செவ்வாய், 5 மார்ச், 2013

புலிக்கொடி ஏந்திய தி.மு.க தொண்டர்கள்

திமுக தலையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது 05.03.2013 அன்று நடைபெற்றது. பல திமுகவினர் புலிக்கொடிகளையும், தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் படங்களையும்  தாங்கியவண்ணம் திரண்டுவந்து இப் போராட்டத்தில் கலந்துகொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 

அத்தோடு பாலச்சந்திரன் படங்கள் அடங்கிய பதாதைகளையும் அவர்கள் தாங்கி நின்றார்கள். பல்லாயிரக்கணக்காண மக்கள் திரண்ட இப் போராட்ட பேரணி, இலங்கை தூதரகம் நோக்கி நகர முயன்றது. இதனை தடுத்து நிறுத்த போலீசார்  படாத பாடு படவேண்டி இருந்தது.

இந்த முற்றுகைப் போராட்டத்தில், திராவிடக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், என திமுகாவின் கூட்டணிக் கட்சிகள் கலந்துகொண்டது. புலிக்கொடியை ஏந்திவந்த பலர் கூடவே கொடூரமாகச் சித்தரிக்கப்பட்ட ராஜபக்ஷவின் படங்களையும் ஊர்வலமாகத் தாங்கிவந்தார்கள். 

 இறுதியில் புலிக்கொடியை உயர்த்திப் பிடித்தவாறு, மகிந்தரின் படத்துக்கு நெருப்பு மூட்டினார்கள். எரிந்தான் ராஜபக்ஷ என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தது. 

தமிழ் நாட்டில் ஏற்கனவே பல கட்சிகள், ஈழத் தமிழர் சார்பான போக்கை கடைப்பிடித்து வருகிறது. காங்கிரசுடன் கூட்டு வைத்திருப்பதால் திமுக இவ்விடையத்தில் , சற்று விலகியே நின்றதை கடந்த கால கசப்பான அனுபவங்கள் பல எமக்கு உணர்த்தி இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி, பாலச்சந்திரன் கொலை தொடர்பாக தமிழ் நாட்டில் தோன்றியுள்ள உணர்வலை, ஈழத் தமிழர்கள் படும் இன்னல்களை தமிழக மககள் நன்கு உணர்ந்துள்ளதை தற்போது எடுத்துக்காட்டியுள்ளது.




 நன்றி: அதிர்வு இணையம்
========================================================================
ஈழ  விவகாரத்தில் தி.மு.க மீது கடும்கோபம் உண்டு. அந்த கோபம் எல்லாம் ஒரு குடும்பத்தின் மீதுதானே தவிர, ஒட்டுமொத்த  தி.மு.க தொண்டர்கள் மீது கிடையாது. தி.மு.கவில் இருந்துகொண்டே ஈழ ஆதரவை மறைமுகமாக  கொடுத்த, ஈழ ஆதரவாளர்களுக்கு துணை புரிந்த பல  தி.மு.க தொண்டர்கள் உண்டு.

இந்த போராட்டம் அரசியல் ஆதாயமா?
காங்கிரசை விட்டு பிரிய நடத்தப்படும் நாடகமா?
அப்படியா? இப்படியா? என கேள்விக்கேட்டு பின்னோக்கி செல்ல நான் தயாரில்லை.

இலங்கையை எதிர்த்து மாபெரும் போராட்டத்தை பதிவு செய்தமைக்கு தி.மு.க தொண்டர்களுக்கு வாழ்த்துகள்.

இது போதாது. திரும்பத்  திரும்ப 'போர்க்குற்ற விசாரணை', மறுவாழ்வு அளித்தல் என பேசுவதெல்லாம் தீர்வே கிடையாது.

சுதந்திரமான பன்னாட்டு விசாரணையும், பொது வாக்கெடுப்பும் மட்டுமே தீர்வு. அதை உரக்கச் சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக