திங்கள், 27 அக்டோபர், 2014

சாதிக் கட்டமைப்பில் தீயை வைக்கும் பெண்கள்??

நேற்று நீயா நானா நிகழ்ச்சியில் 'தந்தை-மகள்' தலைப்பில் நவீன பெண்களும் தந்தைகளும் விவாதித்தார்கள்.
ஆரம்பத்தில் விவாதம் சற்று மந்தமாக போய்க் கொண்டிருந்தது.
வேறு வழியின்றி பார்த்துக் கொண்டிருந்தேன்.

இறுதிக் கட்டத்தில் நிகழ்ச்சி அருமையாக இருந்தது.

* பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் தங்கள் கருத்துக்களை அருமையாக முன்வைத்தனர்.

* ஆடைக் கலாச்சாரம் பற்றி விளாசினர்.
"என் ஆடை, என் உரிமை, நீ மூடிட்டு போ" என்பது போலத்தான் பலர் கருத்துக்கள் இருந்தன.
ஜேசுதாஸ் போன்றவர்களுக்கு செருப்படி போல விழுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

* 'நன்கு படித்த, சம்பாதிக்கிற, ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த பையனைத் திருமணம் செய்வீர்களா?' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
சற்றும் யோசிக்காமல் பல பெண்களும் 'ஆமாம்' என்று கையை உயர்த்தினர்.

பின்னர் அதே கேள்வி தந்தைகளிடம் வைக்கப்பட்டது.
தந்தைகளும் ஆமோதித்தனர்.

இந்தக் கேள்வியை முன்வைக்கும் முன்னரே ' என் அப்ப சாதியைப் பிடித்து தொங்குவார். அது எனக்கு சுத்தமாக பிடிக்காது' என்றார் ஒரு நவீனத் தமிழச்சி.
சபாஷ்!!

'அவ்வளவுதான்டா. தமிழகத்தில் சாதி ஒழிந்தது' என்று அறையில் உள்ள நண்பரிடம் மகிழ்ச்சியாக சொன்னேன்.

கடந்த வருடம் "சாதியை ஆதரிக்கும் பெண்கள் - சாதியை எதிர்க்கும் பெண்கள்" விவாதம் நடந்தது.
நிகழ்ச்சியின் முடிவில் சாதியை ஆதரிக்கும் பெண்கள்கூட சாதி எதிர்ப்பு நிலையில் வந்து பேசியது ஞாபகம் இருக்கிறது.



சாதிக் கட்டமைப்பு என்பது வேண்டாத ஒன்றாக இன்னும் இந்த சமூகத்தில் கிடைக்கிறது.
சாதியைப் பயன்படுத்தி வயிறு வளர்க்கும் கூட்டமும், போலிக் கவுரவம் (சாதி கவுரவம் அல்ல, இழுக்கு) பார்க்கும் நபர்களும்தான் அதனைப் பிடித்து தொங்குகிறார்கள்.

உழைக்கும் மக்கள் தங்களை தொடர்ந்து அப்டேட் செய்து கொள்கிறார்கள். சாதியை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அதுதான் நேற்றைய நிகழ்ச்சியில் கற்றுக் கொண்டது.

முற்போக்கு கொள்கைகளை எவ்வளவுதான் ஆண்கள் பேசினாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு அதிகம் அவசியம்.
சாதிக் கட்டமைப்பில் தீயை வைக்கும் பெண்களுக்கு வாழ்த்துககள்.

சாதி சங்கங்கள் பெருகி சாதியைக் காக்க முயன்று கொண்டிற்க்கும் இந்தக் காலக்கட்டத்தில், இம்மாதிரியான நவீனப் பெண்கள் மறுபுறத்தில் சாதிக் கட்டமைப்பில் பிளவை ஏற்படுத்திக் கொண்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று.

"டெல்லி வேற நாகரிகம் (Modernism). அது உடையை மையப்படுத்தியது.
ஆனால் தமிழ்நாடு அப்படியல்ல, அது கருத்து சிந்தனையை மையப்படுத்திய நாகரிகம்(Modernism).
பெரியார் ஒரு Modernist, பாரதி ஒரு  Modernist" என்று முடிவுரை வழங்கினார் கோபிநாத்.

நேற்றைய நிகழ்ச்சி குறித்து மேலும் எழுதியுள்ளார் ஒரு நண்பர்.


யூடியூப் தளத்தில் வீடியோ வெளியாகியுள்ளது. பார்க்காதவர்கள் பார்க்கவும்.

திங்கள், 20 அக்டோபர், 2014

ஆண்டப் பரம்பரையெல்லாம் அவாளின் காலடியில் சமத்தா அடங்கிடுவாள்...

நாடார் சாதி தாழ்த்தப்பட்ட சாதி, பல இன்னல்களை அனுபவித்தார்கள் என்ற வரலாற்று உண்மையை சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் சொல்லியிருந்தார்கள்.

"அய்யகோ! அது எப்படி நாடாரை தாழ்த்தப்பட்ட சாதி என்று சொல்லலாம்.
நாங்கள் அப்படி கிடையாது. நாங்கள் உயர்சாதி" என்று கொந்தளித்தவர்களில் பொன்.ராதாகிருஷ்ணனும் ஒருவர்.


இப்போ இந்த படம் சொல்லும் செய்தி என்ன, மிஸ்டர்.பொன்னார் அவர்களே!

எந்தப் பதவியிலும் இல்லாத அயோக்கிய பார்ப்பான் மற்றொரு பார்ப்பானுக்கு (ஜெயேந்திரன்) இணையாக அமர்ந்து பேசலாம்.

மத்திய அமைச்சராக உள்ள பார்ப்பான் அல்லாதவர்(பொன்.ராதாகிருஷ்ணன்) பார்ப்பானுக்கு கீழே அமர்ந்துதான் பேச வேண்டும்.

சில நாட்களுக்கு முன்னர் பீகாரில் உள்ள கோவிலுக்குள் பீகார் முதல்வர் (தலித்) வந்து சென்ற பின்னர், கோவிலைக் கழுவி விட்டதை இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சாதியைக் கட்டமைத்த பார்ப்பனியத்தையும்,
பார்ப்பனியத்துக்கு முட்டுக்கொடுக்கும் இந்துமத புராணங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்காமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை.


ஆண்ட பரம்பரைக் கனவில் இன்பம் காணும் இடைநிலைச் சாதிகள் பற்றி இந்தக் கட்டுரையை படித்து புரிந்து கொள்ளுங்கள்

 

==
*நாடார் சாதிப் பெண்கள் மாராப்பை கூட மறைக்க விடாமல் சிறுமையையும் ,இழிவையும் தந்தவர்கள் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*திருச்செந்தூர் முருகன் கோவில் பள்ளு ,பறையர்,சாணார் ,சக்கிலியர் நுழைய கூடாது என போர்டு வைத்தவர்கள் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*இன்னமும் தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் நாடார்கள் முகப்பு நுழைவு வாயில் வழியாக செல்ல முடியாத நிலைக்கு காரணம் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*சாணார்கள் கோவில் கருவறைக்குள் செல்ல முடியாத நிலைக்கு காரணம் சங்கராச்சாரியாரின் முன்னோர்கள் தானே .!

*விருதுநகர் மாவட்ட நாடார்கள் தங்களை சத்திரிய குலம் என அழைத்து கொண்டு,பூணூலும் அணிந்து கொண்டனர். அவர்கள் 'பூணூல்'அணிவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள் சங்கராச்சாரியாரின் வர்க்கம் தானே .!

@Thymiah NA
==

மஹாராஷ்டிர தேர்தல் முடிவுகள்: தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

மராட்டிய தேசிய இன அரசியலை முன்னெடுக்காமல் பாஜகவுடன் இணைந்து இந்துத்வ அரசியலை முன்னெடுத்தனர் பால்தாக்கரேவும் அவரது வாரிசுகளும்.

வெளிமாநிலத்தவரையும் (குறிப்பாக பீகார் மக்களை), சிறுபான்மையினரையும் தன் எதிரிகளாக சித்தரித்து 'மண்ணின் மைந்தர்கள்' கோஷத்தை முன் வைத்தனர்.

ஆனால் மராட்டிய தேசத்தை இரண்டு மூன்று மாநிலங்களாக துண்டாட நினைத்த பாஜகவின் அயோக்கிய அரசியலை புரிந்துகொள்ள தவறினர்.
மராட்டிய தேசிய இனத்தை படுகுழியில் தள்ளிவிட்டனர் மராட்டிய மாநிலக் கட்சிகள்(குறிப்பாக சிவசேனா).
அடுத்த சில ஆண்டுகளில் மராட்டிய தேசம் உடைவதைக் காண முடியும். 


விதர்பா தனி மாநிலக் கோரிக்கையை பாஜக ஆத்திரிப்பதும், அதற்கு ஆதரவாக பாஜக தலைவர் நிதின் கட்காரி உண்ணாவிரதம் இருந்ததும் பலருக்கும் நினைவு இருக்கலாம்.
தேசிய இனங்களை துண்டாடுவது இந்துத்வ இயக்கங்களின் அறிவிக்கப்படாத அஜெண்டா.

தற்போது பாஜகவுடன் சிவசேனா இணைந்து கூட்டணி ஆட்சி அமைந்தால் பாஜகவின் திட்டங்கள் சற்று தாமதமாகும்.

# தமிழகத்தில் பாஜகவுக்கு பல்லக்கு தூக்குபவர்கள் சிந்திக்க வேண்டிய தருணம்.

வெள்ளி, 17 அக்டோபர், 2014

மணிப்பூர் சகோதரியுடன் சிறு உரையாடல்

பேருந்தில் அல்லது வேறு பொது இடங்களில் ஆண்கள் பக்கம் அமர நம்ம ஊரு பொண்ணுங்க ரொம்பவே யோசிப்பாங்க.

சகோதரன் அல்லது ஆண் நண்பர்களுடன் பெண்கள் வந்தால் அந்த சகோதரன் அல்லது ஆண் நண்பர் நாம் அருகில் அமருவார். அடுத்த அந்தப் பெண் அமருவார்.
இதுதான் பல இடங்களிலும் நாம் காணும் காட்சி.

நேற்று வேளச்சேரி - கிண்டி செல்லும் மினி பேருந்தில் இறுதி இருக்கையில் ஓரமாக அமர்ந்திருந்தேன்.

ஒரு வடகிழக்கு மாநில ஆணும் பெண்ணும் ஏறினார்கள்.

பெண் என் அருகில் அமர்ந்தார், அடுத்து அந்த ஆண் அமர்ந்தார். எனக்கு சற்று வியப்பு அளித்தது.

சமீபமாக வெளி மாநிலங்களில் வடகிழக்கு மாநிலத்தினர் மீது இனவெறி தாக்குதல், கேலிகள், பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன.

தமிழகத்திலும் ஆங்காங்கே கண்டிப்பாக நடக்கும்.
நேபாளி நிக்கி, சங்கி மங்கி என சந்தானம் ஒரு படத்தில் கேலி செய்திருப்பார்.
(நானும் அந்த வசனத்தை சில முறை உபயோகித்திருக்கிறேன். இப்போது நினைத்தால் எனக்கே ரொம்ப வருத்தமாக உள்ளது.)

இதுமாதிரியான கேலிகள், இனவாத பேச்சுக்கள் நம்ம ஊரிலும் இருக்கிறதா என அவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ள எனக்கு விருப்பமாக இருந்தது.

அந்த சகோதரியிடம் பேசு கொடுக்க ஆரம்பித்தேன். (ஆங்கிலத்தில்தான்)

==
நான்: நீங்கே எங்கே இருந்து வரீங்க?

சகோதரி: மணிப்பூர்.

நான்: எத்தனை காலமாக இங்கே தமிழகத்தில் வசிக்கிறீர்கள்?

சகோதரி: ஒரு வருடம் ஆகுது.

நான்: உங்களை யாராவது கேலி செய்திருக்கிறார்களா?

சகோதரி: இல்லையே!

நான்: சமீபமாக வெளி மாநிலங்களில் வடகிழக்கு மாநிலத்தினர் மீது இனவெறி தாக்குதல், கேலிகள் தொடர்கிறதே! நீங்கள் தமிழகத்தில் ஒரு முறை கூட சந்தித்தது இல்லையா?

சகோதரி: அப்படியெல்லாம் இங்கே இல்லை.

நான்: Really?

சகோதரி: Yes.

நான்: Ok fine. thanks
==

அவர்கள் சொன்னது எவ்வளவு உண்மையென்று தெரியாது. ஆனால் உண்மையாகவே இருந்தால் மிக்க மகிழ்ச்சி.

சில மாதங்கள் முன்பு டெல்லியில் நீடோ தானியா என்னும் அருணாச்சல பிரதேஷ் மாணவர் அடித்தே கொலை செய்யப்பட்டார். அவரது தலைமுடி அமைப்பை வைத்து கேலி செய்ததே பிரச்சினையின் ஆரம்பம்.

நேற்று பெங்களூரில் கன்னடம் பேச மறுத்ததால் மணிப்பூர் மாணவர்கள் மீது தாக்குதல்.

இன்று டெல்லியில் மிசோரம் மாணவி கொலை.



வடகிழக்கு மாநில மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து இவ்வாறு செய்திகள் வந்துகொண்டே உள்ளன.

இனரீதியான கேலி, கிண்டல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழ் சினிமாக்களிலும் அவர்களை கேலி செய்வது போன்ற காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்

வெள்ளி, 10 அக்டோபர், 2014

ரஜினியை பாஜக அரசியலுக்கு இழுக்க என்ன காரணம்?

'ரஜினி சிறந்த தேசியவாதி. அதனால் அவர் தமிழக பாஜகவில் இணைய வேண்டும்' என பாஜகவினர் கூறுகிறார்கள்.

சிறந்த தேசியவாதி என்றால் ஏன் தமிழகத்தோடு நிறுத்த வேண்டும்?

அவருக்கு பிரதமர் அல்லது துணைப் பிரதமர் பதவி தருவதாகக் கூறி அழைக்கலாமே!

அன்னபோஸ்ட் எம்பி பதவி தருவதாகக் கூறி அழைக்கலாமே!

அல்லது அமித்ஷாவுக்கு பதிலாக ரஜினியை நியமிப்பதாகக் கூறி அழைக்கலாமே!

இதெல்லாம் செய்யாதவர்கள் ரஜினியைத் தற்போது தமிழக அரசியலில் இழுக்க ஒரே காரணம்தான்:

"இத்துப்போன இந்துத்வ கொள்கைகளை எப்படியாவது தமிழகத்தில் வேரூன்ற செய்ய ரஜினியை ஸ்டார் அம்பாசிடராக்கும் முயற்சி"


வியாழன், 9 அக்டோபர், 2014

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1

கவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம்.
ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கினேன் ( https://www.nhm.in/shop/100-00-0000-238-3.html ) . விலை கொஞ்சம் அதிகம்தான்.

என் அந்தப் புத்தகம் வாங்கினேன்?
இந்துமதத்தில் உள்ள மூடநம்பிக்கைகள், அறிவுக்குப் பொருந்தாத கட்டுக்கதைகள், சாதியக் கட்டமைப்பு இவற்றை பற்றி விவாதிக்கும்போது 'கீதை படித்திருக்காயா?, ராமாயணம் படித்திருக்காயா? குறைந்தது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படித்திருக்காயா? என எதிர்கேள்விகள் வரும்.

அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள விருப்பம்.
அதுபோக கண்ணதாசனின் தத்துவப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.



புத்தகம் வாங்கி 40 பக்கங்கள் படித்திருப்பேன்.
'எதுக்குடா இந்தப் புத்தகத்தை வாங்கினோம்' என்பது போல ஆகிவிட்டது.

* 40 பக்கத்தில் 5 திருக்குறள் வந்துவிட்டன.
"அதாவது, திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால்...." என்பது போல ஆரம்பிக்கிறார். தமிழுக்கு இந்துச் சாயம் அடிக்கும் வேலையை கண்ணதாசன் செய்கிறார்.

* முற்பகல் செய்யின் பிற்பகல் விலையுமென்பது இந்துக்களின் பழமொழியாம்.
என்ன அழகாக மக்களை ஏமாற்றுகிறார்கள்!!

*  விதி-மதி, இன்பம்-துன்பம் என சிறுபிள்ளைத்தனமான, அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் பல புத்தகத்தில் அதிகம் உள்ளன.

* பெண்கள் நிமிர்ந்து சென்றால் ஆண்களைக் கவர்ந்துவிடுவார்களாம். அதனால் குனிந்து போகச் சொல்கிறதாம் இந்துமதம்.
( பெண்கள் ஜீன்ஸ் அணிவது தொடர்பாக சமீபத்தில் பாடகர் ஜேசுதாஸ் சொன்னது கருத்து இந்தக் கருத்துடன் ஒத்துப் போகிறது )

* அனுபவங்கள் மூலம் நாம் சில பாடங்களைக் கற்க முடியும்.
உதாரணம்: "பிறர்க்கு துன்பம் செய்தால் நாளை அந்த துன்பம் நமக்கும் வரக்கூடும்".
இதனை அனுபவம், வாழ்வியல் சிந்தனை, தத்துவம் என பல பெயர்களில் சொல்லலாம்.
ஆனால் அதற்கு மதச்சாயம் பூசி 'இந்து தர்மம்', 'விதி', 'முன்ஜென்ம பாவம்' என்கிற பெயர்களில் சொல்கிறார் கண்ணதாசன்.

* வள்ளுவர் ஓர் இந்து என்னும் மாபெரும் வரலாற்றுத் திரிப்பை பகுதி 8-இல் சொல்ல வருகிறார். அதனை நான் இன்னும் படிக்க வில்லை.
உலகின் மூத்த பொதுவுடைமையாளன் வள்ளுவனுக்கு இந்து அடையாளம் கொடுத்துதான் தன் இந்து (பிராமண) மதத்தை தூக்கி நிறுத்த வேண்டிய பரிதாப  நிலை கன்ணதாசனுக்கு!!

ஒரு புத்தகத்தை எடுத்தப்பின்னர் அதனை முழுவதும் படித்துவிட வேண்டும் என்பது என் நோக்கம்.

அதனால் வாசிப்பு தொடரும்,
அபத்தங்கள் தொடரும்.

செவ்வாய், 7 அக்டோபர், 2014

வியாபாரம் ஒன்றே ஊடகங்களின் குறிக்கோள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவ்ர்கள் சிறை சென்ற செய்தியே பல ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது.

சிறையில் யாரையும் ஜெயா சந்திக்கவில்லை என்பது பல ஊடகங்களின் செய்தி. கர்நாடக காவல்துறையும் அதனையே சொல்கிறது.
இந்நிலையில் நக்கீரன் தன் இதழ் தலைப்பு செய்தியாக எழுதியுள்ளது:
'அப்பாவையும் மகனையும் உடனே கைது செய்ய ஜெயா உத்தரவு'.
அதாவது கருணாவையும் அவரது மகன் ஸ்டாலினையும் கைது செய்ய ஜெயா உத்தரவாம்.

யாருக்கு உத்தரவு கொடுத்தார்?
எப்போது கொடுத்தார்?
எங்கே வைத்து கொடுத்தார்?
என எந்த தகவலும் நக்கீரன் சொல்லவில்லை.

அப்புறம் எதுக்கு இதுபோன்ற செய்தியை வெளியிட வேண்டும்?
திமுகவினரை ஆத்திரமடைய செய்வது தவிர இந்த செய்தியின் நோக்கம் வேறு எதுவாகவும் இருக்க வாய்ப்பில்லை.
நக்கீரனுக்கு இது போன்ற செய்திகள் புதிதல்ல.

அடுத்து சன் செய்திகள் சேனலுக்கு வருவோம்.

நேற்று சன் செய்திகள் சேனங்லில் ஃப்ளாஷ் ந்யூஸ் மற்றும் அதை ஒட்டிய விவாதத்தின் தலைப்பு:
"பெங்களூரில் தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையா?
தமிழகத்தில் கன்னடர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையா? "

எவனோ ஒரு அதிமுக அடிமை கன்னடர்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளான்.
இருமாநில காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து, அது போன்ற போஸ்டர்களை அகற்றிவிட்டனர்.

இங்கு வாழும் கன்னடன் அவன் பிழைப்பைப் பார்க்கிறான்.
அங்கு வாழும் தமிழன் அவன் பிழைப்பைப் பார்க்கிறான்.

ஆனால் நடுவே சில அரசியல் பொறுக்கிகள் தேவையற்ற சர்ச்சைகளை உண்டாக்குகிறார்கள்.

பொறுப்புடன் செயல்பட மீடியாக்கள் பொறுப்பற்ற முறையில் பரபரப்பூட்டும் செய்திகளை வெளியிடுகிறார்கள்.
தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று யாராக்சும் சன் செய்திகளிடம் வந்து முறையிட்டானா?
சன் செய்திகள் ஃப்ளாஷ் செய்தியின் நோக்கம் என்ன?
அதிமுகவினரை வன்முறையாளர்களாக காட்டி தான் அரசியல் லாபத்தைப் பார்ப்பது.

ஊடகங்களே,
தங்களின் வியாபார லாப வெறிக்கு, அரசியல் வெறிக்கு தயவுசெய்து சமூகத்தில் குழப்பம் விளைவிக்காதீர்.

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தூத்துக்குடி வட்டார மொழியை நான் இழந்த கதை

தூத்துக்குடியில் மேற்படிப்பு படிக்கும்வரையில் நான் பேசும் தமிழில் ஆங்கிலக் கலப்பு அதிகம் இருக்காது.
ஏல, வால, போல, என்று சரளமாக தூத்துக்குடி தமிழ் பேசுவேன். தமிழின் சிறப்பான 'ழ' என்பதைக் கூட 'ல' என்று பேசியே பழக்கமாகி விட்டது.

'அவங்க சொல்லுவாங்க' என்பதை 'அவிய சொல்லுவாவ' என்றுதான் சொல்லுவேன்.

என்று கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தேனோ, அப்புறம் தூத்துக்குடி தமிழ் பேசுவதைக் குறைத்துக் கொண்டேன்.
பல மாவட்ட மாணவர்களும் படிக்கும் சென்னை கல்லூரிகளில் ஆங்கிலம் கலந்து பேசுவதையே ஒரு பெருமையாகக் கருதுகிறார்கள்.
வட்டார வழக்கில் பேசினால் அதிகம் கேலி செய்வார்கள்.

பசித்தால் 'வயிறு பசிக்கு' என்றுதான் எங்க ஊருல சொல்லுவாவ.
ஆனால் கல்லூரி விடுதியில் நான் 'வயிறு பசிக்கு' என்று சொல்லும்போதெல்லாம் கேலி செய்ய ஒரு கூட்டமே உண்டு.

கல்லூரியில் ஆசிரியரிடம் பேசும்போது சார், மிஸ், மேம் என கண்டதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம்.
எங்க ஊர்ல அந்தப் பழக்கமே கிடையாது.
இங்கேயும் நான் அதையே தொடர்ந்ததால் நான் மரியாதைக் குறைவாக பேசுவதாகவும், திமிராக பேசுவதாகவும் சொன்ன ஆசிரியர்கள் உண்டு.

தூத்துக்குடி பாஷையில் பேசும்போது மிகவும் வேகமாக பேசுவேன். அது இங்கே பல நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் புரிவதில்லை. அதனால் வேகத்தைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

கல்லூரியில் ஆங்கில வழியில் படித்ததால் சில ஆங்கில சொற்கள் நாவில் அடிக்கடி குடி கொண்டன.
அப்புறம் வேலை நிமித்தமாக ஆங்கிலத்தில் பேசுவதாலும், வேறு மாநிலங்களுக்கு சென்றதாலும் ஆங்கிலம் நிரந்தரக் குடி கொண்டது.

அதனால் தூத்துக்குடி வட்டார பாஷை முன்னர் போல வருவதில்லை. கால ஓட்டத்தில் காணாமல் போனது.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல அவ்வப்போது தூத்துக்குடி தமிழ் வாயில் வருவதுண்டு.

தற்போது ஒரு கட்டத்தில் யோசித்துப் பார்க்கையில் என் மீது எனக்கே சற்று வருத்தம்.
தூத்துக்குடி வட்டார பாஷையை இழந்தது கூட எனக்கு பெரும் வருத்தம் அல்ல. ஆனால் என் தமிழில் அதிக ஆங்கிலம் கலப்பு இருப்பது பெரும் வருத்தமாக உள்ளது.

படிப்படியா ஆங்கிலக் கலப்பை தவிர்க்க வேண்டுமென்பதே இந்த வருட புது ஆண்டு சபதம்.
இப்போது சற்று முன்னேற்றம் இருக்கிறது. பேஸ்புக், ப்ளாக்கர் ஆகியவற்றில் தமிழில் எழுவதும், தமிழ்  நூல்கள் படிப்பதுமே இதற்கு காரணம்.

வாழ்க தமிழ்!!

(நேற்று நீயா நானா நிகழ்ச்சி வட்டார மொழி வழக்கு குறித்து இருந்ததால் பழைய ஞாபகங்கள் வந்து சென்றன.)

வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஜீன்ஸ் அணியும் ஆண்கள் யார் மனதைக் கெடுக்கிறார்கள்?

"ஜீன்ஸ் அணியும் பெண்கள், ஆண்களின் மனதை கெடுக்கிறார்கள்" என்று பாடகர் ஏசுதாஸ் சொல்லியிருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

'அந்தக் காலத்து ஆள். அப்படிதான் பேசுவார்கள்' என்று கருதிக் கொண்டு நகர்ந்து விடலாம்.

ஆனால் அவருக்கு ஆதரவாக இணையதளங்களில் பலரும் பேசுவதுதான் கடுப்பா இருக்குது.

ஒன்று புரிந்து கொள்ளுங்க மக்களே!

ஏசுதாசின் இந்த மோசமான பேச்சை அவரது மருமகளே காரித் துப்பியிருப்பார்.

ஜீன்ஸ் அணியும் பெண்கள், ஆண்களின் மனதை கெடுக்கிறார்கள்  என்றால் ஜீன்ஸ் அணியும் ஆண்கள் யார் மனதைக் கெடுக்கிறார்கள்? என்கிற கேள்விக்கு எந்த ஏசுதாசும் பதில் சொல்லப் போவதில்லை.

ஆணாதிக்க நிலையிலிருந்து வெளிவாருங்கள் மக்களே!!

வியாழன், 2 அக்டோபர், 2014

இந்திய தேசப்பக்திக்குப் பின்னால் இந்துத்துவம்

காஷ்மீர் விடுதலைப் போராளி யாசின் மாலிக் தமிழகம் வந்து உரையாற்றினால் தேசத்துரோகம் என்கிறார்கள்.
பொன்.ராதாகிருஷ்ணன், ஞானதேசிகன் என அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்கிறார்கள்.

ஆனால் ஆர்எஸ்எஸ் என்னும் மதவாத அமைப்பின் தலைவர் அரசுத் தொலைக்காட்சியில் உரையாற்றப் போகிறார்.
அதைக் கண்டித்து ஒரு பயலும் வாயைத் திறக்க மாட்டான் (காங்கிரஸ்காரன் உட்பட).
மோகன் பகவத் மக்களால் தேர்ந்தெடுப்பட்டவரா? என்று மறந்தும்கூட கேட்டுவிட மாட்டார்கள்.

பிற மதத்தினருக்கு எதிராக பல முறை சர்ச்சையாக பேசியவர் மோகன் பகவத்.
இதெல்லாம் தெரிந்தும் அவர் தூர்தர்சனில் பேச அனுமதிக்கிறார்கள் என்றால், இவர்களின் இந்திய தேசப்பக்திக்குப் பின்னால் இந்துத்துவமும் ஒட்டியிருக்கிறது.