வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

சாதி எதிர்ப்பு என்பதை ஒரு கட்சி எதிர்ப்பாக மட்டும் மாற்றி பேசும் மலிவான அரசியல் வேண்டாம்

சாதி, மத விவாகரங்களில் கட்டுரை எழுதுகையில் அதிகக் கவனம் தேவை.
கீற்றில் வெளியான இந்தக் கட்டுரையின் ஒரு கருத்து சற்று உறுத்தலாக இருந்தது.
http://keetru.com/…/2014-03-08-12…/29007-2015-08-19-14-17-34


அன்புமணி கூட்டம் முடிந்ததும், கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.கவினர் தலித்துகளுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டு, தலித் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றி வந்ததாக கட்டுரை ஆசிரியர் கூறியிருக்கிறார்.
ஆனால் தாக்குதலை முன்னின்று நடத்தியதாக திராவிடக் கட்சியினர் பெயர்களை அடுக்கியுள்ளார். எது உண்மை???
இவர் குறிப்பட்ட திராவிடக் கட்சிக்காரார்கள் எல்லாம் பாமகவில் ஐக்கியமாகிவிட்டார்களா?
இல்லையேல் வன்னியர் என்றாலே பாமகவை சார்ந்தவர்தான் என்று முன்முடிவுக்கு வந்துவிட்டாரா??

சாதி அரசியல் செய்யும் ராமதாஸ் வன்னிய மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்..
ஆனால் இம்மாதிரியான பதிவுகள் வன்னியர்களை ராமதாஸ் பாக்கம் கொண்டுபோய் நிறுத்தும். ராமதாசின் வியூகமும்/விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும்.

சாதி எதிர்ப்பு என்பதை ஒரு கட்சி எதிர்ப்பாக மட்டும் மாற்றி பேசும் மலிவான அரசியல் வேண்டாம்.
சாதிவெறி என்பது இங்கே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நிற்கிறது

வெள்ளி, 1 மே, 2015

திராவிடப் போலிகளை அம்பலப்படுத்துவோம்

திராவிடம் பேசும் சில பிழைப்புவாதிகளின் (அனைவரும் அல்ல) மடைமாற்றும் அரசியல், பிழைப்புவாத அரசியல் பற்றி  நிறையபேசுவோம்..வாருங்கள்..

* இருபது தமிழர்கள் படுகொலைக்கு திக, திமுக  சார்பில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை.. கிருஷ்ணகிரியில் தலித் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்ட விசயத்தை பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. இந்த இரு விசய பின்னணியை ஆராய்ந்தால் திக யாருக்கான அமைப்பு என்று தெரிந்து விடும்.
இந்த இரு விசயங்களில் பார்ப்பான் ஈடுபட்டிருந்தால் திக போராட வந்திருக்கும்.. அதிமுக ஈடுபட்டிருந்தால் திமுக போராட வந்திருக்கும்.. இதுதான் திராவிட அரசியல்..

* விஜயகாந்துக்கு அறிவுரை கொடுப்பது போல திமுக-விஜயகாந்த் கூட்டணிக்கு அடித்தளம் போட்டுக் கொண்டிருக்கிறார் வீரமணி. மோடியை பெரியாருடன் ஒப்பிட்டபோது விஜயகாந்துக்கு எதிராக திராவிட அமைப்புகள் எந்தப் போராட்டத்தையும் செய்யவில்லை.. அதுவே ஒரு வடநாட்டான் பேசியிருந்தால் இங்கே கூச்சல் போட்டிருப்பார்கள் . ஆனால் பொறுக்கித் தின்ன இப்போது விஜயகாந்தும் தேவைப் படுகிறாரே!! அவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க..

* வே.மதிமாறன் என்னும் நபருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.. மேடையில் பேரா.அன்பழகனை வைத்துக் கொண்டு 'அடுத்து திமுக ஆட்சிதான்' என்று பேசுகிறார்.. இப்படி பொறுக்கித் தின்பதற்கு எதுக்கு விருது??
பாரதி, வள்ளுவன் என அனைவரிடம் இருக்கும் பிழைகளை சுட்டிக் காட்டினால் முற்போக்கு.. அதுவே பெரியாரின் பிழைகளை சுட்டிக் காட்டினால் உடனே பார்ப்பனிய அடிமை, சாதிவெறியன் என பட்டம் கொடுத்துவிடுவார்கள் பெரியார் திடல் பக்தர்கள்.

* தருமபுரி சேரி சூறையாடலில் ஈடுபட்டவர்களில் அதிகம் பேர் திமுகவினர். மதிமுக, தேமுதிக கட்சியினரும் உண்டு. ஆனால் அந்தக் கட்சியினர் எந்த நடவடிக்கையாவது எடுத்தார்களா?? இல்லவே இல்லை.. மிக நுட்பமாக வன்னியர்-பறையர் பிரச்சினையாக மாற்றினர். (ராமதாசின் செயல்களும் அப்படிதான் இருந்தது. அவரும் அதைதான் விரும்பியிருப்பார்..).

* ராமதாசும் அவர் மகனும் தனித் தமிழ்நாடு கோரிக்கையை ஆதரிப்பவர்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு தமிழ்த்தேசிய அடையாளம் கொடுத்து தமிழ்த்தேசியம் என்றாலே சாதிதான் என்று கேலி செய்கிறார்கள்.

* சாதி நிகழ்வுகளில் பங்கேற்கும் திராவிடக் கட்சிகள் பற்றி திராவிடம் பேசுகிறவர்கள் ஏன் வாய் திறப்பதில்லை?? உடனே ஒரு வேதவாக்கு சொல்லுவார்கள் "ஓட்டு அரசியல் என்றாலே சந்தர்ப்பவாதம்" என்று. அது சரிப்பா, அந்த சந்தர்ப்பவாதிகளை பற்றிப் பேசாமல் எப்படி அய்யா சாதியை ஒழிக்கப் போகிறீர்கள்??  "அனைத்துக் கட்சிப் பெயரிலும் திராவிடம் இருக்கிறது.அதனால்திராவிடத்தைவீழ்த்தமுடியாது"என்கிறார் கி.வீரமணி.அப்ப மட்டும் திராவிடக் கட்சிகளை கூட்டு சேர்த்துக் கொள்கிறீர்கள்.. அவர்களின் சாதி சார்பை ஏனய்யா மூடி மறைக்கிறீர்கள்??

* திராவிடக் கட்சிக்காரர்கள்தான் தமிழகத்தில் பாதி இருக்கிறார்கள். இவர்கள் சாதி ஒழிப்பை மேற்கொண்டிருந்தால் சாதி இந்நேரம் ஒழிந்திருக்குமே!! ஒருபோதும் செய்யமாட்டார்கள். ஆனால் சாதி ஒழிப்பு போராளிகள் போல வேஷம் போடுவார்கள். (இந்த வேஷம் போடுற வித்தை தமிழ்தேசியவாதிகளுக்கு தெரியவில்லை.. )

* திராவிடக் கட்சிகளை சார்ந்தவர்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் அம்பேத்கர் ஏன் இன்னும் கூண்டுக்குள் இருக்கிறார்?? இதையெல்லாம் பற்றி பேசாமல் சாதி ஒழிப்பு நாடகம் போடுகிறார்கள்.

* அண்மையில் திக-திவிக-தபெதிக உள்ளிட்ட அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலையை கருணாநிதி ஆலோசனையின் பேரில் சுபவீ மேற்கொண்டிருக்கிறார்.. ஆனால் கோவை ராமகிருஷ்ணன் (தபெதிக) நழுவிக் கொண்டார்.. அவருக்கு வாழ்த்துகள்..

* முருகனை முப்பாட்டன் என்றுகூறி  சீமான் வேல் ஏந்தினால் சுபவீ பக்கம் பக்கமாக கட்டுரை  எழுதுகிறார். கேலி செய்கிறார்.ஆனால் பார்ப்பான் ராமானுஜர் பற்றி  தொடர் எழுதப் போகிறாராம் கலைஞர்.. திராவிடம் பேசுகிறவர்கள் அனைவரும் நவத்துவாரங்களையும் மூடிக் கொண்டு இருப்பதை கவனித்தீர்களா!! இவ்வளவுதான்யா பார்ப்பனிய எதிர்ப்பு..

* "இந்திய தேசிய கீதத்தில் திராவிடம் என்னும் சொல் இருக்கிறது. அதனால் திராவிடத்தை வீழ்த்த முடியாது" என்கிறார் கலைஞர்.

" தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் ஏன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள்?" என்கிறார் சுபவீ.. 
பார்ப்பனிய இந்திய தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போட திராணி இல்லாத திக கும்பல் தமிழ்தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடுகிறது.. அப்புறம் எதுக்குப்பா தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறீர்கள்? வடநாட்டு பக்கம் போயிட வேண்டியதுதானே!! ஆக திராவிடத்தை வளர்க்கிறோம் என்னும் பெயரில் இந்தியத்தைதான் வளர்க்கிறார்கள்..


* "ஓட்டு அரசியலில் அடித்துக் கொள்ளுங்கள். ஆனால் திராவிடத்தைக் காத்திட ஒன்று சேருங்கள்" என அதிமுக, திமுகவுக்கு அழைப்பு விடுக்கிறார் அய்யா வைகோ.
திமுக எதிர்ப்பு என்பது அதிமுகவின் கொள்கை.
அதிமுக எதிர்ப்பு என்பது திமுகவின் கொள்கை. நடுவுல எங்கிருந்து வந்தது திராவிடம்? அய்யா வைகோதான் இதுக்கு பதில் சொல்லணும்.

இதையெல்லாம் அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியவாதிகள் சாதிய அபிமானிகளாக இருப்பதால் திராவிடப்  பிழைப்புவாதிகளை  தீவிரமாக எதிர்க்க முடியவில்லை.. சம்பந்தமே இல்லாமல் பெரியாரையும் திராவிடத்தையும் எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்..

பின் குறிப்பு: கட்டுரை படித்துவிட்டு எனக்கும் பார்ப்பனிய அடிமை, சாதி வெறியன் பட்டம் கொடுத்தால் மகிழ்ச்சியே!!

பெரியார் ஆதரித்தது தமிழ்த்தேசியம், வீரமணி ஆதரிப்பது இந்திய தேசியம்.

பெரியார் தன் இயக்க நாளிதழுக்கு "விடுதலை" என்று பெயர் வைத்தார். அது தமிழ்த்தேசிய விடுதலையைக் கருத்தில் கொண்டுதான்.. அத்தோடு "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற வாசகத்தையும் இணைத்திருந்தார்..

அதே போல குடியரசு என்கிற பெயரும் "தமிழ்தேசியக் குடியரசைக்" கருத்தில் கொண்டுதான்..

ஆனால் "தமிழ்நாடு தமிழருக்கே" என்னும் முழக்கத்தை நாளிதழிலிருந்து நீக்கிவிட்டு , பொது ஊடகத்தில் "தமிழ்த்தேசிய வியாதிகள்" என்று சொல்லும் அளவுக்கு கி.வீரமணிக்கு துணிச்சல் எவ்வாறு வந்தது?

இந்திய தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடாமல், தமிழ்த்தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடும் வீரமணி கும்பலுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?? என்ன (&^^&$&^க்கு 'தமிழர் தலைவர்' என்கிற அடைமொழி'???

இந்தியாவுக்கு‬ முட்டு கொடுத்து திராவிடம் பேசுகிறவர் எவராக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டே எதிர்க்கலாம்.. ஏனெனில் அது கண்டிப்பாக பிழைப்புவாதமாகத்தான் இருக்கும்..

பார்ப்பான் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?? #டவுட்டு

"பார்ப்பான் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான்" என ஒரு பதிவைப் பார்த்தேன்..

அது என்னய்யா!!
"பார்ப்பான் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான்" என்று எழுத வேண்டியதுதானே!!

மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க.. இழிவு நிலையை பேசும்போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க??

அடுத்து, தமிழன் என்றாலே பார்ப்பானும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க.. தமிழ் என்றாலே சாதி என்றுதான் சொல்லுறீங்க..
அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?
சாதிய தலைவர் அல்லது பார்ப்பனிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியதுதானே!!

‪#‎டவுட்டு‬

வியாழன், 5 மார்ச், 2015

திராவிடத்தின் பதட்டம்

திராவிட இயக்கத்தை வீழ்த்திவிட முடியாது என சில மாதங்களாக வைகோவும் கருணாநிதியும் மாறிமாறி அறிக்கை விடுவது காமெடியாக இருக்கிறது. அவர்களின் பீதியும் தெரிகிறது.

சாதி ஒழிப்புதான் திராவிடம் என்றீர்.
கருணாநிதியும் வைகோவும் என்று சாதி ஒழிப்பு பேசினார்கள்?

மதவாத எதிர்ப்புதான் திராவிடம் என்றீர்.
கருணாநிதியும் வைகோவும் என்று மதவாத எதிர்ப்பு பேசினார்கள்?
இப்படி கேட்டுக்கொண்டே போகலாம்.

இவர்கள் சொல்வதைப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்குத் தடை விதித்த ஓ.பன்னீர்செல்வம்தான் தமிழகத்தின் ஆகப்பெரும் திராவிடத் தலைவர்.


கருணாதியின் திராவிடத்தை 'முதலமைச்சு திராவிடம்' என்று எவரும் சொல்லவில்லை.
விஜயகாந்தின் திராவிடத்தை 'போலித் திராவிடம்' என்று எவரும் சொல்லவில்லை.
கருணாநிதியையும் விஜயகாந்தையும் திராவிட இயக்க தலைவர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்கிறார்கள்.


(பெரியார் திடலில் விஜயகாந்திற்கு பெரியார் விருதும் வழங்கப்பட்டுள்ளதாக வரலாறு சொல்கிறதே! உண்மையா?)

ஆனால் போலித் தமிழ்த்தேசியம், முதலமைச்சு தமிழ்த்தேசியம் போன்ற வார்த்தைகள் இயல்பாக உதிக்கிறார்கள் திராவிடக் கருத்தியல் கொண்டவர்கள்.
தெருவுக்கு நாலு பெரு இருக்கிறபோதே இந்த பதட்டம் என்றால், நாளை தெரு முழுக்க தமிழ்த்தேசியவாதிகள் நிறைந்துவிட்டால்????

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

ஈழமும், இந்தியக் கட்சிகளின் பித்தலாட்டங்களும்

* ராஜபக்சே ஒரு கொலைகாரன், கொடூரன் என சமீபகாலமாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட இந்தியக் கட்சிகள் நமக்கு அதிகமாக வகுப்பெடுக்கிறார்கள். இதையே கடந்த ஐந்து வருடங்களாக நாம் சொன்னபோது மறுத்தவர்களும் இவர்களே! உலகக்கோப்பை கிரிக்கெட், காமன்வெல்த் விளையாட்டு, பிரதமர்  பதவியேற்பு விழா என பல நிகழ்வுகளிலும் ராஜபக்சேவை அழைத்து விருந்து வைத்தபோது அவன் ஒரு கொலைகாரன் என்று இவர்களுக்கு தெரியவில்லை போல!!

* சரி, ராஜபக்சே ஒரு கொலைகாரன், குற்றவாளி என்பதே உண்மை.
அவன் செய்த குற்றமென்ன? அவர் யாரைக் கொலை செய்தான்? என்பது குறித்து பேச மறுக்கிறார்கள் அல்லது மறைக்கிறார்கள் இந்த இந்தியக் கட்சிகள்.
அவன் செய்தது இனப்படுகொலை என்ற உண்மையை திட்டமிட்டு மறைக்கிறார்கள். போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என வார்த்தை விளையாட்டு ஆடுகிறார்கள்.

* இலங்கைத்தீவில் அனைத்து தரப்பு மனிதர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் அது மனித உரிமை மீறல்.
இருதரப்பு மக்களும் யுத்தத்தில் அழிக்கப்பட்டிருந்தால் அது போர்க்குற்றம்.
ஆனால் நடந்தது என்ன? தமிழர்கள் மட்டும் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள்.
அதை மூடி மறைப்பதில் இலங்கைக்கு சகல வசதிகளையும் இன்றுவரை செய்து தருகிறது இந்திய அரசு.

* இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து சிந்திக்கிறார்களாம் பாஜக ஆட்சியாளர்கள். இதைத்தானே கடந்த ஐந்து வருடங்களாக காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருந்தது. அப்படியானால் இந்நாள் வரை எந்த சீரமைப்பும் செய்யவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறதா இந்திய அரசு?..
  காங்கிரஸ் சொன்னது பொய்யா? பாஜக சொல்வது பொய்யா? தமிழர்கள் ஏமாந்து கொண்டே இருப்பார்கள் என எண்ணுகிறார்கள் போல.

* இலங்கையின் மொத்த ராணுவத் தொகை இரண்டு லட்சம். அதில் ஒன்றரை லட்சம் பேர் தமிழர் தாயகமான ஈழத்தை ஆக்கிரமித்துள்ளார்கள். ராணுவத்தை வெளியேற்றுவது குறித்து பேச கூட மறுக்கும் இந்திய அரசு தமிழர்களுக்கு நல்லது செய்யும் என்பதை நம்ப தமிழர்கள் என்ன முட்டாள்களா?

* தமிழர்களுக்கு வெளிப்படியாக நல்லது செய்தால் சிங்களர்களுக்கு கோபம் வந்துவிடும், அவர்கள் மீண்டும் ராஜபக்சேவை அரியணை  ஏற்றிவிடுவார்கள் என புதுவகையான பூச்சாண்டி காட்டுகிறார்கள்.
தமிழர்களுக்கு நல்லது செய்வது சிங்களர்களுக்குப் பிடிக்காது என்றால் தமிழனும் சிங்களனும் எப்படி இணைந்து வாழ முடியும்?

* சிங்கள உழைக்கும் மக்களும் தமிழ் உழைக்கும் மக்களும் இணைந்து போராட வேண்டும் என இன்னொரு தரப்பு வகுப்பெடுக்கிறது. நியாயம்தான்.. ஆனால் யதார்த்தம் என்ன? தமிழன் அழிக்கப்படும்போது அதனைத் தடுக்கக் கோரி எந்த சிங்கள உழைக்கும் மக்களோ, அமைப்போ குரல் கொடுக்கவில்லையே! அனைவரும் ஒன்றாகக் கூடி பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்களே!!(அதற்காக அனைந்து சிங்களர்களும் இனப்படுகொலையை ஆதரிக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது).. நடந்தது இனப்படுகொலை என்கிற உண்மையைப் பேசும் ஒரு சிங்கள அமைப்பாவது இருக்கிறதா? அப்புறம் எங்கே ஒன்றா சேர்ந்து போராடுவது??

பொதுவாக்கெடுப்பைத் தவிர வேறு எதுவும் தீர்வாகாது.


ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

பிறமாநிலத்தவரின் தாய்மொழிப்பற்றும் தமிழனின் அடிமைப்புத்தியும்

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் சென்னை - கர்நாடக அணிகள் மோதிய அரையிறுதியில் டாஸ் போட்ட பின்னர் கன்னட நடிகர் சுதீப் அவர்கள் பேசினார். தன் தாய்மொழியான கன்னடத்தில் பேசிக் கொண்டே இருந்தார்.
குறுக்கிட்ட கேள்வியாளர் 'சார், ஆங்கிலத்தில் பேசலாமே! என்றார்.
"என் ஊரு, என் மக்கள், கன்னடத்தில் பேசினால்தான் நல்லா இருக்கும்" என்றார்.
பின்னர் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் பேசி முடித்துக் கொண்டார்.

ஜெயா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பத்திரிகை நிருபர்களிடம் வாசிக்க வந்த வழக்கறிஞர் 'முதலில் கன்னடம், பின்னர் ஆங்கிலம்' என்று கூறி கன்னட பத்திரிகைகளுக்கு முதலில் பேட்டிக் கொடுத்தார்.

சென்னையில் உள்ள ஆந்திரா உணவகங்களில் போர்டு, பில், புகைப்படங்கள், வாசகங்கள் என அனைத்தும் அவர்களின் தாய்மொழியான தெலுங்கில் இருக்கிறது.

மலையாளிகள் பற்றி சொல்லவே தேவையில்லை.
ஹைதராபாத்தில் உள்ள மலையாள உணவகங்களுக்கு சென்றால் ஏதோ கேரள வரலாற்றுக் கண்காட்சிக்கு சென்றது போல இருக்கும். மெனு கார்டு, புகைப்படங்கள் என அனைத்திலும் மலையாளப் பண்பாடு தூக்கலாக இருக்கும்.

மேலே உள்ளவர்களின் தாய்மொழிப் பற்றைப் பாராட்டுகிறோம்.

தமிழனின் நிலை என்ன?
காதல் தொடர்பான நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியில் பரிசு வென்ற சகோதரி என்ன மொழியில் பேசினார்? என்ன பேசினார்? என்றே தெரியவில்லை.
தமிழர்களின் பெரும்பாலும் பார்க்கும் நிகழ்ச்சியில் தமிழில் பேசினால்தானே நம் கருத்துக்கள் பல மக்களையும் சென்றடையும் என்கிற பொது அறிவு கூட அந்த சகோதரிக்கு தெரியாமல் போனது.
தமிழில் பேசும்போது ஆங்கில வார்த்தைகள் தற்செயலாக குறுக்கே வருவது வேறு.
ஆனால் வேணுமென்றே ஆங்கிலத்தை இழுத்து திணிப்பது வேறு.

"கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்,
தமிழ் கத்துக்க ட்ரை பண்ணுறேன்" என வெளிமாநில சகோதர, சகோதரிகள் தமிழ் நோக்கி நகருகிறார்கள்.
ஆனால் தமிழனோ ஆங்கிலம் நோக்கி நகருகிறான்.

தமிழ் சோறு போடுமா? தமிழ் தமிழ்னு என் சாகுறீங்க? என்று சோற்றைப் பற்றி மட்டுமே யோசிக்கும் பாரத மாதாவின் பக்தர்கள் கேட்கிறார்கள். ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை வரவேற்கும் மூடர்கள் இவர்கள். அடுத்தவன் மொழிக்கு பல்லக்கு தூக்கும் அடிமைகள் இவர்கள்.

தமிழில் சாதி இருக்குது (உப்பு இருக்கு, காரம் இல்லை என்றும் சொல்லுவாங்க), தமிழை மட்டும் வைத்து என்ன செய்ய? என தமிழகத்திலும் சில வெங்காயங்கள் கிளம்பியிருக்குது.

இந்த மூடர்களின் பேச்சுக்களை புறந்தள்ளுவீர்.
மொழி அழிந்தால் இனம் அழியும்.
தமிழை வாழ வைப்போம்!
தமிழனிடத்தில் தமிழில் பேசுவோம்.

Provisional store என்பதை 'ப்ரொவிஷனல் ஸ்டோர்' என எழுதி போர்டு வைத்தால் தமிழ் வாழாது.
மளிகைக் கடை என்று எழுதினால்தான் தமிழ் வாழும்.