது.

அப்சல் குரு தூக்கிலிடப்படுவதற்கு  முன்னர் அவரது குடும்பத்தினரை கூட சந்திக்கவிடாமல் மனிதநேயமற்று, மாபெரும் குற்றத்தை செய்துள்ளது இந்திய ஏகாதிபத்தியம்.

இந்தியப் பாசிசத்தின் பசி இன்னும் அடங்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக