திங்கள், 26 ஜனவரி, 2015

சாதியும் நானும் - நூல் விமர்சனம்

எப்பவோ படித்திருக்க வேண்டிய நூல். இப்போதுதான் வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சாதி இழிவுக்கு ஆளானவர்களும், ஆளாக்கியவர்களும் தங்கள் சுய அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதியதன் தொகுப்பே இந்நூல்.

காற்றைப் போல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது சாதி என்பதை நூல் கூறுகிறது.

'இப்பெல்லாம் யாரு சாதி பார்க்கிறார்கள்?' என்பவர்கள் கட்டாயம் வாங்கிப் படிக்கவேண்டிய நூல்.

பார்ப்பனியத்தை மட்டுமே விமர்சித்துக் கொண்டிருந்தால் சாதி ஒழிந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்.
பார்ப்பனர் அல்லாத இடைநிலைச் சாதிகள்தான் அதிக சாதிக்கொடுமைகளை விளைவிக்கிறார்கள் என்பதை நூல் விளக்குகிறது.

"சாதியைக் கண்டுகொள்ளாமல் விட்டால் சாதி வேறு வடிவில்தான் வெளியாகும்.
சாதியை வெறுத்து ஒதுக்கினால்தான் சாதி ஒழியும்" என்பதே நூலின் மூலம் நான் கற்ற படிப்பினை.

காலச்சுவடு ஸ்டாலில் பில் போடுவதற்காக இந்நூலைக் கையில் வைத்திருந்தபோது ஒருவர் வந்து 'நூலின் ஆசிரியர் பெருமாள் முருகன் ஸ்டாலில் இருக்கிறார். வந்து கையெழுத்து வாங்கிச் செல்லுங்கள்' என்றார். 'அவர் என்ன அவ்வளோ பெரிய அப்பாட்டக்கரா?' என்று எண்ணிக் கொண்டேன். 'சரி, நான் வந்து கையெழுத்து வாங்குகிறேன்' என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்து விட்டேன். இறுதிவரை பெருமாள் முருகனை சந்திக்கவில்லை. மாதொருபாகன் பிரச்சினை அப்போதுதான் தொடங்கியிருந்தது
.

உண்மையில் பெருமாள்முருகன் பெரிய அப்பாட்டக்கர்தான்.
'சாதியும் நானும்' நூலே துணிச்சலான முயற்சிதான்.

செவ்வாய், 13 ஜனவரி, 2015

முடிவில்லாமல் தொடர்கிறது ஜெயமோகனின் புளுகல்

எழுத்தாளர் பெருமாள் முருகன் பிரச்சினை பற்றி எழுதும்போது சம்பந்தமே இல்லாமல் பெரியார் மீது அவதூறு வைத்துள்ளார் ஜெயமோகன்.
( பெரியார் இன்னும் அச்சுறுத்துகிறாரோ!! ).

இடைநிலைச் சாதிகளின் மேலாண்மைக்காக பெரியார் பாடுபட்டாராம்!
அவர்களின் சாதிப்பற்றைக் கைவிடும்படி கூறவில்லையாம்!!

இவ்வாறு புளுகுவது அவருக்கு புதிதில்லை. ஆனாலும் பெரியாருக்கு சற்றும் தொடர்பில்லாத பிரச்சினையில் அவரை ஏன்யா இழுக்குறீங்க!!
ஒருவகையில் இதுவும் நல்லதுதான். பெரியாரிசத்தை வாழ வைக்கும்.

மறுப்பு தெரிவித்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.
அதில் கூறியவற்றை அப்படியே இங்கு பதிக்கிறேன்.

"என்ன அழகா புளுகுறீங்க!!
பார்ப்பனியம் என்றாலே பொய் புரட்டுதானே!

கடைசிவரைக்கும் சாதிவெறியர்களை நீங்கள் கண்டிக்கவில்லையே மிஸ்டர் ஜெயமோகன்!!

ஆனால் வன்னியர் மாநாட்டில் மேடையேறி சாதிக்கு எதிராக பேசினாரே பெரியார்!
சத்திரியன் என்றால் பார்ப்பானுக்கு அடிமை. அதுல என்ன பெருமை வேண்டி கிடக்கு என்றாரே!
அவர்தாம் பெரியார்! உங்களால் சொல்ல முடியுமா?

பெயரில்கூட சாதி இருக்க கூடாது என்று மக்களிடம் சொன்னாரே பெரியார்!
நீங்க சொன்னீகளா?? இல்லை வேறு பார்ப்பனர்கள் சொன்னார்களா??

சாதியை கட்டிக்காக்கும் புராணங்களையும், வருணாசிரமத்தையும் சமரசமில்லாமல் எதிர்த்தாரே பெரிரார்! உங்களால் முடியுமா??

வழிபாட்டு சமத்துவம் வேண்டி ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த பெரியாரிஸ்டுகள் வந்தார்கள், வருவார்கள். நீங்கள் வருவீர்களா?

பார்ப்பான் எச்சி இலையில் சூத்திரனை உருளச் சொல்லுதய்யா உன் இந்து மதம்!
ஜெயேந்திரனுக்கு கால் கழுவி விட சொல்லுத்தய்யா உன் இந்து மதம்!
பெரியார் எதிர்த்தார். நீங்கள் என்ன செய்தீர்கள்?

சாதியால் பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்டால் நான் பார்ப்பனர் பக்கம் நிற்பேன் என்றாரே! அவர்தாம் பெரியார்!

இன்று சிலர் கொழுப்பெடுத்து சாதித் திமிர்ப் பிடித்து திரிந்தால் பெரியார் என்ன செய்வார்?
அவரை சாடுவதை விடுத்து சாதிக்கு எதிராக ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யுங்க.
இந்த மாதிரி குட்டையைக் கிளப்புற வேலை வேண்டாம்.

பார்ப்பனியத்தை வீழ்த்தினால் சாதிக் கட்டமைப்பு வீழும் என பெரியார் எண்ணியிருக்கலாம்!
ஆனால் பாழாய்ப் போன இடைநிலை சாதிகள் இன்று பார்ப்பனியத்தைக் கையில் எடுத்து திரிகின்றன."
 picture: Cartoonist bala
==
இந்து மதத்திற்கும் அதிலுள்ள சாதிக் கட்டமைப்புக்கும் எதிராக கலகம் செய்த அய்யா வைகுண்டர், நாராயண குரு, வள்ளலார், புத்தர் எனப் பலரையும் லாவகமாக தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டீர்கள்!
ஆனால் பெரியார் மட்டும் இன்னும் கலகம் செய்து அச்சுறுத்துகிறார்!
அதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெரியார் மீது சேறு வாரி இறைக்க காத்திருக்கிறது பார்ப்பனியம்.

கொய்யால! திமிருடன் சொல்லுவோம் இது 'பெரியார் மண்'.

சனி, 10 ஜனவரி, 2015

சென்னை புத்தகக் கண்காட்சி 2014: எனது அனுபவம்



சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு புத்தகக் கண்காட்சி நடக்கும் திடலுக்கு நுழைந்தேன். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் ரொம்ப அதிகமாக இருந்தது. வெளியே உள்ள மேடையில் தோழர் நல்லக்கண்ணு உரையாற்றிக் கொண்டிருந்தார். மேடையில் அய்யா நெடுமாறன் அமர்ந்திருந்தார். ஏதோ புத்தக வெளியீடு போல..


புத்தகக் கண்காட்சி அரங்கிற்குள் நுழைந்து புத்தகங்களை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தேன். சிலவற்றை வாங்கிக் கொண்டேன்.

உள்ளே செல்ல செல்ல எங்கு பார்த்தாலும் ஆன்மீகம் தொடர்பான கடைகள். புத்தகக் கண்காட்சியா அல்லது ஆன்மீகக் கண்காட்சியா என்று டவுட்டு வந்துவிட்டது.. எங்கு திரும்பினாலும் சாமியார்கள் பற்றிய நூல்களே கண்ணில் படுகின்றன. மலிவு விலை குரான், மலிவு விலை பகவத் கீதை என விற்பனை செய்கிறார்கள். 

வாழும் அவதார புருஷர் பரமஹம்ச நித்தியானந்தாவின்  குழுவினர் இரு கடைகளை ஆக்கிரமித்துள்ளார்கள். உள்ளே அவதார புருஷரின் போட்டோ போட்டு மாலையும் போட்டுள்ளார்கள்.. இப்படித்தான் கடவுளர்கள் தோன்றினார்களோ!!

விடியல், விஜயா, உயிர்மை, கிழக்கு, டிஸ்கவரி, நியூ செஞ்சுரி, பெரியார் சுயமரியாதைப் பதிப்பகம், கீழைக்காற்று, நக்கீரன், விகடன் என பிரபலக் கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. நானும் இக்கடைகளில்தான் அதிக நேரம் செலவழித்தேன்.
குறிப்பாக காலச்சுவடு பதிப்பகத்தில் அதிக கூட்டம். பெருமாள் முருகனின் நூல்கள் அதிகம் விற்பனை ஆகியிருக்கும். அவரும் உள்ளே அமர்ந்திருந்தார்.

சங்கர் பதிப்பகம் என்று ஒரு கடை இருந்தது.
நம்ம சவுக்கு சங்கர்தான் கடையை விரிச்சிட்டாரோ! என்று ஷாக் ஆயிட்டேன்..

காலச்சுவடு பதிப்பகத்தில் அக்கா தமிழ்நதி அவர்களைக் காண முடிந்தது. பேஸ்புக்கில் அருமையாக எழுதுபவர். வெளிநாட்டில் வசிக்கிறார். புத்தகக் கண்காட்சியையொட்டி இங்கு வந்திருக்கிறார். என்னை அறிமுகப்படுத்திவிட்டு வந்துவிட்டேன். அவங்களுக்கு என்னை தெரியல. :(

தமிழ்மண் பதிப்பகத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்:
பெரியவர் ஒருவர் தலைவர் பிரபாகரன் தொடர்பான ஒரு நூலை எடுத்து ஒரு சிறுமியிடம் காட்டி (பேத்தியாக இருக்கும்) ‘யாருன்னு தெரியுதா?.. தலைவர்.. தலைவர்ன்னு சொல்லு’ என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். சிறுமியும் தலையை ஆட்டிக்கொண்டே தலைவர் என்றாள். மிகவும் மகிழ்வாக இருந்தது. #பிரபாகரனிசம் 

நான் வாங்கிய நூல்களின் பட்டியல்:
பச்சை தமிழ்த்தேசியம் – சு.ப.உதயகுமாரன்
உணவு யுத்தம் – எஸ்.ராமகிருஷ்ணன்
நலம் 360 – மருத்துவர்  கு.சிவராமன்
அர்த்தமுள்ள அந்தரங்கம் – மருத்துவர் ஷாலினி
சிறு விசயங்களின் கடவுள் – அருந்ததிராய்
தோழர்களுடன் ஒரு பயணம் – அருந்ததிராய்
மறுபக்கம் – பொன்னீலன்
ஊரும் சேரியும் – சித்தலிங்கையா
சாதியும் நானும் – பெருமாள் முருகன்
பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன் – புலிகளின் வெளியீடு

‘மறுபக்கம்’ தவிர்த்து அனைத்தும் சிறு சிறு நூல்களே! அதனால் விரைவில் படித்து முடித்து விடலாம் என எண்ணுகிறேன்.
தோழர் தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சம் போன்ற நூல்களையும், நக்சலைட் அஜிதாவின் வாழ்க்கைக் குறிப்பு நூலையும் சில நாட்களுக்கு முன்னர்தான் வாங்கினேன். ஒரு நூல் தவிர மற்றவை அப்படியே உள்ளன. பொறுமையா படிப்போம். 

வெள்ளி, 2 ஜனவரி, 2015

பிகே(PK) - மதங்களுக்கு எதிரான பெரும் விவாதம்

ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவான பிகே படத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது.

ஏற்கனவே வந்துள்ள பல விமர்சனங்களின் அடிப்படையிலும், மதவாதிகளின் எதிர்ப்பையும் வைத்தே படம் மிகத் தரமானது என்று புரிந்து கொண்டேன்.


எனக்குப் பிடித்த சிலவற்றைப் பட்டியலிடுகிறேன்.

1. கதாநாயகியும் அவரது காதலனும் நெருங்கிப் பழகும் வேலையில், காதலன் பாகிஸ்தான் முஸ்லிம் என்று தெரிந்தவுடன் விலக முயற்சிக்கும் கதாநாயகி.
பாகிஸ்தானை எதிரியாகக் காட்டி போலி இந்திய தேசியம் வளர்க்கும் செயலைக் கேள்விக்குள்ளாக்கியது அந்தக் காட்சி.

2. எதற்கெடுத்தாலும் சாமியாரின் உததரவுக்காக காத்துக் கிடக்கும் கதாநாயகியின் தந்தை இறுதியில் சாமியாருக்கு எதிரான  நிலையில் வந்து நிற்பது அருமை.

3. பயம்தான் ஒரு மனிதனைக் கடவுளை நோக்கி போகச் செய்கிறது என்பதை நிரூபிக்க தேர்வுகாலத்தில் கல்லூரி வாயிலில் ஒரு கல்லை வைத்து அதனை வணங்கவைத்து, வணிகமாக்கும் யுக்தி.

4. கோவில் உண்டியல் பணம், கோவிலில் உருளுவது, பொய்களை சொல்லி மதம் மாற்றுவது, கத்தியால் உடம்பில் கீறல் போடுவது, மதத்தின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்துவது என பல பிற்போக்குத் தனங்களை நேரடியாக சாடியிருக்கிறார் இயக்குனர்.

5. கடவுளைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில்தான் ஏகப்பட்ட சண்டைகள், குண்டுவெடிப்புகள்.
யாரும் கடவுளைக் காப்பாற்ற வேண்டியதில்லை. அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வார் என்கிற வசனம்.

6. மதம் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப மறுக்கும் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குனர். அமீர்கானின் செயல்களை, பேச்சைப் பார்த்து அமீர்கானின் நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொள்வது.
மதவாதிகளின் அடாவடி, கருத்து சுதந்திரம் பற்றி இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

7. தன்னிடம் அமீர்கான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததால் 'அவன் முஸ்லிம், அவன் பேச்சை நம்பாதீர். அவன் இந்து மதத்தை அழிக்க முயற்சிக்கிறான்' என்று திசைதிருப்பும் (ஆ)சாமியார். மக்களைப் பிரித்தாளும் மதவாதிகளின் செயலை இதைவிடத் தெளிவாக காட்ட முடியாது.

8. குழந்தைகளைத் தூக்கிப் பார்த்து லேபிள் ஏதும் இருக்குதா என பார்க்கும் காட்சி. எந்தக் குழந்தையும் பிறக்கும்போது லேபிளோடு பிறப்பதில்லை என்கிற வசனம்.

9. கடவுள் நம் தந்தை என்கிறீர்கள்.
எந்தக் கடவுளாவது தான் குழுந்தைகளை தரையில் உருளச் செய்து வேண்டச் சொல்வானா? என்கிற வசனம்.

படம் முழுக்க மேலும் பல நல்ல காட்சிகள், வசனங்கள் உள்ளன. படத்தில் வரும் பல பகுத்தறிவுக் கேள்விகளை பெரியாரும், திராவிட கழகத்தினரும் பல வருடங்களுக்கு முன்னரே பிரச்சாரமாக எடுத்து செய்துவிட்டார்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.


அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். திருட்டு டிவிடி வாங்கியாவது பார்த்து விடுங்கள்.

சைவம், முண்டாசுப்பாட்டி மற்றும் சில தமிழ்ப்படங்களில் கிராமத்து சாமியார்கள், குறி பார்ப்பவர்களை அம்பலப்படுத்தியிருப்பார்கள். ஆனால் கார்ப்பரேட் சாமியார்களை நம்மாட்கள் நெருங்கியதில்லை. ஒரு கார்ப்பரேட் சாமியாரை பகிரங்க சவாலுக்கு அழைத்து அம்பலப்படுகிறான் பிகே.

ஆன்மீக நாட்டம் உள்ளவர்களையும் வெகுவாக ஈர்த்ததே பிகேவின் வெற்றி.
படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் மதம் மற்றும் கடவுளுக்கு எதிராக திரும்புவார்கள் என்று சொல்ல முடியாது.
ஆனால் நித்தி, ஜெயேந்திரன், ராம்பால், ராம்தேவ் போன்ற மத வியாபாரிகளுக்கு எதிராக திரும்புவார்கள்.
பிகே புண்படுத்துவது இவர்களின் மனதைதான், இந்துமதம் சார்த்தவர்களின் மனதை அல்ல.

படத்தில் இந்து மதத்தை மட்டும் அதிகம் விமர்சிக்கிறார்கள் என்று சிலர் சொல்வது உண்மைதான்.
அப்படியானால் என்ன பொருள்?
இந்து மதத்தில் அதிக பிற்போக்குத் தனங்களும் மூடநம்பிக்கைகளும் இருக்கின்றன என்றுதான் பொருள்.
அதனைத் திருத்திக்கொள்வதுதானே நல்ல செயல்!  விமர்சிக்கவே கூடாது என்பது வன்முறையே!!

தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட தமிழ் திரையுலகை சார்ந்தவர்கள் முன்வர வேண்டும்.
நாத்திகர்கள் கிராமம் கிராமமாக இந்தப் படத்தை போட்டுக் காட்டி தங்கள் பிரச்சாரத்தைத் தொடரலாம்.

"தமிழில் எப்போது ரீமேக் செய்வார்கள்?" என்பதே படம் முடிந்து வெளிவந்த பலரின் கேள்வியாக இருந்தது.
பொறுத்திருந்து பார்ப்போம்.

வியாழன், 18 டிசம்பர், 2014

லிங்காவும், ஜனநாயக விரோதமும்

ஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள்.
தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் சில முட்டாள்களின் தொல்லை தாங்க முடியல..
படம் ஆயிரம் கோடி கலெக்ஷன், செம ஹிட், மாஸ் என கதை விடுகிறார்கள். (
ஒருவேளை அவர்களுக்கு  மட்டும் வேற படத்தைக் காட்டிவிட்டார்களோ!!)

அது எக்கேடும் கெட்டு போகட்டும்.
ஆனால் லிங்கா படத்தை விமர்சித்த சில பேஸ்புக் ஐடிகள், இணையங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இது முற்றிலும் ஜனநாயக விரோத செயல்.
படத்தை நூறு, இருநூறு கொடுத்து பார்க்கிறவன் விமர்சனம் பண்ணதான் செய்வான்.
விமர்சனம் வரக்கூடாது என்றால் படத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

லிங்கா பட தயாரிப்பாளர் அவர்களே,
இணையத்தில் படத்தை விமர்சிப்பவர்கள் மீது  நடவடிக்கை எடுக்குமாறு தமிழக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தீங்களாமே!!
ஏன் ஆந்திரா, கேரள, கன்னட போலீசிடம் புகார் கொடுக்கவில்லை?
தமிழன் என்ன இளிச்சவாயனா??
தமிழனின் பணம் மட்டும் வேண்டும், ஆனால் தமிழன் நெகடிவ் விமர்சனம் வைக்க கூடாது. அப்படிதானே!!!

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ரஜினிக்கு மேக்-ஆப் போட செலவழிச்ச பணம் மற்றும் நேரத்தில் இன்னொரு படத்தை எடுத்து முடித்திருக்கலாம்.

லிங்குசாமியா இருந்தாலும், லிங்காவாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான்..
இப்ப, இந்த  பக்கத்தை முடக்குங்கள் பார்ப்போம்.

நடிகர் ரஜினிக்கு வேண்டுகோள்: அய்யா, உங்க வயதுக்கு ஏற்றபடி கதை தேர்வு செய்து நல்ல படம் கொடுக்க முயற்சி செய்யுங்க. சுத்தியிருப்பவர்கள், விசிலடிச்சான் குஞ்சுகளின் பேச்சைக் கேட்டு மொக்கைப் படத்தை ஏற்றுக் கொள்ளாதீர்..

செவ்வாய், 16 டிசம்பர், 2014

எல்லா குழந்தைகளும் குழந்தைகளே.. - சின்ன ஆதங்கம்

பள்ளி நிர்வாக சீர்கேட்டால் கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்‌காக கண்ணீர் சிந்தினோம்.

முறையான மருத்துவ சிகிச்சையின்மையால் தர்மபுரியில் இறந்த குழந்தைகளுக்காக  கண்ணீர் சிந்தினோம்.

இஸ்ரேலின் தாக்குதலில் பலியான பாலஸ்தீன குழந்தைகளுக்‌காக கண்ணீர் சிந்தினோம்.

தாலிபான் தாக்குதலால் பலியான பாகிஸ்தான் குழந்தைகளுக்காக  கண்ணீர் சிந்துகிறோம். 

உலகின் எந்த மூலையில் யார் இறந்தாலும் வருந்துகிறானே தமிழன்..

ஆனால் சிங்கள இனவெறி தாக்குதலால் பலியான ஈழத்துக் குழந்தைகளுக்காக நீங்கள் என் கண்ணீர் சிந்தவில்லை??
மனிதாபிமானிகளே! ஏன் கள்ள மௌனம் காத்‌தீர்கள்?

#ஆதங்கம்.



================

ஐ.எஸ்.ஐ.எஸ் காட்டுமிராண்டிகளின் தலை துண்டிப்பு பயங்கரவாதம், ஆஸ்திரேலியா உணவகத்தில் பயங்கரவாதம், பாகிஸ்தான் பள்ளியில் தாலிபான் தீவிரவாதிகளின் பயங்கரவாதம் என சமீபகாலமாக பயங்கரவாதம் கட்டுக்கடங்காமல் போகிறது.

தீவிரவாதத்தின் ஆணிவேரை அறிந்து முழுமையாக ஒழிக்க வேண்டும்.

வெள்ளி, 12 டிசம்பர், 2014

தமிழினவாதம் தொடர்பான கட்டுரைக்கு இந்தியவாத மகஇகவுக்கு பதில்

வினவு இணையதளம் தமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள் என்னும் தலைப்பில் ஒரு நேர்காணல் கட்டுரை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளிகளை தமிழகத்தை விட்டு வெளியேற தமிழினவாதிகள் சொல்வதாக கட்டுரை உள்ளது. (யார் அந்த தமிழினவாதிகள் என்று இறுதிவரைக்கும் கட்டுரையில் சொல்லவில்லை.)

இந்திய ரயில்வேயில் தமிழர்க்கு சம உரிமை இல்லை.
இந்திய பணி தேர்வுகளில் தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
இந்தி ஆதிக்கம் அதிகம்  உள்ளது. இந்தி அல்லாத மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
அதைப் பெற்றி நாம் பேசினால் 'தமிழினவாதமாம்'.
வெளிமாநில தொழிலாளிடம் சென்று சிண்டு முடியும் வேலை செய்யும் இவர்கள் செய்வது புரட்சியாம்.

அவர்களின் கட்டுரைக்கு நான் இட்ட பின்னூட்டம் பின்வருமாறு:

வினவுக்கு புத்தி பேதலித்து விட்டதா??
வினவின் ரசிகனான எனக்கு இந்தக் கட்டுரை எரிச்சல் ஊட்டுகிறது.
வெளி மாநிலத்தவர் உள்ளே வரக் கூடாது என்று வினவிடம் சொன்னது யார்?
தமிழர்கள் இவ்வாறு சொல்வதாக வெளி மாநில நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்??
ஏன் இந்த சிண்டு முடியும் வேலை??

வேலைவாய்ப்பில் தமிழனுக்கு முன்னுரிமைக் கொடு என்றுதானே கேட்கிறோம்.
அதில் என்ன தவறு?
பல நாடுகளிலும் உள்ள நடைமுறைதானே!!

குறைந்த கூலிக்கு அழைத்துவரும் நபர்களை சென்று நேர்காணல் எடுக்கலாமே!
அவர்கள்தானே தமிழனையும், வெளிமாநில நண்பர்களையும் சுரண்டுகிறார்கள்.
அது குறித்த விழிப்புணர்வை வெளியாட்களுக்கு ஊட்டலாமே!
அவர்கள் கையிலும் சிவப்புக் கோடியைக் கொடுக்கலாமே!
அதை விடுத்து ஏன் இந்த சிண்டு முடியும் வேலை?

குறைந்த வேலைக்கு வெளியாட்கள் வருவதால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழர்கள் அல்ல, வெளியாட்கள்தான்.
அவர்களின் குடும்பம், குழந்தைகளின் படிப்பு எல்லாம் கேள்விக்குறியாக நிற்கிறது..
அவர்கள் தங்கள் ஊரிலேயே நிம்மதியா வாழ்வு வாழ வழிவகை செய்யல்லாமே!
வெளிமாநில நபர்கள் இங்கே வர என்ன காரணம்? அம்மாநிலங்களில் நிலவும் வறுமைதானே!
அதனை நீக்க என்ன வழி சொல்கிறீர்??
வெளிமாநிலங்களில் உள்ள சிவப்புக்கொடி ஆட்கள் என்ன செய்கிறார்கள்?
இல்லாத இந்தியாவுக்கான புரட்சிக்கு ஆள் சேர்க்கிறார்களா??

அளவுக்கு அதிகமான வெளியாட்கள் வரவால் தமிழ்நாட்டு தொழிலாளிகள் பாதிக்கப்படுவார்களே! அதற்கு என்ன பதில் இருக்குது?

சீனாவில் வெளியாட்கள் வேலை பார்க்க அடையாள அட்டை வேண்டும்.
அதுவும் நிரந்தர வேலை கிடையாது. பல கட்டுப்பாடுகள் உள்ளன.
அந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்த சொல்லி உங்க சீனா பொதுவுடைமைவாதிகளிடம் சொல்லுங்க..

அது என்ன மாயமோ, மர்மமோ தெரியல.
தமிழன் தன்னை தமிழன் என்று சொல்லிக் கொண்டால் வினவுக்கு வயித்தெரிச்சல்!!
ஒருவேளை இறுதிவரைக்கும் சாதி, மத சண்டை போட்டுக்கிட்டே இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களா?

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது வெளியாட்களுக்கு புரியும்.
ஆனால் இதுபோன்ற சிண்டு முடியும் வேலையை வினவு நிறுத்திக் கொள்ள வேண்டும்.